பல்லவர் வரலாறு
இந்தியாவின் தலைசிறந்த ஏழு நகரங்களுள் ஒன்று காஞ்சிபுரம். இந்நகரம் கல்வி, கலை, சமயத்
தத்துவங்கள்,
நாகரிகங்கள் ஆகியவற்றின் வளர்ச்சியில் மேம்பட்டு விளங்குகின்றது. கி.பி.மூன்றாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையில் பல்லவரின் ஆட்சியில் இருந்தது. பல்லவர்கள் ஆதியில் வாழ்ந்த இடம்
எது என்பதும், தமிழகத்திற்கு எப்படி
வந்தனர் என்பதும் இன்னும்
மறைபொருளாகவே இருந்து வருகின்றது. சங்க
இலக்கியத்தில்
பல்லவரைப் பற்றிய குறிப்பு காணப்படவில்லை.
ஆனால் பல்லவர்கள் எழுதி
வைத்துச் சென்ற கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றைக் கொண்டு அவர்களைப் பற்றி அறிய முடிகின்றது.
பல்லவர் கல்வெட்டுகள்
பல்லவர் கல்வெட்டுகள் மகேந்திரவாடி,
தளவானூர், பல்லாவரம், திருச்சி, திருக்கழுக்குன்றம்,
மாமண்டூர், மண்டகப்பட்டு, சித்தன்னவாசல், மாமல்லபுரம் ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பல்லவர்கள் தமிழர்கள் அல்லர்
பல்லவரின் பண்பாடுகள் தமிழ் மன்னர்களின் பண்பாடுகளுக்கு முற்றிலும் முரண்பாடாகக் காணப்படுகின்றது. அவர்கள்
வடமொழியைப் போற்றியுள்ளனர். அவர்களுடைய பெயர்களும்,
சமூக சமய வழக்கங்களும்கூட தமிழகத்து மரபுகளில் இருந்து மாறுபட்டுள்ளன. எனவே, பல்லவர்கள் தமிழர்கள் அல்லர் என்பதை
வரலாற்று ஆய்வாளர்கள் பல
சான்றுகளுடன் விளக்கியுள்ளனர். பல்லவர்கள் தமிழகத்தைச் சார்ந்தவர்களும்
அல்லர். தமிழர்களும் அல்லர். இவர்கள் அரசியல், சமய
ஆதாயங்களுக்காக
வடக்கிலிருந்து
தென்திசை வழியாக இந்தியாவிற்குள் வந்தனர்
என்பதற்கு அவர்களின் பட்டயங்களே சான்றுரைக்கின்றன.
அரசியல் வரலாறு
சைவத்திருமுறைகளிலும் சாசனங்களிலும் காடவர்கள் என்றும், காடு வெட்டிகள் என்றும் பல்லவர்கள் அறியப்படுகின்றனர். பல்லவர்
வரலாறு மூன்று காலகட்டத்தைச் சார்ந்து நிற்கின்றது.
1.பிராகிருதப் பட்டயங்களின் காலம் – முற்காலப் பல்லவர்கள்
பிராகிருதப் பட்டயங்களால் அறியப்படும் பல்லவர்கள் முற்காலப் பல்லவர்கள் ஆவர். அவர்களுள் முக்கியமானவர்கள்
சிம்மவர்மன்,
புத்தவர்மன்,
புத்தயாங்குசன்
முதலியோராவர். முற்காலப் பல்லவர்களுள் மிக முக்கியமானவர் சிவக்கந்தவர்மன். கி.பி.நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காஞ்சிபுரத்தை ஆண்டவர்.
வடக்கே கிருஷ்ணா நதியில்
இருந்து தெற்கில் தென்பெண்ணை ஆறு வரையில் அவருடைய
அரசு பரவியிருந்தது.
2.சமஸ்கிருதப் பட்டயங்களின் காலம் – இடைக்காலப் பல்லவர்கள்
சமஸ்கிருதப் பட்டயங்களால் அறியப்படுகின்ற
பல்லவர்கள் இடைக்காலப் பல்லவர்கள் ஆவர். அவர்களுள் முக்கியமானவர்கள் குமார
விஷ்ணு, கந்தவர்மன், வீர
வர்மன், இரண்டாம் கந்தவர்மன், சிம்மவர்மன் முதலியோராவர்.
சிம்மவர்மன் காலம் முதல்
பல்லவர்களின் வரலாற்றில் புதிய
திருப்பம் ஏற்பட்டது. தொண்டை
மண்டலத்தில் இருந்த பல்லவர்கள் விரிவடையத் தொடங்கினர். தமிழகத்தில் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தினர். இவ்வாறு
விரிவடைந்தவர்களே
மகா பல்லவர்கள் ஆவர்.
மகாபல்லவர்கள்
சிம்மவிஷ்ணுவின் வழிவந்தவர்கள் மகாபல்லவர்கள். காஞ்சியை அரசு இருக்கையாகப் பயன்படுத்தியதால் காஞ்சிப் பல்லவர்கள் என அழைக்கப்பட்டனர்.
சிம்மவிஷ்ணு
சிம்மவர்மனின் மகன்
சிம்மவிஷ்ணு.
கி.பி.6ஆம்
நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 7ஆம்
நூற்றாண்டின் முற்பகுதியிலும் பல்லவ
நாட்டை ஆண்டார். களப்பிரர், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மீது ஆணை
செலுத்தினார்.
இவருடைய நாடுகள் செல்வச்
செழிப்பாக இருந்தன என்று
மத்தவிலாசப் பிரகசனம் என்ற
நூல் காட்டுகின்றது. இம்மன்னன் வைணவத்தை ஆதரித்தார்.
முதலாம் மகேந்திரவர்மன்
சிம்மவிஷ்ணுவின் மகன்
முதலாம் மகேந்திரன். இவருடைய
ஆட்சியில் தமிழக வரலாறும், தக்காண வரலாறும் திருப்ப
நிலையை எட்டின. பல்லவர்
பரம்பரையிலேயே
புகழ் ஏணியில் ஏறி
நின்ற முதல் மன்னன்
மகேந்திரனேயாவார்.
இவர் காலத்தில் வைணவம், சைவம் ஆகிய நெறிகளின் வழியாக இந்துமதம் புத்துயிர்ப் பெற்றது. வேள்வி நடத்தும் கிராமங்கள் பெருகின. தென்னகத்தில் புதுவகைக் கோயில் பணியும், கலைப்பணியும் துவக்கி வைக்கப்பட்டன. ஒரே
பாறையில் குடைந்து கோயில்கள் அமைக்கும் சிற்ப மரபானது
தமிகத்தில் முதன்முதலாக இம்மன்னனால் தோற்றுவிக்கப்பட்டது.
திருச்சி, பல்லாவரம், செங்கற்பட்டுக்கு
அண்மையில் உள்ள வல்லம், மாமண்டூர், தளவானூர், சீய
மங்கலம், மகேந்திரவாடி ஆகிய
இடங்களில் இவர் கட்டியக் குகைக் கோயில்கள் காணப்படுகின்றன. மகேந்திரவாடி ஏரியைக் கட்டி உழவுக்கு உதவினார். சிற்பத்தில், ஓவியத்தில் மட்டுமின்றி இசையிலும் வல்லவராக விளங்கினார்.
ஆதியில் சமண மதத்தில் இருந்த மகேந்திரவர்மன் திருநாவுக்கரசரிடம் ஈடுபாடு
கொண்டு சைவ மதத்திற்குத் திரும்பினார்.
மகேந்திரவர்மன் கல்வியில் புலமை பெற்றவர். சமஸ்கிருதக் கல்லூரிகளை நிறுவினார். மத்தவிலாசம், பகவத்தாஜூகிய ஆகிய நூல்களை இயற்றினார். ஓவியக்கலை நூலுக்கு தச்சிண சித்தரா
என்ற விளக்க நூலைத்
தொகுக்கச் செய்தார். செந்தக்காரி (கோயில் கட்டுபவன்), மத்தவிலாசம் (இன்பம் விரும்புபவன்), சித்திரகாரப்புலி (ஓவியர்க்குப் புலி), சங்கீர்ணசதி, விசித்திரசித்தா போன்ற விருதுகளை ஏற்றுக் கொண்டவர்.
முதலாம் நரசிம்மவர்மன்
காஞ்சிப் பல்லவர்களுள் மிகச் சிறந்தவர் முதலாம்
நரசிம்மவர்மனே
ஆவார். இவர் மகேந்திரவர்மனின் புதல்வன். சாளுக்கியர்களுடன்
போராடி மாபெரும் வெற்றி
கண்டவர். இலங்கை மீது
கண்ட வெற்றியும், சீனப்பயணி யுவான்சுவாங்கின்
காஞ்சி வருகையும், மாமல்லபுரத்துத் திறந்த
வெளி கலைக்கூடம் உருவாக்கப்பட்டதும் இவர்
காலத்துக் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளாகும். புலிகேசி மன்ன்னை வெற்றி கொண்டு
வாதாபி கொண்டான் என்ற
பட்டப்பெயர் பெற்றார். சிவன்
மீது மிகுந்த ஈடுபாடு
உடையவர். மாமல்லபுரத்துச் சிற்பங்களைப் படைத்து தமிழகத்து வரலாற்றில் அழியாத புகழ் பெற்றார். மல்லை என்று அறியப்பட்டு வந்த துறைமுகத்தைப் புதுப்பித்து மாமல்லபுரம் என்ற பட்டினத்தைத் தோற்றுவித்தார்.
நாமக்கல், திருச்சி, திருவெள்ளாறை, குடுமியான்மலை,
திருமயம் ஆகிய இடங்களில் குடைவரைக் கோயில்களைத் உருவாக்கினார்.
இவர் காலத்துக் கலை
வகைகள் மூவகைப்பட்டன. அவை,
குடைவரைக் கோவில்கள், ஒற்றைக்கல் கோவில்கள், கற்சிற்பங்கள் என்பனவாகும். மகிஷாசுர மண்டபம், வராக மண்டபம், திருமூர்த்தி மண்டபம் ஆகிய
குகைக் கோயில்களை உருவாக்கினார். பஞ்சபாண்டவர் ரதம் ஒற்றைக்கல்லால் கட்டப்பட்ட கோயிலாகும்.
நரசிம்மனின் குகைக்கோயிலில் காணும்
புராணச் செய்திகளைத் தரும்
சிற்பங்களை ஒத்துள்ளன. இவ்வாறு
போர் வெற்றிகளாலும், அறப்பணி, கலைப்பணிகளால்
நரசிம்மன் வரலாற்றில் நீங்காத
இடம் பெற்றார்.
இரண்டாம் மகேந்திரன்
நரசிம்மனின் மகன்
இரண்டாம் மகேந்திரன். இரண்டே
ஆண்டுகளுள் இவருடைய ஆட்சி
முடிவுக்கு வந்தது. நான்மறைகள் பயிலக் கல்வி நிலையங்களை நிறுவினார். ஆலயங்களுக்கும், மறைக்கல்வி நிலையங்களுக்கும்
கொடை அளித்தார்.
முதலாம் பரமேஸ்வரன்
இரண்டாம் மகேந்திரனின் மகன் முதலாம் பரமேசுவரன். இவர்
சிவ பக்தனாக விளங்கி
அறப்பணிகளைச் செய்தார். தன்
பாட்டன் மாமல்லபுரத்தில் துவக்கிய பணியை நிறைவு செய்தார்.
இரண்டாம் நரசிம்மன் எனப்படும் இராசசிம்மன்
பரமேசுவரனுக்குப் பின்
பட்டத்துக்கு வந்தவர். இவர்
ஆட்சி செய்த நாற்பது
ஆண்டுகள் பல்லவர் நாட்டில் அமைதி நிலவியது. ஆக்கப்பணிகள் பெருகின. கலை உலகம்
போற்றும் காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தை எழுப்பினார். இவர்
காலத்தில் சமஸ்கிருதப் புலவர்கள் பேராதரவைப் பெற்றனர். அப்புலவர்களுள் குறிப்பிடத்தக்கவர் தண்டி. இவர் மன்னனின் ஆதரவைப்
பெற்று காவ்ய தர்ஸம்
என்ம நூலை இயற்றினார். இந்நூலை
வழிநூலாகக் கொண்டே தமிழில்
தண்டியலங்காரம்
என்னும் நூல் இயற்றப்பட்டது. இவர் இறந்த பின்னர் சிம்ம
விஷ்ணுவின் வழி வந்த
மகாபல்லவர்களின்
ஆட்சி முடிவுக்கு வந்தது.
3.கிரந்தம் – தமிழ்மொழிப்
பட்டயங்கள் - பிற்காலப்பல்லவர்கள்
பிற்காலப் பல்லவர்களுள்
நந்திவர்மன், தண்டிவர்மன், மூன்றாம் நந்திவர்மன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
நந்திவர்மன்
இரண்டாம் பரமேசுவரனுக்குப் பின்
12 வயதே ஆன இரண்டாம் நந்திவர்மன்,
பல குழப்பங்களையும், பூசல்களையும் முறியடித்துப்
பட்டத்திற்கு வந்தான். எனினும்
சாளுக்கிய மன்னனால் தோற்கடிக்கப்பட்டு நாடு
இழந்தார். பின்பு இராட்டிரகூட மன்னன் தண்டி துர்க்கனின் உதவியுடன் சாளுக்கிய மன்னனைத் தோற்கடித்துவிட்டு
பல்லவர் அரசிருக்கையைப் பெற்றார். இவருடைய ஆட்சி 65 ஆண்டுகள் நீடித்தது. இவர் வைணவ சமயத்தின்பால் ஈடுபாடு
கொண்டவர். இவர் காலத்தில் கல்வி வளர்ச்சி பெற்றது.
தண்டிவர்மன்
இரண்டாம் நந்திவர்ம பல்லவ மன்னனுக்கும் இராட்டிரகூட இளவரசி ரேவாவுக்கும் தோன்றியவன் தண்டிதுர்க்கன்.
தன் தந்தைக்குப் பின்
பல்லவ அரசன் ஆனான். தந்தைக்கு நேர்மாறாக திறமையற்றவனாக விளங்கினான்.
மூன்றாம் நந்திவர்மன்
தண்டிவர்மனுக்கும் கடம்பநாட்டு இளவரசிக்கும் பிறந்தவர் மூன்றாம் நநதிவர்மன்.
தந்தைக்கு மாறாக பல்லவர்கள் இழந்த செல்வாக்கை மீட்டார். நந்திக்கலம்பகம்
என்னும் நூல் இம்மன்னனைப் போற்றுகின்றது.
தெற்கில் வலிமை கொண்டிருந்த பாண்டியர்களை இராட்டிரர், கங்கர், சோழர் போன்றவர்களின் துணைகொண்டு தெள்ளாற்றில் தோற்கடித்தார். அதனால்
தெள்ளாறு எறிந்த நந்திவர்மன் எனப் போற்றப்பட்டார். வலிமையான கடற்படையின் துணை கொண்டு
தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் தொடர்பை பெருக்கி வாணிகத்தை வளர்த்தார்.
சயாம் என்ற நாட்டில் அவனி நாரணம் என்ற
பெருமாள் கோயிலைக் கட்டியுள்ளார். இவருடைய
அறப்பணிகள் மூலம் சிற்றூர்கள் தேவதான கிராமங்களாகக் கொடையளிக்கப்பட்டன.
மூன்றாம் நந்திவர்மனுக்குப் பிறகு சோழர்களின் ஆதிக்கம் பெருகியது. ஆதித்த சோழன் தொண்டைமண்டலத்தைக் கைப்பற்றியதால் பல்லவர்கள் வலிமை குன்றியது. எனினும், கி.பி 10 ஆம் நூற்றாண்டின் இறுதி வரையில் வானர்கள், முத்தரையர்கள், கொடும்பாளூர் அதிபர்கள், உறையூர் பழையாறைச் சோழர்கள், மேற்குக் கங்கர்கள், அதியமான்கள் உள்ளிட்ட பல சிற்றரசர்களின் தயவால் பிற்காலப் பல்லவர்களின் ஆட்சி நீடித்தது.
பல்லவர்களின் சமூக நிலை
- பல்லவர்களின் காலத்தில் மன்னனின் வாரிசுகளே ஆட்சிக்கு வந்தனர். சில நெருக்கடியான நேரங்களில் மக்களே மன்னனைத் தேர்ந்தெடுத்தனர். மன்னனுக்குத் துணை செய்ய அமைச்சர்கள் இருந்தனர்.
- பல்லவர்களின் கொடியில் காளை உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய காசுகள், செப்பேட்டுச் சின்னங்களிலும் காளை உருவம் காணப்படுகின்றது.
- பல்லவப் பேரரசு மண்டிலம், கோட்டம், நாடு, ஊர் என்ற நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தது.
- குற்றங்களை விசாரிக்க அதிகரணங்கள், தர்மசபை என்ற இரு நீதிமன்றங்கள் செயல்பட்டன.
- ஊரின் ஆட்சிகளை நடத்தியவர்கள் ஊரவையார் எனப்பட்டனர். ஊரவைகள் ஏரி வாரியம், தோட்ட வாரியம் கோயில் வாரியம் போன்ற பல வாரியங்கள் வழியாக மக்களாட்சியை நடத்தியது.
- வேளாண்மையைச் சார்ந்தே பொருளியல் வாழ்க்கை நிகழ்ந்தது. மன்னர், பண்ணையாளர் ஆகியோரிடம் நிலங்கள் இருந்தன. உழவர்கள் தங்கள் விளைச்சலில் பாதியைப் பண்ணையாளருக்கு வழங்கினர்.
- காடுகளை அழித்து விளைச்சல் நிலங்களை உருவாக்கினர். ஏரிகள், கிணறுகள், வாய்க்கால்கள், மதகுகள் அமைத்து நீர்ப்பாசனம் செய்து வளம் பெருக்கினர்.
- உழவு, நூல் நூற்றல், நெசவுத்தொழில், மண்பாண்டம் செய்தல், அணிகலன்கள் செய்தல், தங்க வேலை, மரவேலை, உலோக வேலை, ஆடு மாடு வளர்த்தல், பனை வெல்லம் காய்ச்சுதல், எண்ணெய் எடுத்தல், கட்டிடத் தொழில், கப்பல் கட்டும் தொழில், மீன் பிடித்தல் போன்ற பல்வேறு தொழில்களில் தமிழ் மக்கள் ஈடுபட்டனர்.
- மாமல்லபுரம், காவிரிப்பூம்பட்டினம், நாகப்பட்டினம் ஆகிய துறைமுகங்கள் வழியாக அயல்நாட்டு வாணிகம் நடைபெற்றது. மலேசியா, பர்மா, சீனா, இலங்கை, கிழக்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகளுடன் வணிகம் நடைபெற்றது.
- பல்லவ மன்னர்கள் கல்வியில் சமஸ்கிருதத்திற்கு முன்னுரிமை வழங்கினர். புராணங்கள், தர்மநூல்கள், இலக்கணம், ஆயுர்வேத மருத்துவம், செய்யுள், நாடகம் இசை, ஓவியம் ஆகியவை பாடங்களாக இருந்தன. காஞ்சிபுரத்தில் புத்த கடிகை சிறந்த கல்வி நிலையமாக இருந்ததைக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
- திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், ஆழ்வார்கள் ஆகியோரின் வாயிலாக தமிழ்மொழி வளர்ச்சி பெற்றது.
- பெருங்கதை, திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு, பாரதவெண்பா, திருமந்திரம், திருமுறைகள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரியபுராணம், நந்திக்கலம்பகம், முத்தொள்ளாயிரம், அணியியல் முதலான பல இலக்கியங்கள் தோன்றின.
- குண்டப்பள்ளி, தான்யகடகம் முதலிய இடங்களில் பௌத்த மடங்களும் பள்ளிகளும் இருந்தன. பல்லவ மன்னர்கள் பலர் சமணர்களாக இருந்துள்ளனர். பாதிரிப்புலியூர் என்ற இடத்தில் சமணமடம் இருந்துள்ளது.
- ஓவியக்கலை, சிற்பக்கலை, இசைக்கலை, நடனக்கலை, நாடகக்கலை ஆகியவை பல்லவர் காலத்தில் சிறப்புற்றிருந்தன.
இக்கருத்துகள் யாவும் தமிழக வரலாறும் பண்பாடும் – வே.திசெல்லம், தமிழக வரலாறும் பண்பாடும் – டாக்டர் கே.கே.பிள்ளை, தமிழர் வரலாறு – தமிழகப் பெண்கள் செயற்களம் ஆகிய நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை. மாணவர்களின் நலன் கருதி அந்நூல்களில் உள்ள கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க மாணவர்களின் நலன் கருதியே இத்தளம் செயல்படுகின்றது.
ஆகவே, மாணவர்கள் தவிர்த்து இத்தளத்தைக் காண்பவர்கள் படிக்கவும், புரிந்து கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர, இத்தளத்தில் உள்ள செய்திகளை அப்படியே எடுத்து நூலாக்கம் செய்வதோ, கைடு நூலாக்கம் செய்வதோ, வலையொளியில் பதிவு செய்வதோ கூடாது என்று தாழ்மையுடன் வேண்டுகின்றேன். புரிதலுக்கு நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக