போர்த்துக்கீசியர்
இந்தியா ஐரோப்பியர்களை நீண்ட நாட்களாகக் கவர்ந்து கொண்டிருந்தது. அது அவர்களுக்கு அதிசய உலகமாக விளங்கியது. இந்தியாவுக்குள் முதன்முதல் அடியெடுத்து வைத்த ஐரோப்பியர் போர்ச்சுக்கீசியர் ஆவர்.
வருகையின் நோக்கம்
கடலாதிக்கத்துக்காவும், சமயத்தைப் பரப்புவதற்காகவும் போர்த்துக்கீசியர்கள் இந்தியாவை நாடினர். அவர்கள் வாணிகம் புரிந்து பொருளீட்டும் நோக்கத்துடன் நாட்டுக்குள் நுழைந்தனர். அவர்கள் பெரிதும் விரும்பி நம் நாட்டில் கொள்முதல் செய்த பொருட்கள் மிளகு, இலவங்கம், ஏலக்காய் உள்ளிட்ட நறுமணப் பொருட்களாகும். இந்திய வணிகர்களுக்கு அராபியர்கள் ஏற்படுத்திய போட்டியை போர்த்துக்கீசியர் தவிர்த்தனர். எனவே, இந்திய வணிகர்களின் வரவேற்பு அவர்களுக்குக் கிட்டியது.
வாஸ்கோடகாமாவின் வருகை
போர்த்துக்கீசிய மாலுமி வாஸ்கோடகாமா என்பவர் முதன் முதல் 1498இல் கள்ளிக்கோட்டை வந்தார். அவர் வகுத்த கடல்வழியே ஏனைய ஐரோப்பியரும் வந்து இந்தியாவுடன் கடல் வாணிகம் செய்தனர். வாணிகக் கப்பல்களைத் தொடர்ந்து போர்க்கப்பல்கள் வந்தன. வாணிகச் செல்வாக்கு ஏற்பட்டவுடன் நாடு பிடிக்கும் முயற்சியில் இறங்கினர். போர்த்துக்கீசியரின் செல்வாக்கானது வெகு வேகமாக வளர்ந்து வந்தது. தம் வாணிகத்தை வளர்த்துக் கொள்ளவும், அரசியல் ஆதிக்கத்தைப் பெருக்கிக் கொள்ளவும், சமய வளர்ச்சியைத் தூண்டி விடவும் போர்த்துக்கீசியர்கள் மக்களுக்கு இன்னல்களையும் கொடுமைகளையும் விளைவித்தனர். கண்ணணூரிலும், கோவாவிலும் இந்துக் குடிமக்களைத் துண்டு துண்டாக வெட்டினர். உயிருடன் அவர்களுடைய உறுப்புகளை அறுத்துப் படுகொலைகள் செய்தனர்.
எல்லைகள்
போர்த்துக்கீசியர் கோவாவைத் தங்களுடைய இருக்கையாக வைத்துக் கொண்டனர். அங்கிருந்து தங்களுடைய கடலாதிக்கத்தை நிலைநாட்டினர். சோழ மண்டலக் கடற்கரையில் அவர்கள் நாகப்பட்டினத்தையும், சாந்தோமையும் தங்கள் தளங்களாகப் பெற்றனர். இலங்கையையும், தென்கிழக்கு ஆசியப் பகுதிகளையும் உள்ளிட்ட ஒரு வாணிபப் பேரரசினை அவர்கள் உருவாக்கினர். இவர்கள் கடல் ஆதிக்கத்தில் வல்வலர்களாக இருந்தமையால் அரபிக்கடல், இந்துமாக்கடல், தென்கிழக்கு ஆசியப் பகுதிகள் ஆகியவற்றில் அவர்களுக்கு இணையற்ற ஆதிக்கம் ஏற்பட்டது. கோவாவை இந்தியக் குடியேற்றங்களின் தலைமையகமாக வைத்திருந்தனர்.
சமயம் பரப்புதல்
கோவா சமயப்பணியின் தலைமையகம் ஆனது. துறவிகள் பயிற்சி நிலையமும் துவங்கியது. அதனால் அங்கிருந்த இந்து ஆயலங்கள் அகன்றன. கி.பி.1542இல் புனித சவேரியாரின் வருகை பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. அவர் கடற்கரையில் பரதவ மக்களிடையே சமயத் தொண்டாற்றினார். அதனால் தமிழகத்தின் கடற்கரை ஓரங்களில் கிறித்துவம் பரவத் தொடங்கியது.
இராபர்டிநொபிலியின் வருகை
மதுரையில் வீரப்ப நாயக்கனின் ஆட்சிக் காலத்தின் இறுதியில் கிறித்தவ மிஷன் தொடங்கினர். உயர்வகுப்பு குடிமக்களைக் கிறித்துவராக மாற்றுவதே இந்த மிஷனின் நோக்கமாகும். ஆனால், போர்த்துக்கீசியர்களைத் தமிழர்கள் பறங்கிகள் என்று பழித்துக்கூறி வெறுத்தனர். அவர்கள் மாட்டு இறைச்சியைத் தின்றதையும், மதுபானம் குடித்ததையும் தமிழர் வெறுத்தனர். போர்த்துக்கீசியரின் நெஞ்சுரமும், படை பலமும், செல்வச் செருக்கும் தமிழரின் உள்ளத்தை அசைக்கவில்லை. ஆகவே மதுரை மிஷனின் தொடக்க முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
இராபர்டி நொபிலி மதுரைக்கு வந்து பணியேற்ற பிறகு மதுரை மிஷனின் சரித்திமே மாறி விட்டது. மதுரை நாயக்கர்களின் படைகளுடன் கிறித்துவப் பாதிரிகளும் அணிவகுத்துச் சென்றனர். படைகள் செல்லும் இடங்களில் எல்லாம் இராபர்டிநொபிலியும் சென்று, அங்குள்ள மக்களுக்குத் தம் சமயப் பணிகளைச் செய்தார். நாளடைவில் மதுரை, தஞ்சாவூர், செஞ்சி வேலூர், கோல்கொண்டா ஆகிய நாடுகளில் மதுரை மிஷன் பரவியது.
போர்த்துக்கீசியர்களின் வீழ்ச்சி
போர்த்துக்கீசியர்களின் வருகைக்கு ஒரு நூற்றாண்டுக்குப் பின் ஹாலந்தில் நிறுவப்பட்ட டச்சு ஐக்கியக் கம்பெனி, போர்த்துக்கீசியருடன் வாணிப்ப் போட்டியில் ஈடுபட்டது. டச்சுக்காரர்களின் முன்னேற்றம் போர்த்துக்கீசியர்களின் தோல்விக்குக் காரணமாகியது.
குறிப்பு
இக்கருத்துகள் யாவும் தமிழக வரலாறும் பண்பாடும் – வே.திசெல்லம், தமிழக வரலாறும் பண்பாடும் – டாக்டர் கே.கே.பிள்ளை ஆகிய
நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை. மாணவர்களின் நலன் கருதி அந்நூல்களில் உள்ள
கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க மாணவர்களின் நலன் கருதியே இத்தளம் செயல்படுகின்றது.
ஆகவே, மாணவர்கள் தவிர்த்து இத்தளத்தைக் காண்பவர்கள்
படிக்கவும், புரிந்து
கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர, இத்தளத்தில் உள்ள செய்திகளை அப்படியே எடுத்து நூலாக்கம் செய்வதோ, கைடு நூலாக்கம் செய்வதோ, வலையொளியில் பதிவு செய்வதோ கூடாது என்று தாழ்மையுடன்
வேண்டுகின்றேன். புரிதலுக்கு நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக