பழந்தமிழ் இலக்கியங்களில் நிலவியல்
புவியின் தோற்றம், வரலாறு, அதன் வடிவம் ஆகியவற்றைப் பற்றி அறிகின்ற தன்மையை நிலவியல் எனலாம். நிலவியல் குறித்த அறிவியலில் பெருவெடிப்புக் கொள்கை முக்கியத்துவம் பெறுகின்றது. இக்கோட்பாடு 20ஆம் நூற்றாண்டில் வெளியானது.
பெருவெடிப்புக் கொள்கை
அண்டவெளியில் உள்ள பொருள்கள் முதலில் தீப்பிழம்பாகத் தோன்றி நாளடைவில் மிக வேகமாக விரிவடைந்துள்ளது என்பதே இதன் கொள்கையாகும். இவ்வாறு விரிவடைந்தபோது வெப்பமற்ற பகுதிகள் விண்மீன் கூட்டங்களாக உருவாகியிருக்கலாம் என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
அண்டம் வெடித்தபோது காலம் தோன்றி, ஈர்ப்பு விசை உருவாகி, அணுத்துகள்கள் தோற்றம் பெற்று, அவை ஒன்றோடொன்று மோதி புரோட்டான் நியூட்ரான் ஆகியன உருவாகி, அவை இரண்டும் சேர்ந்து ஹைட்ரஜன், ஹீலியம், இலித்தியம் ஆகியவற்றை உருவாக்கின. அதன் பிறகு ஐந்து இலட்சம் ஆண்டுகள் கழிந்து எலக்ட்ரான்கள் அணுக்கருக்களால் சிறை பிடிக்கப்பட்டன. பின்பு முப்பது கோடி ஆண்டுகள் கழிந்த பின்னர் விண்மீன்கள் உருவாயின. இவற்றிற்குப் பிறகே சூரிய மண்டலமும் அதில் உள்ள கோள்களும் தோன்றின என்பது அறிவியல் அறிஞர்களின் கருத்தாகும்.
தமிழர்களின் பெருவெடிப்புக் கொள்கை
பழந்தமிழர்கள் நிலவியல் குறித்த அறிவைப் பெற்றிருந்தனர் என்பதற்கு இலக்கியங்கள் பல சான்றுரைக்கின்றன. வானம் முதலில் தோன்றியது. வானத்தினின்று காற்றும், நெருப்பும், நீரும், நிலமும் தோன்றின என்று பரிபாடல் கூறுகின்றது. இதனை,
கருவளர் வானத் திசையில் தோன்றி
உருவறி வாரா ஒன்றன் ஊழியும் (பரிபாடல் பாடல் எண் 2.4-5)
என்ற வரிகள் தெரிவிக்கின்றன. இக்கருத்து மேற்கூறிய பெருவெடிப்புக் கொள்கையோடு ஒத்திருப்பதைக் காணும்போது வியப்பு உண்டாகின்றது. மேலும், சூரிய மண்டலம் குறித்து “வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம்“(அகநானூறு பா.எண்.11.1) என அகநானூறு கூறுகின்றது.
ஐம்பூதங்களின் சேர்க்கையே உலகம்
இன்றைய அறிவியல் அறிஞர்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் ஆகிய ஐம்பூதங்களால் ஆனது உலகம் என்று ஆராய்ந்து கூறியுள்ளனர். ஆனால், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தொல்காப்பியம்,
நிலம் தீ நீர் வளி விநும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் (தொல்.மரபு.91)
என்று கூறியுள்ளார். மேலும் இந்த ஐம்பூதங்கள் ஒன்றிலிருந்து ஒன்று உருவானவை என்பதை,
மண்திணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியம்
வளித்தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை (புறநானூறு.2)
எனப் புறநானூறு கூறுகின்றது.
உலகின் புற அமைப்பு
உலகமானது பரந்து விரிந்த நிலப்பரப்பை உடையது. கடல்களே இதன் எல்லையாக இருக்கின்றன. புவியின் நிலப்பரப்பில் உயர்ந்த மலைகள் நிறைந்துள்ளன. இந்தச் செய்தியை,
“ஓங்கு திரை வியன் பரப்பின்
ஒலி முந்நீர் வரம்பு ஆக
தேன் தூங்கும் உயர்ச்சிமைய
மலைநாறிய வியல் ஞாலத்து (மதுரைக்காஞ்சி 1)
என்றவாறு மதுரைக்காஞ்சி குறிப்பிடுகின்றது.
நிலத்தின் தோற்றம்
புவியோட்டின் மேற்புறம் பலவகையான பாறை அடுக்குகள் உள்ளன. பலவகையான மண் வகைகள் உள்ளன. இதுவே நிலம் என்று அழைக்கப்படுகிறது. புவியின் நில அமைப்பு விரிந்து பரந்துள்ளது என்பதையும், நிலத்தின் சுழற்சியையும், “உருகெழு நிலம்” (கலித்தொகை பா.எ.106), “நனந்தலைப் பைந்நிலம்“(பதிற்றுப் பத்து பா.எண்.17) என்று இலக்கியங்கள் சுட்டுகின்றன. கடல் நீரையும்கூட நிலம் தாங்கி நிற்கிறது என்பதைப் பரிபாடல் “நீர் நிரந்தேற்ற நிலந்தாங் கழுவத்து” (பரிபாடல் எண்.183) எனக் கூறுகின்றது.
நில வரையறை
பழந்தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த நிலப்பகுதியை மிக நன்றாக அறிந்தவர்கள் என்பதை,
தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா எல்லை
குன்று மலை காடு நாடு
ஒன்று பட்டு வழிய
என்று புறநானூறு கூறுகின்றது. தமிழகத்தின் நிலப்பகுதியை,
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும் (தொல்காப்பியம் 635)
எனத் தொல்காப்பியம் வரையறுக்கின்றது.
தமிழர்களின் புவியியல் அறிவும், நிலவியல் பார்வையும் நிரம்பப் பெற்றவர்கள் என்பதை இச்செய்திகள் வெளிப் படுத்துகின்றன. இன்றைய அறிவியல் அறிஞர்கள் கூறியுள்ள அனைத்துக் கருத்துகளும், பழந்தமிழ் இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளமை வியப்பிற்குரியதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக