பண்டைத் தமிழ் இலக்கியங்களில் உலோகவியல்
கற்கால நாகரிகத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, மனித இனத்தைத் தொழில்நுட்பம் சார்ந்த உயிரினமாகப் பரிணாமம் கொள்ளச் செய்தது உலோகவியல். பூமியின் அடியிலிருந்து எடுக்கப்படுகின்ற பொன், செம்பு, தாமிரம், இரும்பு உள்ளிட்ட உலோகங்களை முறையாகப் பயன்படுத்துகின்ற தன்மையை ஆராய்கின்ற துறையாக உலோகவியல் செயல்படுகின்றது.
உலோகங்களின் வகைகள்
ஜார்ஜியஸ் அக்ரிகலோ உலோகவியலின் தந்தை எனப்படுகின்றார். 19ஆம் நூற்றாண்டின் இறுதி வரை உலோகவியல் ஒரு கலையாக மட்டுமே பார்க்கப்பட்டது. 20ஆம் நூற்றாண்டில் படிப்படியாக வளர்ச்சியடைந்த உலோகவியல் ஒரு அறிவியல் துறையாக மாறியது. உலோகங்களைத் தனித்த உலோகம் (தங்கம்), கலப்பு உலோகம் (செப்பு + வெள்ளி = வெண்கலம்) என்று இருவகையாகப் பிரிக்கலாம். தாதுக்கள் சேகரிக்கப்படும் திறம், உலோகங்களின் அமைப்பு, அதன் எடை மற்றும் சுடர் நிறம், சூடுபடுத்தும்போது உண்டாகும் மணம் ஆகியவற்றின் அடிப்படையில் உலோகங்கள் வேறுபடுத்தி அறியப்பட்டன.
தமிழரும் உலோகவியலும்
வெம்பக்கோட்டை, ஆதிச்சநல்லூர், கீழடி ஆகிய இடங்களில் நடத்தப்பெற்ற அகழாய்வுகளில் எண்ணற்ற உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், பண்டைத் தமிழர்கள் உலைக்களங்கள், உலோகப் புழங்கு பொருட்கள், அணிகலன்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தியுள்ளனர் என்பது கண்டறியப்பட்டது. மயிலாடும்பாறை என்னும் இடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில் 70 செ.மீ நீளம் கொண்ட இரும்புக் கத்திகள், இரும்பு வாள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் ஏறத்தாழ 4200 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இரும்பு பயன்பாட்டிற்கு வந்துள்ளது என்பது தெரிகிறது.
சங்க காலத்தில் பொன், வெள்ளி, இரும்பு
பொன்னைத் தோண்டி எடுத்தல், உருக்குதல், உலைக்களம், உலோகவியல் தொழிலாளர், உலோக அணிகலன்கள், உலோகக் கட்டுமானங்கள் ஆகிய பல செய்திகளைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.
சங்க காலத்தில் தங்கத்தின் பயன்பாடு மிகுதியாக இருந்துள்ளது. புறநானூற்றில் கழஞ்சு என்ற சொல் பொன்னைக் குறிப்பிடுகின்றது. தமிழர்கள் உலோகத் தாதுக்களைக் கண்டறிந்து, அவற்றை வெட்டி எடுக்கவும், அவற்றை உருக்கிப் பிரித்தெடுக்கவும், பிரித்தெடுத்த உலோகங்களைக் கொண்டு கருவிகள், அணிகலன்கள், எந்திரங்கள், பயன்பாட்டுப் பொருட்கள், படைக்கலங்கள் போன்றவற்றை உற்பத்திச் செய்யவும் அறிந்திருந்தனர். இதனை,
பெருமலைச் சிலம்பின் வேட்டம் போகிய
செறிமடை அம்பின் வல்வில் கானவன்
பொருதுதொலை யானை வெண்கோடு கொண்டு
நீர்திகழ் சிலம்பின் நன்பொன் அகழ்வேன் (அகநானூறு28)
என்று அகநானூறு பாடுகின்றது. மேலும், வெள்ளி குறித்து “வெள்ளி அன்ன விளங்கும் சுதை” என்று நெடுநல்வாடையும், செம்பு குறித்து “செம்பியன் றன்ன செஞ்சுவர் புனைந்து” என்று மதுரைக்காஞ்சியும், இரும்பு குறித்து “இரும்பு செய் கொல் எனத் தோன்றும்” என்று அகநானூறும் குறிப்பிடுகின்றன. இரும்பின் கண்டுபிடிப்பு சமூகத்தில் மிகப்பெரும் புரட்சியை விளைவித்தது. சங்க இலக்கியங்களில் இரும்பானது, பொன், கரும்பொன், இரும்பொன், ஊதுகுறடு, கருந்தாது எனப் பல பெயர்களில் வழங்கப்பட்டுள்ளன. இதனை, “இரும்பொன்
வாகைப் பெருந்துறைச் செருவில்”
(அகநானூறு 199: 19) என்ற அகநானூற்றுப் பாடலின்வழி காணலாம்.
வணிகம் –
தொழிலகம்
உலோகப் பொருள்களின் விற்பனைக்குத் தனியே தெருக்கள் இருந்தமையை பதிற்றுப்பத்து குறிப்பிடுகின்றது. உலோகத் தொழிலாளர்கள் “கொல்லன்” (பெரும்.20)
“கம்மியன்” (நெடுநல்.57) என்ற பெயர்களால் அறியப்பட்டனர். பொன்னைப் புடமிடும் தொழிலை அறிந்திருந்தனர் என்பதற்கு, “சுடுபொன் ஞெகிழத்து முத்தரி சென்றார்ப்ப” (பரிபாடல் 21- 18) என்றும், “சுடச் சுடரும் பொன்போல்” (குறள்
267) என்ற இலக்கியங்கள் சான்றளிக்கின்றன. இரும்பை உருக்கினால் எஃகு கிடைக்கும். அதனைக் கொண்டு பல கருவிகளைச் செய்தோரைக் கொல்லர்கள் என்று அழைத்தனர். இவர்களின் தொழிற்கூடம் உலை என்று அழைக்கப்பட்டது. இதை, “இரும்பு பயன்படுக்குங் கருங்கைக் கொல்லன்” (புறநானூறு 170) என்று புறநானூறு கூறுகின்றது.
முடிவுரை
தமிழர்கள் உலோகங்களை மிகத் திறமையாகக் கையாண்டனர் என்பதற்குப் பண்டைய போர்க்கருவிகளும், உலைக்களங்களும், பொற்காசுகளும், அணிகலன்களும் சான்றுரைக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக