செவ்வாய், 10 செப்டம்பர், 2024

சோழர் வரலாறு

 

சோழர் வரலாறு

தமிழ வரலாற்றைச் சிறப்பித்த பெருமை சோழர்களுக்கு உண்டு. சோழ வரலாற்றை அறிய உதயேந்திரம் செப்பேடு, வேளஞ்சேரி செப்பேடு, அன்பில் செப்பேடு, சென்னை அருங்காட்சியகச் செப்பேடு, கரந்தைச் செப்பேடு, திருவாலங்காடு செப்பேடு, ஏசாலம் செப்பேடு ஆகியவை துணை புரிகின்றன. பிற செப்பேடுகளில் இல்லாத அரிய வரலாற்றுச் செய்திகளை ஏசாலம் செப்பேடு கூறுகின்றது.

சோழ மன்னர்கள்

சோழ மன்னர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் விஜயாலயச்சோழன், ஆதித்த சோழன், பராந்தகசோழன், சுந்தரசோழன், ஆதித்த கரிகாலன், இராசராச்சோழன், இராசேந்திர சோழன் ஆகியோராவர். தங்கள் அறிவாற்றலாலும், படை பெருக்கத்தாலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களை ஒரு குடையின்கீழ் ஆட்சி செய்தனர். அவர்களின் சிறப்புகளைப் பின்வருமாறு காணலாம்.

விஜயலாயச் சோழன்

சோழர் பரம்பரையை உருவாக்கிய பெருமை இவரையே சாரும். இவர் முத்தரையர்களை வெற்றி கொண்டு தஞ்சையைக் கைப்பற்றினார். முத்தரையர்களுக்கு உதவி செய்த வரகுண பாணடியனையும் வென்றான். இவ்வெற்றி அவரின் புகழை உயர்த்தின. சோழர்களின் வலிமையை பெருக்கின.

ஆதித்த சோழன்

விசயாலயனின் மகன் ஆதித்த சோழன். இவர் அரசியல் நுட்பம் தெரிந்தவர். போர் ஆற்றல் மிக்கவர். பாண்டியருக்கும் பல்லவருக்கும் திருப்புறம்பயம் என்னும் இடத்தில் போர் நடைபெற்றது. அப்போரில் ஆதித்த சோழன் பல்லவர்களுடன் இணைந்து போரிட்டு வெற்றி பெற்றார். தன் தந்தை மீட்டுக் கொடுத்த சோழ நாட்டின் ஆட்சியை வலுவாக நிலைநாட்ட முயன்றார். சயாத்திரி மலைகளில் இருந்து கீழைக் கடற்கரை வரை காவிரியின் இருமருங்கிலும் சிவபெருமானுக்காக்க் கற்றளிகள் பல எடுத்தார். சோழ நாட்டின் பெரும்பகுதி பல்லவர்களிடம் இருந்ததைக் கண்டு மனம் பொறுக்காமல் பல்லவர்களை எதிர்த்துப் போரிட்டு வெற்றி கண்டார். உயர்ந்த யானையின் மேல் அமர்ந்து போர் செய்து கொண்டிருந்த அபராசித பல்லவனை ஆதித்தன் தன் வாளால் ஒரே வீச்சில் கொன்றதாக கன்னியாகுமரிக் கல்வெட்டு குறிப்பிடுகின்றது. இவர் இராசகேசரி என்ற விருதை ஏற்றுக் கொண்டார்.

பராந்தகச் சோழன்

ஆதித்தனை அடுத்து அவன் மகன் முதலாம் பராந்தகன் ஆட்சிக்கு வந்தார். இவருடைய ஆட்சி 48 ஆண்டுகள் நீடித்தது. பராந்தகன் பாண்டியர்களை ஒடுக்கினார். மதுரை கொண்ட கோப்பரகேசரி எனப்பட்டார். கன்னியாகுமரி வரை இவருடைய நாடு விரிவடைந்தது. சைவ மதம் சார்ந்தவராதலால் சிவ ஆலயங்களை எழுப்பினார். வேளாண்மை விரிவடைய நீர்நிலைகளையும், கால்வாய்களையும் உருவாக்கினார். உள்ளாட்சி முறையையும்  சீர்ப்படுத்தினார் என்று உத்திரமேரூர் சாசனம் கூறுகின்றது.

கண்டராதித்தன்

முதலாம் பராந்தகனின் வாழ்நாளிலேயே கண்டராதித்தன் சோழ வேந்தன் ஆனார். தமிழகத்து வரலாற்றில் புகழொளி வீசுகின்ற செம்பியன்மாதேவி இவருடைய பட்டத்து அரசியார் ஆவார். செம்பியன் மாதேவி கட்டிய சைவ சமய கோயில்கள் பல. தன் கணவனுடன் இணைந்து சிவத் தொண்டு புரிந்தார். கண்டராதித்தன் பாடிய பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் ஒன்பதாம் திருமுறையில் வைக்கப்பட்டுள்ளன. இவருடைய காலத்தில் சோழநாடு சுருங்கிவிட்டது. வடக்கில் இழந்த பகுதிகளை மீட்க முயன்று தோல்வியுற்றார். கண்டராதித்தனுக்குப்பின் அவருடைய தம்பி அரிஞ்சய சோழன் ஆட்சிக்கு வந்து இராட்டிரகூடர்களுடன் போரிட்டு மடிந்தார்.

சுந்தரசோழன்

அரிஞ்சய சோழனின் மகன் சுந்தரசோழன். தன் தந்தைக்கு அடுத்து ஆட்சிப் பொறுப்பேற்றார். ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தன் மகன் ஆதித்த கரிகாலனுக்கு இளவரசு பட்டம் சூட்டினார். தன் மகனின் துணையுடன் பாண்டிய மன்னன் வீர பாண்டியனை வென்றார். தன் மகன் பாண்டியனை எதிர்த்து வெற்றி பெற்றதால்பாண்டியனின் முடி கொண்ட சோழன்என்ற விருது வழங்கி மகிழ்ந்தார். இழந்த வடக்குப் பகுதிகளை மீட்கும் பணியில் வெற்றி கண்டார். சுந்தர சோழனின் அறப்பணிகளையும், வேளாண்மை முன்னேற்றப் பணிகளையும் மக்கள் பாராட்டினர். தன் மகன் ஆதித்தன் எதிர்பாராத சூழ்ச்சியால் கொல்லப்பட்டதை அறிந்து மனம் வருந்தி சிறிது காலம் காஞ்சியில் உள்ள பொன்மாளிகையில் வசித்து அங்கேயே இற்நதார். அதனால் அவர் பொன்மாளிகை துஞ்சிய தேவன்என்று அழைக்கப்பட்டார். அவர் மனைவி வானவன் மாதேவி கணவனுடன் உடன்கட்டை ஏறி உயிர் துறந்தார். இவருடைய மகள் குந்தவைப் பிராட்டியார் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் தன் தாய்க்காக சிலை ஒன்று எடுத்தார்.

உத்தம சோழன்

தன் அரசுரிமையை ஆதித்த கரிகாலன் பறித்துக் கொண்டான் என்று எண்ணி எண்ணி மனம் உருகியவர் உத்தமசோழன். சுந்தர சோழருக்குப்பின் கண்டராதித்தருடைய புதல்வன் உத்தமசோழன் ஆட்சிப் பொறுப்பேற்றார். ஆதித்த கரிகாலனின் மரணத்தில் இவருக்குப் பங்குண்டு என்று வரலாறு வற்புறுத்துகின்றது. இவருடைய ஆட்சிக் காலத்தில் நாடு அமைதி பெற்றது. ஆட்சித் திறனும் சிறந்த பண்புகளும் உடையவர். திருநாவுக்கரசரின் பாடலைப் பெற்ற விசயமங்கலத்துக் கோயிலை கற்றளியாக மாற்றினார்.

முதலாம் இராசராசசோழன்

உத்தம சோழனுக்குப் பின்பு அவருடைய புதல்வன் அரசுரிமை பெறவில்லை. சுந்தரசோழனின் இரண்டாவது மகன் அருண்மொழி விழாக் கோலத்துடன் அரசுரிமை ஏற்றார். இவர் பல ஆண்டுகள் இளவரசுப் பொறுப்பில் பயிற்சி பெற்றவர். அவருடைய அரசியல் அனுபவமும், பேராற்றலும், நுண்ணறிவும் அவருடைய வெற்றிக்குத் துணை பரிந்தன. சோழர்களின் ஆதிக்கத்தை வடக்கில் நர்மதை வரையிலும், தெற்கில் ஈழம் வரையிலும் பரப்பினார். இராசராசன் என்ற பட்டப்பெயர் ஏற்றுக்கொண்டார். “இராசகேசரி அருண்மொழிஎன்றும், “மும்முடிச் சோழன்என்றும் சில விருதுகைளத் தம் பெயருடன் இணைத்துக் கொண்டார். இவரடைய வருகைக்குப் பின்பு சோழர் வரலாறு ஒரு புதுத்திருப்பத்தைக் கண்டது.

இராசராசரின் ஆட்சி முறை

மன்னர்களின் பெருமையை விளக்குகின்ற மெய்க்கீர்த்தி இவருடைய காலத்தில்தான் உருவாக்கப்பட்டது. இவ்வழக்கத்தை, பின்வந்த மன்னர்களும் பின்பற்றினர். இராசராசச் சோழனின் அரசியல் சிறப்பை அறிய இம்மெய்க்கீர்த்திகள் பெரும்துணை பரிகின்றன. இம்மெய்க்கீர்த்திகள் அனைத்தும்காந்தளூர்ச்சாலைக் கலமறுத்தருளியஎன்னும் அடைமொழியைக் கொண்டுள்ளன.

இவர் தரைப்டையையம், கடற்படையையும் பெருக்கினார். சேரர்களின் வலிமையை உடைத்து எறியவும், ஈழத்தின் மீது ஆதிக்கம் செலுத்தவும், மேற்குச் சாளுக்கியர்களை விரட்டியடிக்கவும் அப்படைகள் பெரிதும் உதவின. பாண்டியநாடு, சேரநாடு, ஈழநாடு, சாளுக்கிய நாடு, அரபிக்கடல் தீவு ஆகிய நாடுகளின் மீது போர் தொடுத்து மொபெரும் வெற்றி கண்டார். பரந்த பேரரசை அமைத்த இராசராசன் பேரரசை மண்டலங்களாகவும், மண்டலங்களை வளநாடுகளாகவும், வளநாடுகளை நாடுகளாகவும் பிரித்து ஆட்சி செய்தார்.

சமயப்பணிகள்

இவர் சமயத் திருப்பணிகளில் பெரிதும் ஆர்வம் கொண்டவர் என்பதற்குத் தஞ்சைப் பெருவுடையார் கோயில் சான்றுரைக்கின்றது. இதன் விமானமும், ஒற்றைக் கல்லால் அமைக்கப்பட்ட மிகப்பெரிய நந்தியும், புடைப்போவியங்களும் காண்போர் கண்ணை கவர்க்கின்றன.  வட ஆற்காடு மாவட்டத்தில் மேற்பாடி என்னும் ஊரில் அரிஞ்சயேச்சுவரம் என்னும் கோயிலும், திருமுக்கூடலில் செம்பியன்மாதேவி பெருமண்டபமும் எழுப்பினார். கோயில்களில் சிவனடியார்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் ஆலயங்களில் உள்ள ஓவியங்கள் வழி விளக்கப்பட்டன.

ஆலயங்களில் திருவிழா நடத்தினார் . திருமேனி ஊர்வலம் நடத்தினார். அவ்விழாக்களில் நடனமாடி மக்களை மகிழ்விக்கக் கணிகையர்களை நியமித்தார். சைவத்திருமுறைகளை ஓயாது ஓதுவதற்கு ஓதுவார்களை நியமித்தார். அதற்கென அறக்கட்டளை ஏற்படுத்தினார். வேதங்கள் ஓதவும், வேதங்களில் புலமை பெற்றவர்களுக்குக் கொடையளித்தும் காத்தார். கோயில் திருப்பணி செய்யத் தவறிய பூசாரிகளுக்குக் கடுமையான தண்டனை விதித்தார்

மாபெரும் வெற்றி வீரனாகவும், சிறந்த நிர்வாகியாகவும், அறப்பணியாளனாகவும் சிறந்து விளங்கிய இராசராசன் சிறந்த மன்னர்கள் வரிசையில் வைக்கப்பட்டார். புகழோடு விளங்கிய இராசராசனின் ஆட்சி கி.பி.1014இல் முடிவுக்கு வந்தது.

இராசேந்திரச் சோழன்

தந்தைக்கு ஏற்ற மகனாக விளங்கிய இராசேந்திரச் சோழன் தனது 25ஆவது வயதில் அரியணை ஏறினார். சேர நாட்டுப் படைபெடுப்பின்போது தந்தையுடன் போரில் ஈடுபட்டார். தளபதியாகப் பணியாற்றி வெற்றி வாகை சூடினார். இராசராசனின் நன்மதிப்புக்கு உரியவரானார். திருவாலங்காட்டுச் செப்பேடுகளும், கல்வெட்டுகளும் இவருடைய போர் வெற்றிகளைப் பட்டியலிடுகின்றன.

இராசேந்திரன் இலங்கை முழுவதையும் வென்று தன் குடைக்கீழ்க் கொண்டு வந்தார். சேரநாடு, சாளுக்கிய நாடு, வடநாடு, கடார நாடு ஆகிய நாடுகளின் மீது போர் தொடுத்து மாபெரும் வெற்றி கண்டார். கடார நாட்டை வெற்றி கொண்டதால் கடாரம் கொண்டான் என்ற விருதுப் பெயர் ஏற்றார். வட இந்தியாவிற்குச் சென்ற சோழர்படை கங்கை நீரை ஏந்தி நாடு நோக்கித் திரும்பி வந்து கொண்டிருந்தது. அதனைக் கோதாவரிக் கரையில் எதிர் கொண்ட இராசேந்திரன், சோழ கங்கம் என்ற குளத்தை வெட்டி விழா எடுத்து கங்கை நீரை அதில் கொட்டிகங்காசலமயம் சலச்தம்பம்என்று பாராட்டினான். வட நாட்டு வெற்றியின் நினைவாக கங்கை கொண்ட சோழன் என்ற சிறப்புப் பெயர் ஏற்றார். அதனால் கங்கை கொண்ட சோழபுரம் என்ற நகரம் தோன்றியது.  அந்த நகரத்தைத் தனது தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்தார். வட இந்திய வெற்றிக்குப்பின் சிவனுக்குக் கோயில் எழுப்ப எண்ணி கங்கை கொண்ட சோழபுரம் என்ற கோயிலைக் கட்டினார். இது தஞ்சைப் பெருவுடையார் கோயிலை ஒத்தது. தந்தையைப் போலவே கலை மீது ஆர்வம் கொண்டவர். ஆலயங்களில் திருப்பதிகங்கள் பாடுவதற்கு அறக்கட்டளை ஏற்படுத்தினார் என்று கீழையூர் தூண் கல்வெட்டு கூறுகின்றது. ஆலயங்களில் நடனமாடும கணிகையர்களைப் பாதுகாக்க, அவர்களுக்கு நிலங்களை மானியமாக அளித்தார். வைதீகக் கல்வி நிலையங்களைப் பேணினார். அக்கல்வி நிலையங்களில் வேதங்களும், இதிகாச புராணங்களும் பாடங்களாக இருந்தன. அங்கு படிக்கும் மாணவர்களுக்கு உணவும் இருப்பிடமும் இலவசமாக வழங்கப்பட்டன. தனது பேரரசின் 18 மண்டலங்களிலும் உள்ள வைணவர்களுக்கு உணவளிக்க வசதி செய்தார் என்பதை திருபுவனிக் கல்வெட்டு கூறுகின்றது. தான் அடைந்த பல சிறப்புகளால் முடிகொண்டான், “கங்கை கொண்டான், “கடாரம் கொண்டான், “பண்டித சோழன் போன்ற பல சிறப்புப் பெயர்களால் பராட்டப்பட்டார்.

இராசேந்திரச் சோழனுக்குப்பின்

இராசேந்திரனுக்குப்பின் இராசாதிராசன் அரியணை ஏறினார். இவர் பாண்டியர்களையம், சேரர்களையும் அடக்கினார். மும்முறை சாளுக்கியர் நாட்டின் மீது படையெடுத்துச் சென்றார். இறுதியில் கொப்பம் என்ற இடத்தில் நிகழ்ந்த போரில் கொல்லப்பட்டார்.

இராசாதிராசனுடன் சென்ற அவருடைய தம்பி இரண்டாம் இராசேந்திரன் சாளுக்கியர்களின்மீது பாய்ந்து அவர்களை வென்றார். அதே போர்க்களத்தில் சோழ வேந்தனாக முடிசூட்டிக் காண்டார். இவர் ஆயலங்களில் வேதம் ஓதுவோருக்கு உதவினார் என்று திருவாலங்காட்டுச் சாசனம் கூறுகின்றது.

இரண்டாம் இராசேந்திரனைத் தொடர்ந்து அவன் தம்பி வீர இராசேந்திரன் பதவி ஏற்றார். தன் புதல்வர்களை ஆளுநர்களாக அமர்த்தியிருந்தார். பேரரரசுக் கொள்கையை நிலைநாட்டினார். புத்தமித்திரன் இயற்றிய இலக்கண நூலை இவன் பெயரால் படைத்தான். அதுவே வீர சோழியம்.

வீர இராசேந்திரனுக்குப்பின் அவருடைய மகன் அதிராசேந்திரன் பட்டத்திற்கு வந்தார். பட்டத்திற்கு வந்த சில நாட்களிலேயே கைவர்களால் கொல்லப்பட்டார்.

அதிராசேந்திரனின் இறப்புக்குப் பின் விசயாலயச்சோழனின் நேர் பரம்பரை ஆட்சி முடிவுக்கு வந்தது.

குலோத்துங்கச்சோழன்

அதிராசேந்திரனுக்குப் பிள்ளைகள் இல்லாததால் சோழ நாட்டில் குழப்பம் ஏற்பட்டது. அக்குழப்பத்தைத் தீர்க்க, வேங்கியில் ஆட்சி செய்து கொண்டிருந்த கீழைச் சாளுக்கிய மன்னன் இரண்டாம் இராசேந்திரன் குலோத்துங்கன் என்ற பெயரில் சோழ வேந்தனாக முடிசூட்டிக் கொண்டார். இவர் இராசராசனின் கொள்ளுப்பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இளமையில் சோழ நாட்டில் வளர்ந்தவர்.

பதவி ஏற்றவுடன் சோழப் பேரரசின் வீழ்ச்சியையும் சிதைவையும் தவிர்த்தார். கீழைச் சாளுக்கிய அரசையும் ஒன்றிணைத்தார். ஈழம், பாண்டிய நாடு, சேரநாடு, கலிங்க நாடு ஆகிய நாடுகளின் மீது போர் தொடுத்து வெற்றி கண்டார்.

தென் கலிங்க நாடு சாளுக்கியரின் மகாணமாக விளங்கியது. அங்கே எழுந்த கலகத்தை ஒடுக்கினார். வட கலிங்கத்தை ஆண்ட அனந்தவர்மன் குலோத்துங்கனுக்குத் திறை செலுத்த மறுத்தான். வேறு வழியின்றி கலிங்க நாட்டின் மீது போர் தொடுத்தார். கருணாகரத் தொண்டைமான் தலைமையில் பெரியதொரு சோழர்படை கலிங்கம் நோக்கி விரைந்தது. சோழர்களின் கமையான தாக்குதலைத் தாங்க முடியாத கலிங்கப்படை பறமுதுகு காட்டியது. கலிங்க மன்னன் ஓடி ஒளிந்து கொண்டான். இந்நிகழ்வை செயங்கொண்டார் என்னும் புலவர் கலிங்கத்துப் பரணி என்ற நூலில் விரிவாகப் பாடியுள்ளார்.

சோழர் நாட்டில் மக்கள் வரியை விரும்பவில்லை என்பதால் வரியைத் தவிர்த்தார். இதனால்சுங்கம் தவிர்த்த சோழன்என்ற புகழைப் பெற்றார். இவர் பெரும் சிவபக்தர். பல மொழிகளுக்கும் கலைகளுக்கும் ஆர்வம் காட்டியவர். சீனம், கம்போசம் ஆகிய நாடுகள் இவருடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தன.

பிற்காலச் சோழர்களின் வீழ்ச்சி

முதலாம் குலோத்துங்கனுக்குப்பின் அவருடைய புதல்வன் விக்கிரமச் சோழன் முடிசூடினார். இவரை அடுத்து இரண்டாம் குலோத்துங்கன் பதவி ஏற்றார். அதன் பின் இரண்டாம் இராசராசன் பதவிக்கு வந்தார். முத்தமிழ்த் தலைவன் என்று போற்றப்பட்ட இம்மன்னனின் காலத்தில் குறுநில மன்னர்கள் சோழர் அதிகாரத்தைப் புறக்கணித்தனர். அதனால் கலகங்கள் ஏற்பட்டன. இவருக்குப்பின் இரண்டாம் இராசாதிராசன் பதவி ஏற்றார். இவர் காலத்தில் பாண்டிய நாட்டில் அரசுரிமைப் போட்டிகளும் போராட்டங்களும் எழுந்தன. இவருக்குப்பின் மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் இராசராசன், மூன்றாம் இராசேந்திரன் ஆகியோர் பட்டத்திற்கு வந்தபோதிலும் பாண்டியர்களின் வலிமை பெருகியது. சடையவரம் சுந்தர பாண்டியன் சோழர்கள் மீது வெற்றி கண்டு பாண்டியர்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டினார். சோழர்கள் சிதறினர்.

சோழர்களின் சமூக வாழ்க்கை

  • அரண்மனைப் பணியளர்களுக்குத் தனி விடுவதிகளும் வீடுகளும் இருந்தன. அவற்றுக்கு வேளம் என்று பெயர்.
  • மன்னன் குடிமக்களின் விண்ணப்பங்களை ஏற்று ஆணைகளைப் பிறப்பிப்பான். அரசன் கூறுகின்ற ஆணைகள் வாய்மொழியாகவே இருக்கும். அதற்குத் திருவாய்க் கேள்விகள் என்று பெயர்.
  • மக்களின் குற்றங்களைப் பெரும்பாலும் கிராம நீதிமன்றங்களே விசாரித்துத் தீர்ப்பு வழங்கின. குற்றங்களுக்குத் தண்டனையாக்க் குற்றவாளிகளின் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
  • பிறர் நலனுக்காக உயிர் துறந்தவர்களின் வழி வந்தோருக்கும், அவர்களின் உறவினர்களுக்கும் நிலங்கள் தானமாக வழங்கப்பட்டன.
  • உழவுத் தொழில் செய்யும் மக்கள் வாழ்கின்ற இடத்திற்கு ஊர் என்று பெயர். பிராமணரின் குடியிருப்புகள் அகரம், பிரமதேயம், சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டன. அக்குடியிருப்புகளுக்குக் கிராமங்கள் என்று பெயர்.
  • கிராமசபை உறுப்பினர்கள் குடவோலை முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • அரசாங்கம் குடிமக்களின் மேல் விதிக்கப்பட்ட வரிகள் பலவகைப்பட்டன. சில வகை நிலங்களுக்கு வரிவிலக்கு அளிப்பதுண்டு.
  • விக்கிரமச் சோழன் காலத்தில் டிரம்மா என்ற கிரேக்க நாணயம் குடிமக்களிடம் புழக்கத்தில் இருந்தது.
  • வறட்சியிலும், பஞ்சத்திலும் குடிமக்களுக்குக் கோயில்களிடமிருந்து பொருளுதவி கிடைத்தன.
  • கல்லுக்கும் கதைக்கும் உயிர் ஊட்டிய சிற்பிகள், ஓவியர்கள், கட்டடக் கலைஞர்கள் மிகுதியாக இருந்தனர்.
  • சோழர் காலத்தில் பெண்கள் எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றிச் சுதந்திரமாக வாழ்ந்தனர். பெண்கள் சொத்துரிமை பெற்றிருந்தனர்.
  • அரசர்களுடைய பணிகளில் பட்டத்து அரசிகளும் பங்கு கொண்டனர். அரசியர்கள் தனிப்பட்ட முறையில் கோயில்கள் கட்டுவது, கோயில் திருப்பணி செய்வது ஆகிய நற்செயல்களில் ஈடுபட்டனர்.
  • இராசராசன் காலத்தில் பெண்களும் குழந்தைகளும் சிறுசேமிப்பு செய்யும் பழக்கம் கொண்டிருந்தனர்.
  • இசையிலும் கூத்திலும் பெண்கள் வல்லுநர்களாக இருந்த பெண்கள் பலர் கோயில் திருப்பணிகளில் ஈடுபட்டனர். அவர்களைத் தேவரடியார்கள் என்று அழைத்தனர். கோயில்களில் தேவாரம், திருவாசகம் ஓதுவதும், நடனம ஆடுவதும் அவர்களின் பணியாக இருந்தன.
  • சோழர் காலத்தில் குடிமக்கள் சிலர் கோயில்களுக்கு அடிமைகளாக இருந்தனர்.
  • நகரங்கள் மிகப் பெரியனவாக, திட்டமிட்டுக் கட்டப்பட்டவையாக இருந்தன. குடிமக்கள் வாழ்கின்ற இடங்கள் வேறாகவும், அங்காடித் தெருக்கள் வேறாகவும் நிறுவப்பட்டு இருந்தன.
  • மன்னர்கள் வாழ்ந்திருந்த அரண்மனைகள் ஒவ்வொன்றும் ஒரு நகரமாகவே காட்சியளித்தன. அரண்மனையில் பெண்கள் விளையாடுவதற்கென்று தனிப் பொழில்கள் அமைந்திருந்தன.
  • பெண்கள் அணிந்திருந்த அணிகலன்கள் பெரும்பாலும் பொன், முத்து, பவழம், மணி ஆகியவற்றால் அமைந்திருந்தன. சோழ நாட்டில் பொன்னுக்கும், மணிக்கும் பஞ்சமே இல்லை.
  • ஆண்கள் முழந்தாள் வரையில் ஆடையணிந்தனர். தலையில் தலைப்பாகை அணிந்தனர். பெண்கள் கொய்சகம் வைத்துப் புடவைகள் கட்டியிருந்தனர்.
  • மக்களின் உணவில் பாற்சோறு, அக்கார அடிசில், புளிங்கறி, கட்டித் தயிர் ஆகியவையும், இறைச்சியும் முக்கியத்துவம் பெற்றன.
  • சோழர் காலத்தில் ஒப்பனைக் கலை மிக உயர்ந்த நிலையில் இருந்தது. பெண்கள் பலவகையான நறுமணப் பண்டங்கள் கலந்த நீரில் மங்கல நீராடினர். கண்ணுக்கு மை தீட்டிக் கொள்வர்.
  • பெண்களுக்குச் சீதனமாக நிலங்களைக் கொடுக்கும் வழக்கம் இருந்த்து. தன் மனைவியின் சீதனச் சொத்தைச் செலவழிக்கும் உரிமை கணவனுக்கு இல்லை.
  • திருமணப் பந்தலில் அந்தணர்கள் திருமணச் சடங்கை நடத்தினர். மணமக்களுக்குக் காப்புக் கட்டுவதுண்டு.
  • நல்ல நாள் பார்த்து ஒரு வினையைத் தொடங்கும் நம்பிக்கை உண்டு. விருந்தினர் வீட்டுக்கு வந்தவுடன் அவர்களுக்கு வெற்றிலைப் பாக்கு வழங்கப்பட்டது.
  • குழந்தையை ஐந்தாம் ஆண்டில் பள்ளிக்கு அனுப்புவது ஒரு மங்கலச் சடங்காகக் கொண்டாடப்பட்டது.
  • சோழர் காலத்தில் பிணங்களைச் சுடுகாட்டில் எரிக்கும் வழக்கம் ஏற்பட்டது. பெண்கள் சுடுகாட்டுக்குச் செல்லும் பழக்கமும் இருந்தது.
  • ஆண்கள் தங்கள் பொழுதுபோக்கிற்காக ஆடு சண்டை, கோழிச்சண்டை நடத்தினர். பெண்களுக்கு நீர் விளையாட்டில் விருப்பம் இருந்தது.
  • சோழர் காலத்தில் மருத்துவம் நன்கு வளர்ச்சி பெற்றிருந்தது.
  • குலோத்துங்கன் சோழன் சரிதை, கலிங்கத்துப் பரணி, கம்பராமாயணம், பெரிய புராணம், மூவருலா, தஞ்சைவாணன் கோவை, சீவகசிந்தாமணி, பெருங்கதை, வளையாபதி, நீலகேசி, வீரசோழியம், திவாகரம், நன்னூல், புறப்பொருள் வெண்பாமாலை, தண்டியலங்காரம், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் ஆகிய புகழ்ப் பெற்ற நுல்கள் தோன்றின.


-----------------------------------------------------------------------------------------------------------------------------

குறிப்பு

இக்கருத்துகள் யாவும் தமிழக வரலாறும் பண்பாடும் – வே.திசெல்லம், தமிழக வரலாறும் பண்பாடும் – டாக்டர் கே.கே.பிள்ளை ஆகிய நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை. மாணவர்களின் நலன் கருதி அந்நூல்களில் உள்ள கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க மாணவர்களின் நலன் கருதியே இத்தளம் செயல்படுகின்றது.

ஆகவே, மாணவர்கள் தவிர்த்து இத்தளத்தைக் காண்பவர்கள் படிக்கவும், புரிந்து கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர, இத்தளத்தில் உள்ள செய்திகளை அப்படியே எடுத்து நூலாக்கம் செய்வதோ, கைடு நூலாக்கம் செய்வதோ, வலையொளியில் பதிவு செய்வதோ கூடாது என்று தாழ்மையுடன் வேண்டுகின்றேன். புரிதலுக்கு நன்றி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக