ஞாயிறு, 7 மார்ச், 2021

ஐந்திணைகளின் முதல் கரு உரிப்பொருட்கள், புறப்பொருள்

ஐந்திணைகளின் முதல் கரு உரிப்பொருட்கள்

          அகப்பொருள் இலக்கணத்தில் முதன்மையானதும் சிறப்பானதும் ஐந்திணையே ஆகும். அது அன்பின்ஐந்திணை என்று அழைக்கப்படும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து பெயர்களில் வழங்கப்படும். இவை தலைவன் - தலைவி இருவரது மனம் ஒத்த அன்பை மையமாக வைத்து வகுக்கப்பட்ட இலக்கணங்கள் ஆகும்.

ஐந்திணை முப்பொருள்

ஐந்திணை ஒழுக்கத்தோடு தொடர்புடைய உலகப்பொருள்களை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற மூன்று பாகுபாடுகளில் அடக்கிக் கூறுவர்.

முதற்பொருள்

முதற்பொருள் நிலம், பொழுது என இருவகைப்பட்டது.

ஐந்து திணைகளுக்கும் உரிய நிலங்கள்

குறிஞ்சி

மலையும் மலை சார்ந்த இடமும்

முல்லை

காடும் காடு சார்ந்த இடமும்

மருதம்

வயலும் வயல் சார்ந்த இடமும்

நெய்தல்

கடலும் கடல் சார்ந்த இடமும்

பாலை

குறிஞ்சியும் முல்லையும் தம் இயல்பில் இருந்து மாறிய நிலை

 

ஐந்து திணைகளுக்கும் உரிய பொழுதுகள்

பொழுது பெரும் பொழுது, சிறு பொழுது என இருவகைப்படும்.

பெரும்பொழுது என்பது, ஓர் ஆண்டின் கூறுபாடு.  ஓர் ஆண்டுக்கு உரிய ஆறு பருவங்களும் பெரும்பொழுது எனப்படும்.  ஒவ்வொரு பெரும்பொழுதும் இரண்டு மாத கால அளவினை உடையதாகும்.

பெரும்பொழுது  உரிய மாதங்கள்

1.இளவேனிற்காலம் - சித்திரை, வைகாசி

2. முதுவேனிற்காலம் - ஆனி, ஆடி

3. கார்காலம் - ஆவணி, புரட்டாசி

4. குளிர்காலம் - ஐப்பசி, கார்த்திகை

5. முன்பனிக்காலம் - மார்கழி, தை

6. பின்பனிக்காலம் - மாசி, பங்குனி

(வேனிற்காலம் - வெயிற்காலம் ; கார்காலம் - மழைக்காலம் ; முன்பனிக்காலம் - மாலைக்குப் பின் பனி விழும் காலம்; பின்பனிக்காலம் - காலையில் பனி விழும் காலம்).

சிறுபொழுது

 சிறுபொழுது என்பது நாளின் கூறுபாடு. ஒரு நாளை, 1. வைகறை, 2. காலை, 3. நண்பகல், 4. எற்பாடு, 5. மாலை, 6. யாமம் என்பனவாக, ஆறு கூறுகளாக்கி, அவற்றைச் சிறுபொழுது என வழங்குவர்.  ஒவ்வொரு சிறுபொழுதும் நான்கு மணி நேரம் கொண்டது. எனவே, ஆறு சிறுபொழுதும் சேர்ந்து, இருபத்து நான்கு மணி நேரம் ஆகும்.

சிறு பொழுதுக்குரிய நேரம்

1.     வைகறை - இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை

2.     காலை - காலை 6 மணி முதல் முற்பகல் 10 மணி வரை

3.     நண்பகல் - முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

4.     எற்பாடு - பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை

5.     மாலை - மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை

6.     யாமம் - இரவு 10 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை

(‘எற்பாடுஎன்பது எல்-படு நேரம்; அதாவது சூரியன் மறையும் நேரம். ‘எல்என்பதற்குச் சூரியன் என்பது பொருள்).

ஐந்திணைகளுக்கு உரிய பொழுதுகள்

திணைகள்

பெரும்பொழுது

சிறுபொழுது

குறிஞ்சி

குளிர்காலம், முன்பனிக்காலம்

யாமம்

முல்லை

கார்காலம்

மாலை

மருதம்

ஆறு பெரும்பொழுதுகள்

வைகறை

நெய்தல்

ஆறு பெரும்பொழுதுகள்

எற்பாடு

பாலை

இளவேனிற்காலம், முதுவேனிற்காலம், பின்பனிக்காலம்

நண்பகல்

 

கருப்பொருட்கள்

          ஒவ்வொரு நிலத்தையும் சார்ந்து - அங்கு வாழும் உயிரினங்கள், பொருள்கள் யாவும் கருப்பொருள்கள் எனப்பட்டன. இலக்கண நூல்களில் 13 வகையான கருப்பொருள்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. அவை, தெய்வம், மக்கள், ஊர், நீர், மரம், மலர், உணவு, பறவை, விலங்கு, பறை, யாழ், பண், தொழில் ஆகியனவாகும்.

 

குறிஞ்சி

முல்லை

மருதம்

நெய்தல்

பாலை

தெய்வம்

முருகன்

திருமால்

இந்திரன்

வருணன்

கொற்றவை

மக்கள்

குறவன்,

குறத்தி

இடையர், இடைச்சியர்

உழவர், உழத்தியர்

பரதர்,

பரத்தியர்

எயினர், எயிற்றியர்

உணவு

மலைநெல், தினை

வரகு,

சாமை

செந்நெல், வெண்ணெல்

மீன், உப்பு விற்றுப் பெற்றவை

வழிப்பறி செய்தன, சூறை கொண்டன

ஊர்

சிறுகுடி

பாடி, சேரி

ஊர்கள்

பட்டினம், பாக்கம்

பறந்தலை, குறும்பு

நீர்

சுனை நீர்

காட்டாறு

ஆறு, பொய்கை

மணல்கிணறு, உவர்க்குழிநீர்

கூவல்,

வற்றிய சுனை

மரம்

வேங்கை, அகில்

கொன்றை, குருந்தம்

வஞ்சி, மருதம்

புன்னை, ஞாழல்

இருப்பை, பாலை

பூ

குறிஞ்சி

முல்லை,

பிடவு

கழுநீர்,

தாமரை

நெய்தல்,

தாழை

மரா, குரா

பறவை

கிளி,

மயில்

காட்டுக்கோழி, சேவல்

நீர்க்கோழி, நாரை

அன்னம், கடற்காகம்

கழுகு,

பருந்து

விலங்கு

புலி, கரடி

பசு, முயல்

எருமை, நீர்நாய்

உப்பு சுமக்கும் எருது, சுறா

வலிவற்ற யானை, புலி

பறை

தொண்டகம்

ஏறுகோட்பறை

மணமுழவு

மீன்கோட்பறை

நிரைகோட்பறை

யாழ்

குறிஞ்சியாழ்

முல்லையாழ்

மருதயாழ்

நெய்தல்யாழ்

பாலையாழ்

பண்

குறிஞ்சிப்பண்

சாதாரிப்பண்

மருதப்பண்

செவ்வழிப்பண்

பஞ்சுரப்பண்

தொழில்

தினை அகழ்தல், வெறியாடல்

நிரை மேய்த்தல், களை விடுதல்

நெல்லரிதல்

களை பறித்தல்

மீன் பிடித்தல், உப்பு விளைத்தல்

வழிப்பறி, சூறையாடல்

 

உரிப்பொருள்

ஒவ்வொரு நிலத்து மக்களும் நிகழ்த்தும் ‘ஒழுக்கம்உரிப்பொருள் எனப்படும்.

குறிஞ்சி

புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

முல்லை

இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

மருதம்

ஊடலும் ஊடல் நிமித்தமும்

நெய்தல்

இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

பாலை

பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

 

புறப்பொருள்

பிறரிடம் கூறத்தக்க அறம், பொருள், வீடு பற்றியும் கல்வி, வீரம், கொடை, புகழ் பற்றியும் கூறுவது புறப்பொருள் ஆகும்.  புறத் திணைகள் பன்னிரண்டு வகைப்படும். அவையாவன, வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை என்பனவாகும்.

  1.   வெட்சித் திணை - பகை நாட்டினர் பசுக் கூட்டங்களைக் கவர்ந்து வருதல்.
  2. கரந்தைத் திணை - பசுக்களை மீட்டு வருதல்.
  3. வஞ்சித் திணை - பகைவர் நாட்டின்மீது படை எடுத்தல்.
  4. காஞ்சித் திணை - படை எடுத்து வந்தவர்களை எதிர்நின்று தடுத்தல்
  5. உழிஞைத் திணை - பகை நாட்டினர் மதிலை வளைத்துப் போர் புரிதல்
  6. நொச்சித் திணை - பகைவர்கள், மதிலைக் கைப்பற்ற விடாமல் காத்தல்
  7. தும்பைத் திணை - இரு நாட்டு வீரர்களும் எதிர்நின்று போரிடல்
  8. வாகைத் திணை - பகைவரை வென்றவர் வெற்றி விழாக் கொண்டாடுதல்
  9. பாடாண் திணை - ஒருவருடைய புகழ், கல்வி, கொடை முதலியவற்றைப் புகழ்ந்து பாடுதல்
  10. பொதுவியல் திணை - மேற்கூறிய புறத்திணைகளுக்குப் பொதுவாய் அமைந்தனவும் அவற்றுள் அடங்காதவும் பற்றிக் கூறுதல்.
  11. கைக்கிளை - ஒருதலைக் காதல், ஆண், பெண் இருவருள் ஒருவரிடம் மட்டும்   தோன்றும் அன்பு/காதல்
  12. பெருந்திணை - பொருந்தாக் காதல் - ஒத்த வயது உடைய தலைவன் - தலைவி  அல்லாதாரிடம் தோன்றும் காதல்.

 

 


சங்க காலம் பொற்காலம்

 

சங்க காலம் பொற்காலம்

முன்னுரை

       சங்ககாலம் பொற்காலம் எனப் போற்றப்படுகிறது. இதற்குக் காரணம் அக்கால மக்களின் வாழ்க்கைமுறை, அரசியல், தமிழ்மொழி ஆட்சி, இலக்கியவளம், புலமைப்போற்றல், பண்பாடு நாகரிகம் ஆகியனவாகும்.

அரசியல்

     நிலவுடைமைச் சமுதாயமும் முடியாட்சி சமுதாயமும் தோன்றிய காலம் சங்க காலம் எனப்படுகிறது. ஊர்ப்புறத்தலைவர்கள் குடைவோலை முறையிலும், அரசர்கள் வாரிசு அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். போரும், பூசலும் மக்களை பெரிதாகப் பாதிக்கவில்லை. மக்கள் போர்க்காலத்தும் அமைதி வாழ்க்கையே வாழ்ந்தனர் என்பதும் போர் என்பது மன்னர்க்கும் மறவர்க்கும் உரியது என்பதும் அக்கால இயல்பாய் இருந்தது. ஒரு நாட்டு புலவரும் வாணிகரும் வேறு நாடு செல்வதற்கு எத்தடையும் விதிக்கப்படவில்லை. மன்னன் மக்கள் மனமறிந்து செயல்பட்டான். நல்லாட்சி நடந்தது. தமிழ் வேந்தர்கள் வெற்றிகள் பல பெற்றனர்.

தமிழ்மொழி ஆட்சி

       தமிழ்  நாட்டைத் தமிழர்களே ஆண்ட காலம் சங்ககாலம். அக்கால அரசில் தமிழொன்றே ஆட்சி மொழியாய் இருந்தது. பின் ஆண்ட களப்பிரர்களோ, பல்லவர்களோ தமிழைப் புறக்கணித்தனர். அவர்கள் காலத்தில் சமஸ்கிருதமும், பாலியும், பிராகிருதமும் ஆட்சி செய்தன. இத்தகைய வரலாற்றை  ஆராயும் போது தமிழ் ஆட்சி செய்த காலம், தமிழனால்  தமிழன் ஆழப்பட்ட காலமாகிய சங்ககாலம் பொற்காலமே.

புலமை போற்றல்

      இனம் குலம் ஆகிய வேற்றுமைக்கு அப்பாற்பட்டதாகக் கல்வி போற்றப்பட்டது.

              கற்கை நன்றே  கற்கை நன்றே

              பிச்சை புகினும் கற்கை நன்றே

எனச் செல்வத்தினும் கல்வியே பெருமை சேர்ப்பது என அக்காலத்தார் கருதினார். அறிவுக்கும் கல்விக்கும் முதன்மை கொடுக்கும் சமுதாயம் செல்வத்திலும் முதன்மை பெறுதலை இன்றும் காணலாம்.

                அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்

                 அஃதறி கல்லா தவர்.

என்ற வள்ளுவர் சொல் பொய்யன்று. அறிவார்ந்த சமுதாயம் அறிஞர்களை போற்றியது.

புலவர்களின் பெருமை

         பொருளையும் பொன்னையும் பரிசாகப் பெறும் இரவலர்கள் தாம் புலவர்கள் என எள்ளி நகையாடுவோர் உளர். புலமைக்குப் பரிசு ஒரு மதிப்பீடு என்றே அக்காலப்புலவர்கள் எண்ணினர். பரிசுக்காக பொய் கூறி ஒருவனை வாழ்த்தியதில்லை. எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே என மன்னனை எதிர்ப்பதில் இறுமாப்புற்றனர். அவர்தம் அறிவு, ஆட்சிக்கும் மக்களுக்கும் மன்னனுக்கும் பயன்பட்டது. அறிவுடையோர் வழிகாட்ட அரசன் ஆட்சி புரிந்ததால் ஆட்சி சிறப்புற்றது.

பெண்மை போற்றல்

           பெண்களில் பெருந்தொகையினர் படித்தவராயிருந்தனர், பெருமைமிகு புலவர்களாக முப்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் விளங்கினர். ஔவையார், வெள்ளி வீதியார், நக்கண்ணையார், ஆதிமந்தியார் போன்ற பெண்பாற் புலவர்களின் பாடல்கள் சங்க இலக்கியத்தில் உள்ளன. கல்வியுரிமை மட்டுமன்றிச் சமுதாயத்தின் பிற உரிமைகளும் பெற்றிருந்தனர். பெண்கள் விரும்பியவனைக் கணவராகப் பெறும் உரிமை, கணவன் தேடிவந்த பொருளைப் பாதுகாக்கவும் செலவிடவும் உரிமை, அரசு பணிகளில் பணியாற்றும் உரிமை எனப் பெண்கள் பெற்ற உரிமைகள் பல.

பண்பாடும் நாகரிகமும்

         சங்க சமுதாயம் பண்பாட்டிலும் நாகரிகத்திலும் மேம்பட்டு விளங்கியது. சிற்பம், ஓவியம், போன்ற கலைகள் வளர்ச்சி பெற்றிருந்தன. கலைஞர்களாகிய பாணர்களும், கூத்தரும், விறலியும் அரசராலும் ஏனைப் புரவலராலும் மதிக்கப்பட்டனர். சங்க கால மக்கள் உடல்சார் வாழ்க்கையைவிட உள்ளஞ்சார்ந்த வாழ்க்கைக்கு சிறப்பிடம் கொடுத்தனர். அதனால் அன்பு, அருள், வாய்மை, நட்பு போன்ற நற்பண்புகளைப் பெற்று விளங்கினர்.

பொதுமை அறம்

         சாதிசமய பூசல்கள் சங்ககாலத்தில் இல்லை. தீண்டாமைக் கொடுமை அறவே இல்லை. ஏற்றத்தாழ்வற்ற அக்காலச் சமுதாயத்தில் எல்லா இனத்தவரும் ஒன்றி வாழ்ந்தனர். காதலர்களை இனம், சாதி, கொடுமை ஆகியன கட்டுப்படுத்தாத காலம் அது. நீதி, தண்டனை போன்றவை அனைவர்க்கும் பொதுவாய் இருந்தன.

தொழில்வளர்ச்சி

         உழவு, நெசவு போன்ற அடிப்படைத் தொழில்கள் மேலோங்கி இருந்தன. உழவுத்தொழில் வளர்ச்சிக்காக கரிகாலன் காவிரியில் கல்லணை கட்டினான்.  தமிழ் அரசர்கள் பலர் பாசன ஏரிகளை ஏற்படுத்தி நீர்வளம் பெருகச் செய்தனர். பட்டினும், மயிரினும், பருத்தி நூலினும் நெய்யப்பட்ட ஆடைகள் உள்நாட்டு தேவைகட்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் உற்பத்தி செய்யப்பட்டன.

இலக்கியவளம்

          கம்பராமாயணமும், பெரியபுராணமும் சோழர் காலத்தின்தான் தோன்றியது. பாட்டும் தொகையுமாகிய சங்ககால இலக்கிய விழுமத்திற்கு அக்கால அரசியலும் நல்லாட்சியுமே காரணமாக இருக்க முடியும். சிறந்த இலக்கியங்கள் தோன்றும் காலம், ஒரு நாட்டிற்கு நற்காலம் என்பது உண்மை. ஈடும் இணையுமற்ற தூய தனித்தமிழ் இலக்கியங்கள் தோன்றிய காலம் சங்ககாலமாகும்.

சங்க இலக்கியங்களின் சிறப்புகள்

  •  தொல்காப்பியமும், சங்க இலக்கியமும் பண்டைத் தமிழர்களின் வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.
  •  அகம், புறம் என்ற பொருள் பாகுபாடு வேறு எந்த மொழியிலும் இல்லை.
  •  சங்கப்பாடல்கள் சமயச் சார்பு இல்லாதவை. பாடல்களில்  தெய்வங்கள் இடம்பெறினும் அவை பாடலின் பாடுபொருள் ஆகவில்லை.
  • நாடகப்பாங்கிலான பாடல்கள் அமையப்பெற்றுள்ளன. சான்று - கலித்தொகை
  •  சங்கப்பாடல்களில் இல்லது புனைதல் இல்லை. சங்கப்புலவர்கள் உள்ளதை உள்ளவாறு பாடியுள்ளனர்.
  •  சங்கப்பாடல்களில் கையாளப்பட்டுள்ள உவமைகள் அனைத்தும்   இயற்கையோடு இயைந்த கற்பனைகளாகக் காட்சியளிக்கின்றன.
  •  “யாதும் ஊரே, யாவரும் கேளிர்”, “பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்“ என்பன போன்ற உயர்ந்த கோட்பாடுகள் சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன.
  • அரசர்களும் புலவர்களாக வீற்றிருந்தனர்.
  •  வரலாற்றுக் களஞ்சியமாகத் திகழ்கின்றன. சான்று – பதிற்றுப்பத்து, புறநானூறு
  • மெய்ப்பாடு, களவு, கற்பு, அகப்பொருள், புறப்பாருள் உள்ளிட்ட மரபுகளை மீறாமல் சங்கப்பாடல்கள் அமைந்துள்ளன.

முடிவுரை

       சங்க காலத்தின் பெருமைகளையும், சங்க இலக்கியங்களின் பெருமைகளையும் ஆழ்ந்து நோக்கும்போது, பொற்காலம் என்ற ஒன்று தமிழ்நாட்டில் நிலவியிருக்குமானல் அது சங்க காலமாகத்தான் இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

முச்சங்க வரலாறு

 

 முச்சங்க வரலாறு

பண்டைத் தமிழகத்தில் தமிழ்ப் புலவர்கள் ஒன்றுகூடி முச்சங்கங்கள் அமைத்துத் தமிழ் வளர்த்தனர். எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் ஆகிய சங்க இலக்கியங்கள் கடைச் சங்க காலத்தில் எழுந்தவையாகும். பொதுவாக சங்கம் என்ற சொல் கடைச் சங்கத்தையே குறித்து நிற்கின்றது. கூடல், அவை, மன்றம் ஆகியவை சங்கத்தைக் குறிக்கும் தமிழ்ச்சொற்களாகும். தமிழ்ச்சங்கம் வளர்த்த இடமாகக் கருதப்படும் மதுரை நகரம் “கூடல்” என்று அழைக்கப்படுகின்றது. தமிழ்ச்சங்கத்தைப் பற்றிய குறிப்புகள் இறையனார் களவியல் உரையில் காணப்படுகின்றது. சங்கங்கள் இருந்தமையைப் பல்வேறு இலக்கியங்களும் சான்றுரைக்கின்றன. பத்துப்பாட்டில் ஒன்றான சிறுபாணாற்றுப்படை,

தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின்

மகிழ்நனை மறுகின் மதுரை (66-67)

என்று கூறுகிறது. மதுரைக் காஞ்சி எனும் இலக்கியம்,

தொல்லாணை நல்லாசிரியர்

புணர்கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின்

நிலந்தரு திருவின் நெடியோன் (761-763)

என்று கூறுவதைக் காணும்போது நிலந்தரு திருவின் நெடியோன் என்ற பாண்டியன் அவையில் புலவர்கள் ஒருங்கிணைந்து செய்யுள் இயற்றினர் எனப் புலனாகிறது.

    காப்பிய இலக்கியமாகிய சிலப்பதிகாரம் “தென்தமிழ் நன்நாட்டுத் தீதுதீர் மதுரைஎன்றும், மணிமேகலை “தென்தமிழ் மதுரைச் செழுங்கலைப் பாவாய்என்றும் கூறுகிறது. கி.பி. 600 வாக்கில் வாழ்ந்த திருநாவுக்கரசர் சிவபெருமானைச் சங்கத்தோடு இணைத்து போற்றிப் பாடுகிறார். தருமி என்னும் ஏழைப் புலவனுக்குக் ‘கொங்குதேர் வாழ்க்கைஎன்ற குறுந்தொகைப் பாடலை எழுதிக் கொடுத்தார் என்பதை,

நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி

நற்கனகக்கிழி தருமிக்கு அருளினோன்காண் (6.76.3)

என்று கூறுகின்றார். 

திருநாவுக்கரசருக்குப் பின் வந்த பல்வேறு இலக்கிய ஆசிரியர்களும் சங்கம் என்ற சொல்லையே பயன்படுத்துகின்றனர். சின்னமனூர்ச் செப்பேடு, சங்கத்தில் இலக்கியம் இயற்றும் பணியோடு, மொழிபெயர்ப்புப் பணியும் நடைபெற்றதாக ஒரு செய்தியைக் கூறுகிறது.

மாபாரதம் தமிழ்ப்படுத்தும்

மதுராபுரிச் சங்கம் வைத்தும்

என்று கூறுவதால் மகாபாரதத்தைத் தமிழில் மொழிபெயர்த்த பணியும் சங்கத்தில் நடந்ததை நாம் அறிகிறோம்.

    பிளினி, தாலமி போன்ற மேலைநாட்டு அறிஞர்களும் சங்கம் பற்றி உரைக்கின்றனர். இலங்கை வரலாற்று நூல்களான மகாவம்சம், இராஜாவளி, இராஜரத்னாகிரி போன்ற நூல்களும் சங்கம் இருந்தமைக்குச் சான்று பகர்கின்றன. அத்தகு சிறப்பு வாய்ந்த சங்கங்களின் வரலாற்றைப் பின்வருமாறு காணலாம்

முதற் சங்கம்

கடல் கொண்ட தென்மதுரையில் பாண்டிய மன்னர்களால் நிறுவப் பெற்ற சங்கம் முதற்சங்கமாகும். இச்சங்கத்தை நிறுவிய மன்னன் காய்சின வழுதி என்பவனாவான். காய்சின வழுதி முதலாகக் கடுங்கோன் என்ற பாண்டிய மன்னன் ஈறாக 89அரசர்கள் 4440 ஆண்டுகள் இச்சங்கத்தை நடத்தியதாக இறையனார்களவியல் உரை கூறுகிறது.

இச்சங்கத்தில் சிவபெருமான், அகத்தியர், முருகன், முரஞ்சியூர் முடிநாகராயர், நிதியின் கிழவன் உள்ளிட்ட 4449 புலவர்கள் தமிழ் ஆராய்ந்து செய்யுள் இயற்றியுள்ளனர். அவர்களால் அகத்தியம், பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை போன்ற நூல்கள் பாடப்பட்டன.             

இடைச்சங்கம்

தென்மதுரையைக் கடல் கொண்ட பிறகு கபாடபுரத்தில் தொடங்கப் பெற்ற இடைச்சங்கம் 3700 ஆண்டுக் காலம் நடைபெற்றது. வெண்தேர்ச் செழியன் என்ற பாண்டிய மன்னனால் தொடங்கப் பெற்ற இச்சங்கம் முடத்திருமாறன் முடிய 59 மன்னர்களால் நடத்தப் பெற்றது. 

இச்சங்கத்தில் அகத்தியர், தொல்காப்பியர், இருந்தையூர் கருங்கோழியார் வெள்ளூர்க் காப்பியனார், சிறுபாண்டரங்கன், திரையன் மாறன், துவரைக்கோன், கீரந்தை முதலிய 3700 புலவர்கள் செய்யுள்களை இயற்றியுள்ளனர். இவர்களால் பாடப்பெற்றவை தொல்காப்பியம், மாபுராணம், பூத புராணம், இசை நுணுக்கும், கலி, குருகு, வெண்டாளி, வியாழ மாலை, அகவல் போன்ற நூல்களாகும்.

கடைச் சங்கம்

கபாடபுரமும் கடலால் அழிந்த பிறகு தற்போது உள்ள மதுரையில் கடைச் சங்கம் எனப்படுகின்ற மூன்றாம் சங்கம் தொடங்கப் பெற்றது. இரண்டாம் சங்கத்தை நடத்தி, கபாடபுரம் அழியும் போது அங்கிருந்து பிழைத்து வந்த முடத்திருமாறனால் இது, தொடங்கப் பெற்றது. இச்சங்கம் முடத்திருமாறன் முதலாக உக்கிரப்பெருவழுதி ஈறாக 49 அரசர்களால் நடத்தப் பெற்றது. 1850 ஆண்டுகள் இச்சங்கம் நடைபெற்றது.

இச்சங்கத்தில் சிறுமேதாவியார், சேந்தம்பூதனார், அறிவுடையரனார், பெருங்குன்றூர்க்கிழார், இளந்திருமாறன், மதுரை ஆசிரியர் நல்லந்துவனார், மருதன் இளநாகனார், நக்கீரனார் என 449 புலவர்கள் பாடியுள்ளனர். இதில் எழுதப்பட்ட நூல்கள் நெடுநல்வாடை, அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை, பரிபாடல், கூத்து, வரி, சிற்றிசை போன்றவை ஆகும்.