இணையத் தமிழ்க் கல்விக் கழகம்
இந்தியாவில் இணையவழியில் கல்வி வளங்களையும் வாய்ப்புகளையும் உருவாக்கும் முயற்சியின் விளைவாக, தமிழ் இணையக் கல்விக் கழகம் பிப்ரவரி 17, 2001 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதற்கான அறிவிப்பை அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் 1999ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் தமிழ் இணைய மாநாட்டின் நிறைவு விழாவில் அறிவித்தார். தற்போது தமிழ் இணையப் பல்கலைக்கழகம் ஆட்சிக்குழுவால் வழிநடத்தப்பட்டு ஒரு முழுநேர இயக்குநர் பொறுப்பில் செயல்பட்டு வருகின்றது.
கல்வித் திட்டம்
இணைய வழிக் கல்வித் திட்டம், மின் நூலகம், கணினித் தமிழ் வளர்ச்சி என இக்கழகம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றது. கல்வித் திட்டத்தின்கீழ்,
- சான்றிதழ்க் கல்வி மூன்று நிலைகளில் வழங்கப்படுகின்றது.
- தமிழ்மொழி இளங்கலைப் பட்டப்படிப்பும் அளிக்கப்படுகின்றது.
- மழலைக்கல்வி, பட்டயம், இளநிலைத் தமிழியல் பட்டம், சான்றிதழ்க்கல்வி, மேற்பட்டயம் ஆகிய கல்வித் திட்டங்களை அளித்து வருகின்றது.
மழலைக் கல்வி
மழலைக் கல்வியில் பாடங்கள், படங்கள், மழலைக் கதைகள், உரையாடல், எண்கள், எழுத்துகள், நிகழ்ச்சிகள், வழங்குச் சொற்கள், ஒலி, ஒளிக் காட்சிகள் வாயிலான இயக்கப்படங்கள் போன்றவை கற்பிக்கப்படுகின்றன.
சான்றிதழ்க்கல்வி
சான்றிதழ்க் கல்வி தமிழ்நாடு அரசின் கல்வித் திட்டத்தின்படி ஒன்று முதல் பன்னிரண்டு வகுப்பு வரையுள்ள தமிழ்க் கல்வித் திறனை வழங்குகின்றது. இது சான்றிதழ், மேற்சான்றிதழ் ஆகிய நிலைகளில் பின்வருமாறு வழங்கப்படுகின்றது.
1. சான்றிதழ் (1 முதல் 6 வகுப்பு வரை)
·
அடிப்படைநிலை (1 மற்றும் 2ஆம் வகுப்பு)
·
இடைநிலை ( 3 மற்றும் 4ஆம் வகுப்பு )
·
மேல்நிலை (5 மற்றும் 6ஆம் வகுப்பு)
2. மேற்சான்றிதழ்
·
மேற்சான்றிதழ் நிலை 1 (7 மற்றும் 8ஆம் வகுப்பு)
·
மேற்சான்றிதழ் நிலை 2 ( 9 மற்றும் 10ஆம் வகுப்பு)
·
மேற்சான்றிதழ் நிலை 3 ( 11 மற்றும் 12ஆம் வகுப்பு
இளநிலைத் தமிழியல் பட்டக் கல்விப் பட்டயம்
இளநிலைத் தமிழியல் பட்டக் கல்வியில் பட்டயம், மேற்பட்டயம் மற்றும் பட்டயச் சான்றிதழ்கள் ஒருங்கிணைத்து வழங்கப்படுகின்றன.
தமிழ் இணைய நூலகம்
தமிழ் இணையக் கல்விக் கழகப் பாடத்திட்டத்தில் அனைவரின் பயன்பாட்டிற்காகவும் நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பகுதி நூலகம், சுவடிக் காட்சியகம், பண்பாட்டுக் காட்சியகம், தமிழிணையம் – மின்நூலகம் என்ற நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது.
1.நூலகம்
நூலகத்தில் நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல்கள், அகராதிகள், நிகண்டுகள், கலைச்சொல் தொகுப்புகள், சங்க இலக்கியங்கள் முதலானவை உள்ளன. மேலும், தமிழ் இலக்கண இலக்கிய நூல்கள், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், நெறி நூல்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், பாரதியார், பாரதிதாசன் கவிதைகள், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை கவிதைகள், கவிஞர் கண்ணதாசன் படைப்புகள் எனப் பலவகையான நூல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது இணையக் கல்விக் கழகத்தில் பயில்வோர் மற்றும் உலகளாவிய தமிழ்ரக்ள பயன்பாட்டிற்கு உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழ்ச்சொற்களுக்கு இணையான ஆங்கிலச் சொற்களையும், ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களையம் தேடிப் பெறும் வசதி உள்ளது.
2.சுவடிக் காட்சியகம்
பனையோலைகளில் எழுதப்பட்ட சுவடிகளுள், அதிவீர்ராம பாண்டியர், இடைக்காடர், வீரமாமுனிவர், காளமேகப்புலவர், வில்லிப்புத்தூரார், தாயுமானவர், சேக்கிழார், தொல்காப்பியத் தேவர், பொய்யாமொழிப் புலவர், நக்கீரனார், மெய்கண்ட தேவர், பவணந்தி முனிவர், கம்பர் உள்ளிட்ட பல புலவர்களின் ஓலைச் சுவடிகள் சுவடிக் காட்சியகம் எனும் பிரிவில் மின்னுருவாக்கம் செய்யப்பட்டுள்ளன.
3.பண்பாட்டுக் காட்சியகம்
· பண்பாட்டுக் காட்சியகம் என்ற பிரிவல் தமிழ்நாடு, தமிழ்நாட்டின் திருத்தலங்கள், திருவிழாக்கள், வரலாற்றுச் சின்னங்கள், கலைகள், விளையாட்டுகள் முதலிய வரைபடங்கள் உள்ளன. சைவ, வைணவ, கிறித்துவ, இசுலாமியக் கோவில்களின் ஒலி, ஒளிக் காட்சிப் பதிவுகள், நாட்டியம், மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், பொம்மலாட்டம் உள்ளிட்ட பல கலைகள் பற்றிய சுருக்கமான விளக்கம், படக்காட்சிகள், ஒலி, ஒளிக் காட்சிகள் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. தேவாரப் பாடல்களை இசையுடன் கேட்கும் வசதி உள்ளது.
4.தமிழிணையம் – மின் நூலகம்
· தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில், தமிழிணைய மின் நூலகம் என்னும் பிரிவு தனி இணைய தளத்துடன் செயல்படுகின்றது. அரசு நூல்கள், இதழ்கள், ஓலைச் சுவடிகள், அரிய காகிதச் சுவடிகள், கல்வெட்டுகள், நிழற்படங்கள், ஓவியங்கள், சிற்பங்கள், செப்பேடுகள் முதலிய பல ஆய்வு ஆதாரங்கள் இங்கே உள்ளன. தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் மின் கற்றலுக்கான இணைய தளம் e-learning web portal என்ற முகவரியில் செயல்படுகின்றது.
தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் செயல்பாடுகள்
தமிழ் மென் பொருள்கள் உருவாக்கம்
தமிழ் இணையக் கல்விக் கழகத்தில், ஒருங்குறி எழுத்துருவைப் பரவலாக்க உதவும் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஒருங்குறி மாற்றி, உரை உணர்தல், உரைச் சுருக்கம் தருதல், தானியங்கி மொழிபெயர்ப்பு, பேச்சு உணர்தல் மற்றும் பகுத்தல் முதலான பலவகைப் பயன்பாட்டு மென் பொருள்களும் உருவாக்கப்படுகின்றன.
சொற்பொழிவு
தமிழ்ப் பண்பாடு, கலை பற்றிய தொடர்ச் சொற்பொழிவு தமிழ் இணையக் கல்விக் கழகத்தால் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகின்றது. இதில் பல்வேறு வல்லுநர்கள் பல்வேறு துறைகளில் இருந்து சொற்பாழிவு ஆற்றுகின்றனர்.
கணித் தமிழ்ப்பேரவை
தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் பரப்புரையின் முக்கிய நோக்கம் கல்லூரிகள் தோறும் கணித் தமிழ்ப் பேரவை நடத்தப்பட வேண்டும் என்பதாகும். இதுவரை அறிவியல், பொறியியல், மேலாண்மை மற்றும் மருத்துவம் உள்ளிட்ட நூறு கல்லூரிகளில் கணித்தமிழ்ப் பேரவைகள் தமிழ் இணையக் கல்விக் கழகத்தால் தொடங்கப்பட்டு, தமிழில் வலைப்பூக்கள் மற்றும் குறுஞ்செயலிகளை உருவாக்க மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகின்றது. இது போன்று நடத்தப்படும் கணித்தமிழ்ப் பேரவையானது,
· இணையத்தில் தமிழின் பங்களிப்பை வளப்படுத்துதல், வலுப்படுத்துதல், கணித்தமிழ் மற்றும் தமிழ்ப் பய்னபாட்டு மென் பொருள்களை உருவாக்கம் செய்ய ஊக்குவித்தல்
·
கட்டற்ற மென்பொருள் பய்னபாட்டை முன்னெடுத்தல்
·
கணித்தமிழ்த் திருவிழா நடத்துதல்
·
தமிழ் மென்பொருள், குறுஞ்செயலி உருவாக்கம்
·
கலைக்களஞ்சிய உருவாக்கம்
ஆகியவற்றை இலக்குகளாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது.
பிற பணிகள்
தமிழ் மொழியின் பயன்பாடு அதிகரிக்க தமிழ் இணையக் கல்விக் கழகமும் விக்கிபீடியாவும் சேர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைப் பள்ளி கல்லூரிகளல் நடத்திட ஊக்குவிக்கின்றன. இணையத்தினைக் கொண்டு மாணாக்கர்கள் தமது கல்வி மற்றும் பொது அறிவுத் திறமைகளைப் பெருக்கிக் கொள்ள வழிவகுத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக