சனி, 12 ஆகஸ்ட், 2023

நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க!

 

ஐங்குறுநூறு

திணை - மருதம்

பாடியவர் - ஓரம்போகியார்

கூற்று - புறத்தொழுக்கத்திலே நெடுநாள் ஒழுகி, “இது தகாது” எனத் தெளிந்த மனத்தனாய் மீண்டு தலைவியோடு கூடி ஒழுகா நின்ற தலைமகள் தோழியோடு சொல்லாடி “யான் அவ்வாறு ஒழுக, நீயிர் நினைத்த திறம் யாது?” என்றாற்கு அவள் சொல்லியது.

கூற்று விளக்கம் - பரத்தையர் உறவில் நெடுநாள் வாழ்ந்த தலைமகன் தன் பிழையுணர்ந்து தன் மனைவியை மீண்டும் கூடினாள். அப்பொழுது தோழியை நோக்கி, “நான் உங்களைப் பிரிந்து வாழும் நாட்களில் நீங்கள் என்ன எண்ணியிருந்தீர்கள்?” என வினவினான். அதற்கு விடையாகத் தோழி சொல்லியது.

கூற்று - தோழி தலைவனிடம் கூறியது.

பாடல்
வாழி ஆதன் வாழி அவினி
நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க!
என வேட்டோளே, யாயே! யாமே,
நனைய காஞ்சிச் சினைய சிறு மீன்
யாணர் ஊரன் வாழ்க!
பாணனும் வாழ்க என வேட்டேமே.

பாடல் விளக்கம்

         “தலைவனே! எம் மன்னனாகிய ஆதன் அவினி நெடிது வாழ்க! எம் நாட்டு வயல்களில் நெல்வளம் சிறக்கட்டும்! நாட்டில் பொன் வளம் பெருகட்டும் என்று விரும்புகின்றாள் எம் தாய் (தலைவி). அரும்புகள் நிரம்பிய புன்னை மரங்களும், முட்டைகளை மிகுதியாகக் கொண்ட சிறுமீன்களும் நிறைந்த ஊரின் தலைவன் வாழட்டும்! அவனுடன் அவன் பாணனும் வாழட்டும் என விரும்புகிறேன் எனத் தலைவி கூறினாள்” என்று தோழி தலைவனிடம் கூறுகின்றாள்.

குறிப்பு

சேர நாட்டைச் சேர்ந்த மன்னர்கள்  ஆதன் என்று அவினி என்றும் பெயர் பெற்றிருந்தனர்.  முதல் வரி மன்னனை வாழ்த்துகின்றது. தோழி, தலைவியைத் தாய் என்று குறிப்பிடுகின்றாள்.

உள்ளுறை

          நறுமணம் கமழும் காஞ்சி மலர்களும், புலால் நாற்றம் வீசும் மீன்களும் ஒரு சேர விளையும் நாட்டைச் சேர்ந்தவன் தலைவன் என்று கூறியது, கற்பில் சிறந்த குல மகளிரையும், பரத்தையரையும் ஒரு நிகராகக் கொண்டு தலைவன் வாழ்கின்றான் என்பதைக் குறிப்பிடுகின்றது.

 

நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;

 

குறுந்தொகை

திணை குறிஞ்சி

பாடியவர்தேவகுலத்தார்

துறை - தலைமகன் சிறைப்புறமாக, அவன் வரைந்து கொள்வது வேண்டி, தோழி இயற்பழித்தவழி, தலைமகள் இயற்பட மொழிந்தது.

துறை விளக்கம் தலைவன் தலைவி வீட்டின் அருகே வந்து நின்றான்.  தலைவியை அவன் மணந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவன் இயல்புகளை இகழ்ந்து கூறுகின்றாள் தோழி. அதைக் கேட்ட தலைவி, தலைவனின் இயல்புகளைப் புகழ்ந்து கூறுகின்றாள்.

பாடல்

நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;

நீரினும் ஆர் அளவின்றே- சாரல்

கருங் கோல் குறிஞ்சிப்பூக் கொண்டு,

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.

பாடல் விளக்கம்

“எம் தோழியே! கரிய கொம்புகளில்  பூத்துக் குலுங்குகின்ற குறிஞ்சிப் பூக்களில் உள்ள தேனை எடுத்து, மலையில் உள்ள உயர்ந்த மரங்களில் தேனடைகளைச் சேகரித்து வைக்கின்ற  மலைநாட்டில் வாழ்கின்றவன் எம் தலைவன்.  அவனோடு நான் கொண்ட நட்பு, நிலத்தை விடப் பெரியது, வானத்தை விட உயர்ந்தது. கடலைவிட ஆழமானது” என்று தலைவி தோழிக்குக் கூறுகின்றாள்.

குறிப்பு

         தலைவன் மீது தலைவி கொண்ட அன்பு மனம், மொழி, மெய் என்ற மூன்றாலும் அளந்து காண்பதற்கு அரிது என்பதைத் தலைவி நிலம், வானம், கடல் ஆகியவற்றோடு ஒப்ப வைத்து எண்ணுகின்றாள். நிலம் நீரின்றிப் பயன்படாது. வானம் மேல் நின்ற அளவில் பயன்படாது. கடல் சூழ்ந்து நின்றாலும் பயன்தருவதில்லை. மாறாக, மேகங்கள் கடல் நீரை முகந்து, வானத்தில் உயர்ந்து எழுந்து, மழையாகப் பொழிந்தால் மட்டுமே நிலத்திற்குப் பயன் உண்டாகும். இம்மூன்றன் சேர்த்கை போல எங்கள் இருவருடைய நட்பும் இயைந்த நட்பு என்ற தலைவி கூறுகின்றாள்.

 

 







நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்;

 

நற்றிணை

திணை - குறிஞ்சி

பாடியவர்கபிலர்

கூற்று - பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது.

கூற்று விளக்கம் பொருள் ஈட்டுதற் கரணமாகத் தலைவன் தலைவியை விட்டுப் பிரிய எண்ணியதைத் தோழி அறிந்து, தலைவியிடம் கூற, தலைவி “தலைவன் அங்ஙனம் என்னை விட்டுப் பிரிய மாட்டார்” எனத் தலைவனைப் புகழ்ந்து கூறுகின்றாள்.

பாடல்

நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்;

என்றும் என் தோள் பிரிபு அறியலரே'

தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச்

சாந்தில் தொடுத்த தீம் தேன் போல,

புரைய மன்ற, புரையோர் கேண்மை;

நீர் இன்று அமையா உலகம் போலத்

தம் இன்று அமையா நம் நயந்தருளி,

நறு நுதல் பசத்தல் அஞ்சிச்

சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே!

பாடலின் விளக்கம்

         “தோழி என் காதலர் சொன்ன சொல்லைத் தவறாமல் காப்பாற்றக் கூடிய வாய்மையுடையவர். நீண்ட காலம் பழகுவதற்கு மிக இனிமையானவர். எப்போதும் என் தோள்களைப் பிரியும் எண்ணம் இல்லாதவர். அத்தகையவருடைய நட்பு, தேனீக்கள் தாமரையின் குளிர்ந்த மகரந்தங்களை ஊதி, உயர்ந்து நிற்கும் சந்தன மரத்தின் தாதினையும் ஊதி, சந்தன மரத்தின் உச்சியில் கொண்டு சென்று சேர்த்து வைத்த தேனைப் போல உறுதியாக உயர்ந்தது. தண்ணீர் இல்லாமல் இவ்வுலகம் இயங்காதது போல, அவர் இல்லாமல் நான் வாழ மாட்டேன் என்பதை நன்கு உணர்ந்தவர். என் மீது மிகுந்த விருப்பம் கொண்டவர். என்னைப் பிரிந்து சென்றால் என் நெற்றியில் பசலை நோய் படரும் என்று அஞ்சி தடுமாற்றம் அடைந்து என்னை விட்டு நீங்கிச் செல்ல மாட்டார்” என்று தலைவி கூறுகின்றாள்.

குறிப்பு

இப்பாடலில், தாமரைத் தாது தலைவன் உள்ளத்தையும், சந்தனத்தாது தலைவியின் உள்ளத்தையும் குறிப்பிடுகின்றது. சந்தன மரத்தில் இனிய தேனடை வைத்தது போலத் தலைவன் தலைவியிடம் அன்பு வைத்துள்ளான் என்பது கருத்து.

             

    

பசலை என்பது நிற வேறுபாடு. தலைவனின் பிரிவால் தலைவி வாடும்போது அவள் அழகின் பொலிவு குறைந்து போய் அவள் உடலில் நிற வேறுபாடுகள் தோன்றும். அதுவே பசலை நோய் என்று கூறப்படுகின்றது.