வியாழன், 19 செப்டம்பர், 2024

டேனிஸ்காரர்களும் பிரெஞ்சுக்காரர்களும்

டேனிஸ்காரர்களும் பிரெஞ்சுக்காரர்களும்

டேனிஸ்காரர்கள்

கி.பி.1616இல் டேனிசு கிழக்கிந்தியக் கம்பெனி உருவாகியது. டேனியர்கள் தமிழகத்தின் கிழக்குக் கரையில் தரங்கம்பாடியை இருக்கையாக வைத்துக் கொண்டனர். இந்தியாவில் கொள்முதல் செய்த பொருட்களை மலேசியத் தீவுக்கு ஏற்றிச் சென்று விற்பனை செய்து, அதற்கு ஈடாக அங்கிருந்து நறுமணப் பொருட்களை வாங்கிக் கொண்டனர். தங்களுடைய வாணிபத்தை மசூலிப்பட்டினம் வரை விரிவுபடுத்தினர். சீனர்களுடன் தேயிலை வாணிபத்தில் ஈடுபட்டனர். 18ஆம் நூற்றாண்டின் முடிவில் அவர்கள் ஆங்கிலேயர்களுடன் மோதினர். 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் டேனியர்கள் தரங்கம்பாடியையும், சேரம்பூரையும் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு விற்று விட்டனர்.

பிரெஞ்சுக்காரர்கள்

கி.பி.1601இல் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி நிறுவப்பட்டது. ஆயினும் கி.பி.1664 வரை அக்கம்பெனி எந்தவித முன்னேற்றமும் அடையவில்லை. பிரான்சு நாட்டின் வாணிபப் புகழை விரும்பிய கோல்பர்ட் பாரசீக அரசரையும், முகலாயப் பேரரசையும் நாடித் தூதுவர்களை அனுப்பினார். இலங்கையில் பிரெஞ்சு ஆதிக்கத்தை ஏற்படுத்த விரும்பினார். ஆனால் அம்முயற்சி தோல்வி அடைந்தது. எனவே பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையைக் குறிவைத்தனர். ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர்களின் குறுக்கீடு தொடர்ந்ததால் சூரத்தைப் பெற்றுக் கொண்டு மனநிறைவு அடைந்தனர்.  சாந்தோமை 1672 இல் கைப்பற்றி மீண்டும் 1674இல் இழந்து விட்டனர்.

பீஜப்பூர் சுல்தான் ஷேர்கான் லோடி என்பவன் பெரம்பலூருக்கு அண்மையில் வலிகண்டபுரத்தில் அரசாண்டு வந்தான். அவனிடமிருந்து புதுச்சேரியை பிரான்சுவா மார்ட்டின் என்ற பிரெஞ்சுக்காரன் தானமாகப் பெற்றான். பிரெஞ்சுக்காரரின் வாணிக நிறுவனம் அங்கு அமைக்கப்பட்டது. முகலாயர்களின் வீழ்ச்சியையும், இந்திய அரசியலின் நிலைமையையும் உணர்ந்த மார்ட்டின், பிரெஞ்சுக் கம்பெனியாருக்கு இந்தியாவில் ஒரு சிறந்த எதிர்காலம் உண்டு எனக் கனவு கண்டார். அது நிறைவேறுவதற்குச் செழிப்புடைய வாணிபத் தளங்களும், கோட்டைக் கொத்தளங்களும் கொண்ட சில துறைமுகப் பட்டினங்கள் அமைக்க வேண்டியதன் அவசியத்தை பிரெஞ்சு அரசுக்குக் கடிதம் எழுதினார். மார்ட்டினின் முயற்சியால் பிரெஞ்சு வாணிபம் உயர்ந்தது. மார்ட்டின் புதுச்சேரியில் கோட்டை எழுப்பியும், கொத்தளங்கள் அமைத்தும் அதை வளமுள்ள நகரமாக மாற்றினான். பிரெஞ்சு நாட்டுக்காக அயராது உழைத்த மார்ட்டின் 1706இல் காலமானான். 1721க்குப் பிறகு மசூலிப்பட்டினம், கள்ளிக்கோட்டை, மாஹி, ஏனாம் ஆகிய இடங்களைப் பிரெஞ்சுக்காரர்கள் பெற்றனர் டூப்ளேயின் தலைமையில் பிரெஞ்சுக் கம்பெனி வளர்ச்சி கண்டு வலிமை பெற்றது.

 --------------------------------------------------------------------------------------------------------------

  குறிப்பு

இக்கருத்துகள் யாவும் தமிழக வரலாறும் பண்பாடும் – வே.திசெல்லம், தமிழக வரலாறும் பண்பாடும் – டாக்டர் கே.கே.பிள்ளை ஆகிய நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை. மாணவர்களின் நலன் கருதி அந்நூல்களில் உள்ள கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க மாணவர்களின் நலன் கருதியே இத்தளம் செயல்படுகின்றது.

ஆகவே, மாணவர்கள் தவிர்த்து இத்தளத்தைக் காண்பவர்கள் படிக்கவும், புரிந்து கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர, இத்தளத்தில் உள்ள செய்திகளை அப்படியே எடுத்து நூலாக்கம் செய்வதோ, கைடு நூலாக்கம் செய்வதோ, வலையொளியில் பதிவு செய்வதோ கூடாது என்று தாழ்மையுடன் வேண்டுகின்றேன். புரிதலுக்கு நன்றி.

 

 

 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக