ஞாயிறு, 7 மார்ச், 2021

நற்றிணை - உள் ஊர் மா அத்த, யாம் செய் தொல் வினைக்கு

 

நற்றிணை

முதல் பாடல்

ஆசிரியர் – நக்கண்ணையார்

திணை – நெய்தல்

துறை

வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாளாய தலைவி கனாக் கண்டு தோழிக்கு உரைத்தது

துறை விளக்கம்

தலைவன் பொருள் ஈட்டுவதற்காகத் தலைவியைப் பிரிந்து சென்றான். அப்பிரிவினைத் தாங்க முடியாத தலைவி கனவு கண்டு எழுந்தாள். அக்கனவைத் தன் தோழிக்குக் கூறுகின்றாள்.

பாடல்

உள் ஊர் மா அத்த முள் எயிற்று வாவல்

ஓங்கல்அம் சினைத் தூங்கு துயில் பொழுதின்,

வெல் போர்ச் சோழர் அழிசிஅம் பெருங் காட்டு

நெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு,

அது கழிந்தன்றே- தோழி!- அவர் நாட்டுப்

பனி அரும்பு உடைந்த பெருந் தாட் புன்னை

துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும்

சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும்,

பெருந் தண் கானலும், நினைந்த அப் பகலே.

பாடல் விளக்கம்

“ஊருக்குள்ளே ஒரு மாமரம் இருக்கிறது. அந்த மரத்தில் முள் போன்ற பற்களைக் கொண்ட வௌவால் தொங்கிக் கொண்டு, தூங்கிக் கொண்டே அழிசி என்ற சோழ மன்னனின் காட்டில் இருந்த நெல்லிக்கனியை உண்பதுபோல கனவு காண்கிறது. நானும் அதுபோன்ற ஒரு கனவு கண்டேன்.

தலைவனின் நாட்டில் புன்னை மரங்களில் அரும்புகள் பனித்துளிபோல அங்குள்ள துறையில் மேய்கின்ற கிளிஞ்சல்களின்மேல் உதிர்கின்றன. அதனைச் சிறுகுடியில் வாழும் பரதவ மக்கள் மகிழ்ச்சியோடு கண்டு களிக்கின்றனர்.  பரதவரின் மகிழ்ச்சியையும் அவன் வாழ்கின்ற சோலைகள் சூழ்ந்த கடற்கரையையும் நினைத்த அப்பகற்பொழுதில் தலைவனுடன் கூடி மகிழ்ச்சியடைவதுபோல கனவுகண்டேன். அத்தகைய இன்பம் கண்விழித்து எழுந்தபோது என்னை விட்டு நீங்கிச் சென்றது” என்று தன் தோழிக்கு உரைக்கின்றாள் தலைவி.

 

இரண்டாம் பாடல்

பாடியவர் - நல்லந்துவனார்

திணை - குறிஞ்சி

துறை

சிறைப்புறமாகத் தோழி தலைவிக்கு உரைப்பாளாய்ச் சொல்லியது.

துறை விளக்கம்

களவு வாழ்க்கையை மட்டும் விரும்பி திருமணம் செய்து கொள்ளாது காலம் தாழ்த்துகின்ற தலைவனுக்குத் தலைவியின் துயரை அவன் சிறைப்புறமாக இருக்கும்போது எடுத்துரைக்கின்றாள் தோழி.

பாடல்

யாம் செய் தொல் வினைக்கு எவன்பேதுற்றனை?

வருந்தல்; வாழி! - தோழி! - யாம் சென்று

உரைத்தனம் வருகம்; எழுமதி; புணர்திரைக்

கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்றாஅங்கு

உருகி உகுதல் அஞ்சுவல்; உதுக்காண்-

தம்மோன் கொடுமை நம் வயின் எற்றி,

நயம் பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது,

கண்ணீர் அருவியாக

அழுமே, தோழி! அவர் பழம் முதிர் குன்றே.

பாடல் விளக்கம்

          “தோழி! நாம் இப்போது படுகின்ற துன்பம் எல்லாம் நாம் முன்பு செய்த வினைகளின் பயனாகும். அதனைக் கருதாது நீ உள்ளம் கலங்கி நிற்கின்றாய். வருந்த வேண்டாம். தலைவனிடம் சென்று நம் வருத்தத்தைக் கூறுவோம் எழுந்து வா!  

          கடலில் விளைந்த உப்பு மழையில் கரைவது போல நீ நெஞ்சம் உருகுவது கண்டு நான் அஞ்சுகின்றேன். தலைவன் வாழ்கின்ற குன்று நம்மீது இரக்கமுடையது. தலைவன் நமக்குச் செய்கின்ற கொடுமையை நினைத்துத் தன் வருத்தத்தை அடக்க முடியாமல் கண்ணீர் கொட்டுவதுபோல அருவியாகக் கொட்டுகின்றது. அவரின் மலையே வருந்தும்போது அவர் வருந்த மாட்டோரோ? வருந்தி உன் துன்பம் நீங்க உன்னைத் திருமணம் செய்து கொள்ள வருவார். வருந்தாதே!” என்று தோழி தலைவிக்குக் கூறினாள்.

4 கருத்துகள்: