திங்கள், 23 செப்டம்பர், 2024

சிற்பக்கலை

 

சிற்பக்கலை

பண்டைக்காலம் தொட்டே வளர்ந்துள்ள கவின் கலைகளுள் ஒன்று சிற்பக்கலை. பல்லவர் காலத்திற்கு முன்பு பெரும்பாலும் மண் உருவங்களும், சுதை உருவங்களும் செய்யப்பட்டன. கோயில் கட்டுவதற்குக் கருங்கல் பயன்படுத்தப்பட்ட பிறகுதான் சிற்பம் நிலைபேறடைந்த கலையாக உருவானது.

சிற்பங்களின் பிரிவுகள்

சிற்பங்களை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை,

1.தெய்வ உருவங்கள் – தெய்வங்களின் உருவங்களைச் செதுக்குதல்

2.இயற்கை உருவங்கள் – விலங்கு, பறவை, மனிதன் உள்ளிடவை

3.கற்பனை உருவங்கள் – இருதலைப்பறவை, காமதேனு,  உள்ளிட்டவை.

4.படிமை உருவங்கள் – மன்னர் முதலியோர்க்கு எடுத்த உருவச் சிலைகள் என்பனவாகும்.

சங்ககாலச் சிற்பங்கள்

சங்க காலத் தமிழர்கள் மண்ணாலும், மரத்தாலும், தந்தத்தாலும் அழகிய சிற்பங்களை உருவாக்கினர்.  மண்ணால் உருவங்கள் செய்கின்ற கலைஞர்களை மண்ணீட்டாளர் என்றனர். வீடுகளில் தச்சர்கள் அழகிய உருவங்களை உத்தரக் கற்பலகையில் அமைத்தனர். மண்ணாலான சிற்பங்களைப் போலவே சுதைச் சிற்பங்களும் நன்கு வளர்ச்சியுற்றிருந்தன. சங்க காலத்தில் இறந்த வீரர்களுக்குக் கல்லில் உருவம் செதுக்கி வழிபட்டனர். கண்ணகி உருவச் சிலை அமைக்கப்பட்டதைச் சிலம்பு கூறுகின்றது. தமிழ்நாட்டுச் சிற்பிகள் கோயில்களையும், கல் உலோகச் சிற்பங்களையும் செய்வதற்குரிய விதிகளைக் கூறும் நூல்களைக் கையாண்டுள்ளனர். சங்க காலத்தில் மனை நூல் இருந்தமையை நெடுநல்வாடை கூறுகின்றது.

பல்லவர் காலச் சிற்பங்கள்

பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட சுதைக் கோயில்களில் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. திருவதிகைக் கோயில் இதற்கு சிறந்த சான்றாக உள்ளது. தமிழகத்தில் கற்சிற்பங்களைத் தொடங்கி வைத்த பெருமை பல்லவர்களுக்குரியதாகும். இவர்கள் கட்டிய குடைவரைக் கோயில்களிலும், கட்டுமானக் கோயில்களிலும் எண்ணற்ற சிற்ப உருவங்கள் உள்ளன.

மாமல்லபுரச் சிற்பங்கள்

மாமல்லபுரம் பல்லவர்களின் கலைக்கூடமாக விளங்குகின்றது. மகிடாசுரமர்த்தினி குகை, ஆதி வராகர் மண்டபம், மும்மூர்த்தி மண்டபம், வராகர் குகை ஆகியவற்றின் சிற்பங்கள் கண்ணைக் கவருகின்றன.

1.மும்மூர்த்தி குகை – ஊரின் வடபுறத்தில் உள்ள இக்குகையில் சிவன், திருமால், முருகன் உருவங்கள் உள்ளன. நான்குக் கைகளோடு முருகன் காட்சியளிக்கின்றார்.

2.கோடிக்கல் மண்டபம் – மும்மூர்த்தி குகைக்கு மேற்கே கோடிக்கல் மண்டபம் அமைந்துள்ளது. நீண்ட சதுர அமைப்புடைய இக்கொற்றவை கோயிலின் வாசலில் ஒருபுறம் கத்தியும், கேடயமும் தாங்கிய பெண்ணும், மறுபுறம் வில்லேந்திய பெண்ணும் காவல் பெண்களாக நிற்கின்றனர்.

3.வராக மண்டபம் – இம்மண்டபத்தில் நான்கு சிற்பங்கள் உள்ளன. இதில் வடபுறச் சுவரில் வராக மூர்த்தியின் சிற்பமும், கீழ்ச்சுவரில் தாமரை மீது அமர்ந்த திருமகள் உருவமும் உள்ளன. இங்குள்ள வராகப் பெருமானின் சிற்பமும், உலகளந்த பெருமாளின் உருவமும் உலகச் சிறப்பு வாய்ந்தவை.

4.ஆதிவராக மண்டபம் – இம்மண்டபத்திற்குப் பல சிறப்புகள் உண்டு. இது மக்களால் வழிபடக்கூடிய மண்டபமாக விளங்குகின்றது. இங்கே பல்லவ மன்னர்களின் உருவச் சிலைகள் உள்ளன. திருமாலின் பத்து அவதாரங்கள் பற்றிய கல்வெட்டும் இங்கே காணப்படுகின்றன. இக்கோயிலின் வடபுறச் சுவரில் சிவபெருமான் காட்சியளிக்கின்றார். கீழைச் சுவரில் தாமரைப் பீடத்தில் திருமகள் இருகைகளிலும் மலருடன் காட்சியளிக்கின்றாள்.

5.கிருஷ்ண மண்டபம் – கண்ணன், குன்றை அடுத்து நிற்க, அதற்குக் கீழே மாடுகளும், ஆயர்களும், ஆய்ச்சியர்களும் கவலையின்றி நிற்கின்ற காட்சி அழகு மிக்கது.

கோயில்களில் சிற்பம்

காஞ்சியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் சிவபெருமான் பல்வேறு தோற்றங்களோடு காட்சி தருகின்றார். தேவியர்களின் பலவண்ணத் தோற்றமும் திருமால், நான்முகன், முருகன், கொற்றவை உருவங்களின் பல வகைத் தோற்றங்களும் இங்குள்ளன. நடனம் பற்றிய இருவகையான சிற்பங்கள் இங்கே காணப்படுகின்றன.

பாண்டியர் சிற்பங்கள்

கி.பி.6,7,8ஆம் நூற்றாண்டுகளில் ஆண்ட பாண்டிய மன்னர்களின் குகைக் கோயில்களில் அழகிய சிற்பங்கள் உள்ளன. திருமெய்யம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, திருப்பரங்குன்றம், கழுகுமலை எனும் இடங்களில் இவற்றை காணலாம். அதியமான் கவின் சிற்பத்தை நாமக்கல் குடைவரைக் கோயிலில் கண்டு களிக்கலாம்.

சோழர்காலச் சிற்பங்கள்

பல்லவர்கள் போற்றி வளர்த்த சிற்பக்கலை சோழ மன்னர்கள் காலத்தில் மேலும் வளர்ச்சியடைந்தது. கருவறையின் கோட்டங்களை இவை அலங்கரிக்கின்றன. குடந்தைக் கீழ்க்கோட்டம், சீனிவாச நல்லூர் குரங்கு நாதர் கோயில், பசுபதி கோயில், திருவாரூர் அறநெறீச்சுரம் ஆகியவற்றில் கி.பி.9,10ஆம் நூற்றாண்டுச் சிற்பங்கள் உள்ளன. இக்காலத்தில் சிறப்பாகத் தோன்றிய வாயிற்காவலர் உருவங்கள் எழிலும், கம்பீரமும் கொண்டவையாகும்.

தஞ்சையில் மாபெரும் கோயிலைத் தோற்றுவித்த இராசராசன் காலத்தில் இருந்து ஒரு மாறுதலைக் காண்கிறோம். இராசராசன் கருங்கல்லால் வானளவு கட்டிடத்தை எழுப்பினான். அவனது கவனம் முழுவதும் கட்டிடத்தில் தலையாய நின்றது. அவன் கட்டுவித்த கோபுரங்களையும் விமானங்களையும் ஏராளமான சிற்பங்கள் அலங்கரித்தபோதிலும், அவை கட்டிடத்திற்கு அங்கமாக கட்டிடத்தின் பெருமிதத்தில் மறைந்து காணப்படுகின்றன என்று அறிஞர்கள் கூறுகின்றனர். கங்கை கொண்ட சோழன் கட்டிய பெரிய கோயிலுக்கும் இக்கருத்துப் பொருந்தும். எனினும், இங்கே உள்ள கலைமகள் சிற்பமும், சண்டிக்குச் சிவன் அருள்புரியும் சண்டீகப்பதம் பற்றிய சிற்பமும் தனித்தன்மை கொண்டு நிற்கின்றன. 

விசயநரகத்தார் காலச் சிற்பங்கள்

கி.பி.14,15,16 நூற்றாண்டுகளில் விசய நகரத்து மாவேந்தர்கள் பல இடங்களில் ஆயிரங்கால் மண்டபங்களையும், கலியாண மண்டபங்களையும் அமைத்தனர். அம்மண்டபத் தூண்களே வளமான சிற்பங்கட்கு இடமாயின. அரியநாதர் முதலியோர் கட்டிய ஆயிரங்கால் மண்டபமும், புதுமண்டபமும், மீனாட்சிக் கோயிலும் நாயக்க மன்னர்களின் சிற்பப் பெருமையைக் காட்டுவனவாகும். மீனாட்சிக் கோயிலில் பிச்சாடனார், மோகினி, காளியின் நடனம், சிவனுடைய ஊழிக்கூத்து, திருக்கலியாணக் காட்சி இவற்றைக் குறிக்கும் சிற்பத்தூண்கள் அழகுடன் விளங்குகின்றன. 

சிற்ப சாத்திரங்கள்

முற்காலத்தில் சிற்பக் கலையைக் கட்டிடக் கலையின் ஒரு பகுதியாகவே கருதினர். மானசாரம் என்ற கட்டிடக்கலை நூலில் 22 பகுதிகள் சிற்பம் பற்றிப் பேசுகின்றன.  சிற்ப சாத்திரங்கள், சமயம் சாராக் கட்டிடங்கள், கோயில் கட்டிடங்கள், கோட்டைக் கொத்தளங்கள், சிற்பம், ஓவியம் ஆகியவை அமைக்கப்பட வேண்டிய முறைகளைப் பற்றிக் கூறுகின்றன.

 -------------------------------------------------------------------------------------------------------------------


குறிப்பு

இக்கருத்துகள் யாவும் தமிழக வரலாறும் பண்பாடும் – வே.திசெல்லம்தமிழக வரலாறும் பண்பாடும் – டாக்டர் கே.கே.பிள்ளை ஆகிய நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை. மாணவர்களின் நலன் கருதி அந்நூல்களில் உள்ள கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க மாணவர்களின் நலன் கருதியே இத்தளம் செயல்படுகின்றது.

ஆகவேமாணவர்கள் தவிர்த்து இத்தளத்தைக் காண்பவர்கள் படிக்கவும்புரிந்து கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிரஇத்தளத்தில் உள்ள செய்திகளை அப்படியே எடுத்து நூலாக்கம் செய்வதோகைடு நூலாக்கம் செய்வதோவலையொளியில் பதிவு செய்வதோ கூடாது என்று தாழ்மையுடன் வேண்டுகின்றேன். புரிதலுக்கு நன்றி.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக