ஞாயிறு, 23 மார்ச், 2025

காப்பியங்களில் அறிவியல்

 

காப்பியங்களில் அறிவியல்

வானியல்

பழந்தமிழர்கள் சூரியனையும் சந்திரனையும் ஆராய்ந்தவர்கள். அவர்களின் அறிவியல் அறிவு அணுவில் தொடங்கி அண்டம் வரை விரிவடைந்துள்ளமை வியப்பிற்குரிய ஒன்று. சூரியன் மிகவும் தொலைவிலும், குறிப்பிட்ட அச்சில் சாய்ந்தும் இருப்பதால் சிதறடிக்கப்படும் நீலநிற ஒளி வேறு திசைக்குச் சென்று விடுகின்றது. கடலின் மேற்பரப்பில் உள்ள காற்றில் காணப்படும் உப்புத் துகள்களால் கடலுக்கு அண்மையில் சூரியன் மறையும்போது சிவப்பு நிறமாகத் தோன்றுகின்றது. சூரியத் தோற்றத்தின்போதும், மறைவின்போதும் சூரிய ஒளி வளிமண்டலத்தின் வழியாகச் செல்கிறது. அந்நேரத்தில் நீல நிறமானது சிதறியிருக்கின்ற காரணத்தினால் சிவப்பு மற்றும் அதைச் சார்ந்த நிறங்களான ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ணத்தில் ஒளிரும். இதனை,

விண்ணிய துருவ வீதி மேனின்று மிழிந்து வெய்யோன்

கண்ணியல் விலங்கன் எற்றி கதிரென்னுங் கையினூன்றி

மண்ணியன் மரத்தின் சாகை நுதிபிடித் தவையம் விட்டுப்

பண்ணியல் பிறிதொன்றாகிப் பையவே மறைந்து போனான் (1026)

என்ற சூளாமணிப் பாடல் தெரிவிக்கின்றது. ஐம்பூங்களுக்கும் ஆற்றலைத் தருவது ஞாயிறே என்பதை உணர்ந்தே இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில், “ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்என்று பாடியுள்ளார். கதிரவன் ஓர் ஆண்டில் வடக்கேயும், தெற்கேயும் நகர்வதால் பருவகாலங்கள் தோன்றுகின்றன. கதிரவன் தெற்கு நோக்கிப் பயணம் செய்தால் மழை குறைந்து குளிர் பனிக்காலம் தொடங்கும். இதனை,

விரிகதிர் மண்டிலம் தெற்கு ஏர்பு, வெண்மழை

அரிதின் தோன்றும் அந்திரக் காலையும் (சிலப்பதிகாரம்)

என இளங்கோவடிகள் பாடியுள்ளார். சூரியன் வடக்கு நோக்கிப் பயணம் செய்கின்ற காரணத்தால் பின்பனி, இளவேனில், முதுவேனில் காலங்கள் தோன்றுகின்றன என்பதை,

மாசறு விசும்பின் வெய்யோன்

வடதிசை அயணம் முன்னி (சீவக.851)

என்று சீவக சிந்தாமணி பாடுகின்றது. மேலும், சூரிய கிரகணம் குறித்து, ஊழ்திசை பாம்பு சேர்ந்த ஒளிமிகு பகுதி ஒத்தான்(சீவக.பா.1138) என்றும், சந்திர கிரகணம் குறித்து, சேணிடை அரவு சேர்த்த திங்களை ஒத்தது அன்றே (சீவக.2461) என்றும் கூறுகின்றது. சூரியன் நிலவை மறைக்கும்போது தன் நிலையில் இருந்து மாறும் என்பதை,

வேனல் அம்கிழவனோடு வெங்கதிர் வேந்தன்

தான்நலம் திருகத் தன்மையின் குன்றி

எனச் சிலப்பதிகாரமும் பாடுகின்றது. காந்தருவதத்தையின் முகம் நிலவைப் போன்று இருந்தது என்றும், அவள் காதில் அணிந்திருந்த குண்டலம் நிலவுக்கு அருகில் இருக்கும் வியாழன் போன்று இருந்தது என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் நிலவுக்கு அருகே வியாழன் இருக்கின்ற அறிவியல் செய்தியைப் பண்டைத் தமிழ்ப்புலவர்கள் அறிந்துள்ளனர் என்பதை அறியலாம். இவற்றைக் காணும்போது தமிழர்கள் தன்னைச் சுற்றியுள்ள இயற்கையினின்று அறிவியலைத் தன் அனுபவத்தால் பெற்றுள்ளனர் என்பது தெரிகின்றது.

காப்பியங்களும் வானூர்தியும்

பறவைகள் இறகின் துணை கொண்டும், காற்றின் துணை கொண்டும் பறக்கின்றன என்பதை நன்குணர்ந்த காப்பியப் புலவர்கள், தங்கள் காப்பியங்களில் அதனை மயிற்பொறி, புட்பக விமானம், வானூர்தி என விவரித்துக் கூறியுள்ளனர். சிலப்பதிகார மதுரைக் காண்டத்தில் மலைக்குறவர் தங்கள் கண்ணெதிரே வானிலிருந்து வந்திறங்கிய விமானத்தில் கண்ணகி சென்ற காட்சியை,

வாடா மாமலர் மாரி பெய்தாங்கு

அமரர்க் கரசன் தமர்வந் தேத்தக்

கோநகர் பிழைத்த கோவலன்தன்னொடு

வானஊர்தி ஏறினள் (சிலப்.23-196-199)

என்ற பாடல் தெரிவிக்கின்றது. வானூர்தி செய்யப்பட்ட முறையை,

பல கிழியும் பயினுந் துகில் நூலொடு

நல்லரக்கும் மெழுகும் நலஞ்சான்றன

வல்லனவும் அமைத் தாங்கெழு நாளிடைச்

செல்வதோர் மாமயில் செய்தனன்றே (சீவக.235)

என்று சீவக சிந்தாமணி கூறுகின்றது. பல சீலைகள், வெள்ளிய நூல், நல்ல அரக்கு மற்றும் மெழுகால், ஏழு நாட்கள் வரை வானிலே பறந்து திரியக்கூடிய ஒரு வானூர்தியைத் தச்சன் செய்தான் என்பது அதன் விளக்கம் ஆகும். இதைப் போன்றே உதயணக் குமார காவியத்தில் உதயணன் தேரினைக் கொண்டு வானில் பறந்தான் என்றும், கம்பராமாயணத்தில் இராமனும் இலக்குவனும் சீதையைத் தேடிச் சென்றபோது விமானத்தின் சக்கரச் சுவடுகள் தெரிவதைக் கண்டனர் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மருத்துவ அறிவியல்

கண்ணப்ப நாயனார் இறைவன் கண்ணில் குருதி வருவதைக் கண்டதும் தன் கண்ணைப் பெயர்த்து அப்பினார் என்பதை,

உள்ள நோய் தீர்ப்பது ஊனுக்கு

ஊன் உன்னும் உரைமுன் கண்டார்

என பெரிய புராணம் பாடுகின்றது. இதனை உறுப்பு மாற்ற சிகிச்சையாகக் கொள்ள முடிகின்றது. கம்பராமாயணத்தில், கட்டியை வைத்து அதனுள் இருக்கும் இரத்தத்தை வெளியேற்றி நெருப்பில் வாட்டி கிருமிகளைக் கொன்று மருந்து வைத்தனர் என்பதை,

உடலடைத் தோன்றிற்று ஒன்றை

அறுத்து அதன் உதிரம் ஊற்றி

சுடலுறச் சுட்டு வேறோர்

மருந்தினால் துயரம் தீர்ப்பர் (கம்ப.7417)

என்ற பாடல் தெரிவிக்கின்றது. சிலப்பதிகாரத்தில், கீரந்தையின் கதவைத் தான் தட்டியதற்குத் தண்டனையாக தன் கையைத் தானே துண்டித்துக் கொள்கிறான் பாண்டியன். அதன்பின் பொன்னாலாகிய கையைச் செய்து வைத்துக் கொண்டதால் பொற்கைப் பாண்டியன் என்று அழைக்கப்பட்டான் என்பதை,

நாடு விளங் கொண்புகழ் நடுகதல் வேண்டித்தன்

ஆடுமழைத் தடக்கை அறுத்து முறை செய்த

பொற்கை நறுந்தார்ப் புனைதேர்ப் பாண்டியன் (சிலம்பு)

என்பதால் அறியலாம். இதனால் உறுப்பு மாற்ற அறுவைச் சிகிச்சையை அறிமுகம் செய்தவர்கள் தமிழரே என்பதில் பெருமை கொள்ளலாம்.

வேதியியல்

சிலப்பதிகாரத்தில் வேதியியல் கூறுகள் கொண்ட பாடல்கள் காணப்படுகின்றன. மணிகள் ஒளிவிடும் தன்மையினால் வேறு வேறு பெயர்களைப் பெற்றுள்ளன என்பதை,

ஒருமைத் தோற்றத்தை – வேறு வனப்பின்

இலங்குகதிர் வடூஉம் நலங்கெழு மணிகளும் (சிலம்.191-192)

என்ற வரிகள் தெரிவிக்கின்றன.

முடிவுரை

நம் முன்னோர்கள் அறிவியல் சிந்தனைகளில் சிறந்து விளங்கியவர்கள் என்பதை மேற்குறித்த செய்திகள் மெய்ப்பிக்கின்றன. காப்பியப்புலவர்கள் தங்கள் விரிந்து பரந்த அறிவுத் திறனைக் காப்பியங்களில் வெளிப்படுத்தியுள்ளமை தமிழுக்குக் கிடைத்த பெருமையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக