பழந்தமிழர்களின் நீர் நில மேலாண்மை
நிலத்தை ஐவகையாகப் பிரித்த தமிழர்களின் அறிவியல் நுட்பம் உலக மக்களால்
போற்றுதலுக்குரியது. நிலத்தைப் பண்படுத்தி, நிலத்தடி நீரின் தன்மை அறிந்து பயன்படுத்துவதில்
நம் முன்னோர்கள் சிறந்திருந்தமையை இலக்கியங்கள் காட்டுகின்றன.
நில மேலாண்மை
தமிழர்களின் முக்கியத் தொழில் வேளாண்மை. மண்ணைச் சார்ந்தே மக்கள் இயங்கினர். எனினும், எல்லா நிலங்களிலும் நெல் வேளாண்மை செய்வதில் சாத்தியக் கூறுகள் குறைவு என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர். இதனை, “புன்புலச் சீறூர் நெல்விளையாதே” (புறம்.328) என்ற பாடல் தெரிவிக்கின்றது. வரகு, திணை, கொள்ளு, அவரை இந்த நான்கும் இல்லமல் பிற உணவுப் பயிர் இல்லை என்பதை,
கருங்கால் வரகே இருங்கதிர் தினையே
சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையொடு
இந்நான் கல்லது உணாவும் இல்லை (புறம்.335)
என்ற பாடல் தெரிவிக்கின்றது. பயிரிடும் முறையிலும், நிலத்துக்குத் தகுந்த
நுட்பங்கள் கடைபிடிக்கப்பட்டன. மலைச் சாரலில் பயிர் செய்த தன்மையினை,
மலைஇடம்படுத்துக் கோட்டிய கொல்லைத்
தளி பதம் பெற்ற கான் உழுகுறவர்
சில வித்து அகல விட்டுடன் பலவிளைந்து (நற்றிணை)
என்ற பாடலால் அறியலாம். வேளாண்மையில் விதைகளைத் தேர்வு செய்வதையும்,
அவற்றைப் பூச்சிகள் தாக்காமல் பாதுகாத்துக் கொள்வதையும் தமிழர்கள் நன்கு அறிந்திருந்தனர்.
நீர்ப்பாய்ச்சுதல்
வயல்களுக்கு நீர்ப்பாய்ச்ச பலவகையான நீர்ப்பாய்சிகளைக் கண்டு பிடித்தனர்.
அவற்றை பூட்டைப் பொறி, பிழா, பன்றிப் பத்தர் இடா என்ற பெயர்களில் வழங்கினர். நீர் பாய்ச்சியதன்
மூலம் வயல் முழுவதும் நீர் நிறைந்த வயலாக, பதமாண மண்ணாக மாறியது. இத்தகு வளமிக்க வாழ்க்கையை,
ஏர்பரந்த வயல் நீர்பரந்த செறு
நெல் மலிந்த மனை பொன் மலிந்த மறுகு (புறம்.338)
என்ற பாடல் தெரிவிக்கின்றது.
நீர் மேலாண்மை
நீர் இன்றி அமையாது உலகு என்பது தமிழர்தம் வாக்கு. தொடக்கத்தில் இயற்கையாக ஓடும் காட்டாறுகளில் இருந்து மட்டுமே தண்ணீரைப் பெற்று வந்த சமூகம், நீரைத் தேக்கி வைக்கவும், திசை திருப்பவும், பூமியின் உள்ளே இருந்து நீரை வெளிக்கொணரவும் படிப்படியாகக் கற்றறிந்தனர். உலகின் தொன்மையான நாகரிகம் ஆற்றங்கரை நாகரிகங்களே ஆகும். நீரின் முக்கியத்துவத்தையும், அதை மேம்படுத்துவதற்கான வழி முறைகளையும் கண்டு அதைச் செயல்படுத்தியவர்கள் தமிழர்கள். அவர்கள் நீர் மேலாண்மையில் மேலோங்கி இருந்தனர்.
நீரின் இன்றியமையாமை
மழை நீரை அமிழ்தம் என்று எண்ணியவர்களாக, மழை நீரைச் சேமித்து நீர் வளத்தைக் காப்பாற்றினர். சங்ககாலத் தமிழர்கள் முந்நீர் விழவு என நீருக்கு விழா எடுத்துள்ளனர். உலக உயிர்களைக் காப்பது மழை. மழை நீரை சேகரித்து நாட்டை வளம் பெறச் செய்த தமிழர்களின் அறிவை,
இடியுடைப் பெருமழை எய்தா ஏகப்
பிழையா விளையுள் பெருவளம் சுரப்ப (சிலம்பு.26 – 28)
என்றவாறு சிலப்பதிகாரம் கூறுகின்றது. மக்கள் பயன்பாட்டிற்காக கிணறுகள், குளங்கள், ஏரிகள் அமைத்தனர் என்பதை,
குள நிறைந்த நீர்த்தடம்போல் குளிர்
தூங்கம் பரப்பினதாய் (பெரியபுராணம்)
என்று நாவுக்கரசர் பாடியுள்ளார். காடுகளை அழித்து நாடுகளாக்கி, குளம் வெட்டி வளர்த்த பெருமை தமிழர்களுக்கு உண்டு என்பதை,
காடு கொன்று நாடு ஆக்கி
குளம் தொட்டு வளம் பெருக்கி
என்ற பட்டினப்பாலை வரிகளால் அறியலாம். மேலும்,
வரப்புயர நீர் உயரும்
நீர் உயர்ந்தால் நெல் உயரும்
நெல் உயர்ந்தால் குடி உயரும்
குடி உயர்ந்தால் கோன் உயர்வான் (ஔவையார்)
என்று ஔவையார் பாடியிருப்பதால் நீரின் இன்றியமையாமையைத் தமிழர்கள் நன்கு அறிந்திருந்தனர் என்பது பெறப்படுகின்றது. கிணறு வெட்டுதல் தொடர்பாக கூவநூல்“ என்ற ஒரு நூல் இருந்துள்ளது.
நீரைத் தேக்கி வைக்கும் முறைகள்
பழந்தமிழர்கள் குளம், வாவி, பொய்கை, இலஞ்சி, ஏரி, குழி, கூவல் ஆகிய பல நீர் நிலைகளை உருவாக்கி நீரைச் சேமித்தனர்.
ஏரிகள்
ஆறு எங்கெல்லாம் முடிகின்றதோ அங்கெல்லாம் ஏரிகளை உருவாக்கினர். ஏரிகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதைச் சிறுபஞ்ச மூலம் காட்டுகின்றது. ஊர் மக்கள் ஒன்றுகூடி நீர் நிலைகளைச் சுத்தம் செய்தனர் என்பதைப் பரிபாடல் காட்டுகின்றது. தமிழர்கள் வடிவமைத்த ஏரிக்கரைகள் களிமண்ணால் உருவாக்கப்படவில்லை. மாறாக, மண்ணோடு மண்ணை இறுக்கும் பசை போன்ற ஒன்றைப் பயன்படுத்தி ஏரிக்கரையை அமைத்துள்ளனர். இதில் எந்தப்பக்கமும் நீர் கசிவதில்லை என்பது சிறப்பு.
அணை கட்டுதல்
மன்னர்கள் இறை என்ற பெயரில் நிலவரி வாங்கினர். இதைப் பெறுகின்ற மன்னன் நிலங்களுக்கு நீர் வழங்கும் கடமையைச் செய்தான். இதை அடிப்படையில் கரைகளைப் பராமரித்தல், அணை கட்டல், வாய்க்கால் வெட்டல், ஏரி குளங்களை அமைத்தனர் என்பன போன்ற செயல்களை மேற்கொண்டனர். இப்பணிகள் தொடர்ந்து நடைபெற நீரைத் தம் விருப்பம் போல தேக்கி வைக்கவும், திசை திருப்பவம் தொழில்நுட்பங்களை உருவாக்கினர். அவற்றுள் முக்கியமானது அணை கட்டுதல்.
இயற்கையாகத் தன் போக்கில் ஓடி வரும் ஆற்று நீரைத் தடுத்து நிறுத்தி வைப்பதற்கும், அதைத் தாம் விரும்பும் பகுதிக்குக் கொண்டு செய்யவும் பயன்படும் அடிப்படையான தொழில்நுட்பம் அணை கட்டுதல் ஆகும். மதுரைக்காஞ்சியில் கற்சிறை என்ற பெயரில் அணைக்கட்டு குறிப்பிடப்படுகின்றது. கற்களால் கட்டப்படுகின்ற பகுதியில் தண்ணீர் சிறைப்பட்டுள்ளதால் இப்பெயர் பெற்றது. இதற்குச் சிறந்த சான்று கல்லணை.
நீர் வெளியேற உதவும் முறைகள்
சேமிக்கின்ற நீரை வெளியேற்ற மடை, மதகு, குமிழ், தூம்பு, புதவு, சேறோடித்துளை முதலிய வழிமுறைகளைக் கையாண்டனர்.
மடை
கரையின் துணையால் குளத்தில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் பயன்பாட்டிற்காக வெளியேறும் வகையில் அமைக்கப்படும் அமைப்பே மடை எனப்படும்.
மதகு
மதகு என்பது அணையில் நீரின் அளவை கூட்ட குறைக்க உருவாக்கப்படும் கதவு.
கலிங்கு
ஏரி குளங்களின் தண்ணீரைத் தேக்கும்பொழுது கரைகளின் தாங்கும் திறன் அறிந்து உருவாக்கப்படும் கால்வாய் ஆகும்.
குட்டை
கால்நடைகளின் தாகம் தீர்ப்பதற்காக உருவானது குட்டை.
சேறோடித்துளை
தரையில் இருக்கும் வண்டல் மண்ணையும், சேற்றையும் சுத்தமாக வெளியேற்ற முடியும். அது வெளியேறி ஏரிக்கு வெளியே உள்ள பாசனக் கால்வாயில் சேர்ந்து விடும். வண்டல் மண் பயிர்களுக்கு உரமாகவும் அமையும்.
கோயில் குளம்
பழந்தமிழர்கள் கோயில் வளாகங்கள் குளங்கள் அமைத்து நீரைச் சேமித்தனர்.
தூம்பு
தூம்பு என்பது நீண்ட குழாய் போன்ற அமைப்புடையது ஆகும். யானையின் தும்பிக்கை போன்று இது அமைந்திருக்கும். குளத்தில் உள்ள நீர் கரையின் அடிப்பகுதி வழியான வெளியே செல்ல உதவுகிறது.
புதவு
புதவு என்பது தண்ணீர் வெளியேறும் வழி இது.
நீர் மேலாண்மை வல்லுநர்கள்
- பெருக்கெடுத்து ஓடும் ஆற்று நீரை ஏரிகளில் சேமித்து விளைநிலங்களுக்குச் சேகரிப்பவர்களை “நீராணிக்கர்கள்” என்று அழைப்பர்.
- நீரைக் கொண்டு வந்து ஏரியில் சேர்த்து அதைக் கட்டிக் காப்பவருக்கு “நீர்க்கட்டியார்“ என்று பெயர்.
- ஏரியின் கரையைக் காப்பாற்றி வலுவாக வைத்திருப்பவருக்குக் “கரையார்” என்று பெயர்
- ஏரியை முழுவதுமாகப் பாதுகாப்போர் “குளத்துக் காப்பாளர்கள்” எனப்பட்டனர்.
- ஏரியைத் தூய்மைப்படுத்துவோரை “குளத்துப் பள்ளர்கள் ”என்பர்.
- ஏரியில் இருந்து நீரைத் திறந்து விட்டு, வாய்க்கால் மூலம் வயல்களில் சேர்ப்பவரை “நீர் வெட்டியார்” என்பர்.
- ஏரிக்கரைகளில் மடையைத் திறந்து மூடுவோரை “மடையர்கள்” என்பர்.
முடிவுரை
நிலம் மற்றும் நீரின் இன்றியமையாமை உணர்ந்த தமிழர்கள் அதை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்த முறை வியப்பிற்குரியது. இன்றைய தொழில்நுட்ப உலகிற்கு தமிழ்ச்சமூகமே முன்னோடி என்பதை மறுப்பதற்கில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக