ஓவியக்கலை
ஓவியக்கலை மனிதர்களின் தொன்மையான கலை. தொல்பழங்காலத்து மக்கள் இயற்கைப் பொருட்களில் இருந்து உருவாக்கிய வண்ணக் குழம்புகளில் தீட்டிய ஓவியங்கள் இன்றளவும் பாறைக் குகைளில் நிலைத்திருப்பது வியப்புக்குரியதாகும். இவர்கள் துவக்கி வைத்த ஓவியக்கலை சங்க காலத்திலும் தொடர்ந்தது.
ஓவியத்தின் வகைகள்
ஓவியம் புனையா ஓவியம், புனைந்த ஓவியம் என இருவகைப்படும். ஓவியம் தீட்ட நினைப்போர் கற்பனை செய்த உருவத்தை முதலில் கோடுகளால் வரைவர். இது புனையா ஓவியம் எனப்படும். பின்னர் வண்ணக்குழம்பு பயன்படுத்தி வண்ணக்கோடு வரைவர். இதனை புனைந்த ஓவியம் என்பர்.
ஓவியர்கள்
ஓவியக் கலைஞர்கள் கண்ணுள் வினைஞர் என்றும், ஓவமாக்கள் என்றும் கூறப்பட்டனர்.
ஓவியத்தின் வேறு பெயர்
சங்ககாலத்தில் ஓவியத்திற்கு ஓவம், ஓவு என்ற சொற்களை வழங்கினர். அழகிய வீடுகளுக்கு ஓவியங்களை உவமை கூறினர். “ஓவத்தன்ன இடனுடை வரைப்பு” (பதிற்.61) என்று பாரியின் அரண்மனையைக் கபிலர் பாடுகின்றார். வீடுகளுக்கு மட்டுமின்றி அழகிய இயற்கைக் காட்சிகட்கும், அழகிய பெண்களுக்கும் ஓவியமே உவமையாக்கப்பட்டது. ஓவியத்திற்கு வட்டிகைச் செய்தி என்ற வேறு பெயரும் உண்டு. வண்ணங்களைக் குழைத்து வைக்கும் பலகை வட்டிகை எனப்பட்டது.
சங்ககால ஓவியங்கள்
சங்க காலத்தில் ஓவியங்கள் சுவர்களில் மட்டுமின்றி துணிகளிலும் வரையப்பட்டன. சிலப்பதிகாரத்தில் ஓவிய விதானம் பேசப்படுகின்றது. மாதவி ஆடிய அரங்கத்தில் ஒருமுக எழினியும், பொருமுக எழினியும், கரந்துவரல் எழினியும் இருந்தன. அவற்றில் இயற்கைக் காட்சிகள் வரையப்பட்டன.
பெரிய மாளிகை வீடுகளின் சுவர்களில் வெள்ளி போன்ற சுதையினைப் பூசி வண்ண ஓவியங்களை வரைந்தனர். பூம்புகார் நகரத்து மாட மாளிகைகளில் அழகிய ஓவியங்கள் இருந்தன என்பதைப் பட்டினப்பாலை காட்டுகின்றது. பாண்டியனின் அரண்மனையில் செம்பினால் செய்யப்பட்டது போன்ற நெடுஞ்சுவர்களில் அழகிய பூங்கொடி உருவங்கள் ஓவியமாக வரையப்பட்டிருந்தன என்று நெடுநல்வாடை குறிப்பிடுகின்றது.
சித்திரமாடம்
பண்டைய அரண்மனைகளில் சித்திரம் தீட்டப்பட்ட பகுதி ஒன்று இருந்தது. அதற்குச் சித்திர மாடம் என்று பெயர். ஓவியம் தீட்டுவதற்கென்றே ஒதுக்கப்பட்டிருந்த இந்த அரண்மனைப் பகுதி உண்மையில் ஓர் ஓவிய மாடமாகக் காட்சியளிக்கின்றது.
ஓவிய நூல்
சங்காலத்தில் ஓவியச் செந்நூல் ஒன்று இருந்ததாக மணிமேகலை குறிப்பிடுகின்றது. நிலைத்து நின்ற பொருளையும், இயங்கி வந்த பொருளையும் எவ்வாறு வண்ணத்தால் தீட்டுவது என்பதை இந்நூல் விளக்கியதாகக் கூறப்படுகின்றது.
பல்லவர் கால ஓவியங்கள்
சங்க காலத்திற்குப் பின் தமிழகத்தை ஆண்ட பல்லவர்கள் கலைகளை வளர்ப்பதில் தனி ஆர்வம் கொண்டிருந்தனர். அவர்களுள் குறிப்பிடத்தக்க மன்னனான மகேந்திரவர்மன், தட்சிண சித்திரம் என்ற ஓவிய நூலுக்கு உரை எழுதியதாக மாமண்டூர்க் குகைக் கோயிற் கல்வெட்டுகள் கூறுகின்றன.
இராசசிம்மன் கட்டிய பனைமலைக்கோயிலில் உள்ள பார்வதியின் ஓவியம் கண்கவரும் வனப்புக் கொண்டதாகும். இவர் காலத்து கைலாசநாதர் கோயில் கலைநயம் வாய்ந்தது. இக்கோயிலின் சுற்றுச் சுவர்களில் அமைந்த அறைகள் முழுவதிலும் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. கொற்றவை, இலக்குமி முதலிய சிற்பங்களின் மேல் தீட்டியிருந்த வண்ணங்கள் கண்ணைக் கவர்கின்றன. இதன்
41ஆம் அறையில் சோமாஸ்கந்தரின் உருவம் தீட்டப்பட்டுள்ளது.
பாண்டியர்கால ஓவியம்
பல்லவர்களைப் போலவே, பராங்குசன், நெடுஞ்சடையன், மாறவர்மன் ஆகிய பாண்டிய மன்னர்களும் ஓவியக் கலையை வளர்த்துள்ளனர். முற்காலப் பாண்டியர்களின் ஓவியங்களைத் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருமலைப்புரம் குகைக் கோயிலில் காணலாம். மத்தளம் வாசிக்கும் பெண்ணின் உருவமும், ஆண் பெண் வடிவங்களும், இலைக்கொடி, பூக்கொடி உருவங்களும், வாத்து உருவங்களும் அழகுற அமைந்துள்ளன.
சித்தன்ன வாசல் ஓவியங்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசலில் காணப்படும் குகையில் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இக்குகையின் நடுமண்டபத்தின் மேல் கண்கவரும் தாமரைக்குளத்தின் ஓவியம் உள்ளது. அர்த்த மண்டபத் தூண்களில் இரண்டு எழிலரசிகள் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளனர். வலப்புறத் தூணின் உட்பகுதியில் அரசன் அரசியரின் ஓவியங்கள் உள்ளன.
சேரர்கால ஓவியங்கள்
கி.பி.7,8 ஆம் நூற்றாண்டுகளில் தொண்டை மண்டலத்தில் உருவான கலைநயம் கொங்கு நாட்டிலும், சேர நாட்டிலும் பரவியது. கி.பி.8,9
ஆம் நூற்றாண்டுகளில் சேர நாட்டில் உருவான ஓவியநயம் பல்லவர் பாண்டியர் கலைநயத்தை ஒத்துள்ளது. திருநந்திக் கரையில் உள்ள குகைக் கோயிலில், தலையில் மணிமுடியும், கழுத்தில் மணிமாலையும் கொண்ட மாபுருஷரின் ஓவியம் காணப்படுகின்றது. இதனை ஓவியன் ஒரே நேர்க்கோட்டில் வில் போன்று வரைந்துள்ள திறம் பாராட்டுக்குரியது.
சோழர்கால ஓவியம்
தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் கருவறையில் தீட்டப்பட்டுள்ள சோழர்கால ஓவியத்தின்மேல் சுண்ணாம்பு பூசப்பட்டு நாயக்கர்கள் தம் ஓவியத்தை வரைந்துள்ளனர். சிவபெருமான் புலித்தோலின் மேல் அமர்ந்துள்ளார். அவரைச் சூழ்ந்து தேவரும் பூதகணங்களும் காட்சி தருகின்றனர். இவ் ஓவியத்தின் கீழே நம்பி ஆரூரர் வெள்ளை யானை மீது அமர்ந்துள்ளார். சேரமான் பெருமாள் நாயனார் குதிரை மேல் அமர்ந்துள்ளார். சுந்தர மூர்த்தி நாயனாரை இறைவன் தடுத்தாட் கொண்ட வரலாறும் இங்கு ஓவியமாக்கப்பட்டுள்ளது.
