வெள்ளி, 21 மார்ச், 2025

உரை நூல்களில் அறிவியல்

 

உரை நூல்களில் அறிவியல்

பா வடிவில் எழுதப்பட்ட பாடல்களுக்கு விளக்கம் எழுதிய புலவர்களை உரையாசிரியர்கள் என்று அழைப்பர். நக்கீரர், இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், சேனாவரையர், கல்லாடர், மயிலைநாதர், அடியார்க்கு நல்லார், பரிமேலழகர் உள்ளிட்ட பல புலவர்கள் பழந்தமிழ் இலக்கண இலக்கிய நூல்களுக்கு உரை எழுதியுள்ளனர். அவர்களின் உரை நூல்களில் பல்துறை சார்ந்த அறிவியல் கருத்துகள் இடம்பெற்றுள்ளன.

நச்சினார்க்கினியர் உரையில் அறிவியல்

இலக்கியங்களில் காணப்படுகின்ற நாள்மீன்கள், கோள்மீன்கள் பற்றி இவர் தந்துள்ள விளக்கங்கள் சிறப்பானவை. கலித்தொகையில் ஏறு தழுவுதல் பற்றித் தலைவிக்குத் தோழி கூறுகையில், அந்த இடத்தில் மகளிர் நின்றதனைச் சுட்டிக் காட்டும் போது, “நாளாகிய மீன்கள் தன்னிடத்தே சூழப்பட்ட மதிபோல அவ்விடத்தில் இட்ட பரண்களின் மேலே தத்தம் மகளிரைத் திரளாக நிறுத்தினர் என்று தனது உரையில் சிறப்பித்துள்ளார். நாள்மீன், மதி இவை இரண்டும் மகளிருக்கும், மகளிர் கூட்டத்திற்கும் உவமையாகக் கொள்ளப்பெறும் என்று கூறியுள்ளார். இதனால் இவர் வானியல் அறிவு கொண்டவர் என்பது அறியப்படுகின்றது.

இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும்

ஒரு பெண்ணின் வயிற்றில் கரு தோன்றி உருவாகி வளர்ந்து உலகிற்கு வருவது இயற்கையின் விந்தை மிகு நிகழ்வாகும்.

பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும்

நீத்தகன்று உரையார் என்மனார் புலவர்

பரத்தையிற் பிரிந்த காலை யான (தொல்.பொருள்.185)

என்ற சங்கப்பாடலுக்கு இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் மிகத் தெளிவாக உரை எழுதியுள்ளனர்.

சங்க இலக்கியங்களில் பரத்தமை என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட வழக்கம் ஆகும். தலைவன் பரத்தையின் காரணமாகத் தலைவியை விட்டுப் பிரிந்திருக்கும்போது, தலைவிக்குப் பூப்பு நேரலாம். அப்போது தலைவன் தன் வீட்டிற்கு வந்து விட வேண்டும். பன்னிரண்டு நாட்கள் தலைவியை விட்டுப் பிரியாமல் அவளுடன் வாழ வேண்டும். இது ஒரு நியதி. இதனால் என்ன பயன் என்ற வினாவிற்கு இளம்பூரணர், பரத்தையர் சேரியானாயினும் பூத்தோன்றி மூன்று நாள் கழிந்த பின்பு பன்னிரண்டு நாளும் நீங்குதல் அறமன்று என்றவாறு இதனாற் பயன் என்னையின் அது கருத்தோன்றும் காலம் என்கஎன்று விளக்கம் எழுதியுள்ளார். இந்த விளக்கத்தை உடற்கூற்று அடிப்படையில் காரணம் கூறி உரை விளக்கம் செய்கின்றார் நச்சினார்க்கினியர். முந்நாளும் கூடி அறையப்படும் குற்றமென்னோவெனின் பூப்புப் புறப்பட்ட ஞான்று நின்ற கருவயிற்றில் அழியும். இரண்டாம்நாள் நின்ற கரு வயிற்றிலே சாம். மூன்றாம் நாள் நின்ற கரு குறு வாழ்க்கைத்தாய் வாழினும் திருவின்றாம்என்று விளக்கம் அளிக்கின்றார். இதனால் உரையாசிரியர்களுக்கு இருந்த உடற்கூற்று அறிவியல் அறிவு அறியப்படுகின்றது.

பரிமேலழகர் உரையில் அறிவியல்

திருவள்ளுவர் மருந்து என்னும் அதிகாரத்தில் நோய் எவ்வாறு வரும் என்பதை,

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளிமுதலா எண்ணிய மூன்று (குறள். 941)

என்ற குறளில் குறிப்பிடுகின்றார். அதற்குப் பரிமேலழகர், “உணவும் செயல்களும் ஒருவன் பகுதிக்கொத்த அளவின் அன்றி அதனின் மிகுமாயினும் குறையுமாயினும் வாதம் முதலாக எண்ணப்பட்ட மூன்று நோயும் அவனுக்குத் துன்பம் செய்யும்என்று உரை எழுதியுள்ளார். மேலும், நூலோர் எண்ணிய மூன்று என்பதை, வாதப்பகுதி, பித்தப்பகுதி, தலைப்பகுதி என்று கூறுகின்றார். மேலும்,

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்

திங்களைப் பாம்புகொண் டற்று (குறள்.1146)

என்ற குறளில், தலைவன் தலைவியின் களவு ஒழுக்கத்தை ஊரார் அலர் பேசும் நிகழ்வை வானத்து நிலவைப் பாம்பு விழுங்குவதோடு ஒப்பிடுகின்றார். இது சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகின்றது.  இதற்குப் பரிமேலழகர், கண்டது ஒருநாள்யான் காதலரைக் கண்ணுறப் பெற்றது ஒரு ஞான்றே. அலர் மன்னும் திங்களைப் பாம்பு கொண்டற்றுஅதனின் ஆய அலர் அவ்வளவிற்றன்றித் திங்களைப் பாம்பு கொண்ட அலர் போன்று உலகெங்கும் பரந்தது என்று உரை கூறுகின்றார். இதனைக் காணும்போது உடலியலையும், வானியலையும் பரிமேலழகர் அறிந்திருந்தமை புலப்படுகின்றது.

பேராசிரியர் உரையில் அறிவியல்

தொல்காப்பியர் மரபியலில் உயிரினங்களின் பகுப்புப் பற்றி விவரித்துள்ளார்.

ஒன்றறிவதுவே உற்றறிவதுவே

இரண்டறி வதுவே அதனொடு நாவே

மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே

நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே

ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே

ஆறறி வதுவே அவற்றொடு மன்னே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினவே (தொல்.பொருள்.582)

என்ற நூற்பாவில் ஒன்று முதல் ஆறு அறிவுடைய உயிரிகளின் வகைப்பாட்டையும் அதன் தன்மையையும் தொல்காப்பியர் விளக்குகின்றார். இதனைப் பேராசிரியர், ஒன்று அறிவது என்பது ஒன்றனை அறிவது. அஃதாவது, உற்றறிவதென்பதும், இரண்டறிவதென்பது அம் மெய்யுணர்வினோடு நாவுணர்வுடையது எனவும், மூன்றறிவு உடையது அவற்றொடு நாற்ற உணர்வு உடையது எனவும், நான்கறிவது அவற்றோடு கண்ணுணர்வு உடையது எனவும், ஐந்தறிவது அவற்றொடு செவியுணர்வு உடையதெனவும், ஆற்றிவுடையது அவற்றொடு மன உணர்வு உடையது எனவும், அம்முறையானே நுண்ணுணர்வுடையோர் நெறிப்படுத்தினர் என்றவாறுஎன்று உரை தருகின்றார். இதனால் பேராசிரியரின் உயிரியல் அறிவு வெளிப்படுகின்றது.

அடியார்க்கு நல்லார் உரையில் அறிவியல்

சிலப்பதிகாரத்தின் உரையில் அடியார்க்கு நல்லார், கோசிகம், நுண்துகில், செம்பொத்தி, பணிப்பொத்தி, சுண்ணம், குருதி, தூரியம், பச்சிலை, வேதங்கம், புரியட்டம், பேடகம், நந்தியம், தேவகிரி, சித்திரக்கம்பி, பொன் எழுத்து, தேவாங்கி, பீதகம், பாடகம், காசு உள்ளிட்ட 36 வகையான உடை வகைகளைக் குறிப்பிடுகின்றார். இதனால் அவருடைய ஆடை வடிவமைப்பு அறிவியல் அறிவு வெளிப்படுகின்றது.

சேனாவரையர் உரையில் அறிவியல்

தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய சேனாவரையர், பயிர் செழித்து வளர்வதற்கான வழிமுறைகளைத் தம் உரையில் விவரித்துள்ளார்.

எருப்பெய்து இளங்களை கட்டு

நீர்க்கால் யாத்தமையின் பைங்கூழ் நல்லவாயின (தொல்.சொல்)

என்ற நூற்பாவில், பயிர் செழித்து வளர உரம் இட வேண்டும். களை எடுக்க வேண்டும். நீர்க்கால் யாத்தல் என்னும் படிநிலைச் செயல்பாடுகள் வேண்டும் என்னும் வேளாண் அறிவியல் குறித்த செய்திகளை எடுத்துரைக்கின்றார்.

.வே.சாமிநாய்யர் உரையில் அறிவியல்

குறுந்தொகைக்கு உரை எழுதியவர் .வே.சா அவர்கள்,

முந்நால் திங்கள் நிறைபொறுத்து அசைஇ

ஒதுங்கல் செல்லாப் பசும்புளி வேட்கைக்

கடுஞ்சூல் மகளிர் போல (குறுந்தொகை 287)

என்ற பாடலில், மகளிர் பன்னிரண்டு திங்கள் கருவுற்றிருத்தலும் உண்டு.. வயா நோயுடையோர் புளித்த சுவையை உடைய பொருள்களை விரும்புதல் இயல்புஎன்பதையும் கோடிட்டுக் காட்டியுள்ளார். இதனால் உடல் அறிவியல் பற்றிய அறிவு உரையாசிரியர்களுக்கு உண்டு என்பது புலனாகின்றது.

முடிவுரை

பழந்தமிழ் நூல்களுக்கு உரை செய்த உரையாசிரியர்கள் பல்துறை அறிவு கொண்டவர்களாக விளங்கினர் என்பதற்கு அவர்தம் உரை விளக்கங்களே சான்று பகர்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக