ஞாயிறு, 28 மார்ச், 2021

பதிற்றுப்பத்து - விழவு வீற்றிருந்த, ஓடாப் பூட்கை மறவர்

 

பதிற்றுப்பத்து

1

திணை – தும்பை

தங்கள் வலிமையையே பொருளாகக் கொண்டு இரு பெரும் அரசர்களும் தும்பைப்பூவைச் சூடிப் போர் புரிவர். இதனை விளக்குவது தும்பைத்திணையாகும்.

துறை - ஒள் வாள் அமலை

வெற்றி பெற்ற மன்னன், குளத்தில் மீன்கள் பிறழ்வது போலக் கூர்மையான வாள்களைச் சுழற்றிக்கொண்டு வீரர்களோடு கூடி ஆடுவது.

வண்ணம் - ஒழுகு வண்ணம்

வண்ணம் என்பது பாட்டின் ஓசை நயம். ஒழுகு வண்ணம் என்பது ஆற்றின் நீர் ஓட்டம் போன்ற ஓசை என்பதாகும். அது ஆற்றுநீர்ப் பொருள்கோள் எனவும் அழைக்கப்படும்.

தூக்கு - செந்தூக்கு

தூக்கு என்பது இன்ன செய்யுள் வகை என்று குறிப்பிடுவது. செந்தூக்கு என்பது ஆசிரியப்பாவைக் குறிக்கின்றது.

பெயர் - வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி

பகை வேந்தர்கள் தங்களுடன் போர் செய்ய வந்த மன்னனைக் கண்டு அஞ்சி தங்கள் மெய்யை மறந்து செயல்படுவதை விளக்குவது வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சியாகும்.

பாடியவர் - காக்கைப் பாடினியார் நச்செள்ளையார்

இவர் ஒரு பெண்பாற் புலவர். இவரது இயற்பெயர் நச்செள்ளையார். “காக்கை விருந்து வரக் கரையும்” என்று சிறப்பித்துப் பாடியமையால் (குறுந்தொகை 210) இவர் காக்கைப் பாடினியார் என்னும் பாராட்டினைப்பெற்றுள்ளார்.

ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்

தெருவிலும் போர்க்களத்திலும் ஆடும் கோட்பாடு கொண்டவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்.

பாடல்

விழவு வீற்றிருந்த வியலுள் ஆங்கண்,

கோடியர் முழவின் முன்னர், ஆடல்

வல்லான் அல்லன்; வாழ்க அவன், கண்ணி!

வலம் படு முரசம் துவைப்ப, வாள் உயர்த்து,

இலங்கும் பூணன், பொலங் கொடி உழிஞையன்,   

மடம் பெருமையின் உடன்று மேல் வந்த

வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி

வீந்து உகு போர்க்களத்து ஆடும் கோவே.     

விளக்கம்

தெருவில் கோடியர் என்னும் யாழிசைக் கலைஞர்களோடு சேர்ந்து ஆடுபவன் மட்டும் அல்லன், சேரலாதன். போர்க்களத்தில் வெற்றி முரசம் முழங்க ஆடுபவன். வெற்றி வாளை உயர்த்திக்கொண்டு ஆடுபவன்.  கோட்டைகளைத் தாக்கி வென்ற மகிழ்வில் உழிஞைப் பூவையும், மின்னும் போர்-அணிகலன்களையும் சூடிக்கொண்டு ஆடுபவன். பகை வேந்தர்கள் இறந்து விழுகின்ற போர்க்களத்தில் ஆடுகின்ற அரசன் ஆதலால், இவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆயினான். அவன் தலையில் அணிந்திருக்கும் பனம்பூ மாலை வாழ்க.



2

துறை - விறலி ஆற்றுப்படை

வள்ளலிடம் பரிசு பெற்றுவந்த ஒருவன் விறலியை அந்த வள்ளலிடம் செல்வதற்கு வழி கூறி ஆற்றுப்படுத்துவது விறலியாற்றுப்படை ஆகும். விறலி என்பவள் மன்னன் புகழ் பாடுபவள். யாழிசை மீட்டுவதில் வல்லவள். தம்முடன் இசைக்கருவிகளைக் கொண்டு செல்பவள்.

வண்ணம் - ஒழுகு வண்ணம்

வண்ணம் என்பது பாட்டின் ஓசை நயம். ஒழுகு வண்ணம் என்பது ஆற்றின் நீர் ஓட்டம் போன்ற ஓசை என்பதாகும். அது ஆற்றுநீர்ப் பொருள்கோள் எனவும் அழைக்கப்படும்.

தூக்கு – செந்தூக்கு

தூக்கு என்பது இன்ன செய்யுள் வகை என்று குறிப்பிடுவது. செந்தூக்கு என்பது ஆசிரியப்பாவைக் குறிக்கின்றது.

பெயர் - சில் வளை விறலி

ஆடல், பாடல் கலைகளுக்குரிய இளம் பருவத்தைச் சேர்ந்த விறலி என்ற பொருள்பட, இப்பாட்டிற்குச் சில்வளை விறலி என்ற பெயர் வழங்குவதாயிற்று.

பாடியவர் - காக்கைப் பாடினியார் நச்செள்ளையார்

இவர் ஒரு பெண்பாற் புலவர். இவரது இயற்பெயர் நச்செள்ளையார். “காக்கை விருந்து வரக் கரையும்” என்று சிறப்பித்துப் பாடியமையால் (குறுந்தொகை 210) இவர் காக்கைப் பாடினியார் என்னும் பாராட்டினைப்பெற்றுள்ளார்.

 

பாடல்

ஓடாப் பூட்கை மறவர் மிடல் தப,

இரும் பனம் புடையலொடு வான் கழல் சிவப்ப,

குருதி பனிற்றும் புலவுக் களத்தோனே,

துணங்கை ஆடிய வலம் படு கோமான்:

மெல்லிய வகுந்தில் சீறடி ஒதுங்கிச்  

செல்லாமோதில்- சில் வளை விறலி!-

பாணர் கையது பணி தொடை நரம்பின்

விரல் கவர் பேரியாழ் பாலை பண்ணி,

குரல் புணர் இன் இசைத் தழிஞ்சி பாடி;

இளந் துணைப் புதல்வர் நல் வளம் பயந்த,   

வளம் கெழு குடைச்சூல், அடங்கிய கொள்கை,

ஆன்ற அறிவின் தோன்றிய நல் இசை,

ஒள் நுதல் மகளிர் துனித்த கண்ணினும்,

இரவலர் புன்கண் அஞ்சும்

புரவு எதிர்கொள்வனைக் கண்டனம் வரற்கே?          

விளக்கம்

  • சேரலாதன் போர்க்களத்தில் இருக்கிறான். காயம் பட்டோர் குருதி நடுங்க வைக்கும் போர்க்களம் அது. தலையில் பனம்பூ மாலை அணிந்திருக்கிறான். காலில் உயர்ந்த வீரக்கழல் அணிந்திருக்கிறான். புறமுதுகிடாத கோட்பாட்டினை உடைய பகைவீரர்களின் வலிமையைத் தகர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கிறான்.  
  • நம்முடன் சேர்ந்து துணங்கை ஆடிய கோமகன் அவன். மென்மையான தளிர் போன்ற சிறிய காலடிகளை மெல்ல மெல்ல வைத்து போர்க்களத்தில் அவனைக் காணச் செல்லலாமா, விறலி! நம் கையிலுள்ள வளையல்கள் சில ஒலிக்கும்படிச் செல்லலாமா, விறலி!
  • பாணர் கையிலுள்ள பேரியாழில் நம் வறுமை தோன்றப் பாலைப்பண் பாடிக்கொண்டு செல்லலாமா, விறலி! தோற்றவர் மேல் வாள் வீசாத இவனது தழிஞ்சிப் போரைப் பாராட்டிப் பாடிக்கொண்டு செல்லலாமா, விறலி!
  • சேரலாதனுக்கு இரண்டு ஆண்பிள்ளைகள் (இளந்துணைப் புதல்வர்). அவன் மனைவி மீண்டும் கருவுற்றிருக்கிறாள். அவள் அடக்கமே உருவானவள். பரந்த அறிவால் புகழ் பெற்றவள். அவள் ஊடல் கொள்ளும் பார்வையைப் பொருட்படுத்தாமல், தன்னை நாடி வந்தவரின் துன்பத்தைப் போக்குவதிலேயே கண்ணும் கருத்துமாய் இருப்பவன். அவனைக் கண்டு வருவதற்குச் செல்லலாமா, விறலி!  

என்றவாறு மன்னன் புகழ் பாடி விறலியை ஆற்றுப்படுத்துகின்றமையாக இப்பாடல் அமைகின்றது.



 

 

புதன், 24 மார்ச், 2021

அகநானூறு - உழுந்து தலைப்பெய்த

 

அகநானூறு

திணை - மருதம்

துறை - வாயில் மறுத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியது.

(தலைமகளைக் கூடி இன்புற்றிருந்த தலைமகன் பண்டு நிகழ்ந்தது சொற்று இன்புற்றிருந்ததூஉம் ஆம்)

கூற்று - தலைவன்

ஆசிரியர் - நல்லாவூர் கிழார் 

பாடல்

உழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை

பெருஞ் சோற்று அமலை நிற்ப, நிரை கால்

தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி

மனை விளக்குறுத்து, மாலை தொடரி,

கனை இருள் அகன்ற கவின்பெறுகாலை;     

கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்

கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென,

உச்சிக் குடத்தர், புத்தகல் மண்டையர்,

பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்

முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர,     

புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று

வால் இழை மகளிர் நால்வர் கூடி,

''கற்பினின் வழாஅ, நற் பல உதவிப்

பெற்றோற் பெட்கும் பிணையை ஆக!'' என,

நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி   

பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க,

வதுவை நல் மணம் கழிந்த பின்றை,

கல்லென் சும்மையர், ஞெரேரெனப் புகுதந்து,

''பேர் இற்கிழத்தி ஆக'' எனத் தமர் தர,

ஓர் இற் கூடிய உடன் புணர் கங்குல்,  

கொடும் புறம் வளைஇ, கோடிக் கலிங்கத்து

ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ,

முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப,

அஞ்சினள் உயிர்த்தகாலை, ''யாழ நின்

நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை'' என,           

இன் நகை இருக்கை, பின் யான் வினவலின்,

செஞ் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர,

அகம் மலி உவகையள் ஆகி, முகன் இகுத்து,

ஒய்யென இறைஞ்சியோளே மாவின்

மடம் கொள் மதைஇய நோக்கின்,       

ஒடுங்கு ஈர் ஓதி, மாஅயோளே.

பாடல் விளக்கம்

தலைவனுடன் ஊடல் கொள்கிறாள் தலைவி. அவளின் கோபத்தை நீக்குவதற்காகப் பலரைத் தூது அனுப்புகின்றான் தலைவன். அவர்களும் தலைவனுக்கு ஆதரவாகப் பேசி, தலைவியிடம் தலைவனை ஏற்குமாறு வேண்டுகின்றனர். அவர்களின் வேண்டுகோளை மறுக்கின்றாள் தலைவி. இறுதியில் தலைவனே நேரில் சென்று, சிறிது நாட்களுக்கு முன் தங்களுக்குள் நிகழ்ந்த இனிய நிகழ்வைக் கூறி அவள் மனதை மாற்ற முயற்சிக்கின்றான்.

இப்பாடல் சங்கத் தமிழர்களின் திருமணம் எவ்வாறு நடைபெற்றது என்பதைப் படம் பிடித்துக் காட்டுகின்றது.

திருமண விருந்தும், திருமண நிகழ்வும்

தீய கோள்களின் தொடர்பு நீங்கிய ரோகிணி என்னும் நாளில், அழகிய காலை நேரத்தில், உளுந்த வடையுடன் விருந்துணவு படைக்கப்பட்டது. பந்தற்கால் நட்டுப் பந்தல் போடப்பட்டது. அந்தப் பந்தலில் புதுமணல் பரப்பப்பட்டது. மனையில் விளக்கு ஏற்றி வைக்கப்பட்டது. மாலைகள் தொங்கவிடப்பட்டன.

மணமகள் அழைப்பு

நிறைகுடம் கொண்ட பெண்டிர் மணப்பெண்ணுக்கு முன்னே சென்றனர். புதுப்பானை ஏந்திய பெண்டிர் மணப்பெண்ணைப் பின்தொடர்ந்து வந்தனர். பொது வகையான ஆரவாரத்துடன் அவர்கள் மணப்பெண்ணை அழைத்து வந்தனர்.

 மகளிர் வாழ்த்து

மகனைப் பெற்ற வரிவயிறு கொண்டவரும், தாலி அணிந்தவருமான மகளிர் நான்கு பேர் கூடிநின்று, ஈரமான பூக்களையும், நெல்லையும் தலையில் போட்டு, நீர் தெளித்து வாழ்த்திச் சடங்குத் திருமணத்தை நடத்தி வைத்தனர். “கற்புநெறி வழுவாமல் வாழ்க, நல்ல பல பிள்ளைகளை உலகுக்கு உதவி வாழ்க, தன்னைப் பெற்ற பெற்றோரையும், கணவனைப் பெற்ற பெற்றோரையும் விரும்பிப் பேணும் பிணைப்புடையவளாக வாழ்க” என்றெல்லாம் வாழ்த்தினர். 


தனியறை புகுதல்

’கல்’ என்ற சிரிப்பொலியுடன் மகளிர் சிலர் புகுந்து, “மக்களுடன் பெரிய இல்லக் கிழத்தி ஆவாயாக என்று பெற்றவர்கள் கூறினார்கள்” என்று கூறிவிட்டு என்னிடம் அவளைத் தந்தனர். நாங்கள் இருவரும் தனித்திருந்தோம். அவ்வேளையில், புத்தாடையை வளைத்துத் தன் உடம்பை மூடிக்கொண்டு அவள் ஒடுங்கிக்கொண்டிருந்தாள். அவளை ஒரு பக்கம் அணைத்தேன். பின் தழுவும் விருப்பத்தோடு அவள் முகத்தைத் திறந்தேன். அவள் அஞ்சினாள். பெருமூச்சு விட்டாள்.

இருவரும் மகிழ்தல்

“உன் நெஞ்சில் இருப்பதை ஒளிக்காமல் சொல்” என்றேன். அவள் அமர்ந்து கொண்டே இனிமையாகப் புன்னகை பூத்தாள். நான் பின்னும் அதே கேள்வியைக் கேட்டேன். பெண்மானைப் போன்ற மருண்ட பார்வையும், சீவி முடித்து ஒடுங்கிக் கிடக்கும் கூந்தலும், மாந்தளிர் போன்ற மேனியும் கொண்ட அவள், நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியுடன் அவள் காதுகளில் இருந்த செவ்விய குழையணி ஆட, விரைந்து தலைகுனிந்தாள். திடீரென என் காலில் விழுந்து வணங்கினாள். இருவரும் இன்பத்தில் திளைத்தோம்.

நன்றி

http://vaiyan.blogspot.com/2016/05/agananuru-86.html

 

திங்கள், 22 மார்ச், 2021

கலித்தொகை - 11 - அரிதாய அறன் எய்தி


கலித்தொகை

பாடியவர் – பெருங்கடுங்கோ

திணை - பாலை


பாடல் 

'அரிதாய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும்,

பெரிதாய பகை வென்று பேணாரைத் தெறுதலும்,

புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தரும்' என,

பிரிவு எண்ணிப் பொருள்வயிற் சென்ற நம் காதலர்

வருவர்கொல்; வயங்கிழாஅய்! வலிப்பல், யான்; கேஎள், இனி:

'அடி தாங்கும் அளவு இன்றி, அழல் அன்ன வெம்மையால்,        

கடியவே' கனங் குழாஅய்! 'காடு' என்றார்; 'அக் காட்டுள்,

துடி அடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்

பிடி ஊட்டி, பின் உண்ணும், களிறு' எனவும் உரைத்தனரே

 'இன்பத்தின் இகந்து ஒரீஇ, இலை தீந்த உலவையால்,

துன்புறூஉம் தகையவே காடு' என்றார்; 'அக் காட்டுள்,       

அன்பு கொள் மடப் பெடை அசைஇய வருத்தத்தை

மென் சிறகரால் ஆற்றும், புறவு' எனவும் உரைத்தனரே

 'கல் மிசை வேய் வாடக் கனை கதிர் தெறுதலான்,

துன்னரூஉம் தகையவே காடு' என்றார்; 'அக் காட்டுள்,

இன் நிழல் இன்மையான் வருந்திய மடப் பிணைக்குத் 

தன் நிழலைக் கொடுத்து அளிக்கும், கலை' எனவும் உரைத்தனரே என

ஆங்கு

 இனை நலம் உடைய கானம் சென்றோர்

புனை நலம் வாட்டுநர் அல்லர்; மனைவயின்

பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன;  

நல் எழில் உண்கணும் ஆடுமால், இடனே.

பாடல் விளக்கம்

தலைவி தன் தோழியிடம், “தலைவன் பொருளீட்டச் சென்றார். பொருள் ஈட்டிக் கொண்டு வந்து அறம் செய்து இன்பம் துய்க்கலாம் என்று சொல்லிவிட்டுச் சென்றார். அற ஒழுக்கத்தை முழுவதும் ஏற்றுத் தவறாமல் நடப்பது மிக அரிது. அவ் ஓழுக்கத்துடன் வாழ்ந்து, அருள் பெறாமல் வாடுபவர்களுக்கு உதவுதல் வேண்டும். பகைதான் எல்லாவற்றிலும் பெரியது. பகைவரை வென்று பிறரைப் பேணாதவர்களை அழித்தல் வேண்டும். இப்படி இல்லாதவர்க்கு அளிக்கும் அறம், எதிரியை அழிக்கும் பொருள், இனியவரைத் துய்க்கும் இன்பம் ஆகிய மூன்றையும் செல்வமாகிய பொருள் தரும் என்று கூறிவிட்டு என்னைப் பிரிந்து சென்றார். அவர் வரவேண்டிய நாள் நெருங்குகின்றது. அவர் வருவதை அறிவிக்கும் அறிகுறியாக பல்லி சப்தமிடுகின்றது. என் இடக்கண் துடிக்கின்றது” என்று கூறுகின்றாள்.  

    தலைவன் சென்ற பாலைநிலம் தாங்கமுடியாத அளவுக்கு சுடும் காடு. அந்தக் காட்டில் யானைக்கன்று, ஆர்வ மிகுதியால்மிகக் குறைவாக இருந்த நீரைக் கலக்கிவிடும். வேட்கை மிகுந்த களிறு அதற்கு ஒருபோதும் கலங்காமல், தன் வேட்கையை முதலில் தீர்க்க முயலாமல், பிடியானைக்கும், தன் கன்றுக்கும் நீர் ஊட்டிவிட்டு, எஞ்சிக் கிடக்கும் நீரை  உண்ணும் காடு அது என்று கூறியுள்ளார்.


அந்தக் காட்டில் இன்பம் இல்லை. இலைகள் காய்ந்து உதிர்ந்துபோய், பட்ட மரங்கள் நிற்பதற்கு நிழல் தராது துன்புறுத்தும் தன்மையது அக்காடு என்றார்.     

அக்காட்டில் வெம்மைத் தாங்காது ஆற்றியிருக்கும் தன் பெண்-புறாவை ஆண்-புறா தன் மென்மையான சிறகுகளால் விசிறிக் கொடுக்கும் என்று அவர் கூறினார்.

                                            
   
மலைமேல் வளரும் மூங்கில்கள் வாடி வறண்டு போகும் அளவிற்கு வெயில் கொளுத்தும். அந்தக் காட்டில் நிழல் இல்லாமல் வருந்தும் பெண்மானுக்கு அதன் ஆண்மான் தன் உடம்பு நிழலைத் தந்து காப்பாற்றும் என்றும் கூறினார்.
                                      
                                         


இப்படிப்பட்ட காட்டு வழியில் அவர் சென்றார் எனினும், யானையும், புறாவும், மானும் தத்தம் காதலியரை அன்புடன் பேணுவதைக் காண்கின்ற நம் தலைவன், நாம் புனைந்திருக்கும் நல்லணிகளை இழந்து நாம் வாடும்படி விடமாட்டார். அதோ! வீட்டினுள் பல்லியும் நான் கூறுவதை ஆமோதிப்பது போல ஒலி செய்கின்றது. என் இடக்கண் துடிக்கிறது. இவை இரண்டும் நல்ல நிமித்தங்கள் (சகுனங்கள்). ஆகவே தலைவன் பொருளீட்டிக் கொண்டு வந்துகொண்டிருக்கிறார் என்பதை எண்ணி மகிழ்வோம். அதுவரை நாம் ஆற்றியிருப்போம்” என்று தலைவி தோழியிடம் கூறுகின்றாள்.