பழந்தமிழ் இலக்கியங்களில் உயிரியல்
உயிரியல் என்பது உயிரினங்களைப் பற்றிய அறிவியல் ஆகும். பழந்தமிழர்கள் கற்காலம் தொட்டே உயிரினங்கள் குறித்த அறிவைப் பெற்றிருந்தனர். உயிரினங்களின் தன்மை அறிந்து அவற்றைத் தனக்காகப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டனர். சான்றாக, நாய்களை வளர்ப்பு விலங்காக ஏற்றுக்காண்டு, தன் காவலுக்குப் பயன்படுத்தினர். ஆடு, மாடு, எருது உள்ளிட்ட கால்நடைகளை வேளாண்மைக்குப் பயன்படுத்தினர். தன்னைச்சுற்றியிருக்கும் உயிரினங்கள் குறித்த அறிவைத் தமிழர்கள் பெற்றிருந்தனர் என்பதற்கு, அவர்கள் வகுத்த ஐந்திணையின் கருப்பொருள்கள் சான்றுரைக்கின்றன. நடமாடும் உயிரினங்களோடு, தாவர வகை உயிரினங்களின் தன்மையையும், அவற்றின் இயல்புகளையும் அறிந்து பயன்படுத்தினர் என்பதற்கு இலக்கியங்கள் பல சான்றுரைக்கின்றன.
உயிர்களின் பகுப்பு முறை
தொல்காப்பியர் உயிர்களை ஆறு வகைப்படுத்தியுள்ளார்.
அறிவு நிலை |
அறிகின்ற ஆற்றல் |
உயிர்கள் |
ஓர் அறிவு |
தொடுதல்
உணர்வு |
புல், மரம் |
ஈரறிவு |
உற்று அறிதல், சுவைத்தல் |
நத்தை, சிப்பி |
மூவறிவு |
உற்று அறிதல், சுவைத்தல், நுகர்தல் |
கறையான், எறும்பு |
நான்கறிவு |
உற்று அறிதல், சுவைத்தல், நுகர்தல், காணல் |
வண்டு, தும்பி |
ஐந்தறிவு |
உற்று அறிதல், சுவைத்தல், நுகர்தல், காணல், கேட்டல் |
விலங்கினங்கள் |
ஆறறிவு |
உற்று அறிதல், சுவைத்தல், நுகர்தல், காணல், கேட்டல் |
மனிதன் |
தாவரவியல்
தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதைத் தொல்காப்பியர் கூறியுள்ளார். நற்றிணையின் ஒரு பாடலைச் சான்றாகக் காட்டலாம். “நெய்தல் நிலத் தலைவனே! எம் அன்னை எம்மை நோக்கி, நீ வளர்த்து வரும் புன்னையானது
நம்மைவிட சிறந்ததன்றோ, அது நம்முடன் பிறந்த
தங்கை என தகுதியுடையது என்று இதன் சிறப்பினை
விளங்கவுரைத்தனள்; ஆதலால் என் தங்கையாகிய
இப் புன்னையின் எதிரில் உம்மொடு நகைத்து விளையாடி மகிழ்வதற்கு நான்
வெட்கமடைகின்றேன்” என்று தலைவி கூறுகின்றாள். இதன் மூலம் தாவரங்களுக்கு உயிர் உண்டு என்பதை இப்பாடல் உணர்த்துகின்றது. இதே போன்று குறிஞ்சிப்பாட்டில் 99 வகையான மலர்கள் கூறப்பட்டுள்ளன. சங்க காலத்தில் கேழ்வரகு, வரகு, கம்பு, சோளம், திணை, சாமை, பாசிப்பயறு, உளுந்து, அவரை உள்ளிட்ட சிறுதானியப் பயிர்கள் அதிகமாக விளைவிக்கப்பட்டன. வேளாண்மை செய்து உலகிற்கே உணவிட்டு உயிர்கொடுத்த உழவர்களைத் தமிழ்ச் சமூகம் போற்றியது.
விலங்கியல்
பண்டைத் தமிழிலக்கியங்களில் விலங்குகளின் உடற்கூற்றியல், அவற்றின் செயல்பாடுகள், பண்புகள், பயன்கள், அவற்றை வயப்படுத்தும் முறைகள், விலங்குகளுக்கான மருத்துவம் போன்றவை பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, யானை, குதிரை, எருது, பசு, மான், ஆடு, நரி, புலி, குரங்கு, பன்றி முதலிய விலங்குகள் குறித்தும், பாம்பு, பல்லி போன்ற ஊர்வன குறித்தும், மீன்கள், ஆமை போன்ற நீர்வாழ் உயிர்கள் குறித்தும் பல செய்திகள் இடம் பெற்றுள்ளன.
·
சிற்றுயிரி என்ற வகையில் குறுந்தொகையில் அணில் முதன்மை பெறுகின்றது. அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்
மக்கள் போகிய அணிலாடு முன்றில் (குறுந்தொகை 41) என்ற பாடலில் அணில் ஆடுகின்ற பழமையான இல்லத்தைக் காண முடிகின்றது.
·
பெரிய விரல்களையும் சிவந்த முகத்தினையும், வெண் பற்களையும் சூலுற்ற பெண் குரங்கை, “கருவிரல் செம்முக வெண்பல் சூல் மந்தி பருவிரலால் பைஞ்சுனை” (திணைமாலை.101) என்ற பாடல் காட்டுகின்றது.
·
“யானை அறிந்ததறிந்து பாகனையே கொல்லும்“என்று யானையின் இயல்பை நாலடியார் கூறுகின்றது.
·
பாம்புகளைக் கண்டால் அச்சமும் நடுக்கமும் குரங்குகளுக்கு ஏற்படும். இதனை, “பைங்கண் ஊகம் பாம்புபிடித் தன்ன அங்கோட்டுச் செறிந்த அவிழ்ந்து வீங்கு” (சிறுபாண்) என்ற பாடல் தெரிவிக்கின்றது.
·
புலியும் யானையும் வலிமை மிக்க விலங்குகள். இவை இரண்டும் காட்டில் ஒன்றாக இருந்ததில்லை. உணவுக்காக ஒன்றையொன்று போரிட்டுக் கொள்ளும். புலியும் யானையும் போரிடும் செய்திகள் அடங்கிய பாடல்கள் பல இருக்கின்றன. ஆண் யானைகள் புலியிடமிருந்து கன்றைக் காத்தமையை அகநானுற்றுப் பாடல் (168) தெரிவிக்கின்றது.
·
இரலைமானின் வயிற்றுப்புறம் வெண்மையாகவும், முதுகுப்புறம் கருமையாகவும் இருக்கும் என்பதை, அகநானூற்றின் 139 ஆவது பாடல் கூறுகின்றது.
·
காட்டுப்பன்றியின் தலை உரல் போல் காணப்படும் என்பதை மதுரைக்காஞ்சியும், புறநானூறும் குறிப்பிடுகின்றன.
இதுபோன்ற கருத்துகளால் விலங்கினங்களைக் குறித்த அறிவைத் தமிழர்கள் பெற்றிருந்தனர் என்பதை அறிய முடிகின்றது.
பறவையியல்
பறவைகளின் உடலமைப்பு, ஒலி எழுப்புகின்ற தன்மை, அதன் செயல்பாடுகள் ஆகியவற்றைப் பொறுத்து அடையாளப்படுத்தப் படுகின்றன்றன. சங்க காலத்தில் பறவைகளுக்கும் பயிற்சிகள் கொடுத்து பழக்கப்படுத்தப்பட்டன.
·
மன்னன் பாரி அரண்மனையில் பாசறையமைத்து உள்ளிருந்த காலத்தில் அரண்மனைப் பறவைகளின் கூட்டம் காலையில் வெளியில் சென்று நெற்கதிர்களைக் கொண்டு வந்து தந்தது என்பதை அகநானூறு 303 ஆவது பாடல் காட்டுகின்றது.
·
எயினன் மிஞிலியுடன் நிகழ்ந்த போரில் வீழ்ந்தபோது பறவைகள் ஒன்றுகூடி வானில் நின்று அவன் மீது கதிரவன் ஒளிபடாமல் காத்தன என்பதை அகம்
208ஆவது பாடல் தெரிவிக்கின்றது.
·
கிளிகளுக்கு மறைகள் பழக்கப்பட்டன என்பதை பட்டினப்பாலை 261 கூறுகின்றது.
பூச்சிகள்
இதுவரை
1.3 மில்லியன் பூச்சி இனங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களில் புழு பூச்சிகள் குறித்த நுட்பமான செய்திகள் காணப்படுகின்றன. பூச்சிகளின் செயல்பாடுகள், உடலமைப்பு, சிறப்புத் தன்மைகள் போன்றவை பதிவு செய்யப்பட்டுள்ளன. வண்டு, தும்பி, தேனீ, சிதர், சிலந்தி, கோபம் முதலிய பூச்சியின்றகள் குறித்த செய்திகள் காணப்படுகின்றன. பூச்சிகளுக்குத் துன்பம் இழைக்காத வாழ்வியலைத் தமிழர்கள் கொண்டிருந்தனர் என்பதற்கு,
பூத்த பொங்கர் துணையொடு வதிந்த
தாதுஉண் பவ்வை பேதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன் (அகம் 4)
என்ற பாடல் சான்றுரைக்கின்றது.
உயிரியலில் சில வியப்புபூட்டும் உண்மைகள்
உயிரினங்களில் சில வியப்பூட்டும் செய்திகளை இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.
சிலம்பிற்குத் தன்சினை கூற்றம் நீள்கேடு
விலங்கிற்குக் கூற்றம் மயிர்தான் – வலம்படா
மாவிற்குக் கூற்றமாம் ஞெண்டிற்குத் தன் பார்ப்பு
நாவிற்கு நன்றல் வசை (சிறுபஞ்ச மூலம் 9)
என்ற பாடலில் சிலந்திக்கு அதன் முட்டையும், கொம்புடைய விலங்குகளுக்கு அதன் கொம்புகளும், கவரிமானுக்கு அதன் முடியும், நண்டுகளுக்கு அதன் குட்டிகளும் எமனாக வந்து அமையும் என்ற கருத்து கூறப்படுகின்றது. இதனால் விலங்கினங்களின் இயல்பை தெளிவுற அறிந்துள்ளனர் பண்டைத் தமிழர்கள் என்பது பெறப்படுகின்றது.
மனிதர்க்கு அரியவை
பிற உயரினங்கள் செய்கின்ற வேலையை ஆறறிவு கொண்ட மனிதர்களால் செய்ய முடியாது என்ற கருத்தை,
வான்குருவிக்கூடு அரக்கு வால் உணலண்டு கோல்தருதல்
தேன் புரிந்து யார்க்கும் செயலாகா (சிறுபஞ்ச மூலம் 27)
என்ற பாடல் தெரிவிக்கின்றது. தூக்கணாங்குருவிக் கூடு, எறும்புகளால் செய்யப்படும் அரக்கு, புழுவின் நூல், தேனீக்களின் தேன் ஆகியவை வியப்பிற்குரியவை என்பதை அறியலாம்.
இதுகாறும் கண்ட செய்திகளால் பண்டைத் தமிழர்கள் உயிர்களைப் பற்றிய அறிவைக் கொண்டிருந்தனர் என்பது தெளிவாகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக