ஆங்கிலேயர் வருகை
ஐரோப்பிய நாடுகள் பல கிழக்கு நாடுகளுடன் வாணிகத்திலும், வாணிகப் போட்டியிலும் ஈடுபட்டிருந்தபோது ஆங்கிலேயர்கள் அதிலிருந்து விலகி இருந்தனர். அதற்கு எலிசபெத் அரசியின் அரசியலும் ஓரு காரணமாகும்.
எலிசெபத் அரசி காலத்து ஆங்கிலேயர்களின் உணவில் மிளகு, கிராம்பு உள்ளிட்ட வாசனைப் பொருட்கள் முக்கிய அங்கமாக விளங்கின. டச்சு வணிகர்கள் கிழக்கு நாடுகளில் இருந்து பெற்ற வாசனைப் பொருட்களை ஆங்கில வணிகர்களுக்கு அநியாய விலைக்கு விற்று வந்தனர். 1599இல் அவர்கள் அதன் விலையை இருமடங்காக ஏற்றினர். டச்சு வணிகர்களின் பேராசைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆங்கில வணிகர்கள் முடிவு செய்தனர். அதன் விளைவாக ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெணி கி.பி.1600இல் தோன்றியது.
1601 இல் இலங்காச்டர் தலைமையிலான ஆங்கிலக் கப்பல் சுமத்திரா சென்று மிளகு ஏற்றி வந்தது. அதைத் தொடர்ந்து ஆங்கிலக் கப்பல்கள் தென்கிழக்காசியத் தீவுகளுக்குச் சென்று வந்தன. என்றாலும், இந்தோனேசியப் பகுதிகளில் அவர்களுடைய வாணிபம் தோல்வியடைந்தது. எனவே அவர்களுடைய கவனம் இந்தியாவில் திரும்பியது. கி.பி
1615இல் ஆங்கிலேய தூதர்கள் ஜஹாங்கீரின் அரண்மனையை அடைந்து அவர் உதவியைப் பெற எண்ணினர். அப்பயணம் பயனளிக்கவில்லை.
இதனால் ஆங்கிலக் கம்பெனி தனது போக்கை மாற்றிக் கொண்டு வாணிபத் தளங்கள் ஏற்படுத்த முயன்று, கி.பி.1641இல் மசூலிப்பட்டித்தில் வாணிபத்தளத்தை அமைத்தனர். சந்திரகிரி அரசனின் அனுமதியுடன் சென்னையில் கோட்டை அமைத்தனர். அடுத்த ஆறு ஆண்டுகளில் 23 வாணிபத்தளங்களை அமைத்து முன்னேறினர்.
சூரத்தில் இருந்த தலைமையகத்தைப் பம்பாய்க்கு மாற்றினர். ஒளரங்கசீப்புடன் ஏற்பட்ட போரில் தோல்வியைத் தழுவியதால் தங்கள் தலைமையகத்தை வங்காளத்துக்கு மாற்றினர். 17ஆம் நூற்றாண்டின் இறுதியில் சென்னை, கல்கத்தா, பம்பாய் ஆகிய இடங்களைக் கைப்பற்றிக் கொண்டு தங்கள் ஆதிக்கத்தைப் பரப்பினர். பிரெஞ்சுக்காரர்களுடனான போட்டியும், கர்நாடகம், வங்காளம் ஆகிய இடங்களில் இருந்த அரசியல் நிலைமைகளும் அவர்களுக்கு ஊக்கமளித்தன.
ஆங்கிலேயர் – பிரெஞ்சுக்காரர் மோதல்
18ஆம் நூற்றாண்டு தொடங்கிச் சில ஆண்டுகளில் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே நாடு பிடிக்கும் போட்டி ஓங்கி வளர்ந்தது. சோழ மண்டலக் கடற்கரை ஓரத்தில் ஆங்கிலேயர் வசம் இருந்த சென்னைப் பட்டினமும், பிரெஞ்சுக்காரர் வசம் இருந்த புதுச்சேரியும் இருபெரும் வாணிகத் துறைமுகப் பட்டினங்களாக விளங்கின. இருநாட்டவரும் அவரவர் ஊரில் வலிமை பொருந்திய கோட்டைகளைக் கட்டினர். இந்திய நாட்டு மன்னர்களிடம் தரைப்படையும், கப்பற்படையும் இல்லாததால், இவ்விருவரும் உள்நாட்டு மன்னர்களைத் தங்கள் சூழ்ச்சியால் வளைத்துக் கொண்டு அரசியல் செய்யத் தொடங்கினர்.
கருநாடக, மைசூர்ப் போர்கள்
கருநாடகப்போர்களிலும், மைசூர்ப் போர்களிலும் இவ்விருவருக்கும் பெரும் பங்கு உண்டு. ஆங்கிலேயர் சீரங்கப்பட்டினத்தைச் சூறையாடினர். அரண்மனைகளையும், கட்டடங்களையும் இடித்தனர். மைசூர் தேசம் ஆங்கிலேயரின் உடைமையாயிற்று. திப்பு சுல்தானின் மக்கள் வேலூர்க் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர்.
தமிழகத்தை ஆண்ட ஆங்கிலேயர்கள்
ஆர்க்காடு நவாபு பெயரளவில்தான் கருநாடகத்தின் நவாபாக விளங்கினான். அவனுடைய அரசு முத்திரை ஆங்கிலேயரின் கையில் இருந்தது. நவாபின் பெயரால் கிழக்கிந்தியக் கம்பெனிதான் அரசாங்கத்தை நடத்தியது. கருநாடகத்தின் குடிமக்கள் நவாபுக்கு மட்டுமின்றி ஆங்கிலேயருக்கும் கட்டுப்பட்டனர். நவாபு அரசாங்கப் பொறுப்பு அனைத்தையும் ஆங்கிலேயரிடம் ஒப்படைத்து விட்டு, பொறுப்பற்றவனாகச் செயல்பட்டான். தன் இன்ப வாழ்க்கைக்குப் பணம் பற்றாக்குறையாக இருந்ததால் கடன் தொல்லைக்கு ஆளானான். இறுதியாக அவன் இறந்த பிறகு அவன் மகன் நவாபு ஆனான். அவனுடன் கம்பெனி அரசாங்கம் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி ஆர்க்காடு நவாபு தன் நாட்டையும் அரசையும் ஆங்கிலேயருக்கு வழங்கினான். அதற்கு ஈடாக அவனுடைய கடன்களைத் தீர்ப்பதற்கு ஆங்கிலேய அரசாங்கம் ஒத்துக் கொண்டது. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயரே தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்புகள் அனைத்தையும் மேற்கொண்டனர்.
------------------------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு
இக்கருத்துகள் யாவும் தமிழக வரலாறும் பண்பாடும் – வே.திசெல்லம், தமிழக வரலாறும் பண்பாடும் – டாக்டர் கே.கே.பிள்ளை ஆகிய நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை. மாணவர்களின் நலன் கருதி அந்நூல்களில் உள்ள கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க மாணவர்களின் நலன் கருதியே இத்தளம் செயல்படுகின்றது.
ஆகவே, மாணவர்கள் தவிர்த்து இத்தளத்தைக் காண்பவர்கள் படிக்கவும், புரிந்து கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர, இத்தளத்தில் உள்ள செய்திகளை அப்படியே எடுத்து நூலாக்கம் செய்வதோ, கைடு நூலாக்கம் செய்வதோ, வலையொளியில் பதிவு செய்வதோ கூடாது என்று தாழ்மையுடன் வேண்டுகின்றேன். புரிதலுக்கு நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக