இணைய நூலகம்
தன் கருத்துகளையும், கற்பனைகளையும் பதிவு செய்து கொள்ள கல்லிலும், சுடுமண்
பலகையிலும், ஓலைச் சுவடிகளிலும் எழுதிய மனிதன், பிற்காலத்தில் நூல் வடிவமாக்கினான்.
அந்த நூல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கின்ற இடத்திற்கு நூலகம் என்று பெயர் வைத்தான்.
அந்த நூலகம் இன்று தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப மின்னூலகமாக மாறி அடுத்த வளர்ச்சியை
நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது.
மின் நூல்கள்
மின் நூல் என்பது நூலின் மின்னணுவியல் பதிப்பாகும். இதனை, மின்னூல்
(PDF BOOK), மீயுரை நூல் (HTML BOOK), புரட்டும் நூல் (FLIP BOOK), மென்னூல் (EPUB
BOOK), கிண்டில் (MOBI BOOK) எனப் பலவாறு விளக்கலாம்.
மின்னூல்கள்
நூலில் இடம்பெறும் செய்திகளைப் போலவே கணினி உதவியுடன் தட்டச்சு செய்து
இணையத்தில் இடம் பெறச் செய்து அதை இணைய வழியில் படிக்கும்படியாக மின் நூல்கள் உருவாக்கப்படுகின்றன.
இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கணினியில் சேமித்து வைத்துத் தேவைப்படும்போது
படிக்கின்ற வகையிலும் மின் நூல்கள் உருவாக்கப்படுகின்றன. இணையத்தில் காணப்படுகின்ற
நூல்கள் பெரும்பாலும் பிடிஎஃப் வடிவிலேயே இருக்கும். அச்சில் இருக்கின்ற பழைய நூல்களை
ஸ்கேன் செய்து கணினி மற்றும் திறன் பேசிகளில் பயன்படுத்தும்போது அவையும் பிடிஎஃப் வடிவத்திலேயே
இருக்கும்.
மீயுரை நூல்
மீயுரை நூல்களில் ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்திற்கு அதன்
மீயுரைகளைச் சுட்டியால் தட்டுவதன் மூலம் பெற முடியும்.
புரட்டும் நூல்
அச்சு நூல்களைப் புரட்டுவது போல இதையும் புரட்ட முடியும்.
மென்னூல்
இவை கணினியின் வாசிப்புக்கென்றே உருவாக்கப்பட்டவை. இவ்வகை நூல்களில்
எழுத்துகளைப் பெரிதாகவோ, சிறிதாகவோ, பக்கத்தின் அமைப்பை நம் விருப்பத்திற்கேற்பவோ மாற்றி
அமைத்துக் கொள் முடியும்.
கிண்டில் நூல்கள்
இது மின் படிப்பான் ஆகும். கிண்டில் நூல்கள் அமேசான் கிண்டில் கருவிகளில்
பயன்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டவை. இக்கருவி கம்பியற்ற இணைப்புகளின் உதவியுடன்
மின்நூல்கள், செய்தித்தாள்கள், இதழ்கள், வலைப்பதிவுகள் ஆகியவற்றை இணைய உலாவிகள் மூலம்
தேடிப் பெற்றுக் கொள்ளவும், வாங்கவும், தரவிறக்கம் செய்யவும், வாசிக்கவும் பயன்படுகின்றது.
தாள்களில் வாசிப்பது போன்ற அனுபவமும் உணர்வும் கிடைப்பது இதன் சிறப்பு.
மின் நூலகங்கள்
மின்னியல் முறையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் மின் நூல்கள்,
படங்கள், ஆணவங்கள் முதலான தகவல் தொகுப்புகளைக் கணினி மற்றும் இணைய வழியில் அணுகக்கூடிய
நூலகத்தை மின் நூலகங்கள் எனலாம். இதனை தகவல் மீட்டுப்பு ஒருங்கியம் என்று அழைப்பர்.
இது மெய்ந்நிகர் நூலகம் (Virtual Library), எண்ணிம நூலகம் (Digital Library) என்றும்
அழைக்கப்படுகின்றது. இருக்கின்ற இடத்திலேயே மின்னூலகங்களைப் பயன்படுத்தி பதிவிறக்கம்
செய்ய முடிவதும், ஒரே நூலை பல பேர் பலமுறை படிக்க முடிவதும் இதன் சிறப்பாகும்.
- தமிழ் இணையக் கல்விக் கழகம்
- மதுரைத் தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்
- சென்னை நூலகம்
- தமிழ் மரபு அறக்கட்டளை
- நூலகத் திட்டம்
ஆகிய மின்னூலகங்கள் இணைய உலகில் சிறப்பான சேவைகளை வழங்கி வருகின்றன.
சிறப்புகள்
மின்னூலகங்களின் வாயிலாக பழந்தமிழ் இலக்கண இலக்கிய நூல்களையும், அதன்
விளக்க உரை நூல்களையும், பல்வேறு அகராதிகளையும், பார்வை நூல்களையும், சித்தர் இலக்கியங்களையும்,
இருபதாம் நூற்றாண்டு கவிதை இலக்கியங்களையும், சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை, திறனாய்வு,
இலக்கிய வரலாறு, வாழ்க்கை வரலாறு, நாட்டுப்புற இலக்கியங்கள் என தமிழின் அனைத்து நூல்களையும்
இருந்த இடத்தில் இருந்தே பெற்றுக் கொள்ள முடிகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக