சனி, 19 டிசம்பர், 2020

விளையாட்டுப் பாடல் - நாட்டுப்புறப்பாடல்

விளையாட்டுப் பாடல்

நாட்டுப்புறப்பாடல்களுள் விளையாட்டுப்பாடல்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.  சிறுவர் சிறுமியர்கள் விளையாடும்போது பாடப்படும் பாடல்கள் விளையாட்டுப் பாடல்கள் எனப்படுகின்றன. இதில் பாடலும் விளையாடலும் ஒன்றிணைந்து இருக்கும். சிறுவர்களின் மனமகிழ்ச்சியை, அவர்களின் உற்சாகத்தை இவ்வகைப் பாடல்கள் மீட்டெடுக்கின்றன. சந்தநடை, எளியசொற்கள், திருப்பிச் சொல்லும் மொழிநடை, ஓசை நயம், இனிமை ஆகியவை இப்பாடல்களின் தனிச்சிறப்பாகும்.

வகைகள்

பொதுவாக நாட்டுப்புற விளையாட்டுகள் ஆண்களுக்கானவை, பெண்களுக்கானவை, குழந்தைகளுக்கானவை, சிறுவர் சிறுமியருக்கானவை என்று பிரிக்கப்பட்டுள்ளன. பாடல்களுடன் கூடிய விளையாட்டுகள் சிறுவர் சிறுமியர் விளையாட்டுகளில்தான் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. இவ்வகைப் பாடல்களை,

1.   உடற்பயிற்சி விளையாட்டுப் பாடல்கள்

2.   வாய்மொழி விளையாட்டுப் பாடல்கள்

3.   போலச் செய்தல் தொடர்பான விளையாட்டுப் பாடல்கள்

என வகைப்படுத்துகின்றனர் அறிஞர்கள்.

உடற்பயிற்சி விளையாட்டு

     சடுகுடு, கண்ணாமூச்சி, வெயிலா நிழலா? பச்சகுதிரை தாண்டுதல், கோலி, கிட்டிப்புள் முதலான விளையாட்டுகள் உடற்பயிற்சி விளையாட்டுகள் என்ற பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன.

கண்ணாமூச்சி விளையாடும்போது, “கண்ணாமூச்சி ரே ரே! கண்டுபிடி ரே ரே!” என்றும், சடுகுடு விளையாடும்போது, “நான் தாண்டா வீரன்! நல்லமுத்துப் பேரன்” என்றும் பாடி மகிழ்வர்.

வாய்மொழி விளையாட்டுகள்

ஓரிடத்தில் அமர்ந்து கொண்டோ அல்லது நின்று கொண்டோ வாய்மொழியாகப் பாடி விளையாடும் விளையாட்டுகள் இப்பிரிவில் அடங்கும். இவ்விளையாட்டுகளில் ஒருவர்கொருவர் கேலி செய்து பாடுவது, வினா விடை அமைப்பில் பாடுவது உள்ளிட்டவை சிறப்பிடம் பெறுகின்றன. 

ஒருவரையொருவர் கேலி செய்யும் போது, “ஓட்டப்பல்லு சங்கரா! ஒரு வீட்டுக்கும் போகாத! அப்பம் வாங்கித் திங்காத ! அடிபட்டுச் சாகாத!” என்று பாடி மகிழ்வர். வினா விடை அமைப்பில், “கொழுக்கட்ட கொழுக்கட்ட ஏன் வேகல! மழ பெஞ்சுது நான் வேகல! மழையே மழையே ஏன் பெஞ்ச ! புல்லு வளரல நான் பேஞ்சேன்!” என்று பாடி வினாக்களுக்கான விடையைத் தேடுவர்.

போலச் செய்தல்

சிறுவர் சிறுமியர் தங்கள் வீடுகளில், பள்ளிகளில் காணுகின்ற காட்சிகளைத் தங்களுக்குப் புரிந்த வகையில் நடித்து விளையாடுவர். கள்ளன் போலீஸ் விளையாட்டு, ராஜா மந்திரி விளையாட்டு, அப்பா அம்மா விளையாட்டு என்பன இப்பிரிவில் அடங்கும். அவ்விளையாட்டுகளின்போது திருமணம், இறப்பு, சண்டையிடுதல் முதலான நிலைகளை நடித்துக் காட்டிப் பாடிக்கொண்டே விளையாடுவர்.

பயன்கள்

  • இப்பாடல்கள் சிறுவர்களுக்கு மன மகிழ்ச்சியைத் தருகின்றன.
  • தன்னொத்த வயதினருடன் விளையாடுவதால் சுதந்திர மனப்பாங்கும், தோழமையும் பெறுகின்றனர்.
  • ஆசிரியர், பெற்றோர் ஆகியோரிடமிருந்து கற்றுக் கொள்வதைவிட நண்பர்குழுவின் வாயிலாக நிறையக் கற்றுக் கொள்கின்றனர்.
  • அவர்களுக்குள் நிகழ்கின்ற உரையாடல்கள், கேலி கிண்டல்கள், பாடல்கள், விடுகதைகள் அவர்களின் மொழித்திறனை வளர்க்கின்றன.
  • ஓடுதல், தாவுதல், தாண்டுதல், குதித்தல் முதலானவை அவர்களின் உடல்திறனை உறுதியாக்குகின்றன.

பூப்பறிக்க வருகிறோம் பாடல்

இது சிறுவர் சிறுமியரால் பாடிக் கொண்டே விளையாடும் விளையாட்டுகளுள் ஒன்று. வினா விடை அமைப்பில் விளையாடுவது. சிறுவர்களின் உடல் திறனையும், மொழித்திறனையும் ஒருங்கே வளர்க்கக்கூடியது.

          விளையாட்டில் இடம்பெறும் பாடலின் முதல் வரியினைக் கொண்டு இப்பெயர் அமைந்துள்ளது. இவ்விளையாட்டில் கலந்து கொள்பவர் இரண்டு அணிகளாகச் செயல்படுவர். இரு அணியினரும் எதிர் எதிரே வரிசையாக நின்று கொள்வர். தங்கள் தங்கள் அணியினருடன் கைகோர்த்துக் கொண்டிருப்பர். நடுவே கோடு ஒன்று வரையப்பட்டிருக்கும்.


பூப்பறிக்க வருகிறோம் விளையாட்டு


பூப்பறிக்கும் அணி - பூப் பறிக்க வருகிறோம்! பூப் பறிக்க   வருகிறோம்!

பூக் காக்கும் அணி - எந்த மாதம் வருகிறீர்? எந்த மாதம் வருகிறீர்?

பூப்பறிக்கும் அணி - ஐப்பசி மாதம் வருகிறோம்! ஐப்பசி மாதம் வருகிறோம்!

பூக் காக்கும் அணி - எந்தப் பூவைப் பறிக்கிறீர்? எந்தப் பூவைப் பறிக்கிறீர்?

பூப்பறிக்கும் அணி - தேவிப் பூவைப் பறிக்கிறோம்! தேவிப் பூவைப் பறிக்கிறோம்!

பூக் காக்கும் அணி - யாரை விட்டுப் பறிக்கிறீர்? யாரை விட்டுப் பறிக்கிறீர்?

பூப்பறிக்கும் அணி - எழிலை விட்டுப் பறிக்கிறோம்! எழிலை விட்டுப் பறிக்கிறோம்!

பூக் காக்கும் அணி - என்று வந்து பறிக்கிறீர்?என்று வந்து பறிக்கிறீர் ?

பூப்பறிக்கும் அணி - இன்று வந்து பறிக்கிறோம்! இன்று வந்து பறிக்கிறோம் !

பூக் காக்கும் அணி  - சண்டை வரப்போகுது! சண்டை வரப்போகுது!

பூப்பறிக்கும் அணி - மண்டை உடையப் போகுது! மண்டை உடையப் போகுது!

என்றவாறு விளையாடுவர். இதோடு பாடல் முடிந்து விடும். பாடலில் குறிப்பிட்ட தேவி என்ற சிறுமியும், எழில் என்ற சிறுவனும் நடுக்கோட்டிற்கு அந்தப்பக்கமும், இந்தப்பக்கமும் நின்று கொள்வர். ஒருவர் கையினை ஒருவர் பிடித்துக் கொண்டு தங்கள் பக்கம் இழுப்பர். தன் அணியினைச் சேர்ந்தவர் அந்தப் பக்கம் போகாதவாறு அணி உறுப்பினர்களும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு இழுப்பர். இரு அணியில் யாரேனும் ஒருவர் இழுத்தவர் பக்கம் சென்று விட்டால் அந்தச் சுற்றில் இழுத்தவர்களே வெற்றி பெற்றோர் ஆவர். மீண்டும் முன்பு போலவே விளையாடத் தொடங்குவர். எந்த அணியில் ஆட்கள் இல்லையோ அவர்கள் தோற்றோர் ஆவர்.

இவ்விளையாட்டால் உருவாகும் பண்புகள்

  • இவ்விளையாட்டில் உள்ள விதிமுறைகளுக்கு அடங்கி நடப்பதால் கட்டுப்பாடுடன் செயல்படும் தன்மை வளர்கின்றது.

  • தங்கள் அணியைச் சேர்ந்தவர்கள் வெற்றியடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும்போது ஒற்றுமையுணர்வு ஏற்படுகின்றது.
  • விளையாட்டில் தலைமைப் பொறுப்பேற்று நடத்தும்போது பொறுப்புணர்ச்சி உண்டாகின்றது.
  • ஒருவர்க்கொருவர் விட்டுக் கொடுக்கும் தன்மை வளர்கின்றது.
  • ஆபத்தில் இருப்பவர்க்கு உதவ வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகின்றது.
  • உடல்திறன் தொடர்பான இவ்விளையாட்டு உரையாடல் வளர்ச்சிக்குக் காரணமாக அமைகின்றது. 
  • நாட்கள், மாதங்கள், கிழமைகள், பூக்களின் பெயர்கள் குறித்த அறிவினை உண்டாக்குகின்றது.

 


நன்றி - INFOBELLS

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக