செவ்வாய், 3 செப்டம்பர், 2024

பெருங்கற்காலம் (உலோகக்காலம்)

 

பெருங்கற்காலம்  (உலோகக்காலம்)

புதிய கற்காலத்தின் இறுதியில் பெருங்கற்காலம் தோன்றியது. இக்காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் இறந்தவர்களுடைய புதைகுழிகளின் மேல் பெரிய கற்களைக் கொண்டு நினைவுச் சின்னங்களைக் கட்டினர். இவை பெருங்கற்படை சின்னங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவற்றை அமைக்க பெருங்கற்களைப் பயன்படுத்தியதால் பெருங்கற்காலம் என்று அழைக்கப்படுகின்றது.

இக்காலத்தில் தமிழர்கள் தங்கள் பட்டறிவால் உலோகங்களைக் கண்டுபிடித்தனர். கற்கருவிகளைப் பயன்படுத்தியதைவிட பொன், செம்புவெண்கலம், இரும்பு ஆகிய உலோகங்களைப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டனர். எனவே இக்காலத்தை உலோகக் காலம் என்றும் இரும்புக் காலம் என்றும் குறிப்பிடுவர்.

முகத்தோற்றம்

          பெருங்கற்காலத் தமிழர்கள் இன்றைய மனிதர்களைப்போல முகத்தோற்றம் அடைந்தனர். தலைமுடியைச் சீரமைத்துத் தங்களை அழகுப்படுத்திக் கொண்டனர். பஞ்சைக் கொண்டு தறி நெசவு செய்து ஆடையை உருவாக்கினர்.

தங்கத்தைக் கண்டெடுத்தல்

          உலகின் பிற மனிதர்கள் செம்பை அறிவதற்கு முன்பு தொல்தமிழர்கள் தங்கத்தைக் கண்டுபிடித்தனர். பிற்காலத்தில் கண்டெடுக்கப்பட்ட செம்பு, வெண்கலம், இரும்பு ஆகியவற்றை வேறுபடுத்த செம்பொன், வெண்பொன், இரும்பொன் என்று அவை அழைக்கப்பட்டன. சிறிய தகட்டைப் போன்று மெல்லிய அளவிலான தங்கத்தைக் களிமண்ணின் மீது இணைத்து அணிகலன்களாகப் பயன்படுத்தியமையைத் தொல்லியல் அறிஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஆதிச்சநல்லூரில் தங்கத்தினால் ஆன 19 மகுடங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

செம்பு கண்டெடுத்தல்

தங்கத்தை அறிந்த மக்கள் அதன் தொடர்ச்சியாகச் செம்பையும் கண்டுபிடித்து அதில் பல கருவிகளை உருவாக்கினர். உளி, சுத்தி, ஆணி, அம்பு, வாள் போன்றவை செம்பினால் செய்யப்பட்டன.

வெண்கலம் அறிதல்

செம்பும் தகரமும் கலந்த கலப்பே வெண்கலம் அல்லது வெள்ளிக் கலம் எனப்பட்டது.  கிண்ணம், குடம், வட்டில் முதலிய கலங்களும், மாட விளக்கு, குத்து விளக்கு, பாவை விளக்கு போன்றவையும், வாள், கரண்டி முதலிய கருவிகளும் வெண்கலத்தால் செய்யப்பட்டன. ஆதிச்ச நல்லூர் அகழாய்வில் வெண்கலப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சாடிகள், கிண்ணங்கள், மூடிகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

உலக மனிதர்கள் செம்பை மட்டுமே அறிந்த நிலையில் பெருங்கற்காலத்தமிழர்கள் வெண்கலத்தைப் பயன்படுத்தினர் என்பதும், பல உலோகங்களைக் கலந்து புதிய உலோகங்களை உருவாக்கிப் பயன்படுத்தினர் என்பதும் தமிழர்களின் வளர்ச்சியடைந்த தொழில்நுட்பத்தைக் காட்டுகின்றது.

இரும்பு அறிதல்

          மண்ணால் ஆகிய கலங்கள் வனைவதற்குத் தகுதியான மண்ணைத் தேடியபோது அவர்கள் இரும்பைக் கண்டு பிடித்தனர். இது உலகம் எங்கும் மற்ற உலோகங்களை விட மிகுதியாகக் கிடைத்தது. இரும்பின் தன்மை எல்லாவகைக் கருவிகளுக்கும் ஏற்றதாக இருந்ததால் இதன் பயன்பாடு அதிகரித்தது.  இதனைக் கரும்பொன் என்றும் கூறுவர். அம்பு முனைகள், வாள், கத்தி, கோடரி ஆகிய பொருட்கள் இரும்பினால் செய்யப்பட்டன. ஆதிச்சநல்லூரில் இரும்பினால் செய்யப்பட்ட அரிவாள்கள், மண்வெட்டிகள், கோடரிகள், அம்புகள், வாள்கள், ஈட்டிகள் கிடைத்துள்ளன.

களிமண்ணால் பானை, சட்டி செய்தல்

மண் சேறாக மாறியதையும், கதிரவனின் வெப்பத்தால் சேறு காய்ந்து கெட்டித் தன்மை அடைந்ததையும், அது தீயில் பட்டவுடன் இறுகிக் கடினமான ஓடு போன்று மாறியதையும் கண்டு வியந்த தமிழன், தன் வெறும் கைகளால் மட்கலங்களைச் செய்யத் தொடங்கினான். அது ஒழுங்கற்றதாக இருந்தது. சக்கரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அதன் மேல் மட்கலத்தினை உருவாக்கினான்.  சக்கரத்தால் செய்யப்பட்ட பானைகள் பையம்பள்ளியில் கிடைத்துள்ளன.

வேளாண்மை செய்ய ஏரி, குளம் அமைத்தல்

பெருங்கற்காலத்தில் பஃறுளியாறு, குமரியாறு போன்ற ஆறுகளால் குமரிக்கண்ட காடுகள் அழிக்கப்பட்டு விளை நிலங்களாக மாற்றப்பட்டன.  இதனால் வயலும் வயல் சார்ந்த இடங்கள் தோன்றின. மழை நீரைத் தேக்கி வைக்க ஏரி, குளங்கள் அமைத்தனர்.  தமிழர்கள் தாங்கள் வாழும் இடங்களிலேயே நீர் வளத்தைப் பெருக்கக் கிணறுகளை வெட்டியது அவர்களின் தனித்தன்மையாகும். இதனால் வேளாண்மை பெருகியது. செந்நெல், வெண்நெல், மஞ்சள் ஆகியவற்றைப் பெருமளவு விளைவித்தனர். குறிஞ்சி, முல்லைக்கு அடுத்தபடியாக நீர்வளமும் நில வளமும் மிகுந்த மருத நிலத்தில் தமிழர்கள் பரவி வாழ்ந்தனர்.

உணவுகள்

          பெருங்கற்காலத் தமிழர்கள் பருப்பால் கூட்டும் சாறும் குழம்பும் செய்து சோற்றுடன் கலந்து உண்டனர். காய்கறி வகைகளைப் பருப்புடன் தனியாகச் சமைத்தனர். மீன், ஆமை, நண்டு முதலிய நீர்வாழ் உயிரினங்களையம், ஆடு, மாடு, கோழி முதலிய விலங்குகளின் இறைச்சியையும் சமைத்து உண்டனர்.  அவர்கள் தீயைக் கட்டுப்படுத்தத் தொடங்கியவுடன் சமையல்முறை சிறப்புற்றிருக்க வேண்டும்.

இருப்பிடம்

          உயர்ந்த மண் எழுப்பிப் பெருவீடு கட்டிக் கூரை வேய்ந்து கொண்டனர். குன்றுகளில் இருந்து கற்களைக் கொண்டு வந்து சுண்ணாம்பு கலந்த மண் பூசி, கல் வீடு கட்டிக் கொண்டனர். அதிகாரமும் செல்வமும் உடையவர்கள் செங்கல்லால் வீடு எழுப்பிச் சுண்ணாம்பைக் கொண்டு காரை பூசி, சுட்ட ஓடுகளினால் கூரை வேய்ந்து கொண்டனர்.

தொழில்கள்

          வேட்டையாடுதல், காய்கனி பறித்தல், ஆடு மாடுகளை மேய்த்தல், வேளாண்மை செய்தல், மீன் பிடித்தல், உப்பு விளைத்தல், படகுகள், மரக்கலன்கள் செய்தல் முதலிய தொழில்களைச் செய்தனர். தங்கம், வெண்கலம் போன்றவற்றின் கண்டுபிடிப்பால் அணிகலன்கள் செய்வதும் கைத்தொழிலாக மாறியது. இரும்பு, செம்பு போன்றவற்றாலான பொருட்கள் செய்யும் தொழில்களும் தொடங்கப்பட்டன. தறிநெசவுச் தொழில், மட்கலன்கள் செய்யும் தொழில்களும் பெருகின.

மணவாழ்க்கை

          ஆடு, மாடு முதலிய கால்நடைகளைச் செல்வமாக எண்ணினர். தங்கள் சொத்துகளைக் காப்பாற்றிக்கொள்ள வாரிசு தேவைப்பட்டது. அதனால் ஒருவனுக்கு ஒருத்தி என்ற குடும்ப முறையும், பெண்களுக்கு ஒழுக்கம், கற்பு என்ற அறநெறிகளும் தோற்றம் பெற்றன.  இதனால் திருமணம் என்ற சடங்கு தோன்றியது.

தொடர்பு மொழி

          எழுத்து முறை உருவாகியது. சில குறியீடுகளை வரிவடிவமாக (எழுத்தாக) பயன்படுத்தத் தொடங்கினர்.  தமிழகத்தில் அகழாய்வு செய்யப்பட்ட இடங்களில் பரவலாக இந்தக் குறியீடுகள் கிடைப்பதாகவும், தமிழி வரிவடிவம் வழக்கில் வந்தவுடன் இக்குறியீடுகளின் பயன்பாடு குறைந்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

உடல் அடக்கம்

          இறந்தோரைப் பெரிய பானையில் அமர வைத்துப் புதைக்கும் வழக்கம் இருந்துள்ளது. அப்பானைக்குத் தாழி என்று பெயர். அவர்கள் பயன்படுத்திய பொருட்களும் வைத்துப் புதைக்கப்பட்டது. புதைத்த இடங்கள் ஈமக்குழிகள் எனப்பட்டன. இறந்த முதியவர்களை பெரிய பானை போன்ற தாழியில் வைத்துப் புதைத்தனர். இதனை முதுமக்கள் தாழி என்று அழைத்தனர். மேலும், இறந்தோர் உடலைப் பதுக்கி மறைத்துப் புதைத்து வைத்ததால் அவை பதுக்கைகள் எனப்பட்டன.

          தமிழ்நாட்டில் அரிக்கமேடு, ஆதிச்சநல்லூர், தகடூர், காஞ்சிபுரம், முதுகுன்றம் முதலிய மாவட்டத்தில் நடைபெற்ற அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மல்லசத்திரம், தருமபுரி, கோட்டமங்கலம் ஆகிய இடங்களில் கல் பதுக்கைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

--------------------------------------------------------------------------------------------------------------------



பின்குறிப்பு

இக்கருத்துகள் யாவும் தமிழக வரலாறும் பண்பாடும் – வே.திசெல்லம், தமிழக வரலாறும் பண்பாடும் – டாக்டர் கே.கே.பிள்ளை, தமிழர் வரலாறு – தமிழகப் பெண்கள் செயற்களம் ஆகிய நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை. மாணவர்களின் நலன் கருதி அந்நூல்களில் உள்ள கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க மாணவர்களின் நலன் கருதியே இத்தளம் செயல்படுகின்றது.

ஆகவே, மாணவர்கள் தவிர்த்து இத்தளத்தைக் காண்பவர்கள் படிக்கவும், புரிந்து கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர, இத்தளத்தில் உள்ள செய்திகளை அப்படியே எடுத்து நூலாக்கம் செய்வதோ, கைடு நூலாக்கம் செய்வதோ, வலையொளியில் பதிவு செய்வதோ கூடாது என்று தாழ்மையுடன் வேண்டுகின்றேன். புரிதலுக்கு நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக