வெள்ளி, 21 மார்ச், 2025

தமிழக அறிவியல் ஆளுமைகள்

 

தமிழக அறிவியல் ஆளுமைகள்

சர்.சி.வி.இராமன்

இவருடைய முழு பெயர் சந்திரசேகர வேங்கட ராமன். கல்கத்தாவில் அறிவியல் ஆய்வகத்தில் அவர் ஒலியியல் மற்றும் ஒளியியல் ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டார். அவரது ஒளியியல் மற்றும் ஒளி சிதறலுக்கான ஆராய்ச்சிப் பணி உலக அளவிலான அங்கீகாரத்தை பெற்றது. 1929 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் பேரரசால் இவருக்கு “நைட் ஹீட்” என்ற பட்டமும், இங்கிலாந்து அரசியாரால் ‘சர்’ பட்டமும் அளிக்கப் பட்டது. 1930ல், தனது இயற்பியலுக்கான ஒளி சிதறல் ஆராய்ச்சிக்காக சர் சி.வி. ராமன் அவர்களுக்கு ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது. பின்னர் இந்த கண்டுபிடிப்புக்கு “ராமன் விளைவு” என்று பெயரிடப்பட்டது.

சீனிவாச இராமானுஜன்

சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். 1914-ஆம் ஆண்டுக்கும், 1918-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டறிந்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண் கோட்பாடுகளிலும், செறிவெண் கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரையிலான பல்வேறு துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

.பி.ஜெ.அப்துல் கலாம்

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரி என்றெல்லாம் புகழக்கூடிய மாமனிதர். 1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார்.

கோபால்சாமி துரைசாமி

ஜி. டி. நாயுடு என்று அறியப்படுகிறார். இவர் தமிழகத்தின் அறிவியல் மாமேதைகளுள் ஒருவர். இயந்திரவியல் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்தவர். முதன் முதலாக அவருடைய நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்துகள் வந்து, புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்து பேருந்து நிலையங்களில் வைத்து சாதனைப் படைத்தார். பயணச்சீட்டுகள் வழங்குவதற்கு அந்த காலத்திலேயே ஒரு இயந்திரத்தை தன்னுடைய சிறிய தொழிற்சாலையிலேயே தயாரித்து பயன்படுத்தினார். அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டிய தேவை இல்லாத வகையில் மோட்டார் ரேடியேட்டருக்கு இணையான ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்து அதை தன் பேருந்துகளில் பயன்படுத்தினார். எஞ்சின் ஓடிக்கொண்டிருக்கும்போதே அதன் அதிர்வு விகிதம் அதிகமா, குறைவா என்பதைக் கண்டுபிடிக்க அதிர்வு சோதிப்பான் (Vibrator Tester) என்ற இயந்திரத்தை கண்டுபிடித்தார்.

எம்.எஸ்.சுவாமிநாதன்

இவர் இந்திய வேளாண் அறிவியலாளர். தாவர மரபியலாளர். பசுமைப் புரட்சியின் தந்தை என்று அறியப்படுகின்றார். 1960களில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் பஞ்சத்தில் இருந்து காப்பாற்றிய பெருமை இவருக்கு உண்டு. பஞ்சம் வந்த காலத்தில் ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கோதுமையை இந்தியாவில் அறிமுகம் செய்து அதிக உற்பத்தியை உருவாக்கிக் காட்டினார். பத்ம ஸ்ரீ, பத்மபூஷன், பாரத ரத்னா விருது உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றவர்.

மயில்சாமி அண்ணாதுரை

முதன்முதலில் இந்தியா நிலாவுக்கு ஆய்வுக்கலம் அனுப்பிய சந்திரயான்-1 திட்டத்தின் திட்ட இயக்குநர். தற்போது தேசிய திட்டமிடல் மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் தலைவராகவும் தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மன்றத்தின் உபதலைவராகவும் உள்ளார். கையருகே நிலா, சிறகை விரிக்கும் மங்கள்யான், வளரும் அறிவியல், அறிவியல் களஞ்சியம், விண்ணும் மண்ணும், இந்தியா - 75 போர்முனை முதல் ஏர்முனைவரை ஆகிய ஆறு நூல்களைத் தமிழில் எழுதியுள்ளார். "கையருகே நிலா" என்ற நூல் 2013ஆம் ஆண்டிற்கான சி. பா. ஆதித்தனார் இலக்கிய விருதை வென்றுள்ளது. "விண்ணும் மண்ணும்" என்ற நூல் 2021ஆம் ஆண்டுக்கான மணவை முஸ்தபா அறிவியல் விருதைப் பெற்றுள்ளது.

கைலாச வடிவு சிவன்

கைலாசவடிவு சிவன் என்பவர் இந்திய விண்வெளித் துறையின் அறிவியலாளர் ஆவார். விக்ரம் சாராபாய் விண்வெளி நடுவத்தின் இயக்குநராக 2015 ஆம் ஆண்டு சூன் முதல் நாளிலிருந்து பொறுப்பேற்றுள்ளார். பி .எஸ். எல். வி திட்டத்தில் முக்கியப் பணி ஆற்றினார். கடந்த 33 ஆண்டுகளாக இந்தியாவிலிருந்து ஏவப்பட்ட செயற்கைக் கோள்களில் சிவனின் பங்களிப்பு இருந்தது. ராக்கட்டின் அமைப்பு தொடர்பாக சித்தாரா என்னும் பெயரில் மென்பொருளை உருவாக்கினார். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராக 2018 சனவரி 12 ஆம் தேதியில் பதவியேற்றார்.

பி.கே.அய்யங்கார்

பத்மநாபன் கிருஷ்ணகோபாலன் அய்யங்கார் இந்தியக் குளிர்நிலை அணுக்கருப் பிளவு சோதனைகளில் மையப் பங்கு வகித்தமைக்காக பரவலாக அறியப்படும் புகழ்பெற்ற இந்திய அணுசக்தி அறிவியலாளரும் அணுக்கருவியலாளரும் ஆவார். பாபா அணு ஆராய்ச்சி மையம் (பிஏஆர்சி)யின் தலைவராகவும் இந்திய அணுசக்திப் பேரவையின் முன்னாள் குழுமத்தலைவராகவும் இருந்துள்ளார்.  ஐக்கிய அமெரிக்காவிற்கு சாதகமாக இருப்பதாக இந்திய அமெரிக்க குடிசார் அணுவாற்றல் உடன்பாட்டை எதிர்த்து வந்தார்.

இரா.சிதம்பரம்

இரா. சிதம்பரம் என்கிற இராசகோபாலன் சிதம்பரம் ஓர் இந்திய அணு அறிவியலாளரும் புகழ்பெற்ற உலோகவியல் அறிஞரும் ஆவார். இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகராக 2018-22 காலகட்டத்தில் பணியாற்றினார். இந்தியாவின் அடிப்படை அணுவியல் ஆய்வுமையமான பாபா அணு ஆய்வு மையத்தின் இயக்குநராக இருந்தார். சிதம்பரம் பொக்ரானில் நடந்த 1974 அணுகுண்டு சோதனையில் முக்கிய பங்காற்றினார். மே 1998ஆம் ஆண்டு நடந்த சக்தி நடவடிக்கையின்போது அணுசக்தித் துறையின் குழுவை தலைமையேற்று நடத்தினார். சிதம்பரம் பன்னாட்டு அணுசக்தி முகமையகத்தின் 'மாண்புடை நபர்களின் குழு' அங்கத்தினர்களில் ஒருவராக உள்ளார்.

வி.நாராயணன்

வி. நாராயணன் (V. Narayanan) ஓர் இந்திய விண்வெளிப் பொறியாளரும் வானூர்தித் தொழில்நுட்ப வல்லுநரும் ஆவார். இவர் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள திரவ உந்துவிசை அமைப்பு மையத்தின் (LPSC) இயக்குநராக உள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இசுரோவின் புதிய தலைவராகவும், விண்வெளித் துறைச் செயலராகவும் வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். இசுரோ நிறுவனத்தின் 11-ஆவது தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ந.வளர்மதி

இஸ்ரோவின் ரிசாட் 1 செயற்கைக்கோளின் திட்ட இயக்குநர். இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு, சரல் செயற்கைக்கோள், ஜிசாட்-7, செவ்வாய் சுற்றுகலன் திட்டம், ஜிசாட்-14 எனும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் பல திட்டங்களில் சிறப்பாக செயல்பட்டவர் என்ற பெருமைகளை உடையவர். முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் நினைவாக தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் அப்துல் கலாம் விருதினை பெற்ற முதலாவது நபர் இவராவார்.

அருணா தத்தாத்ரேயன்

சென்னையைச் சேர்ந்த பேராசிரியரும், இந்தியாவின் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (CSIR), ஓய்வுபெற்ற விஞ்ஞானியும் ஆவார். உயிர் இயற்பியல், வேதியியல் மற்றும் மேற்பரப்பு அறிவியல் ஆகியவை துறைகளில் பணியாற்றியவரும், ஆராய்ச்சியாளரும் ஆவார்.

த.ச.கனகா

தஞ்சை சந்தானகிருட்டிண கனகா டி. எஸ். கனகா என்றும் அழைக்கப்படும் இவர் ஆசியாவின் முதல் பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராவார். உலகின் முதல் சில பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவராகவும் இருந்தார். இவர் மூளையில் நாள்பட்ட மின்முனை உள்வைப்புகளை சரிசெய்த இந்தியாவின் முதல் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார் 1975 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஆழ்ந்த மூளைத் தூண்டுதலைச் செய்த முதல் நிபுணருமாவார். பேராசிரியர் பாலசுப்பிரமணியம், பேராசிரியர் எஸ். கல்யாணராமன் ஆகியோருடன் இணைந்து இவர் 1960கள் மற்றும் 1970களில் செயல்பாட்டு நரம்பியல் அறுவை சிகிச்சைக்கு முன்னோடியாகவும் இருந்தார்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக