சனி, 20 ஜூலை, 2024

பண்டைத் தமிழரின் அணிகலன்கள்

 பண்டைத் தமிழரின் அணிகலன்கள்

பண்டைத் தமிழகத்தில் மக்கள் பல்வேறு அணிகலன்களால் தம்மை அழகுபடுத்திக் கொண்டனர். ஆண்களும் பெண்களுக்கு இணையாக அணிகலன்கள் அணிந்திருந்தமையை இலக்கியச் செய்திகள் கூறுகின்றன. தங்க அணிகளும், வெள்ளி அணிகளும், சங்கு அணிகளும் புழக்கத்தில் இருந்தன.

மகளிர் அணிகலன்களின் வகைகள்

    கால்விரல் மோதிரம், பரியகம், நூபுரம், அரியகம், பாடகம், சதங்கை, குறங்குசெறி, முத்துவடம், முப்பத்திரண்டு வடத்தாலான முத்துமேகலை, மாணிக்கமும் முத்தும் இழைத்த தோள்வளையல்கள், மாணிக்கமும் வயிரமும் அழுத்திய சூடகம், செம்பொன்வளை, நவமணி வளை, சங்கவளை, பவழவளை, வாளை மீனைப் போன்று இயற்றப்பட்ட மாணிக்க மோதிரம் ஆகிய அணிகலன்களைப் பெண்கள் அணிந்திருந்தனர் என்பதை சிலப்பதிகாரம் காட்டுகின்றது.

    இவை தவிர, மோசை என்னும் மரகதக் கடைசெறி, கழுத்திலணியும் வீரச் சங்கிலி, நேர்ச்சங்கிலி, பொன்ஞாண், அரிநெல்லிக்காய் மணிமாலை, இந்திர நீலத்திடையே வயிரம் இழைத்த குதம்பை என்னும் காதணி, வலம்புரிச் சங்கு, பூரப்பாளை, தென்பல்லி, வடபல்லி ஆகிய அணிகலைன்களையும் பெண்கள் அணிவதுள்ளனர். பெண்மக்கள் தம் காதுகளைத்தொங்கத் தொங்க வளர்க்கும்போது அணிந்து கொள்ளும் காதணிக்குக் குதம்பை என்றும், வளர்ந்த காதில் அணியும் காதணிக்குக் கடிப்பிணை என்றும் பெயர். நெல்லைத் தின்ன வந்த கோழிகளின்மேல் பெண்கள் தம் குழைகளைக் கழற்றி எறிவார்களாம். அக்காலத்தில் குழைகள் அவ்வளவு மலிந்திருந்தன என்பதைப் பட்டினப்பாலை 20 – 25 கூறுகின்றது.

    கைவளைகளில் சிலவகை முத்தால் இழைக்கப்பட்டன. பெண்கள் கால்விரல்களில் மோதிரம் அணியும் பழக்கம் இருந்துள்ளது.

    பெண்கள் அணிந்த சிலம்புகளுள் முத்தையும் மாணிக்கத்தையும் பரல்களாக இடுவது வழக்கம்.

பெண்கள் இடையில் அணிந்த பட்டிகை ஐந்து வகைப்படும். அவை, மேகலை, காஞ்சி, கலாபம், பருமம், விரிசிகை என்பனவாகும்.

பெண்களின் தலைக்கோலம்

தலைக்கோலம் செய்துகொள்ளுவதில் பழந்தமிழ்ப் பெண்கள் அளவு கடந்த விருப்பதைக் காட்டி வந்தனர். அக்காலத்தில் ஒப்பனைக் கலை வியப்பூட்டும் அளவுக்கு ஓங்கி வளர்ந்திருந்தது. கறுத்து, நீண்டு நெளிந்த கூந்தலையே மிகவும் விரும்பி வளர்த்தனர் என்பதைப் புறநானூறு 147ஆம் பாடல் குறிப்பிடுகின்றது. கொண்டை, குழல், பனிச்சை, சுருள், முடி என ஐந்து வகையாகத் தலைக்கோலம் செய்து கொண்டனர். கூந்தலில் பலவகையான மலர்களைச் சூட்டிக் கொள்வர். பெண்கள் ஒப்பனைக்கு நூறுவகைப் பூக்கள் பயன்பட்டன என்பதைக் குறிஞ்சிப்பாட்டு கூறுகின்றது. மகரவாய், வகிர் என்ற தலையணிகளையும், மாணிக்கமாலையுடன் வெண்ணூலில் கோத்த மலர்களையும் பெண்மக்கள் அணிந்திருந்தனர்.

    மகளிர் தம் கூந்தலுக்கு அகிற்புகை ஊட்டியுள்ளனர். கூந்தலைக் கைவிரல்களால் கோதி உலர்த்தி, அதை இரு தொகுதியாக வகிர்ந்து பின்னவிட்டுக் கொண்டனர். கண்ணாடியைத் துடைத்துப் பெண்கள் அதில் தம் ஒப்பனையைக் கண்ணுற்று மகிழ்ந்தனர். இக்காலத்தைப் போன்றே பழங்காலத்திலும் தமிழ்ப்பெண்கள் தம் கூந்தலுக்குக் களிமண் தேய்த்து முழுகும் வழக்கம் இருந்து வந்தது.

    பெண்கள் கண்ணுக்கு மைதீட்டிக் கொண்டனர். மைதீட்டும் குச்சிக்குக் கோல் என்று பெயர். எப்போதும் மைதீட்டப் பெற்றிருந்தனவாதலின் பெண்கள் கண்ணை “உண்கன்“ என்று கூறுவதுண்டு.

ஆண்களின் அணிகலன்கள்

ஆண்மக்கள் மதாணி, முத்துமாலை, வெள்ளிக்கம்பியில் கோத்த பொற்றாமரை மலர்கள், கைவளையல்கள் ஆகிய அணிகலன்களை அணிந்திருந்தனர்.  ஆடவர் தலைமுடி வளர்த்திருந்தனர். அதைச் சுருட்டிப் பின்புறம் முடித்திருந்தனர். நெற்றிக்குமேல் குடுமி சிறிது களையப்பட்டிருக்கும். தலையில் பூச்சூடிக் கொள்வது வழக்கம். தலையில் சூடும் பூமாலைக்குக் கண்ணி என்று பெயர். குண்டலம் ஆண்களின் முக்கிய அணியாக இருந்துள்ளது.

குழந்தை அணிகலன்கள்

குழந்தைகளின் நெற்றியில் சுட்டியும், பிறையும், மூவடம் கோர்த்த பொன் சங்கிலியும் பூட்டியுள்ளனர். கழுத்தில் ஐம்படைத் தாலியும், புலிப்பல் தாலியும் அணி செய்தன. குழந்தைகளின் விரல்களில் சுறாமீனைப் போன்றும் இடபத்தைப் போன்றும் இலச்சினைகள் பொருத்தப்பட்ட மோதிரங்கள் பூட்டினர். மணிகள் உள்ளிட்ட சதங்ககைள், பொன் இரட்டைச் சரிகள் கால்களிலும், மணியும் பவழமும் கோத்த அரைஞாண் இடையிலும் அணிவிக்கப்பட்டிருந்தன. சதங்கைகளின் பூட்டு வாய்கள் தேரையின் வாய்போல் அமைக்கப்பட்டன என்று கலித்தொகைப் பாடல்கள் 84,85,86 தெரிவிக்கின்றன.

 --------------------------------------------------------------------------------------------------


குறிப்பு

இந்தத் தலைப்பில் உள்ள கருத்துகள் யாவும்

தமிழர் நாகரிகமும் பண்பாடும் – முனைவர் அ.தட்சிணாமூர்த்தி, 

தமிழக வரலாறும் பண்பாடும் – வே.தி.செல்லம்,

தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் – கே.கே.பிள்ளை

ஆகிய மூன்று நூல்களில் இருந்து சுருக்கமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இவை மாணவர்கள் எளிமையாகப் புரிந்து கொள்ளவும், தேர்வுக்குப் படிக்கவும் உருவாக்கப்பட்டவை. முழுக்க முழுக்க மாணவர்களின் நலன் கருதியே இத்தளம் செயல்படுகின்றது.

ஆகவே, மாணவர்கள் தவிர்த்து இத்தளத்தைக் காண்பவர்கள் படிக்கவும், புரிந்து கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர, இத்தளத்தில் உள்ள செய்திகளை அப்படியே எடுத்து நூலாக்கம் செய்வதோ, கைடு நூலாக்கம் செய்வதோ, வலையொளியில் பதிவு செய்வதோ கூடாது என்று தாழ்மையுடன் வேண்டுகின்றேன். புரிதலுக்கு நன்றி.

பண்டைத்தமிழரின் உணவு

 

பண்டைத்தமிழரின் உணவு

பண்டைத் தமிழர்கள் சுவைமிக்க உணவுப் பொருள்களைச் சமைப்பதில் தேர்ந்திருந்தனர். அவரவர் வாழ்ந்த நிலத்திற்கேற்ப உணவு வகைகள் வேறுபட்டன. காய்கறிகளோடு இறைச்சி உணவும் விரும்பி உண்ணப்பட்டது. பலவகையான மது வகைகளையும் விரும்பி அருந்தினர். மன்னர்கள் இரவலர்க்கு அளித்த விருந்துகளில் பெரிதும் புலால் உணவே பரிமாறப்பட்டது.  

அரிசி உணவு

இராசா அன்னம் என்ற உயர்ரக நெல்லை அரிசியாக்கி உண்டனர். அரிசியைப் புழுக்கிக் காய வைத்து இரும்பு உலக்கையினால் குத்தி அரிசியாக்கினர். பண்டைத் தமிழர்கள் அரிசிச் சோற்றை சிறப்பு உணவாகக் கொண்டனர். புழுங்கலரிசி பெரிதும் பயன்படுத்தப்பட்டது. அரிசியை உரலிலிட்டு அதை வெளுக்கத் தீட்டியே உலையில் சமைத்தனர் (புறம்.399). வரகு, சாமை முதலிய சிறுதானிய அரிசி வகைகளும் பயன்பாட்டில் இருந்துள்ளன. சோற்றுக்கான அரிசி முல்லைப்பூப்போல வெண்மையாகவும், மென்மையாகவும் இருந்தது. ஓர் அரிசியிலேனும் இடைவரிகளோ, முரிவோ காணப்படாதவாறு, சோறு ஒன்றோடொன்று இழையாமல் பதமாக வெந்த நிலையில் சமைத்து உண்டனர். பழஞ்சோறு மக்களால் விரும்பி உண்ணப்பட்டது. சோற்றோடு காய்கறி வகைகள் சேர்க்கப்பட்டன. வேடர்கள் புளிச்சோறை விரும்பி உண்டமையைப் பொருநராற்றுப்படை (107) கூறுகின்றது. கடுகு தாளித்து காய்கறிகளைச் சமைத்தனர். மிளகு, உப்பு, புளி உணவில் சேர்க்கப்பட்டது. நெய்சோற்றை நண்டுக் கறியோடு உண்டனர் என்பதைச் சிறுபாணாற்றுப்படை (193-195) கூறுகின்றது.  நெய்சோற்றோடு காய்கறி வகைகளையும் உண்டனர்.

கஞ்சி

அரிசி, கொள்ளுப்பருப்பு, பயற்றம் பருப்பு ஆகியவற்றைப் பாலில் கூட்டிக் கஞ்சி காய்ச்சிக் குடித்தனர். புளிக்க வைத்த மாவைக் கரைத்து புளிங்கூழ் ஆக்கிக் குடித்தனர்.

சமையல் நுணுக்கங்கள்

தயிர்க்குழம்பு வைத்த தலைவியைக் குறுந்தொகை காட்டுகின்றது (குறுந்.167) மாங்கனிச் சாறும், களாப்பழமும், துடரியும், நாவற்பழமும் புளிப்புக்காகப் பயன்படுத்தப்பட்டன. வரால் மீன் குழம்புக்கு மாங்காய் புளியாகப் பயன்படுத்தப்பட்டன என்பதைப் புறநானூறு (புறம்.399) கூறுகின்றது. மாதுளங்காயை மிளகுப்பொடியும் கறிவேப்பிலையும் இட்டு பசுவெண்ணெயில் பொரித்து உண்டனர். பெண்கள் விருந்தினர்க்கு மாவடு ஊறுகாயோடு உணவு பரிமாறினர். பலாப்பழம், இளநீர், வாழைப்பழம், நுங்கு, வள்ளிக்கிழங்கு, சுட்ட பனங்கிழங்கு ஆகியனவும் தமிழ்களின் உணவாகும்.

புளியங்காய், நெல்லிக்காய் ஆகியவற்றை ஊறவைத்த காடியைப் பெரிதும் விரும்பினர். பாலைத் தோய்த்து வெண்ணெய் திரட்டும் வழக்கம் இருந்தது. வெண்ணையைப் பதமாகக் காய்ச்சி நெய் எடுத்துச் சோற்றில் வார்த்து உண்பர்.

ஐந்திணை உணவுகள்

·       குறிஞ்சி நில மக்களின் உணவில் தேன் மிக முக்கிய இடம் பெற்றது. தேனீக்களால் தேன் கிழிந்து கற்குவியல்களில் வழிந்தததைக் குறவர் இன மக்களின் பிள்ளைகள் உண்டனர் என்பதை அகம் 168ஆவது பாடல் காட்டுகின்றது. மேலும், கிழங்கு வகை உணவுகளை வேகவைத்து உண்டனர். வேட்டையாடி உணவு உண்ணும் வழக்கம் இருந்தது.

·       முல்லை நில மக்களின் உணவில் பால் சிறப்பிடம் பெற்றது. தயிர், நெய், வெண்ணெய் ஆகியவற்றில் உணவுப் பொருட்களைச் சேர்த்து உண்டனர் என்பதைப் “பாலுடை அடிசில் தொழீஇய” என்ற வரி (அகம்.152) காட்டுகின்றது.

·       மருத நிலத்தில் உழவர்கள் வரகுச் சோற்றை அவரையோடு உண்டனர். வெண்ணெற் சோற்றை கோழி இறைச்சியின் வற்றலோடு உண்டனர். அவலை இடித்து உண்டதை, பெரும்பாணாற்றுப்படை (பெ.ஆ.படை:223-226) காட்டுகின்றது. பலாப்பழம், இளநீர், வாழைப்பழம், நுங்கு ஆகிய பழ வகைகள் மருதநில மக்களின் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்த உணவுகளாகும்.

·       நெய்தல் நில மக்கள் கொழியலரசியைக் கூழாக ஆக்கி, உலர வைத்து, மீனோடு சேர்த்து உண்பர். (பெரும்.275-282) எயினர்கள் களர் நிலத்தில் வளரும் ஈச்சம்பழம் போன்ற மேட்டு நிலத்தில் விளைந்த நெல்லால் சமைத்த சோற்றினை நாய் வேட்டையாடிக் கொண்டு வந்த உடும்புக் கறியோடு உண்டனர். (பெரும்.130-132)

·       பாலை நில மக்களின் உணவில் பொரித்த உணவுகள் சிறப்பிடம் பெறுகின்றன. புல்லரிசியைச் சேர்த்து நில உரலில் குற்றிச் சமைத்த உணவை உப்புக் கண்டத்துடன் சேர்த்து உண்டனர். விருந்தினர்களுக்குத் தேக்கு இலையில் விருந்து படைத்தனர் என்பதைப் பெரும்பாணாற்றுப்படை விளக்குகின்றது.

இறைச்சி உணவு

பண்டைத் தமிழகத்தில் ஊன் உண்ணும் வழக்கம் பரவியிருந்தது. வெள்ளாடு, செம்மறியாடு, மான், முயல், ஆமை, மீன் வகைகள், நண்டு, ஈயல், கோழி, காட்டுக்கோழி, காடை, உடும்பு முதலியவற்றின் இறைச்சியைத் தனியாகவோ, பாலும் அரிசியும் கூட்டியோ சமைத்தனர்.  இறைச்சியை நெய்யில் பொரித்த வழக்கம் காணப்படுகின்றது. புளித்த மோரில் ஈயலை ஊறப்போட்டுப் புளிங்கறி சமைப்பதுண்டு. நெல்லை இடித்து ஆண்பன்றிக்குத் தீனியாகக் கொடுத்து அதைக் கொழுக்க வைப்பர். அதைப் பெண்பன்றியுடன் சேரவிடாமல் தனியாகக் குழிகளில் விட்டு வளர்த்துப் பிறகு அதைக் கொன்று அதன் ஊனைச் சமைத்துத் தின்றனர். பழந்தமிழர் ஊனை உப்புக்கண்டம் போட்டுப் பயன்படுத்தி உள்ளனர். ஊன் துண்டங்களை இரும்புக் கம்பிகளில் கோர்த்து நெருப்பில் வாட்டி உண்டனர்.(பொருநர்.105)

கள்ளுணவு

மன்னர், பாணர், புலவர், கூத்தர், பொருநர், விறலியர் அனைவருமே கள்ளுண்டு மகிழ்ந்தமையை ஆற்றுப்படை நூல்கள் காட்டுகின்றன. இயற்கையாகக் கிடைத்த பனங்கள், தென்னங்கள், ஈச்சங்கள் ஆகியவற்றையும், அரிசி, புளித்த சோற்றுக்காடி முதலியவற்றைக் காய்ச்சி இறக்கிய மதுவையும், யவனர்கள் கப்பலில் கொண்டு வந்த தேறலையும் அவர்கள் விருப்பத்துடன் குடித்தனர். மதுவகைகளைக் கண்ணாடிக் குப்பிகளிலும், மூங்கிற் குழாய்களிலும் நிரப்பி நெடுநாள் மண்ணில் புதைத்தனர். அத்தகைய மது வகைகளின் வெறி மிகவும் கடுமையாக இருக்கும். கள்ளுண்டவர்கள் புளிச் சுவைக்காக, களாப்பழம், துடரிப்பழம், நாவற்பழம் முதலிய பழங்களைப் பறித்து உண்டனர்.

       பண்டைத்தமிழர்களின் உணவுகளையும், அவற்றை எவ்வாறு சமைத்து உண்டனர் என்பதையும் பத்துப்பாட்டின் ஆற்றுப்படை நூல்கள் மிகத் தெளிவாக விளக்குகின்றன.

 -------------------------------------------------------------------------------------------------------------------------


குறிப்பு

இந்தத் தலைப்பில் உள்ள கருத்துகள் யாவும்

தமிழர் நாகரிகமும் பண்பாடும் – முனைவர் அ.தட்சிணாமூர்த்தி, 

தமிழக வரலாறும் பண்பாடும் – வே.தி.செல்லம்,

தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் – கே.கே.பிள்ளை

ஆகிய மூன்று நூல்களில் இருந்து சுருக்கமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இவை மாணவர்கள் எளிமையாகப் புரிந்து கொள்ளவும், தேர்வுக்குப் படிக்கவும் உருவாக்கப்பட்டவை. முழுக்க முழுக்க மாணவர்களின் நலன் கருதியே இத்தளம் செயல்படுகின்றது.

ஆகவே, மாணவர்கள் தவிர்த்து இத்தளத்தைக் காண்பவர்கள் படிக்கவும், புரிந்து கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர, இத்தளத்தில் உள்ள செய்திகளை அப்படியே எடுத்து நூலாக்கம் செய்வதோ, கைடு நூலாக்கம் செய்வதோ, வலையொளியில் பதிவு செய்வதோ கூடாது என்று தாழ்மையுடன் வேண்டுகின்றேன். புரிதலுக்கு நன்றி.

புதன், 17 ஜூலை, 2024

சங்க கால ஆட்சி முறை

சங்க கால ஆட்சி முறை

சங்க காலத்தில் முடியாட்சி நடைபெற்றது. மன்னன் இறைவனுக்கு ஒப்பாகவும், அரண்மனை கோயிலுக்கு ஒப்பாகவும் மதிக்கப்பட்டது. மன்னனின் பிறந்தநாளும், முடிசூட்டு விழாவும் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டன. மணிமுடி, கொடி, வெண்கொற்றக்குடை இவை மூன்றும் அரசின் சிறப்புச் சின்னங்களாகும். மன்னனின் பிறந்தநாளில் வகள் தள்ளுபடி செய்யப்பட்டன. கைதிகள் விடுதலை பெற்றனர்.

வாரிசு

மன்னர்கள் மரபுகளைப் போற்றினர். மன்னனின் மகனுக்கு அரசுரிமை கொடுக்கப்பட்டது. இளம் வயதுடையவர்களாக இருப்பினும் அவர்களும் அரசுரிமை பெற்றனர் என்பதற்கு கரிகாலனும், பாண்டியன் நெடுஞ்செழியனும் சான்றாவர். வாரிசு இல்லாதபோது நெருங்கி உறவினர் பதவி ஏற்றனர். தேர்தல் முறையும், பெண்கள் அரியணையில் ஏறும் வழக்கமும் இல்லை. மன்னர்களை எதிர்த்து மக்கள் போராடுவதில்லை.

அரசவை

அரசவை நிர்வாகத் தலைமையகமாக விளங்கியது. அது இருக்கை, ஓலக்கம், வேந்தவை என்ற பெயர்களில் அறியப்பட்டது. அரசவையில் மன்னர்  குடும்பத்தினரும், உயர் அதிகாரிகளும், அறிஞர் புலவர் பெருமக்களும், தூதுவர்களும் பங்கேற்றனர். அவையில் பங்குற்கும் பெருமக்கள் மன்னனுக்கு ஆலோசனை கூறுவதுடன் கட்டளைகளை எதிர்நோக்கி இருப்பர். ஆலோசனை கூற அவர்கள் தயங்கியதில்லை. அரசவை சட்டமியற்றும் அரங்கமாக இருக்க வில்லை. வழக்காறுகளும் மரபுகளும் சட்டமாக விளங்கின. மன்னன் சட்டத்தின் காவலனாக விளங்கினான்.

அமைச்சர்கள்

அமைச்சர்கள் ஆலோசகர்கள் என்றும் காவிதிமாக்கள் என்றும் அறியப்பட்டனர். திறன் உடையவர்களும், பேராற்றல் உடையவர்களும், நூலறிவு உடையவர்களும், அறவழி நடப்பவர்களுமே அமைச்சர்களாக இருந்தனர்.

தூதுவர்கள்

இளவரசர்களும், அந்தணர்களும், புலவர்களும் மன்னனின் தூதுவர்களாகச் செயல்பட்டனர். அண்டை நாடுகளுக்கும், அயல் நாடுகளுக்கும் தூதுவர்கள் சென்றனர். மன்னனின் அயல்நாட்டுக் கொள்கையின் முடிவை எடுத்துரைக்கவும், அயல்நாட்டுடன் நட்புறவை ஏற்படுத்தவும் தூதர்கள் பயன்பட்டனர்.

ஆலோசனைக் குழுக்கள்

மன்னர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கென்று குழுக்கள் இருந்தன. அவை எண்பேராயம், ஐம்பெருங்குழு என்று அழைக்கப்பட்டன. இக்குழுக்கள் அடங்கிய அமைப்புக்கு “பதினெண் சுற்றம்“ என்று பெயர். கல்வியாளர்களும், தூய உள்ளம் கொண்டவர்களும், ஒழுக்கத்தில் சிறந்தவர்களும், உண்மையே பேசுபவர்களுமே இக்குழுவின் உறுப்பினராகும் தகுதி பெற்றனர்.

எண்பேராயம்

  • கரணத்தியலவர்       – அரசின் பெருங்கணக்கர்
  • கருமவிதிகள் - பொருட் பாதுகாப்பு அதிகாரி
  • கனகச் சுற்றம் - பொருட் பாதுகாப்பு அதிகாரி
  • கடைக்காப்பாளர் - நாடு காவலர்
  • நகரமாந்தர்     - நகரத்தின் காவலர்
  • படைத்தலைவர்         - சேனைப்படைகளின் தலைவர்
  • யானை வீரர்   - யானைப் படை வீர்
  • இவுளி மறவோர்        - குதிரைப்படைத் தலைவர்

ஐம்பெருங்குழு

  • அமைச்சர்
  • புரோகிதர்
  • படைத்தலைவர்
  • தூதுவர்
  • சாரணர்

நாட்டுப் பிரிவுகள்

    நாடு முழுவதும் மண்டலம் என்று அழைக்கப்பட்டது. மண்டலங்கள் பரப்பால் பெரிதாகவும் சிறிதாகவும் இருந்தன. அவை நாடுகளாகப் பிரிக்கப்பட்டன. நாடுகளைக் கோட்டங்களாகப் பிரித்தனர். கோட்டம் என்பது ஓர் உட்பிரிவாகப் பிரிக்கப்பட்டது. நாட்டின் சிறிய பிரிவுகள் பேரூர்கள், சிற்றூர்களாயின. கடற்கரையை அடுத்த கிராமங்கள் பட்டினங்கள் எனப்பட்டன.

ஊர் நிர்வாகம்

உழவர் குடியிருப்பு ஊர் எனப்பட்டது. ஊர்களில் மன்றம், பொதியில் அம்பலம், மாசனம் போன்ற நிறுவனங்கள் நிர்வாகத்தை நடத்தின.

  • மாசனம் – குடிமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி. இவர் மக்களின் குறைகளை மன்னனிடம் கூறுவார்.
  • பொதியில், மன்றம், அம்பலம் – இவை யாவும் நீதி வழங்கும் இடங்கள் ஆகும். ஊர்களில் அமைதி நிலவ செயல்பட்டன. ஊர்களில் ஏற்படும் வழக்குகளுக்குத் தீர்வு கண்டன.

வரிகள்

  • நிலவரி முக்கியமானதாகக் கருதப்பட்டது.
  • விளைச்சலில் ஆறில் ஒரு பங்கை வரியாகச் செலுத்தினர்.
  • சிற்றரசர்கள் முறைப்படி முடி மன்னர்களுக்கு திறை செலுத்தினர்.
  • தோற்கடிக்கப்பட்ட எதிரிகளும் திறை செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டது.
  • நாட்டில் இறையிலி நிலங்கள் இருந்தன.
  • சில சூழல்களில் வரிகள் தள்ளுபடி செய்யப்பட்டன.
  • வசூலிக்கப்பட்ட வரிகள் பொதுப்பணிக்கும், அறப்பணிக்கும், ஆலயப்பணிக்கும் பயன்படுத்தப்பட்டன.
  • சாலைகள் அமைக்கவும், குளங்கள், ஏரிகளைப் பராமரிக்கவும் வரிப்பணம் செலவிடப்பட்டது.

நீதித்துறை

நகரங்களில் அவைகளும், ஊர்களில் மன்றங்களும் நீதி நிர்வாகப் பணிகளைச் செய்தன. அரசவை உயர்நீதி மன்றமாகவோ, முறையீட்டு மன்றமாகவோ செயல்பட்டது. நீதி வழங்குவதற்கென்று அமைந்த இடம் அறக்களம் எனப்பட்டது. நீதித்துறை உரிமை இயல், குற்ற இயல் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. எளிதான வழக்கு விசாரணை முறை பின்பற்றப்பட்டது. குற்றவியல் வழக்குகளே மிகுதியாக இருந்தன. நீதி வழங்கத் தெய்வங்கள் உதவும் என்ற நம்பிக்கையில் நீர், நெருப்பு முதலியவற்றின் துணை கொண்டு குற்றம் புரிந்தவர்களைக் கண்டுபிடிக்கும் வழக்கம் இருந்தது. குற்றம் தவிர்க்கும் நோக்குடன் கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டன. திருட்டுக் குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. உடல் உறுப்புகளை வெட்டுதல் சாதாரணமான தண்டனைகளாகும். குற்றம் புரிந்தோரை சித்திசவதைப் படுத்துதல், சிறையில் அடைத்தல், தண்டம் விதித்தல் ஆகிய தண்டனைகளும் சாதாரணமான தண்டனைகளாகக் கருதப்பட்டன. வரி கட்டாததும் தண்டனைக்குரியதாகும்.

------------------------------------------------------------------------------------------------

 

குறிப்பு

இந்தத் தலைப்பில் உள்ள கருத்துகள் யாவும்

தமிழர் நாகரிகமும் பண்பாடும் – முனைவர் அ.தட்சிணாமூர்த்தி,  

தமிழக வரலாறும் பண்பாடும் – வே.தி.செல்லம்,

தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் – கே.கே.பிள்ளை

ஆகிய மூன்று நூல்களில் இருந்து சுருக்கமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இவை மாணவர்கள் எளிமையாகப் புரிந்து கொள்ளவும், தேர்வுக்குப் படிக்கவும் உருவாக்கப்பட்டவை. முழுக்க முழுக்க மாணவர்களின் நலன் கருதியே இத்தளம் செயல்படுகின்றது.

ஆகவே, மாணவர்கள் தவிர்த்து இத்தளத்தைக் காண்பவர்கள் படிக்கவும், புரிந்து கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர, இத்தளத்தில் உள்ள செய்திகளை அப்படியே எடுத்து நூலாக்கம் செய்வதோ, கைடு நூலாக்கம் செய்வதோ, வலையொளியில் பதிவு செய்வதோ கூடாது என்று தாழ்மையுடன் வேண்டுகின்றேன். புரிதலுக்கு நன்றி.