திங்கள், 18 அக்டோபர், 2021

நந்திக்கலம்பகம்

 

நந்திக்கலம்பகம்

தமிழில் உருவான கலம்பக இலக்கியங்களில் ஒன்று நந்திக்கலம்பகம். இது காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவ மன்னன் தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மன் மீது பாடப்பட்டது. இதுவே கலம்பக நூல்களில் காலத்தால் முற்பட்டு விளங்குகிறது. நந்திக் கலம்பகத்தின் காலம் கி.பி.9 ஆம் நூற்றாண்டு. காஞ்சி, மல்லை (மாமல்ல புரம்), மயிலை (மயிலாப்பூர்) ஆகிய நகரங்கள் இந்நூலில் சிறப்பாகப் போற்றப்பட்டுள்ளன. சிறந்த சொற்சுவை பொருட்சுவையோடு கற்பனை வளமும் நிறைந்த இந்நூலின் ஆசிரியர் யார் என்பது தெரியவில்லை.

நூல் வரலாறு

நந்திவர்மனிடம் இருந்து அரசைக் கவரும் நோக்கில் அவனது தம்பியால் ஒழுங்கு செய்யப்பட்டு அறம் பாடுதல் என்னும் முறையில் இப்பாடல்கள் பாடப்பட்டுள்ளன. அறம் வைத்துப்பாடிய நூலின் பாடலைத் தற்செயலாகக் கேட்ட நந்திவர்மன் அப்பாடலின் சிறப்பில் மனம் பறிகொடுத்துப் பாடல் முழுவதையும் கேட்க விரும்பினான். நூல் முழுவதையும் கேட்டால் மன்னன் உடல் எரிந்து இறப்பான் என்பதை அறிந்தும் தமிழின் மீதுள்ள தனியாத காதலால் உயிரையும் பொருட்படுத்தாது, எரியும் பந்தலின் கீழிருந்து கேட்டு உயிர் இறந்தான் என்று கூறப்படுகிறது. 'நந்தி, கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும்' - என்னும் சோமேசர் முதுமொழிவெண்பா என்னும் நூலின் வெண்பா வரிகள் இக்கருத்தை வலியுறுத்துகின்றது. இதற்கேற்ப இந்நூலிலும் பல வசைக்குறிப்புகள் இடம் பெறுகின்றன. இந்நூல், மற்ற கலம்பக நூற்களைப் போலல்லாமல் வரலாற்று நூலாகவே திகழ்கின்றது.   மூன்றாம் நந்திவர்மனது அரசியல் தொடர்பான செய்திகள் நந்திக் கலம்பகத்தில் அதிகமாகக் காணப்படுகின்றன.  மேலும் மூன்றாம் நந்திவர்மனின் கொடைச்சிறப்பு, தமிழ்ப்பற்று, சிவபெருமான் மீது கொண்ட பக்தி, வீரம், அறிவு போன்ற பண்புகளுடன் அறம், கொடை போன்ற பண்புகளும் நந்திக் கலம்பகத்தில் மிகவும் போற்றப்படுகின்றன.

நூல் அமைப்பு

நந்திக் கலம்பகத்தில் அகம், புறம், ஆகிய துறைகள் கலந்து வர அமையப்பெற்றபோதும் அவற்றுள் அகத்திணைச் செய்திகள் பெரும்பான்மையினதாகவும், புறத்திணைச் செய்திகள் சிறுபான்மையினதாகவும் இடம் பெறுகின்றன. நந்திக் கலம்பகத்தில் 144 பாடல்கள் காணப்படுகின்றன. ஆனால் அரசர் மீது பாடப்பெறும் கலம்பகம் 90 பாடல்களுடையதாய் இருக்க வேண்டும் என்பது நியதியாகும். எனவே, இதில் உள்ள அதிகப்படியான 54 பாடல்கள் பிற்காலத்தில் எழுதிச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.  இந்நூலில் நந்தி வர்மனின் தெள்ளாறு வெற்றியைப் பற்றி மட்டும் 16 பாடல்களில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன. கொற்ற வாயில் முற்றம், வெறியலூர், வெள்ளாறு, தெள்ளாறு போன்ற பல்வேறு போர்க்களங்களைப் பற்றிக் கூறும் சிறந்த வரலாற்று நூலாகவும் இது திகழ்கிறது.

நந்திக் கலம்பகத்தின் 61, 96, 100, 105, 110 ஆகிய பாடல்கள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

1.   பாட்டுடைத் தலைவன் வீரச் சிறப்பு

திருவின் செம்மையும் நிலமகள் உரிமையும்

பொதுவின்றி ஆண்ட பொலம்பூண் பல்லவ!

தோள் துணை ஆக மாவெள் ளாற்று

மேவலர்க் கடந்த அண்ணால் நந்திநின்

திருவரு நெடுங்கண் சிவக்கும் ஆகின்

செருநர் சேரும் பதிசிவக் கும்மே

நிறங்கிளர் புருவம் துடிக்கின் நின்கழல்

இறைஞ்சா மன்னர்க் கிடந்துடிக் கும்மே

மையில் வாளுறை கழிக்கு மாகின்

அடங்கார் பெண்டிர்

பூண்முலை முத்தப் பூண்கழிக்கும்மே

கடுவாய் போல்வளை அதிர நின்னொடு

மருவா மன்னர் மனம் துடிக் கும்மே

மாமத யானை பண்ணின்

உதிர மன்னுநின் எதிர்மலைந் தோர்க்கே.

விளக்கம்

திருமகளின் செல்வமும், நிலமகளின் உரிமையும் பொதுவின்றி ஆண்ட பல்லவ மன்னனே! உன் தோளின் வலிமையால் வெள்ளாற்றங்கரையை வென்றாய்! உன் நெடுங்கண் சினத்தால் சிவக்குமெனில் பகைவரின் ஊர் நெருப்பால் அழியும்! உன் புருவம் சினத்தால் துடிக்குமெனில் உன் வீரக்கழலுக்குப் பணியாத மன்னர்களின் இதயம் துடிக்கும்! உன் உறையிலிருந்து வாள் வெளிப்படுமெனில் பகை மன்னர் மனைவிகளின் மங்கலத்தாலிகள் அழியும்.  உன்னோடு போர்புரியும் மன்னர்களின் மனம் துடிக்கும்! உன் மாமத யானைகள் போருக்கென அழகுபடுத்தப்படுமெனில் குருதி ஆறு பெருக்கெடுத்து ஓடும்.

2.  தலைவி கார்ப்பருவங்கண்டு வருந்துதல்

சிவனை முழுதும் மறவாத சிந்தையான்

    செயமுன் உறவு தவிராத நந்தி யூர்க்

குவளை மலரின் மதுவாரும் வண்டுகாள்

    குமிழி சுழியில் விளையாடு தும்பியே!

அவனி மழைபெய் குளிர்காலம் வந்ததே

    அவரும் அவதி சொனநாளும் வந்ததே

கவலை பெரிது பழிகாரர் வந்திலார்

    கணவர் உறவு கதையாய் முடிந்ததே.

விளக்கம்

“சிவனை வணங்க மறவாத நந்திவர்மனின் ஊரில், குவளை மலரில் மது அருந்தும் வண்டுகளே!  நீர்க்குமிழில் விளையாடும் தும்பியே! மழை பெய்கின்ற குளிர்காலம் வந்து விட்டது! என்னைப் பிரிந்து சென்ற தலைவன் வருவதாகக் கூறிய நாளும் வந்து      விட்டது! ஆனால் என் தலைவன் வரவில்லை. என் கவலை பெரிதாகி விட்டது! கணவன் என்ற உறவு எனக்குக் கதையாக முடிந்துவிடுமோ” என்று அஞ்சுகின்றாள் தலைவி.

 

3. காலம்

அன்னையரும் தோழியரும் அடர்ந்துபொருங் காலம்

    ஆனிபோய் ஆடிவரை ஆவணியின் காலம்

புன்னைகளும் பிச்சிகளும் தங்களின்ம கிழ்ந்து

    பொற்பவள வாய்திறந்து பூச்சொறியும் காலம்

செந்நெல்வயற் குருகினஞ்சூழ் கச்சிவள நாடன்

    தியாகியெனும் நந்திதடந் தோள்சேராக் காலம்

என்னையவ அறமறந்து போனாரே தோழி!

    இளந்தலைகண் டேநிலவு பிளந்தெரியும் காலம்.

விளக்கம்

“அன்னையும் தோழிகளும் என்னோடு போர் செய்யும் காலமிது! ஆனி, ஆடி மாதங்கள் சென்றுவிட ஆவணியின் காலமிது! புன்னை, பிச்சிப் பூக்கள் பூத்துக்       குலுங்குகின்ற காலமிது! செந்நெல் வயல் சூழ்ந்த நாட்டின் தலைவன் நந்தியின் தோளைச் சேர முடியாத காலமிது! என்னைப் பிரிந்து சென்ற தலைவன் என்னை அறவே மறந்துபோய் விட்டாரோ தோழி! பிரிவினால் வருந்தும் என்னை மேலும் வருத்துகிறது மாலை நேர நிலவு” என்று வருந்துகின்றாள் தலைவி.

4. மேகவிடுதூது

ஓடுகின்ற மேகங்காள்! ஓடாத தேரில் வெறும்

கூடு வருகுதென்று! கூறுங்கள் - நாடியே

நந்திச்சீ ராமனுடை நல்நகரில் நல்நுதலைச்

சந்திச்சீர் ஆமாகில் தான்.

விளக்கம்

வினை முடிந்து மீண்டு வந்த தலைவன் தலைவியை எண்ணுகின்றான். வரும் வழியில் மேகங்களைக் கண்டவன் “நில்லாமல் ஓடும் மேகங்களே! இராமன் போன்ற என் மன்னன் நந்திவர்மனின் நகரம் காஞ்சிபுரம். அந்நாட்டில் வாழ்கின்ற என் தலைவி அழகிய நெற்றியை உடையவள். அவளைக் கண்டால் விரைந்து ஓடாத தேரில் உன்னைக் காணும் விருப்பத்துடன் வெறும் உடம்பு ஒன்று வந்து கொண்டிருக்கின்றது என்று கூறுங்கள்” என்று வேண்டுகின்றான்.

5.  கையறுநிலை

வானுறு மதியை அடைந்ததுன் வதனம்

    மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி

கானுறு புலியை அடைந்ததுன் வீரம்

    கற்பகம் அடைந்ததுன் கரங்கள்

தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள்

    செந்தழல் அடைந்ததுன் தேகம்

நானும் என்கலியும் எவ்விடம் புகுவேம்

    நந்தியே நந்தயா பரனே.

விளக்கம்

“அருளுடைய நந்திவர்மனே! நீ இப்போது இறந்து விட்டாய். உன் முகத்தின் ஒளி வானத்துச் சந்திரனை அடைந்துவிட்டது. உன் புகழ் கடலைச் சென்று சேர்ந்துவிட்டது. உன் வீரம் காட்டில் உள்ள புலியிடம் அடைக்கலமானது.  உன் கொடைத்திறம் கற்பக மரத்திடம் தஞ்சமானது. திருமகள் திருமாலிடம் சேர்ந்து விட்டாள். உன் உடல் நெருப்பிடம் சேர்ந்து விட்டது. நானும் என்னைத் தொடர்ந்து வரும் வறுமையும் எங்கே போய் இனி வாழ்வோம்” என புலவர்கள் கையற்றுப் பாடுகின்றனர்.

அருஞ்சொற்பொருள்

திரு திருமகள், மேலவர் பகைவர், செருநர் - பகைவர், பதி நாடு, கடுவாய் வெற்றிமுரசு, தும்பி கருவண்டு, அவதி சொன்ன நாள் குறித்துக் கூறிய காலம், அடர்ந்து பொருங்காலம் நெருங்கி வந்து எம்மை வைகின்ற காலம், பிச்சி சாதி மல்லிகை, குருகு இனம் பறவை இனம், இளந்தலை என் எளிய நிலை, நந்தி சீராமன் இராமபிரான் போன்ற நந்தி மன்னன், மறிகடல் அலைகள் மோதுகின்ற கடல், கலி வறுமைத் துன்பம், தயாபரன் அருளாளன்.

 

ஞாயிறு, 10 அக்டோபர், 2021

திருவாய்மொழி - நம்மாழ்வார்

 

திருவாய்மொழி

நம்மாழ்வார்

நம்மாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். இவர் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம்  ஆழ்வார் திருநகரியில் காரியார் மற்றும் உடைய நங்கைக்குத் திரு மகனாகப் பிறந்தவர். இவர் பிறந்த உடன் அழுதல், பால் உண்ணுதல் முதலியனவற்றைச் செய்யாமல் உலக இயற்கைக்கு மாறாக இருந்ததால் அவரை "மாறன்" என்றே அழைத்தனர். மாயையை உருவாக்கும் "சட" எனும் நாடியினாலே குழந்தைகள் பிறந்தவுடன் அழுகிறது. ஆனால் இவர் சட நாடியை வென்றதால் "சடகோபன்" என்றும் அழைக்கப்பட்டார். யானையை அடக்கும் அங்குசம் போல, பரன் ஆகிய திருமாலை தன் அன்பினால் கட்டியமையால் "பராங்குசன்" என்றும், தலைவியாகத் தன்னை வரித்துக் கொண்டு பாடும்போது "பராங்குச நாயகி" என்றும் அழைக்கப்படுகிறார்.  நான்கு வேதங்களைத் தீந்தமிழில் பாடியதால் "வேதம் தமிழ் செய்த மாறன்" என்றே புகழப்படுகிறார்.

பதினாறு ஆண்டுகள் திருக்குருகூர் நம்பி கோவிலின் புளிய மரத்தின் அடியில் எவ்வித சலனமும் இல்லாமல் தவம் செய்து வந்தார். வடதிசை யாத்திரை மேற்கொண்டிருந்த மதுரகவி என்பவர் அயோத்தியில் இருந்தபோது தெற்குத் திசையில் ஒரு ஒளி தெரிவதைக் கண்டு அதனை அடைய தென்திசை நோக்கிப் பயணித்தார். மாறனிடமிருந்தே அவ்வொளி வருவதை அறிந்து அவரை சிறு கல் கொண்டு எறிந்து விழிக்க வைத்தார். சடகோபனின் ஞானத்தாலும், பக்தியாலும் கவரப்பெற்று அவருக்கே அடிமை செய்தார் என்பது வரலாறு.

நம்மாழ்வார் இயற்றிய பாசுர நூல்கள் நான்கு. அவை,

1.    திருவிருத்தம் – 100 பாசுரங்கள்

2.    திருவாசிரியம் – 8 பாசுரங்கள்

3.    பெரிய திருவந்தாதி – 87 பாசுரங்கள் 

4.    திருவாய்மொழி – 1102 பாசுரங்கள்

 நம்மாழ்வாரின் வேறு பெயர்கள்

சடகோபன், மாறன், காரிமாறன், பராங்குசன், வேதம் தமிழ் செய்த மாறன், வகுளாபரணன், குருகைப்பிரான், குருகூர் நம்பி, திருவாய்மொழி பெருமாள், பெருநல்துறைவன், குமரி துறைவன், பவரோக பண்டிதன், ஞதனதேசிகன், ஞான பிரான், ஞானத் தமிழ்க் கடல்.

இவர் இயற்றிய திருவாய்மொழியில் நான்காம் திருமொழியிலிருந்து 5 பாடல்கள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இப்பகுதி, பராங்குசன் என்றழைக்கப்படும் நம்மாழ்வார் தம்மைத் தலைவியாகப் பாவித்து இறைவன் மீது காதல் கொண்டு, நாரை, குயில், அன்னம் முதலிவற்றைத் தூது அனுப்புவதாகப் பாடப்பட்டுள்ளது.


நான்காந் திருமொழி

நாரை விடு தூது

அஞ்சிறைய மடநாராய். அளியத்தாய் நீயும்நின்

அஞ்சிறைய சேவலுமாய் ஆவாவென் றெனக்கருளி

வெஞ்சிறைப்புள் ளுயர்த்தாற்கென் விடுதூதாய்ச் சென்றக்கால்

வன்சிறையில் அவன்வைக்கில் வைப்புண்டா லென்செய்யுமோ?

விளக்கம்

நாரையே! என் மீது கொண்ட கருணையால், நீ உன் ஆண் நாரையுடன் நாரணனிடம் எனக்காகத் தூது சென்றால், அவன் உங்களை அவனது சிறையில் வைத்துவிட்டால், என்ன செய்வாய்?


குயில் விடு தூது

என்செய்ய தாமரைக்கண் பெருமானார்க் கென்தூதாய்

என்செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள். நீரலிரே?

முன்செய்த முழுவினையால் திருவடிக்கீழ்க் குற்றேவல்

முன்செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே?

விளக்கம்

இனக் குயில்களே! தாமரைக் கண்ணனிடம் எனக்காகத் தூது செல்லுங்கள். நான் முன் செய்த வினைப்பயனால், அவனுக்குக் குற்றேவல் செய்யும் விதி எனக்கு இல்லாமல் போயிற்று. இனியாவது அப்பேறு எனக்குக் கிட்டுமோ என்பதை அறிந்து வா.


அன்னம் விடு தூது

விதியினால் பெடைமணக்கும் மென்னடைய அன்னங்காள்.

மதியினால் குறள்மாணாய் உலகிரந்த கள்வற்கு

மதியிலேன் வல்வி னையே மாளாதோ வென்று , ஒருத்தி

மதியெல்லாம் முள்கலங்கி மயங்குமால் என்னீரே.

விளக்கம்

அன்னங்களே! குறள் மணியாய் (வாமன அவதாரம்) உலகை இரந்தவனிடம்  சென்று, புத்தி முழுவதும் கலங்கப் பெற்று, அறிவிழந்து கிடக்கிறாள் ஒரு பெண் என்று கூறுங்கள். 


மகன்றில் விடு தூது (கிரவுஞ்சம்)

என்நீர்மை கண்டிரங்கி யிதுதகா தென்னாத

என்நீல முகில்வண்ணற் கென்சொலியான் சொல்லுகேனோ

நன்னீர்மை யினியவர் கண் தங்காதென் றொருவாய்ச்சொல்

நன்னீல மகன்றில்காள். நல்குதிரோ நல்கீரோ?

விளக்கம்

மகன்றில்களே! என் நிலைமையைக் கண்டு இரக்கப்படாத முகில் வண்ணனுக்கு என் நிலைமையை எடுத்துச் சொல்லுங்கள்.

 

குருகு விடு தூது

நல்கித்தான் காத்தளிக்கும் பொழிலேழும் வினையேற்கே,

நல்கத்தா னாகாதொ? நாரணனைக் கண்டக்கால்

மல்குநீர்ப் புனற்படப்பை இரைதேர்வண் சிறுகுருகே.

மல்குநீர்க் கண்ணேற்கோர் வாசகங்கொண் டருளாயே.

விளக்கம்

நீர் வாய்ந்த தோட்டங்களில் உலாவும் குருகே!  ஏழு உலகங்களையும் காத்தளிக்கும் நாராயணன் நீர் நிறைந்த கண்களுடன் நிற்கும் எனக்கு அருள் தரக்கூடாதா என்று  அவனிடம் சென்று கேள். 

 

 

முதலாழ்வார் மூவர் - பாசுரங்கள்

 

முதலாழ்வார் மூவர்

வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு  ஆழ்வார்களுள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் முதலாழ்வார்கள் எனப் போற்றப்படுகின்றனர். 

பொய்கையாழ்வார்

பொய்கையாழ்வார்  காஞ்சிபுரத்தில்  திருவெஃகா எனும் பதியிலுள்ள சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயிலின் உள்ளே உள்ள பொய்கையில் பிறந்தவர். திருமாலின் ஐம்படைகளின் ஒன்றாக விளங்கும் பாஞ்ச சன்யம் என்ற சங்கின் அம்சமாக பிறந்தவர். முதன்முதலில் திருமாலின் பத்து அவதாரங்களையும் பாடியவர்.  இவர் பாடிய பாடல்கள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் முதல் திருவந்தாதியாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

பூதத்தாழ்வார்
         பொய்கை ஆழ்வார் தோன்றிய மறுநாள், மகாபலிபுரத்தில் பள்ளிகொண்ட அரங்கநாதர் திருக்கோவிலின் நந்தவனத்தில் குருக்கத்தி மலரின் மீது பிறந்தவர் பூதத்தாழ்வார். திருமாலின் ஐந்து ஆயுதங்களில் ஒன்றான கவுமோதகி என்னும் கதை ஆயுதத்தின் அம்சமாக இறை ஒளியுடன் பிறந்தவர். எம்பெருமானுடைய உண்மையான நிலைமையை உணர்ந்து பரஞானம் அடைந்தவர் என்பதனால், “பூதத்தார்எனப் பெயர் வந்ததாகக் கூறுவர். இவர் பாடிய பாடல்கள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதியாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

பேயாழ்வார்

             பூதத்தாரின் அவதார தினத்துக்கு அடுத்த நாள், பரந்தாமனின் நந்தகம் என்ற வாளின் அம்சமாக, சென்னை மயிலாப்பூர் கேசவப் பெருமாள் கோவில் அருகே உள்ள ஒரு கிணற்றில் செவ்வல்லி மலரில் தோன்றியவர் பேயாழ்வார்இறைவன் மீது அதிக அன்பு கொண்டு பக்திப் பரவசத்தால், நெஞ்சம் சோர்ந்து, கண் சுழன்று அழுது சிரித்து ஆடிப்பாடிப் பேய் பிடித்தாற்போல இறைவனைத் தொழுது மகிழ்ந்ததால் பேய் ஆழ்வார்எனப்பட்டார். இவர் பாடிய பாடல்கள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் மூன்றாம் திருவந்தாதியாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

மூவரின்சந்திப்பு

திருமாலின் திருவுள்ளப்படி மூன்று நாட்களில், மூன்று தலங்களில் முதலாழ்வார்கள் மூவரும் தோன்றினர். அவர்களை ஓரிடத்தில் இணைக்கவும், அவர்களின் வாயிலாக தேன் சொட்டும் தமிழ் பாசுரங்களைச் செவிமடுக்கவும் இறைவன் முடிவு செய்தார். திருவிக்ரம பெருமாள் எழுந்தருளி இருக்கும் திருக்கோவிலூர் என்ற தலத்திற்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை, மூவருக்கும் பெருமாள் ஏற்படுத்தினார்.

ஒரு நாள், பொய்கையார் திருக்கோவலூர் சென்றார். இரவு நேரமாகிவிட்டது. ஒரு வைணவப் பெரியாரின் இல்லம் சென்று இடைக்கழியில் படுத்துக்கொண்டார். சற்று நேரத்தில், பூதத்தாரும் அங்கே வந்து சேர்ந்தார். ஒருவர் படுத்திருப்பதை அறிந்ததும் “எனக்கு இடமுண்டோ?” என்று வினவினார். இவ்விடத்தில் ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம் வாருங்கள்என்று எழுந்து அமர்ந்துகொண்டார். சிறிது நேரம் கழித்து பேயார் அங்கே வந்து, ‘எனக்கு இடமுண்டோ?’ என்று கேட்க இருவர் இருக்கலாம் மூவர் நிற்கலாம், நீரும் வாரும்என்று சொல்ல மூவரும் நின்று கொண்டு ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, கருமேக நிறத்துப் பெருமாள், பெருமழையையும், காரிருளையும் தோற்றுவித்து, தாமும் அவர்களுடனே நின்று நெருக்கடியை உண்டாக்கினார். வந்திருப்பது யார்?’ என்று ஆழ்வார்கள் மூவரும் புறக்கண்ணால் நோக்கியபோது அவர்களின் கண்ணுக்குப் பெருமாள் அகப்படவில்லை. பின்னர் தங்களின் தவ நிலையைக் கொண்டு அகக்கண்ணால் கண்டனர். அப்போது நாராயணரே வந்து தங்களோடு நிற்பதைக் கண்டு உடல் சிலிர்த்துப் போனார்கள். உள்ளம் உருகினார்கள். அப்போது திருமால் நாச்சியாரோடு, கருடவாகனத்தில் காட்சி கொடுத்தார்.

 

    இம்மூவரும் முதன்முதலாக திருமாலைப் பாடிய பாடல்கள் நமக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.


பொய்கையாழ்வார்

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று

விளக்கம்

“பெருமானே! இந்த உலகத்தையே அகல் விளக்காக அமைத்து, உலகத்தை வளைத்து நிற்கும் கடல் நீரை அவ்விளக்கிற்கு நெய்யாக வார்த்து, உலகிற்கு ஒளி தரும் கதிரவனை அவ்விளக்கின் சுடராகப் பொருத்தி, சுதர்சனம் என்ற சக்கரத்தைக் கையில் ஏந்திய உம்முடைய திருவடிக்கு என் சொல் மாலையைச் சூட்டுகின்றேன். துன்பக்கடலில் இருந்து என்னை விடுவிப்பாயாக” என்று வேண்டுகின்றார்.


பூதத்தாழ்வார்

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புறு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்

விளக்கம்

“பெருமானே! உம்மால் ஞானத் தமிழை அறிந்த நான் அன்பையே அகல் விளக்காக அமைத்து, உன் மீது கொண்ட ஆர்வத்தை நெய்யாக வார்த்து, என் சிந்தையைத் திரியாக அமைத்து ஞானத்தால் சுடர் ஏற்றுகின்றேன். உலகத்தின் இருளில் இருந்து என்னை விடுவிப்பாயாக” என்று வேண்டுகின்றார்.

 

பேயாழ்வார்

திருக்கண்டேன் பொன்மேனிகண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிச்சங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று

விளக்கம்

“பெருமானே! நான் இன்று கடலைப்போல கருத்த நிறம் கொண்ட உம் திருமுகத்தைக் கண்டேன். உம்முடைய திருமேனியைக் கண்டேன். உம் திருமார்பில் மலர்ந்திருக்கும் இலக்குமியைக் கண்டேன். உம்முடைய கையில் எதிரிகளை அழிக்கும் பொன்நிற சக்கரத்தையும், வலம்புரிச் சங்கையும் கண்டேன். அதனால் அருள் பெற்றேன்” என்று மனமுருகிப் பாடுகின்றார்.