விசயநகர கால ஓவியம்
காஞ்சி, காளத்தி, குடந்தை, திருவரங்கம், திருப்பதி, திருவண்ணாமலை, தில்லை, திருவீழிமிழலை, அரூர், ஓமலூர் முதலான இடங்களில் நாயக்கர்கால ஓவியங்களைக் காணமுடிகின்றது. கி.பி.14ஆம் நூற்றாண்டில் வரையப்பட்ட ஓவியங்கள் திருவரங்கத்தில் வேணுகோபாலர் திருச்சந்நிதியில் வரையப்பட்டுள்ளன.
தஞ்சை மாவட்டத்துத் திருவீழிமிழலையில் உள்ள சிவன் கோயில் மண்டபத்து விதானத்தில் கி.பி.15
– 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓவியங்கள் உள்ளன. காஞ்சி வரதராசப் பெருமாள் கோயிலிலும், விசய நகரத்தாரின் ஓவியங்கள் உள்ளன. கண்ணனின் திருவிளையாடல்கள் ஓவியமாக வரையப்பட்டுள்ளன. தருமபுரி மாவட்டம் அதமன் கோட்டையில் உள்ள ஒரு கோயிலில் இராமாயணக் காட்சிகள் முழுமையும் வரையப்பட்டுள்ளன.
மதுரை நாயக்கர் கால ஓவியங்கள்
தஞ்சை, தில்லை, திருவெள்ளாறை, திருக்குற்றாலம், திருவலம்புரி, குடந்தை, திருவரங்கம், செங்கம், பட்டீசுவரம் ஆகிய இடங்கில் நாயக்கர்களின் ஓவியங்களைக் காணமுடிகின்றது.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஊஞ்சல் மண்டபத்தின் எதிரில் உள்ள சிறு மண்டபத்தில் அங்கயற்கண்ணியைச் சுந்தரேச பெருமான் மணம் புரியும் காட்சியினை ஓவியமாகக் காணலாம். பொற்றாமரைக் குளத்துக்கு எதிரே உள்ள சுவர்களில் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் வரையப்பட்டுள்ளன. தில்லையில் உள்ள அம்மன் கோட்டத்தில் 17ஆம் நூற்றாண்டு ஓவியங்கள் காணப்படுகின்றன.
பிற்காலம்
18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மராட்டியர்கள் தஞ்சையை ஆண்டபோது ஓலையிலும், கண்ணாடியிலும், தந்தங்களிலும் ஓவியங்கள் வரையப்பட்டன. மராட்டியரின் ஓவியங்களைத் தஞ்சை அரண்மனையில் காணலாம். ஆங்கிலேயரின் தொடர்பு இக்காலத்தில் ஏற்பட்டதால் மேலை நாட்டு நாகரிகம் ஓவியங்களில் வெளிப்பட்டது.
குறிப்பு
இக்கருத்துகள்
யாவும் தமிழக வரலாறும் பண்பாடும் – வே.திசெல்லம், தமிழக வரலாறும்
பண்பாடும் – டாக்டர் கே.கே.பிள்ளை, தமிழர் நாகரிகமும் பண்பாடும் – முனைவர் அ.தட்சிணாமூர்த்தி ஆகிய நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை. மாணவர்களின் நலன்
கருதி அந்நூல்களில் உள்ள கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க மாணவர்களின் நலன் கருதியே இத்தளம் செயல்படுகின்றது.
ஆகவே, மாணவர்கள் தவிர்த்து இத்தளத்தைக் காண்பவர்கள் படிக்கவும், புரிந்து கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர, இத்தளத்தில் உள்ள செய்திகளை அப்படியே எடுத்து நூலாக்கம் செய்வதோ, கைடு நூலாக்கம் செய்வதோ, வலையொளியில்
பதிவு செய்வதோ கூடாது என்று தாழ்மையுடன் வேண்டுகின்றேன். புரிதலுக்கு நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக