டச்சுக்காரர்கள்
கி.பி.1595இல் ஹாலந்து நாட்டில் இருந்து டச்சு வாணிகக் கப்பல்கள் கிழக்கு நாடுகளை நோக்கிப் பயணமாயின. அவை இந்தோனேசியத் தீவுகளைச் சுற்றிச் சென்றன. இதைத் தொடர்ந்து கி.பி.1601இல் டச்சு ஐக்கியக் கம்பெனி உருவாக்கப்பட்டது. வாணிபம் செய்யவும், கோட்டைகள் கட்டவும், போர் நடத்தவும், புதிய பகுதிகள் பிடிக்கவும் அதிகாரம் பெற்றுக் கொண்டு டச்சு ஐக்கியக் கம்பெனியாட்கள் களத்தில் குதித்தனர். போர்த்துக்கீசியர் மீது பாய்ந்தனர். டச்சு – போர்த்துக்கீசியப் போட்டி துவங்கியது.
போரின் விளைவுகள்
போர்த்துக்கீசியர்களுக்கும் டச்சுக்காரர்களுக்கும் இடையே நேரிட்டு வந்த போராட்டங்களில் போர்த்துக்கீசியர்கள் தோல்வியைத் தழுவினர். இலங்கையை டச்சுக்காரர்களிடம் இழந்தனர். பிறகு தூத்துக்குடியையும், நாகப்பட்டினத்தையும் டச்சுக்காரர்கள் போர்த்துக்கீசியர்களிடம் இருந்து பறித்துக் கொண்டனர்.
டச்சுக்காரர்களின் முன்னேற்றத்தைப் போர்த்துக்கீசியர்கள் விரும்பவில்லை. சாந்தோமிலிருந்து போர்த்துக்கீசியர்கள் புலிக்காட்டைக் கடல்வழி தாக்கினர். இப்போர் கடற்போரில் போர்த்துக்கீசியர்களுக்கு இருந்த பலவீனத்தை வெளிப்படுத்தியது. போர்த்துக்கீசியர்களின் தாக்குதலை எதிர்கொள்ள டச்சுக்காரர்கள் புலிக்காட்டில் கோட்டை எழுப்பினர். 1615இல் போர்த்துக்கீசியர்கள் அரக்கானில் தோல்வி அடைந்தனர். போர்த்துக்கீசியரின் வசம் இருந்த இலங்கைத் தளத்தையும், தென்கிழக்கு ஆசியாவின் தளத்தையும் டச்சுகாரர்கள் கைப்பற்றினர். நாகப்பட்டித்தில் கோட்டைக் கொத்தளங்கள் அமைத்தனர்.
எல்லைகள்
சோழ மண்டலக் கடற்கரையில் நாகப்பட்டினமே டச்சுக்காரர்களின் தலைநகராக அமைந்தது. அங்கு டச்சுக்காரர்கள் வலிமையான கோட்டைக் கொத்தளங்கள் கட்டிக் கொண்டனர். அக்கோட்டையை டச்சுக் கம்பெனியின் கவர்னர் தம் இருப்பிடமாகக் கொண்டு தம் சமயப் பணியைத் தொடர்ந்தார்.
நிறைவேறிய நோக்கம்
டச்சுக்காரர்களின் செல்வாக்கு உயர்ந்து கொண்டே போனது. அவர்களுக்கு வெற்றிமேல் வெற்றி கிடைத்தது. வாணிகத் தொழிலிலும், கப்பல் ஓட்டுவதிலும், தொழில்கள் அமைப்பிலும், பொருளாதாரத்திலும், அறிவு நுட்பத்திலும், டச்சுக்காரர்கள் ஏனைய ஐரோப்பியரை விடப் பலமடங்கு திறமையுடையர்களாக இருந்தனர். தம் நோக்கத்தையும், அதை அடையும் முறையையும் தெளிவாக உணர்ந்திருந்தமையால் அவர்களுக்குப் பெரும் வெற்றி கிட்டியது.
-----------------------------------------------------------------------------------------------------------------------
இக்கருத்துகள் யாவும் தமிழக வரலாறும் பண்பாடும் – வே.திசெல்லம், தமிழக வரலாறும் பண்பாடும் – டாக்டர் கே.கே.பிள்ளை ஆகிய நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை. மாணவர்களின் நலன் கருதி அந்நூல்களில் உள்ள கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க மாணவர்களின் நலன் கருதியே இத்தளம் செயல்படுகின்றது.
ஆகவே, மாணவர்கள் தவிர்த்து இத்தளத்தைக் காண்பவர்கள் படிக்கவும், புரிந்து கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர, இத்தளத்தில் உள்ள செய்திகளை அப்படியே எடுத்து நூலாக்கம் செய்வதோ, கைடு நூலாக்கம் செய்வதோ, வலையொளியில் பதிவு செய்வதோ கூடாது என்று தாழ்மையுடன் வேண்டுகின்றேன். புரிதலுக்கு நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக