கூத்துக்கலை (நாட்டியக்கலை)
தமிழர் போற்றி வளர்த்த கலைகளில் கூத்தும் ஒன்று. இது இசைக்கலையோடு இணைந்து வளர்ந்த கலை. இக்கலை ஆடவர் பெண்டிர் இருசாரார்க்கும் பொதுவானது. விழாக்களின்போது கூத்தர்கள் மக்களைத் தம் ஆடல் பாடல்களால் மகிழ்வித்தனர். மக்களும் மன்னர்களும் கூத்தர்களைப் பேணினர். பரதவர், குறவர் போன்ற சங்க மக்கள் பொழுதுபோக்கின்போது ஆடினர். இவர்களைத்தவிர, இக்கலையைத் தம் வாழ்விற்குக் கருவியாகக் கொண்ட தனி இனத்தவர் இருந்தனர். அவர்கள் கூத்தர், பொருநர், விறலியர், கோடியர் எனப் பலவாறு பெயர் பெற்றனர். இவர்கள் மன்னர்கள் முன்பு ஆடி, தங்கள் கலை ஆற்றலை வெளிக்காட்டிப் பரிசில்கள் பெற்றனர். கரிகாற் சோழனின் மகள் ஆதிமந்தியின் கணவன் ஆட்டனத்தி என்பான் நடனத்தில் ஈடு இணையற்று விளங்கினான். சங்க காலத்திற்குப் பின்னர் சமயம் ஆடற்கலையைப் போற்றி வளர்த்தது. செம்மையான பரதநாட்டியம் செழித்து வளர்ந்தது.
சங்ககாலம்
சங்க காலத்தில் அனைத்துத் துறைகளிலும் ஆடலும் பாடலும் பரவியிருந்தன. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான பரிபாடல் இசை, கூத்து என்னும் கலைகள் பற்றிய செய்திகளை விரிவாகக் கூறுகின்றது.
வள்ளிக்கூத்து - பண்டையோர் ஆடிய ஆடல்களில் வள்ளிக்கூத்து என்பதும் ஒன்று. நாட்டுக்கு வளமும் வெற்றியும் கொடுத்த வள்ளியின் பெருமைகளைப் பாடி ஆடுவது வள்ளிக்கூத்தாகும். இக்கூத்தினை ஆடவரும் பெண்டிரும் ஆடுவர்.
குரவைகூத்து - பொதுமக்கள் ஆடிய இன்னொரு கூத்து குரவை எனப்படும். மலைவாழ் மக்கள் விரும்பி ஆடிய கூத்து இது. குன்றவாணர்கள் கள்ளைக் குடித்துவிட்டு வேங்கை முற்றத்தில் குரவையாடினர். குடிசையில் வாழும் குறவர் மூங்கிற் குழாயில் விளைந்த கள்ளை உண்டு குரவை ஆடியதைப் புறநானூறு கூறுகின்றது. குறவர் மட்டுமின்றிப் பரதவர்களும் குரவை ஆடினர். பரதவ மகளிர் ஆடிய குரவையைப பற்றி மதுரைக்காஞ்சி கூறுகின்றது. இக்குரவை வரிக்கூத்துள் ஒன்றாகும். ஏழு பேராக, எட்டுப் பேராக, ஒன்பது பேராகக் கைகோர்த்து நின்று ஆடும் இக்கூத்து விரும்பியரின் புகழ்ப் பாடி ஆடுவதாகும்.
கழைக்கூத்து - விழாக்காலங்களில் மகளிர் கயிற்றின்மேல் நின்று ஆடும் ஒருவகை ஆட்டம் பற்றிக் குறிஞ்சிப்பாட்டில் கபிலர் குறிப்பிடுகின்றார். இக்காலத்தில் கழைக்கூத்தர்கள் இதனை ஆடுகின்றனர்.
வெறியாட்டு - வெறியாட்டு என்பது முருகனை வேண்டிச் செய்யும் சடங்கு.
துணங்கைக்கூத்து - விழாவின் போது தெருக்களில் துணங்கை ஆடினர். இதற்கு ஏற்ப முழுவு ஒலித்தது. இத்துணங்கைக் கூத்தில் மகளிர் பங்கு பெறுவர். ஆடவரும் பெண்டிரும் சேர்ந்து ஆடுவர்.
வாள்அமலை - போர்க்கள வெற்றியைச் சிறப்பித்து வீரர்கள் கூத்தாடுவது வழக்கமாக இருந்தது. வெற்றி பெற்ற மன்னர்கள் தேரின் முன்னும் பின்னும் நின்று ஆடுவது முன்தேர்க்குரவை, பின்தேர்க்குரவை எனத் தொல்காப்பியம் கூறுகின்றது. வெற்றி பெற்ற வீரர் வாள் ஏந்தி ஆடுவது வாள்அமலை எனப்பட்டது.
கூத்துக் கலைஞர்கள்
மன்னர்களின் அரண்மனையில் ஆடல் மகளிர் இருந்தனர். கரிகாலன் புலவர்க்கு அளித்த விருந்தின்போது மகளிர் ஆடினர் என்று பொருநராற்றுப்படை கூறுகின்றது.
இத்தகைய கலைமக்களுக்கு மன்னர்கள் பொருளைப் பரிசாக வழங்கினர். அக்கொடைச் செயல்கள் புலவர்களால் பாராட்டப்பட்டுள்ளன. மன்னர்கள் கூத்தர்களைப் பேணிய சிறப்பால் கோடியர் தலைவர் எனப் பாராட்டப்பட்டனர்.
வையை ஆற்றின் கரைகளில் இசை வளர்த்த மக்களும், கூத்துக் கலை வளர்த்த மக்களும் தனித்தனித் தெருக்களில் வாழ்ந்தனர். இம்மாந்தர் வாழ்ந்த இடங்களைப் பாக்கம், சேரி எனக் குறிப்பிடுவர்.
கூத்து நூல்கள்
சங்க இலக்கியத்தில் கூத்துநூல்கள் பற்றிய குறிப்பு ஏதும் இல்லை. ஆனால் கூத்து நூல்கள் இருந்தன என்பதை உரையாசிரியர்கள் மூலம் அறியலாம். யாப்பருங்கல உரையின் வழியாக, செயிற்றியம், சயந்தம், பொய்கையார் நூல் ஆகிய நூல்களை அறிய முடிகின்றது. விளக்கத்தார் கூத்து, செயன்முறை, மதிவாணர் நாடகத் தமிழ் என்ற நூல்களும் அறியப்படுகின்றன.
சிலம்பும் கூத்தும்
சிலப்பதிகாரத்தில் கூத்துக் கலையின் சிறப்பினை நன்கறியலாம். நாட்டியங்களிலும் கூத்துக்களிலும் அரங்கங்களை அமைக்கும் இலக்கணத்தைப் பற்றியும், கூத்தாடுவோரின் மெய்ப்பாடுகள் பற்றியும் அடியார்க்கு நல்லார் விரிவாக விளக்குகின்றார்.
பதினொரு ஆடல் வகை
மாதவி ஆடிய பதினொரு ஆடல் வகை பற்றி சிலப்பதிகாரம் கூறுகின்றது. அவை, அல்லியம், கொடுகொட்டி, குடை, குடம், பாண்டரங்கம், மல், துடி, கடையம், பேடு, மரக்கால், பாவை என்பனவாகும். இவற்றுள், முதல் ஆறும் நின்று ஆடுபவை. பின்னவை ஐந்தும் வீழ்ந்து ஆடுபவை. இவை அனைத்தும் புராணக் கதைத் தொடர்பானவை.
மெய்ப்பாடுகள்
ஒன்பது சுவையும் மெய்யின்கண் புலப்பட ஆடுவதே கூத்தின் சிறப்பு ஆகும். அவை நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், வெகுளி, உவகை, பெருமிதம், சமநிலை என்பதாகும். பல்வேறு அபிநயங்களையும், அந்தந்த அவிநயங்களைக் காட்டும் முறை குறித்தும் கூத்து நூல்கள் கூறியுள்ளன. இவற்றைச் சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக் காதையில் காணலாம்
திரைச்சீலைகள்
அரங்கின் முன் மூன்று வகையான எழினிகள் (திரைச்சீலைகள்) தொங்கவிடப்பட்டிருந்தன. முதலாவதாக, மேலிருந்து கீழே விழுவது. இரண்டாவதாக, ஒரு பக்கமிருந்து மற்றொரு பக்கத்துக்கு இழுக்கப்பட்ட ஒற்றைத்திரை, மூன்றாவதாக, அரங்கத்தின் இரு புறங்களினின்றும் இழுக்கப்பெறும் இரட்டைத் திரைகள். இவை அரங்கத்தின் நடுவில் ஒன்று சேரும்.
கூத்தின் வகை
கூத்துகளில் பலவகை உண்டு. அவை, மன்னர்க்கும் மக்களுக்குமானது, புகழ்ந்தும் இகழ்ந்தும் ஆடுவது, தமிழகக் கூத்து ஆரியக் கூத்து, தேசிக்கூத்து என்று அழைக்கப்படுகின்றன.
இவற்றுள் மன்னர்க்கு மட்டும் உரிய கூத்துகள் வேத்தியல் என்றும், மற்றவர்க்கு உரியவை பொதுவியல் என்றும் அறியப்பட்டன. ஐந்தாண்டுகள் முதல் பன்னிரண்டு ஆண்டுகள் வரை நடனப்பயிற்சி அளிக்கப்பட்டது. நடனம் மன்னன் அவையில் அரங்கேற்றப்பட்டது. நடனமாடுவோர்க்கு “தலைக்கோல்” என்ற பட்டம் அளிக்கப்பட்டது.
பல்லவர் காலம்
பல்லவ மன்னர்கள் கலைகளுக்குச் சிறப்பிடம் கொடுத்தனர். இவர்கள் காலத்தில் சைவ, வைணவச் சமய மறுமலர்ச்சி ஏற்பட்டது. இதனால் ஆடல் பாடல்களுக்கு ஏற்ற இடங்கள் வளர்ச்சியுற்றன. இன்னிசைக் கருவிகள் முழங்க ஆடவரும், பெண்டிரும், அடியார்களும் பக்திப் பரவசத்தில் ஆடியும் பாடியும் மகிழ்ந்தமையைத் தேவாரப்பாடல்கள் தெரிவிக்கின்றன.
பல்லவ மன்னர்கள் பரதக்கலைக்கு ஆக்கம் கொடுத்தனர். இராச்சிம்மன் காலத்தில் வேறுபட்ட நடனங்கள் கோயில்களில் புகுத்தப்பட்டன. ரிஷிபத்தளியார், தேவரடியார், தளிச்சேரிப் பெண்டுகள், கூத்திகள் எனக் கோயில் நடனப் பெண்டிர் பெயர் பெற்றனர்.
சித்தன்ன வாசலில் உள்ள நடன மாதர் ஓவியம் அக்காலத்துக் கூத்துக் கலையின் மாட்சியை விளக்குகின்றது.
சோழர் காலம்
சோழர் காலத்தில் கூத்துக் கலை செழித்து வளர்ந்தது. இவர்கள் காலத்தில் சாக்கைக் கூத்து என்ற கூத்து வகை போற்றப்பட்டது. கோயில்களில் ஆடவும் பாடவும் கொடுக்கப்பட்ட நிவந்தங்கள் எண்ணற்றவை. தஞ்சைக் கோயிலில் மட்டும் 400 தேவரடியார்கள் இருந்தனர். அவர்களுக்கு வேலி நிலம் தானமாக வழங்கப்பட்டது. பதியிலார் என இவர்கள் பெயர் பெற்றனர். நாட்டிய மகளிருக்குப் பட்டங்கள் தரப்பட்டன. நாட்டிய அரசர்கள் நிருத்தப் பேரரையன் என்னும் பட்டம் பெற்றனர்.
நாயக்கர் காலம்
நாயக்க மன்னர்களும், மராட்டிய மன்னர்களும் கலை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவினர். தேவதாசிகள் என்போர் கோயில்களில் அமர்த்தப்பட்டு பூசையின்போது சிலைக்கு முன் நடனமாடினர். கோயில்களில் பெண்களுக்குப் பொட்டுக்கட்டும் வழக்கம் இவர்கள் காலத்தில் உண்டு. இப்பெண்டிர் ஆடல் பாடல்களில் வல்லவர்கள். இவர்கள் யாரையும் மணப்பதில்லை. திருக்கோயில் பணிக்கே தங்களை அர்ப்பணித்துக் கொள்வர். அரண்மனையில் நடனப்பயிற்சிக்கு எனத் தனி இடம் உண்டு. இரகுநாத நாயக்கன் நடனக்கலை வல்லுநன். அவன் கண்டறிந்த நடனம் இரகுநாத விலாசம் எனப்படும்.
முகமதியர் காலத்தில் கலைஞர்களைப் பேணுபவர்கள் இல்லை. அதனால் கலை தளர்ச்சியுற்றது. இன்று நாடகங்களும், திரைப்படங்களும் இக்கலையை வளர்க்கின்றன.
19, 20ஆம் நூற்றாண்டு
இக்காலத்தில் கூத்துக் கலையை வளர்த்த நாட்டியக் கலையரசிகள் மற்றும் நாட்டியப் பேராசான்கள், இசைவேளாளர் என்று பாராட்டப்பட்டனர். அறிஞர் சுந்தரம், அறிஞர் சண்முக செல்வ கணபதி முதலானோர் இவ்வகையில் குறிப்பிடத் தக்கவர்களாவர். இக்கலையை வளர்க்கும் நிறுவனங்களைத் தனிப்பட்ட கலைஞர்கள் சிலர் நிறுவி வளர்த்தனர். இக்கலையில் சிறப்புப் பெற்றவர்களுக்குப் பட்டமும் பரிசும் தந்து பாராட்டி வருகின்றனர். முனைவர் பத்மா சுப்பிரமணியம் உள்ளிட்ட பல மகளிர் இன்று தமிழகத்தில் நடனப்பள்ளிகள் அமைத்து இக்கலையை உயிர்ப்புடன் வைத்துள்ளனர்.
குறிப்பு
இக்கருத்துகள் யாவும் தமிழக வரலாறும் பண்பாடும் – வே.திசெல்லம், தமிழக வரலாறும் பண்பாடும் – டாக்டர் கே.கே.பிள்ளை, தமிழர் நாகரிகமும் பண்பாடும் - முனைவர் அ.தட்சிணாமூர்த்தி ஆகிய
நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை. மாணவர்களின் நலன் கருதி அந்நூல்களில் உள்ள
கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க மாணவர்களின் நலன் கருதியே இத்தளம் செயல்படுகின்றது.
ஆகவே, மாணவர்கள் தவிர்த்து இத்தளத்தைக் காண்பவர்கள்
படிக்கவும், புரிந்து
கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர, இத்தளத்தில் உள்ள செய்திகளை அப்படியே எடுத்து நூலாக்கம் செய்வதோ, கைடு நூலாக்கம் செய்வதோ, வலையொளியில் பதிவு செய்வதோ கூடாது என்று தாழ்மையுடன்
வேண்டுகின்றேன். புரிதலுக்கு நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக