ஞாயிறு, 23 மார்ச், 2025

பண்டைத் தமிழிலக்கியங்களில் வானவியல்

 

பண்டைத் தமிழிலக்கியங்களில் வானவியல்

பழந்தமிழர்கள் பூமியின் தோற்றம் குறித்தும், வளிமண்டலம், கதிரவன், நிலவு, காற்று மண்டலம் குறித்தும் தெளிவான அறிவைப் பெற்றிருந்தனர். குறிப்பாக, நாள்மீன், அவற்றின் நிலை, தன்மை, இயங்கு சக்தி போன்றவற்றிற்கும், பூமியின் நிகழ்வுகளுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றியும் ஆராய்ந்துள்ளனர். உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்பது அவர்களின் ஆய்வு முடிவாகும். இதனை,

நிலம் தீ நீர் வளி விசும்போடைந்தும்

கலந்த மயக்கம் உலகம்“(தொல்காப்பியம், மரபியல்)

நீரும் நிலனும் தீயும் வளியும்

மாக விசும்போடு ஐந்து“(மதுரைக்காஞ்சி 453-454)

என்ற பாடல்கள் தெரிவிக்கின்றன.

பொழுதுகளும் நாள்களும்

பொழுது என்பது வானியலைக் கொண்டு வகுக்கப்படுகின்றது. தமிழர்கள் பெரும்பொழுது, சிறுபொழுது என பொழுதினை இரண்டாக வகுத்தனர். பெரும்பொழுது என்பது ஓர் ஆண்டின் ஆறு பருவங்களையும், சிறு பொழுது என்பது ஓர் நாளின் ஆறு பிரிவுகளையும் குறிக்கும். சிறுபொழுதுகளை, காலை (6 மணி முதல் 10 மணி வரை), நண்பகல் (10 மணி முதல் 2 மணி வரை), எற்பாடு (2 மணி முதல் 6 மணி வரை), மாலை (6 மணி முதல் 10 மணி வரை), யாமம் (10 மணி முதல் 2 மணி வரை), வைகறை (2 மணி முதல் 6 வரை) என வகுத்துள்ளனர். வானியல் அறிவு இன்றி இவ்வாறு வகுக்க முடியாது. பண்டைத் தமிழர்கள் வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் 27 என்றும், கோள்கள் ஏழு என்றும், ஓரைகள் 12 என்றும் கண்டறிந்தனர். ஏழு கோள்களின் பெயரால் ஏழு கிழமைகளை வகுத்தனர். அவை, ஞாயிறு, திங்கள், செவ்வாய், அறிவன், வியாழன், வெள்ளி, காரி என்பதாகும். பன்னிரண்டு ஓரைகளை பன்னிரண்டு மாதங்களாக வகுத்துக் கொண்டனர். 12 மாதங்களுக்குரிய பருவத்தைப் பெரும்பொழுதாகக் கணக்கிட்டனர். அவை, கார்காலம் (ஆவணி, புரட்டாசி), கூதிர்காலம் (ஐப்பசி, கார்த்திகை), முன்பனி காலம் (மார்கழி, தை), பின்பனி காலம் (மாசி, பங்குனி), இளவேனிற் காலம் (சித்திரை, வைகாசி), முதுவேனிற் காலம் (ஆனி, ஆடி) என்பனவாகும். இவை யாவும் தமிழர்களின் வானியல் அறிவை வெளிக்காட்டுகின்றன.

விசும்பு

விசும்பு என்பது வானத்தைக் குறிக்கின்றது. சூரியக் குடும்பம், வான வெளிக் குடும்பம் ஆகியவற்றை உள்ளடக்கிய விசும்பு, இருள் மயமானது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இதை, திருமழைத் தலைஇய இருள்நிற விசும்பின்என்று நெடுநல்வாடை குறிப்பிடுகின்றது. வானம் முதலில் தோன்றி,  அதன் பிறகு சூரியக் குடும்பங்கள் உருவாகி, அவை சுழலும்போது நெருப்பு உண்டாகி ஒளி பிறந்தது என்றும், தீம்பிழம்புகள் கோள்களாக மாறின என்றும், அவை சுழலும்போது காற்று வீசியது என்றும் இன்றைய அறிவியலாளர்கள் ஏற்றுக் கொண்டனர். இந்த அறிவியல் நியதியை,

மண்திணிந்த நிலனும்

நிலனேந்திய விசும்பும்

விசும்புதைவரு வளியும்

வளித்தலைஇய தீயும்

தீ முரணிய நீரும் என்றாங்கு

ஐம்பெரும் பூதத்து இயற்கை (புறநானூறு 2)

என்று புறநானூறு பாடுகின்றது. வானம் பற்றுக்கோடு இல்லாத நிலையை உடையது என்பதை, வறிது நிலைஇய காயமும்(பதிற்றுப்பத்து 24) என்று பதிற்றுப்பத்து பதிவு செய்கின்றது.

விண்மீன்கள்

விண்மீன்கள் கதிரவனிடம் இருந்து ஒளியைப் பெறுகின்றன என்பதை, “நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு நாண்மீன் விராய கோண்மீன் போல(பட்டினப்பாலை 67) என்ற வரிகளால் அறிய முடிகின்றது. பழந்தமிழர்கள் விண்மீன்களுக்கு, வெள்ளி மீன் (பெரும்பாண் 318), சனிமீன் (புறம்.117), செம்மீன் (புறம்.60) எரிமீன் (புறம்.41), வட மீன் (122) என்று பல பெயர்கள் சூட்டியுள்ளனர். மேலும், வெள்ளி மீன்கள் பொழுது புலருகின்ற விடியற்காலையில் தோன்றும் என்றும் (புறம்.385), வெள்ளி தெற்குப் பக்கத்தில் எழுந்தால் மழைப் பொழிவு இருக்காது (புறம்.35) என்றும் கணித்துள்ளனர். உரோகிணி என்னும் நாள்மீனும், திங்களும் அருகிருக்கும் வேளையில் திருமணம் மற்றும் நல்ல காரியங்களைச் செய்தனர் என்பதை, கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்(அகநானூறு 86) என்றும், “விண்ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து(நெடுநல்வாடை) என்றும் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. விண்மீன்களின் சில செயல்கள் நாட்டிற்குத் தீங்கு விளைவிக்கும் என்று மக்கள் நம்பியிருந்தனர். எரிகொள்ளி வீழ்தலும், சனிமீன் மாறுபட்டுத் தோன்றுவதும் தீமையின் அறிகுறிகள் என்று புறநானூற்றில் (புறம்.395) பதிவு செய்யப்பட்டுள்ளன.

காற்று வழங்கா வானம்

இன்றைய அறிவியலாளர்கள், பூமியின் எட்டு கிலோ மீட்டருக்கு மேல் வானத்தில் காற்று இல்லை என்று நிரூபித்துள்ளனர். இச்செய்தியை, வளியிடை வழங்கா வானம்(புறம்.35), வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம் (புறும்.36) என்று புறநானூறு கூறுகின்றது.

வளிமண்டல ஆய்வு

வளி மண்டலத்திற்கும், ஆகாய வெளிக்கும் இடையே வரையறுக்கப்பட்ட எல்லை என்று எதுவும் இல்லை. காற்று வழங்கும் தன்மைக்கு ஏற்ப வளிமண்டலம் கீழடுக்கு, படுகையடுக்கு, இடையடுக்கு, வெப்ப அடுக்கு, வெளியடுக்கு என்று பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றின் தன்மை அறிந்தே பழந்தமிழர் விண், ஆகாயம், விசும்பு, வானம் எனப் பல பெயர்களில் வளிமண்டலத்தைக் குறித்தனர்.

செஞ்ஞாயிற்றுச் செலவும் (பால்வீதி)

அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் (இயக்கம்)

பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் (ஞாயிற்று மண்டிலம்)

வளிதிரிதரு திசையும் (வளிமண்டலம்)

வறிது நிலைஇய காயமும் என்றிவை (பற்றுகோடு அற்ற வானம்)

சென்றளந்து அறிந்தார் போல என்றும்

இனைத்து என்போரும் உளரே (புறம் 30)

என்ற இப் புறநானூற்றுப் பாடல், பால்வீதி, அதன் இயக்கம், ஞாயிற்று மண்டிலம், வளி மண்டிலம், பற்றுக்கோடு அற்ற வானம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து ஓரே பாடலில் விளக்குகின்றது.

ஞாயிறு

ஞாயிறு குறித்த பல தகவல்களைத் தமிழிலக்கியங்களில் காணமுடிகின்றது. ஞாயிற்றுக்கு, கதிரவன், பரிதி, வெய்யோன், பகலோன், செங்கதிரோன், கனலி எனப் பல பெயர்களைத் தமிழர்கள் வழங்கியுள்ளனர். சூரியனின் உதயத்தைக் குறிக்கும்பொழுது பரிதி என்ற சொல்லைச் சுட்டுகின்றனர். இதனை,”அகல்இரு விசும்பின் பாய்இருள் பருகிப் பகல்கான்று எழுதரு பல்கதிர்ப் பருதி(பெரும்பாணாற்றுப்படை), பரிதியஞ் செல்வன்(மணிமேகலை) என்ற வரிகள் தெரிவிக்கின்றன. பகல் செய் மண்டிலம் (பெரும்பாணாற்றுப்படை), மலர்வாய் மண்டிலம் (புறநானூறு), வீங்கு செலல் மண்டிலம் (நெடுநல்வாடை), மைஅறு மண்டிலம் (கலித்தொகை) என்ற தொடர்கள் ஞாயிற்றின் இயல்பினை உணர்த்துகின்றன. ஞாயிற்றின் ஒளி நிழலால் திசைகளை வரையறுத்தனர் என்பதை,

விரிகதிர் பரப்பிய வியன்வாய் மண்டிலம்

இருகோல் குறிநிலை வழுக்காது குடக்கு ஏர்பு

ஒரு திறம் சாரா அரைநாள் அமையத்து

நூலறி புலவர் நுண்ணிதின் கயிறுட்டு” (நெடுநல்வாடை)

என்றவாறு நெடுநல்வாடை குறிப்பிடுகின்றது. ஞாயிற்றின் மையப் பகுதி கனன்று கொணடிருக்கும் நெருப்பையும், அதனைச் சுற்றி அனல்வீசும் வெளிவட்டமும், வெளிவட்டத்தைச் சுற்றி ஒளிப்படலமும் கொண்டிருப்பதைத் தமிழர்கள் நன்கு அறிந்திருந்தனர் என்பதை, வால்நிற விசும்பில் கோள்மீன் சூழ்ந்த இளங்கதிர் ஞாயிறு(சிறுபாணாற்றுப்படை 242) என்ற வரியால் அறிய முடிகின்றது.

நிலவு

பூமிக்கு அருகில் உள்ள கோள் நிலவு. ஞாயிற்றின் ஒளி நிலவில் பட்டுத் தெறிக்கும் எதிரொளிப்பு ஒளியே நிலவின் ஒளியாகும். நிலவில் வளர்பிறை, தேய்பிறை என்ற இரு நிலைகள் காணப்படுகின்றன. இவற்றை, அவ்வாய் வளர்பிறை சூடிச் செய்வாய்(பெரும்பாணாற்றுப்படை), “பிறைபறிந்தன்ன பின்எந்து கவைக்கடை(பெரும்பாணாற்றுப்படை) என்ற தொடர்கள் தெரிவிக்கின்றன. நிலவில் சந்திர கிரகணம் ஏற்படுவதை, குழவித் திங்கள் கோள்நேர்ந்தாங்கு(பெரும்பாணாற்றுப்படை) என்ற வரி தெரிவிக்கின்றது. மகளிர் நிலவின் பிறையை வழிபடுகின்ற வழக்கத்தைக் கொண்டிருந்தனர் என்பதை,”ஒள்ளிழை மகளிர் எயர்பிறைத் தொழுவம் புல்லென் மாலை(அகநானூறு) என்ற பாடல் தெரிவிக்கின்றது.

முடிவுரை

பழந்தமிழர் கண்டறிந்த அறிவுத் துறைகள் பலவற்றுள் வானியல் சிறப்பிடம் பெறுகின்றது. ஏனெனில், எந்தத் தொழில்நுட்பமும் இல்லாத காலத்திலேயே கைக்கு எட்டாத வானத்தில் உள்ள கோள்கள் குறித்தும், வானில் நிகழ்கின்ற மாற்றங்கள் குறித்தும், வானத்துக்கும் பூமிக்குமான தொடர்பை குறித்தும் தமிழர்கள் அறிந்திருந்தமை வியப்புக்குரியதாகும். அவர்களின் பரந்துபட்ட சிந்தனைகளைப் பழந்தமிழ் இலக்கியங்கள் பறை சாற்றுகின்றன.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக