வெள்ளி, 21 மார்ச், 2025

தொழில் நுட்ப மேலாண்மை

 

தொழில் நுட்ப மேலாண்மை

நம் அறிவுக்குட்பட்டவாறு புதிய புதிய தொழில் நுட்பங்களை உருவாக்குவதும், அதைச் செயல்படுத்துவதும் தொழில் நுட்ப மேலாண்மையாகும். நாகரிகத்தை உலகிற்குக் கற்றுக் கொடுத்த நம் முன்னோர்கள் தொழில்நட்ப மேலாண்மையில் சிறந்து விளங்கியுள்ளனர். வேளாண்மை, நெசவு, மருத்துவம், கட்டிடம் என அனைத்துத் துறைகளிலும் தமிழர்கள் சிறந்திருந்தனர். இதற்குக் கீழடி, ஆதிச்ச நல்லூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளும் பல இலக்கியங்களும் சான்றுரைக்கின்றன. கட்டிடங்கள், சுடுமண் குழாய்கள், கழிவுநீர்க் கால்வாய்கள், உறை கிணறுகள், செங்கற்கள், மண்பாண்டங்கள், இரும்பு ஆயுதங்கள் ஆகியவை தமிழர்களின் தொழில்நுட்ப மேலாண்மைக்குச் சான்றுகளாகும்.

நெசவுத் தொழில்நுட்பம்

மனிதன் உடுத்துகின்ற ஆடை ஒரு சமூகத்தின் நாகரிகத்தைக் காட்டும் கண்ணாடி. ஆதி மனிதன் விலங்கின் தோலையும், இலைகளையும் தழைகளையும் கொண்டு தன் உடலை மூடினான். பிறகு பருத்தியைக் கண்டறிந்து உடைகளை உருவாக்கத் தொடங்கியமையை, “பருத்தி வேலிச் சீறூர்“ (புறம்.299) என்ற வரியால் அறியலாம். நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த மங்கையர் பருத்திப் பெண்டிர் என அழைக்கப்பட்டமையை, “பருத்திப் பெண்டிர் பனுவலன்ன” (புறம்.125) என்று புறநானூறு காட்டுகின்றது. பருத்தியால் ஆடைகளை நெய்தோடு, அதில் வண்ணம் ஏற்றுதல், பூ வேலைப்பாடுகள் செய்தல் முதலிய நுட்பங்களையும் தமிழர்கள் கையாண்டனர். ஆதிச்ச நல்லூரில் கிடைத்துள்ள தாழிகளில், மண்வெட்டி, நெல், உமி, இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன. உறையூரில், நெசவுத் தொழிலுக்குச் சாயமிடும் தொட்டி காணப்பட்டதாகக் கூறப்படுகின்றது. ஆடையின் தன்மைக்கேற்ப துகில், பூந்துகில், உடுக்கை, கலிங்கம் என ஆடைகளுக்குப் பல்வேறு பெயர்கள் வழங்கப்பட்டன என்பதை, “துகில்சேர் மலர் போல்” (பரிபாடல்), “நீலக்கச்சை” (புறநானூறு), “தோயாப் பூந்துகில்” (பெரும்பாணாற்றுப்படை), “ஒண்பூண் கலிங்கம்” (புறநானூறு) என்று பல இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

இயந்திரத் தொழில்நுட்பம்

நம் முன்னோர்கள் இயந்திரத் தொழில்நுட்பத்தைப் பல வகைகளில் பயன்படுத்தினார்கள் என்பதை இலக்கியங்களின் வாயிலாக அறிய முடிகின்றது.

  • கரும்பைப் பிழிவதற்கு இயந்திரங்கள் உருவாக்கப்பட்டிருந்தமையைதீம்பிழி எந்திரம் பத்தல் வருந்த” (பதிற்றுப்பத்து 13) என்ற வரியால் அறியலாம்.
  • ஆழ்துளைக் கிணறு இருந்தமையை, “அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்” (பெருங்கதை 1) என்பதால் அறியலாம்.
  • செயற்கை நீருற்று இருந்தமையை நெடுநல்வாடையின் மூலம் அறியலாம்.
  • ஆள் இல்லா விமானம் குறித்துவலவன் ஏவா வானவூர்திஎன்று புறநானூறு குறிப்பிடுகின்றது.
  • சீவகசிந்தாமணி மயிற்பொறி குறித்து கூறுகின்றது.

மருத்துவத் தொழில்நுட்பம்

இன்றைய மருத்துவத்தின் தொழில்நுட்பம் குறித்து நம் முன்னோர்கள் நன்றாக அறிந்திருந்தனர் என்பதைப் பின்வருமாறு அறியலாம்.

  • சங்க இலக்கியங்களில் அறவோன், மருத்துவன் என்றும், திருக்குறளில் கற்றான், தீர்ப்பான் என்றும் மருத்துவர்கள் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றனர்.
  • மருத்துவத்திற்கான இலக்கணத்தை வள்ளுவரும் நோய்நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்என்று கூறுகின்றார்.
  • புண்ணுக்கு மருந்து வைக்கும்போது, புண்ணின் மேல் பஞ்சு வைத்துக் கட்டும் இருந்ததை, “பஞ்சியும் களையாப் புண்ணர்” (புறம்.353) என்று புறநானூறு கூறுகின்றது.
  • அறுவை மருத்துவத்தில், நம் முன்னோர் அறுக்க வேண்டிய இடத்தில் அறுத்துக் குருதியை வெளியேற்றி, அவ்விடத்தைச் சுட்டுப் புண்ணுக்கு மருந்திட்டனர் என்பதை, “வாளால் அறுத்துச் சுடினும்” (பெருமாள் திருமொழி) என்ற வரியால் அறியலாம்.

கட்டிடத் தொழில்நுட்பம்

தமிழர்கள் நிலையானதொரு இடத்தில் தங்கள் வாழ்க்கையை வாழக் கற்றிருந்தனர். அதனால் தமக்கென்று வீடுகளையும், கோயில்களையும் உருவாக்கினர். மன்னர்களுக்கென்று மனை வகுக்கப்ட்டமையை, “பெரும்பெயர் மன்னர்க்கொப்ப மனை வகுத்துஎன்று நெடுநல்வாடை குறிப்பிடுகின்றது. வீடுகள் கட்டுவதற்குத் திசைகள் பார்க்கப்பட்டன. வீடுகள் நிலா முற்றங்களோடும், மாடங்களோடும் கட்டப்பட்டன. கோயில்களின் கட்டிடக்கலை உலக மக்களை வியப்பில் ஆழ்த்துகின்றது.  தஞ்சை பெரிய கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட பல கோயில்களின் கட்டுமானப் பணிகள் நம் முன்னோர்களின் கட்டிடக்கலை தொழில்நுட்பத்திற்குச் சான்று கூறுகின்றன.

போர்த்தொழில்நுட்பம்

போர்க்களக் கருவிகளை உருவாக்குவதில் தமிழர்கள் சிறந்திருந்தனர். அவற்றைக் கையாள்வதிலும், வடிவமைப்பதில் திறமையுடையவர்களாக இருந்தனர். வாள், வேல், வில், அரிவாள், எஃகு, கேடகம், கலப்பை, குறடு, கோடாலி, மழு எனப் பல்வேறு போர்க்கருவிகளை உருவாக்கிய பெருமை நம் முன்னோர்களுக்கு உண்டு. போரில் வெற்றி பெற்ற வின் வீரர்கள் தோற்ற நாட்டில் படை வீடு அமைத்துத் தங்குவர். அப்படைவீடு சிதைந்த போர்க்கருவிகளைக் கொண்டு கட்டப்பட்டு இருக்கும் என்பதை முல்லைப்பாட்டு வெளிப்படுத்துகின்றது.

முடிவுரை

கப்பற்கலை, சிற்பக்கலை, மரவேலை, மண்பாண்டக்கலை, தையற்கலை, நகைக்கலை என அனைத்துக் கலைகளிலும் சிறந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி, அவற்றைப் பயன்படுத்திய நம் முன்னோர்களின் அறிவுத்திறன் வியக்க வைக்கின்றது.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக