சிற்றிலக்கியங்களில் அறிவியல்
அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு உறுதிப் பொருள்களுள் எவையேனும் ஒன்றையோ அல்லது இரண்டையோ பற்றிக் கூறும் இலக்கியம் சிற்றிலக்கியம் எனப் பெயர் பெற்றது. அச்சிற்றிலக்கியங்களுள் பிள்ளைத் தமிழ், அந்தாதி, தூது, கலம்பகம், பரணி, குறவஞ்சி, பள்ளு, கோவை உள்ளிட்ட சிற்றிலக்கியங்கள் சிறப்புப் பெறுகின்றன. இவ்வகை இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள அறிவியல் செய்திகளைப் பின்வருமாறு காணலாம்.
வானியல் அறிவு
உழவுத் தொழிலை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட இலக்கியம் பள்ளு இலக்கியம் ஆகும். பள்ளர்களின் வாழ்க்கை இயற்கையோடு இயைந்த வாழ்க்கை. காற்று வருகின்ற திசையையும், மண்ணின் தரத்தை அறிந்து பயிரிடும் முறையையும் நன்கு அறிந்தவர்கள் பள்ளர்கள்.
இன்று நாளை வெள்ளம்வரத் தென்றல் வீசுது – விண்ணில்
இந்திரவில்லும் இட்டதுகார் வந்து விட்டது
குன்றிலே ஒழுங்காய்மஞ்சு சென்றிறங்குது – கொல்லம்
கொங்குமின்னல் எங்கும் மின்னி குதூகலிக்குது
அன்றில் தேரை தாலம் நீரில் சென்று அலறுது – சேல்வந்து
ஆர்ப்பு அரவம் செய்யுது
என்று திருப்புடை மருதூர்ப் பள்ளு பாடுகின்றது. இதைப் போன்றே, தென்மேற்குத் திசையிலும், தென் கிழக்குத் திசையிலும் மின்னல் வீசும், மரக்கொம்புகளைச் சுற்றி காற்று அடிக்கும். கிணற்றில் தவளைகள் கூச்சல் போடும். நண்டுகள் தம் வளைக்குள் மழைநீர் புகுந்துவிடாதபடி பாதுகாக்கும். மழை நீரைத் தேடி வானம்பாடிப் பறவைகள் பறக்கும் என்று மழை வருவதற்கான அறிகுறிகளை முக்கூடற்பள்ளு இலக்கியம் காட்டுகின்றது. இதனை,
ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி
மலையாள மின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே
நேற்றும் இன்றும் கொம்பு சுற்றிக் காற்று அடிக்குதே
கேணி நீர்ப்படு சொறித் தவளை கூப்பிடுதே
சேற்று நண்டு சேற்றில் வளை ஏற்று அடைக்குதே
மழை தேடி ஒரு கோடி வானம் பாடி ஆடுதே
என்ற பாடல் காட்டுகின்றது. இதன் மூலம் அக்கால மக்கள் வானிலை குறித்த அறிவினை பெற்றிருந்தனர் என்பதை அறியலாம்.
வேளாண்மை அறிவியல்
முக்கூடற்பள்ளு உழவுத் தொழிலை மையமாக வைத்துப் பாடப்பட்ட நூல் ஆதலின், வேளாண் அறிவியல் குறித்த பல செய்திகளை இந்நூலில் காணலாம். கோதுமைச் சம்பா, ஆனைக் கொம்புச் சம்பா, மூங்கிற் சம்பா. காடைக் ழுத்தன், சித்திரக்காலி, சிறை மீட்டான், மணல்வாரி, கருஞ்சுரை, சீரகச் சம்பா, முத்து விளங்கி, மலைமுண்டன், நெடுமூக்கன் உள்ளிட்ட 150 வகையான நெல் வகைகளை முக்கூடற்பள்ளு காட்டுகின்றது.
அண்ட அறிவியல்
இதுபோன்றே அண்டங்கள் தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும் இயல்பு உடையது என்பது அறிவியல் கண்ட உண்மை. அதனைத் திருக்குற்றாலக் குறவஞ்சியில்,
சாட்டி நிற்கும் அண்டமெலாம்
சாட்டையிலாப் பம்பரம்போல்
ஆட்டுவிக்கும் குற்றாலத்து அண்ணலார்
என்று திரிகூட இராசப்பக் கவிராயர் பாடியுள்ளார். சாட்டைத் துணை ஏதும் இல்லாமல் அண்டங்களைப் பம்பரத்தைப் போல ஆட்டி வைப்பது இறைவனே என்பது இதன் பொருள்.
இயற்பியல்
ஊசலின் நீளம் குறைவாக இருந்தால் விரைவாக ஆடும். ஊசலின் நீளம் அதிகமாக இருந்தால் மெதுவாக ஆடும் என்பது விஞ்ஞானி கலிலியோ அவர்கள் கண்டறிந்த உண்மை. இதனை,
மகரக்குழைகளும் ஊசலாட
பங்கய மடமாதர் நோக்கி இருவேம்ஆட்ட – அவ்வூசலில்
பாய்ந்திலது இவ்வூசல் என – நனிஆட்டுதோறும்
நின்னகை நிலவெழிலுக்கு அவர் முகத்
திங்கள் சாய.. (அமுதாம்பிகைப் பிள்ளைத்தமிழ்)
பாடுகின்றது. ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்ட உண்மைகளைத் தமிழர்கள் தங்கள் அனுபவத்தால் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளமை வியப்பிற்குரியது.
வளியியல்
காற்று குறித்த அறிவியலைத் தமிழர்கள் நன்கு அறிந்திருந்தனர். காற்று
தங்கும் இடம் உந்தி என வரையறுக்கின்றது தமிழ்விடுதூது. அக்காற்றே ஒலி எழுப்பி எழுத்துகளை
உண்டாக்குகின்றது என்பதை,
புண்ணயஞ் சேர் உந்தி பலத்தே வளி தரித்துக்
கண்ணிய வாக்கங் கருப்பமாய் – நண்ணி
தலை மிடறு மூக்கு உரத்தில் சார்ந்து இதழ் நா தந்தம்
உலைவிலா வண்ணத் துருவாய் (தமிழ்விடுதூது)
என்ற வரிகள் தெரிவிக்கின்றன. எழுத்துகள் பிறப்பதையே அறிவியல் தன்மையோடு
விளக்கிய பெருமை தமிழர்களுக்கு உண்டு என்பதை இதனால் அறிய முடிகின்றது.
உயிரியல்
உயிர்களில் நடப்பன, பறப்பன, ஊர்வன, தவழ்வன எனப் பலவகைகள் உண்டு. தமிழர்கள்
தங்களைச் சுற்றியுள்ள உயிர்களின் மீது கவனம் செலுத்தியவர்கள் என்பதை,
தத்துவன ஊர்வன தவழ்ந்திடுவன நிற்பன
தனித்தனி பறப்பனவுமே
எனத் தில்லைச் சிவகாமியம்மைப் பிள்ளைத்தமிழ் கூறுகின்றது.
உளவியல்
சிற்றிலக்கியங்கள் பெரும்பான்மையும் உளவியல் அடிப்படையிலே எழுதப்பட்ட
இலக்கியங்களாக அமைகின்றமை சிறப்பு. தலைவன் தலைவிக்கு இடையே நிகழ்கின்ற காதல் நிகழ்வுகளை
குற்றாலக் குறவஞ்சி தெற்றனெ விளக்குகின்றது. காதல் துன்பத்தால் தோன்றுகின்ற மனத்துன்பத்தை
கோவை இலக்கியங்களும், உலா இலக்கியங்களும் காட்டுகின்றன. பெண்களின் உடல் தன்மையை அறிந்து
ஏழு பருவங்களாக வகுத்து அவர்களின் வயதிற்கேற்ற உணர்வுகளை மிகச் சிறப்பாகப் படம் பிடித்துக்
காட்டுகின்ற உலா இலக்கியங்கள். தனக்குப் பிடித்த தலைவனையோ அல்லது இறைவனையோ குழந்தையாகப்
பாவித்துப் பாடுவதும் ஓர் உளவியலே.
சிற்றிலக்கியப் புலவர்கள் அறிவியல் பார்வையோடு இலக்கியங்களைப் படைத்துள்ளனர்
என்பதை இதுகாறும் கண்ட செய்திகள் மெய்ப்பிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக