புதன், 12 ஜூலை, 2023

எங்கள் தாய்

 

எங்கள் தாய்

பாரதியார்

தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும்

சூழ்கலை வாணர்களும் - இவள்

என்று பிறந்தவள் என்றுணராத

இயல்பின ளாம் எங்கள் தாய்.

யாரும் வகுத்தற்கு அரிய பிராயத்தள்

ஆயினுமே எங்கள் தாய் - இந்தப்

பாருள்எந் நாளும் ஓர் கன்னிகை என்னப்

பயின்றிடு வாள்எங்கள் தாய்.

முப்பதுகோடி முகமுடை யாள்உயிர்

மொய்ம்புற ஒன்றுடையாள் - இவள்

செப்பு மொழி பதினெட்டுடையாள் எனிற்

சிந்தனை ஒன்றுடையாள்.

நாவினில் வேதமுடையாள் கையில்

நலந்திகழ் வாளுடையாள் - தனை

மேவினர்க்கு இன்னருள் செய்பவள் தீயரை

வீட்டிடு தோளுடையாள்.

அறுபது கோடி தடக்கைகளாலும்

அறங்கள் நடத்துவள் தாய் - தனைச்

செறுவது நாடி வருபவரைத் துகள்

செய்து கிடத்துவள் தாய்.

பூமியினும்பொறை மிக்குடையாள் பெறும்

புண்ணிய நெஞ்சினள் தாய் - எனில்

தோமிழைப்பார் முன் நின்றிடுங் கார்கொடும்

துர்க்கை அனையவள் தாய்.

கற்றைச் சடைமதி வைத்த துறவியைக்

கைதொழுவாள்எங்கள் தாய் - கையில்

ஒற்றைத் திகிரி கொண்டு ஏழுலகாளும்

ஒருவனையுந் தொழுவாள்.

யோகத்திலே நிகரற்றவள் உண்மையும்

ஒன்றென நன்றறிவாள் - உயர்

போகத்திலேயும் நிறைந்தவள் எண்ணரும்

பொற்குவை தானுடையாள்.

நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி

நயம்புரிவாள் எங்கள் தாய் - அவர்

அல்லவர் ஆயின் அவரை விழுங்கிப் பின்

ஆனந்தக் கூத்திடுவாள்.

வெண்மை வளர் இமயாசலன் தந்த

விறன்மகளாம் எங்கள் தாய் - அவன்

திண்மை மறையினும் தான் மறையாள் நித்தம்

சீருறுவாள் எங்கள் தாய்.

விளக்கம்

பாரதியார் இப்பாடலில் பாரதத்தாயின் பெருமைகளையும், அவளுடைய இயல்புகளையும் விவரிக்கின்றார்.

  • எம் பாரதத்தாய் இந்திய நாட்டில் முற்காலத்தில் நிகழ்ந்தவை அனைத்தையும் உணர்ந்தவள். பல கல்வி கற்றவர்களால்கூட இவள் எப்போது, எக்காலத்தில் தோன்றினால் என்று கணிக்க முடியாத இயல்பை உடையவள்.
  • அறிவுத்திறன் மிக்க அறிஞர்களால் வகுத்துக் கூற முடியாத அளவிற்கு மிகப் பழமை வாய்ந்தவள். ஆனாலும் எப்போதும் இளமையுடன் காட்சியளிக்கும் சிறப்புடையவள்.
  • முப்பது கோடி மக்களின் தாயாக விளங்கியவள். தற்போது நூறு கோடி மக்களுக்குத் தாயாகத் திகழ்கின்றாள். எம் பாரத நாட்டில் பதினெட்டு மொழிகள் பேசுகின்ற மக்கள் வெவ்வேறு இனத்தைக் கொண்ட மக்கள் வாழ்கின்றனர். ஆயினும், அவர்கள் யாவரும் மொழி, இன வேறுபாடின்றி ஒரே சிந்தனை கொண்டவர்களாக விளங்குகின்றனர்.
  • வேதங்களால் சிறப்புப் பெற்றது பாரதநாடு. வேதங்களை ஓதுகின்ற நாவினை உடைய மக்கள் செல்வத்தைப் பெற்றவள். தன் கையில் நன்மை தருகின்ற வாளை உடையவள். அவளின் திருவடி அடைந்தவருக்கு இனிமையான அருளைத் தருபவள். தீயவர்களை அழித்திடும் வலிமை கொண்ட தோளினை உடையவள்.
  • முப்பது கோடி மக்களின் நீண்ட வலிமையான கைகளால் அனைத்து அறங்களையும் செயல்படுத்துபவள். தீய எண்ணங்களால் தன்னை அழிக்க எண்ணுபவர்களைத் தூள் தூளாக்கி ஒழித்து விடக்கூடிய வலிமை பெற்றவள். ஆகவே அவளை வெற்றி கொள்ள இந்த உலகில் யாருமில்லை.
  • இந்தப் பூமியைவிட பொறுமையானவள். பிறருக்கு நன்மை விளைவிக்கின்ற புண்ணியம் செய்கின்ற மனதை உடையவள். ஆனால், குற்றம் செய்பவர் யாராயினும் அவர்களை அழிக்கின்ற துர்க்கையைப் போன்றவள்.
  • சடை முடியையும், நிலவையும் தன் தலையில் வைத்திருக்கும் சிவனை வணங்குபவள். தன் கையில் சக்கர ஆயுதத்தை ஏந்தி நிற்கும் திருமாலையும் தொழுபவள். அதனால் அவளிடம் சமயக் காழ்ப்புணர்ச்சி இல்லை.
  • உடலுக்கும் மனதிற்கும் உறுதி தருகின்ற யோகங்களைக் கற்றவள். அதனால் இறைவன் ஒருவனே என்பதை நன்கறிந்தவள். இந்த நிலவுலகில் காணப்படுகின்ற அனைத்து வளங்களையும் பெற்றவள். அதனால் எண்ணிலடங்கா செல்வங்களைப் பெற்றவள்.
  • மக்களுக்கு நன்மை தருகின்ற வகையில் ஆட்சி புரிகின்ற மன்னர்களை வாழ்த்துபவள். அவர்களுக்கு நன்மையைத் தருபவள். ஆனால்,அவர்கள் தீய சிந்தனையுடன் மக்களுக்கு தீங்கிழைக்கின்றாராயின் அவர்களை அழித்துவிடத் தயங்காதவள். அத்தகையோரை அழித்துவிட்டு ஆனந்தக் கூத்தாடுபவள்.
  • பனி மலையாகிய இமயமலை தந்த மகள் எங்கள் பாரதத்தாய். அந்த இமயத்தின் வலிமை குறைந்தாலும் எங்கள் பாரதத்தாயின் வலிமை எப்போதும் குன்றாது. ஒவ்வொரு நாளும் வளங்களைப் பெற்று வாழ்கின்றவள். அதனால் தன் மக்களையும் வாழ வைக்கின்றவள்.

 




தமிழ்த்தெய்வ வணக்கம்

 

தமிழ்த்தெய்வ வணக்கம்

பேராசிரியர் பெ.சுந்தரனார்

ஆசிரியர் குறிப்பு

  • பேராசிரியர் பெ.சுந்தரனார் 1855 ஆம் ஆண்டு ஆலப்புழையில் பிறந்தார்.
  • பெற்றோர் திரு பெருமாள் பிள்ளை, மாடத்தி அம்மாள்.
  • திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் பயின்ற இவர் அக்கல்லூரியிலேயே தத்துவப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
  • தமிழன்னைக்குச் சிறப்பு சேர்க்க விழைந்து மனோன்மணீயம் என்ற ஒப்பற்ற நாடக நூலை 1891ஆம் ஆண்டு வெளியிட்டார்.
  • இந்நாடகம் ஆங்கிலத்தில் லிட்டன் பிரபு எழுதிய இரகசியவழி (The secret way) என்ற நூலைத் தழுவி எழுதப்பட்டது.

மனோன்மணீயம் – குறிப்பு

  • மனோன்மணீயம் என்ற நாடக நூலை இயற்றியவர் பேராசிரியர் பெ.சுந்தரனார்.
  • இந்நாடகம் ஆங்கிலத்தில் லிட்டன் பிரபு எழுதிய இரகசியவழி (The secret way) என்ற நூலைத் தழுவி எழுதப்பட்டது.
  • பின்னர் தோன்றிய நாடக நூல்களுக்கு முன்னோடியாக வழிகாட்டியாக இந்நூல் விளங்குகின்றது.

தமிழின் சிறப்பு

பாடல்

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்

தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!

விளக்கம்

  • நீர் நிறைந்த கடலை ஆடையாக உடுத்திக் கொண்டிருக்கும் நிலமகளுக்குச் சிறப்புப் பொருந்திய முகமாகத் திகழ்வது பரத கண்டம்.
  • அம்முகத்தின்கண் அமைந்துள்ள பிறைச் சந்திரன் போன்ற நெற்றியாகத் திகழ்வது தென்னிந்தியா.
  • அந்நெற்றியின்கண் அமைந்துள்ள திலகமாக விளங்குவது திராவிடத் திருநாடு.
  • அத்திலகத்தின் நறுமணம் போல உலகம் முழுவதும் இன்புற எத்திசையும் புகழ் மணக்கும் இயல்புடையது தமிழ்த்தெய்வமாகும்.
  • இவ்வாறு நிலத்தைப் பெண்ணாகவும், பாரதத்தைத் திருமுகமாகவும்,
  • தென்னிந்தியாவை நெற்றியாகவும், திராவிட நாட்டைத் திலகமாகவும், தமிழைத் தெய்வமாகவும் உருவகித்து, திலகத்தின் மணத்தைத் தமிழ் மணமாக்கிக் காட்டுகின்றார் பேராசிரியர்.

தமிழின் பெருமைகள்

உவமையில்லாத தமிழ்

கடல்குடித்த குடமுனி உன் கரைகாணக் குருநாடில்

தொடுகடலை உனக்கு உவமை சொல்லுவதும் புகழாமே

விளக்கம்

தேவர்களுக்கும் அரசர்களுக்கும் போர் நடைபெற்றபோது விருத்திராசுரன் கடலுக்கு அடியில் ஒளிந்து கொண்டான். இந்திரன் அவனைத் தேடிச் சென்றான். அகத்தியரிடம் இந்திரன் முறையிட அகத்தியர் கடல் நீரை ஒரு கையால் பருகினார். அசுரனை இந்திரன் கொன்றான். இவ்வாறு எல்லையற்ற கடலின் ஆழத்தையே கண்ட அகத்தியர் தமிழின் ஆழத்தை அறிய குருவாக இறைவனை நாடினார் எனில் கடலுக்குத் தமிழை உவமையாகக் கூறுவது புகழாகாது.

இலக்கணப் பெருமை

ஒரு பிழைக்கா அரனார்முன் உரை இழந்து விழிப்பாரேல்

அரியது உனது இலக்கணம் என்று அறைவதும் அற்புதமாமே

விளக்கம்

பாண்டியன் தன் ஐயத்தைப் போக்குவோர்க்குப் பரிசு அறிவித்திருந்தான். அதனைப் பெற விரும்பிய புலவர் தருமிக்குச் சிவபெருமான் “கொங்குதேர் வாழ்க்கை” என்னும் பாடலை இயற்றித் தந்தார். அப்பாடலில் பொருட்குற்றம் உள்ளது என நக்கீரர் இறைவனிடம் வாதாடினார். அவர் முன் இறைவன் உரை இழந்து விழித்தார். நெற்றிக் கண்ணைக் காட்டினார். நக்கீரரோ நெற்றிக் கண்ணைக் காட்டிலும் குற்றம் குற்றமே என வாதாடினார். இவ்வாறு தாம் செய்த ஒரு பிழைக்காக நக்கீரர் முன் இறைவனே பொருள் தெரியாமல் வழித்தார் எனில் தமிழின் இலக்கணம் மிகவும் அரியது என்பதை உணர முடிகின்றது.

பழம்பெரும் சிறப்பு

சதுமறை ஆரியம் வருமுன் சகம்முழுதும் நினதுஆயின்

முதுமொழி நீ அநாதி என மொழிகுவதும் வியப்பாமே

விளக்கம்

ரிக், யஜூர், சாமம், அதர்வணம் என்று கூறப்படுகுின்ற வேதங்கள் வடமொழியில் தோன்றுவதற்கு முன்பே இந்த உலகம் முழுவதும் தமிழ்மொழி பரவிவிட்டது. எனவே தமிழ்மொழி எல்லா மொழிகளுக்கும் மூலமொழியாக முதுமொழியா விளங்குவது வியப்பாகும்.

 

காலத்தால் அழிக்க இயலாத தமிழ்

வேகவதிக்கு எதிர்ஏற விட்டது ஒரு சிற்றேடு

காலநதி நினைக்கரவா காரணத்தின் அறிகுறியே

விளக்கம்

மதுரையில் சமணர்களுக்கும் திருஞானசம்பந்தருக்கும் இடையே புனல் வாதம் நடைபெற்றது. எவருடைய ஏடு ஆற்றின் போக்கை எதிர்த்துக் கரையேறுகின்றதோ அவர்தம் சமயமே மெய்ச்சமயம் என ஏற்பர். அதன்படி சமணர்களும் ஞானசம்பந்தரும் தத்தம் சமயக் கருத்துகள் அடங்கிய ஏடுகளை வையை ஆற்றில் விட்டனர். திருஞானசம்பந்தருடைய ஏடு ஆற்றில் எதிர் ஏறி கரை சேர்ந்தது. இச்செயல் காலமாகிய நதி தமிழை அழிக்க இயலாது என்பதன் அறிகுறியாகும்.

தனிமைக்குத் தக்கதோர் துணை திருவாசகம்

கடையூழி வருந்தனிமை கழிக்க அன்றோ அம்பலத்துள்

உடையார் உன்வாசகத்தில் ஒரு பிரதி கருதினதே

விளக்கம்

இவ்வுலகம் அழியும் கடையூழிக் காலத்தில் தம் தனிமையைப் போக்குவதற்காக சிவபெருமான் திருவாசகத்தின் ஒரு பிரதியை எடுத்து வைத்துக் கொண்டார். தமிழ் வாசகமாகிய திருவாசகத்தின் பெருமையை அறிந்து இறைவனே இவ்வாறு செய்தாரென்பது தமிழின் பெருமையை உணர்த்துகின்றது.

தமிழ்த் தகுதி உணர்த்தும் சங்கப் பலகை

தக்கவழி விரிந்திலங்கும் சங்கத்தார் சிறுபலகை

மிக்கநலம் சிறந்த உன் மெய்ச்சரித வியஞ்சனமே

விளக்கம்

புலமை உடையோரின் தகுதிக்கு ஏற்ப விரிந்து இடம் கொடுக்கும் தன்மை உடையது மதுரைச் சங்கப் பலகையாகும். கற்றறிந்தாரின் தமிழ்ப் புலமை அறிதற்குச் சங்கப் பலகை ஓர் அடையாளச் சின்னம் எனில் தமிழின் சிறப்பு அளவிடற்கு அரியது.

திங்கள், 22 மே, 2023

இழந்தவர்கள் - அப்துல் ரகுமான்

 

இழந்தவர்கள் - அப்துல் ரகுமான்

ஓடிக் கொண்டிருப்பவனே! நில்

எங்கே ஓடுகிறாய்?

எதற்காக ஓடுகிறாய்?

வாழ்க்கையைப் பிடிக்க ஓடினாய்

ஆனால் உன் கண் மூடிய ஓட்டத்தில்

அதைப் பார்க்காமலே ஓடுகிறாய்

நில் கவனி

உன்னிலிருந்தே ஓடுகிறாய்

உன்னை விட்டு ஓடுகிறாய்

குளிர்காயச்

சுள்ளி பொறுக்கத் தொடங்கினாய்

சுள்ளி பொறுக்குவதிலேயே

உன் ஆயுள்

செலவாகிக் கொண்டிருக்கிறது

நீ குளிர் காய்வதே இல்லை

வாழ்க்கை ஒரு திருவிழா

நீயோ அதைக் கொண்டாடுவதே இல்லை

கூட்டத்தில்

தொலைந்து போகிறாய்

ஒவ்வொரு வைகறையும்

உனக்காகவே

தங்கத் தட்டில்

பரிசுகளைக் கொண்டு வருகிறது

நீயோ பெற்றுக் கொள்வதே இல்லை.

ஒவ்வோர் இரவும்

உனக்காகவே

நட்சத்திரப் பூச்சூடி

ரகசிய அழகுகளோடு வருகிறது

நீயோ தழுவிக் கொண்டதே இல்லை

பூர்ணிமை

இரவுக் கிண்ணத்தில்

உனக்காகவே வழிய வழிய

மது நிரப்புகிறது

நீயோ அருந்துவதே இல்லை

ஒவ்வொரு பூவும்

உன் முத்தத்திற்கான இதழாகவே

மலர்கிறது

நீயோ முத்தமிட்டதே இல்லை.

மேகங்களில் கிரணங்கள்

உனக்காக ஏழு வர்ணங்களில்

காதல் கடிதம் எழுதுகின்றன

நீயோ படிப்பதே இல்லை.

உன்னைச் சுற்றிலும் சௌந்தர்ய தேவதை

காதலோடு புன்னகைத்துக் கொண்டிருக்கிறாள்

நீயோ பார்ப்பதே இல்லை

உன் மனைவியின் கொலுசில்

உன் குழந்தையின் சிரிப்பில்

உன் அண்டை வீட்டுக்காரனின்

கை அசைப்பில்

தெருவில் போகின்ற அந்நியனின்

திரும்பிப் பார்த்தலில்

வாழ்க்கையின் சங்கீதம் ஒலிக்கிறது

நீயோ கேட்பதே இல்லை.

தறி நாடாவைப் போல

இங்கும் அங்கும் அலைகிறாய்

ஆனால்

நீ எதையும் நெய்வதில்லை.

ரசவாதக் கல்லைத்

தேடி அலைகிறாய்

நீதான் அந்தக் கல் என்பதை

நீ அறியவில்லை.

கடிகார முள்ளாய்

சுற்றிக் கொண்டே இருப்பவனே

வாழ்க்கை என்பது

வட்டிமடிப்பதல்ல என்பதை

எப்போது உணரப் போகிறாய்?

நீ அர்த்த ஜீவனுள்ள

எழுத்துக்களால் ஆனவன்

ஆனால் நீயோ

வெறும் எண்ணாகிவிடுகிறாய்.

நீ முத்துக்கள் நிறைந்த சமுத்திரம்

ஆனால் நீயோ

கிளிஞ்சல் பொறுக்க

அலைந்து கொண்டிருக்கிறாய்.

நீ வயிற்றிலிருந்துதான் வந்தாய்

ஆனால் நீ

வயிற்றில் இல்லை.

வயிற்றில் விழுந்து கிடப்பவனே

மேல் இதயத்திற்கு ஏறு

அங்கே

உனக்கான ராஜாங்கம்

காத்திருக்கிறது.

இழந்தவர்கள் - அப்துல் ரகுமான்

கவிதையின் விளக்கம்:

இன்றைய அறிவியல் உலகில் நாம் நம் வாழ்க்கையை இயந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதனால் நடைமுறை வாழ்க்கையில் எத்தகைய இன்பங்களை இழந்து கொண்டிருக்கின்றோம் என்பதை கவிஞர் அப்துல் ரகுமான் அவர்கள் தம் ‘இழந்தவர்கள்என்ற கவிதை மூலம் விளக்குகின்றார்.

  • குளிர் காய சுள்ளி பொறுக்கத் தொடங்கிய நாம், வெறும் சுள்ளி பொறுக்குவதில் மட்டுமே கவனத்தைச் செலுத்துவதால் குளிர் காய்வதே இல்லை.
  • வாழ்க்கை என்ற திருவிழாவைக் கொண்டாட நாம் விரும்புவதே இல்லை. மாறாக, திருவிழாவின் கூட்டத்தில் தொலைந்து போகவே விரும்புகின்றோம்.
  • ஒவ்வொரு நாளும் விடியல் நமக்குத் தங்கத் தட்டில் பரிசுகளைக் கொண்டு தருகின்றது. ஆனால் நாம் அதைப் பெற்று கொள்வதே இல்லை.
  • விண்மீண்கள் நமக்காகவே இரவில் பூச்சூடி வருகின்றன. ஆனால் நம் அதன் அழகினைக் கவனிப்பதே இல்லை.
  • பௌர்ணமி நாளில் முழுநிலவின் இனிமையினை நாம் ரசிப்பதே இல்லை.
  • ஒவ்வொரு பூவும் நம் முத்தத்திற்காகவே விரிகின்றன. நாமோ முத்தமிட்டதே இல்லை.
  • மேகங்கள் ஏழு வண்ணங்களில் வானவில்லாய் வளைந்து காதல் கடிதம் தீட்டுகின்றன. நாம் அதைப் படிப்பதே இல்லை.
  • மனைவியின் கொலுசில் ஏற்படும் ஒலியில், குழந்தையின் சிரிப்பில், பக்கத்து வீட்டுக்காரரின் கை அசைப்பில், தெருவில் போகின்ற அந்நியர் திரும்பிப் பார்க்கையில் என நம் வாழ்க்கையைச் சுற்றிலும் சங்கீதம் ஒலிக்கின்றது. நாம்தான் அதைக் கேட்பதேயில்லை.
  • தறியில் ஓடும் நாடாவைப் போல் நாமும் ஓடுகின்றோம். ஆனால் எதையும் நெய்வதில்லை.
  • மண்ணைப் பொன்னாக்கும் ரசவாதக் கல்லைத் தேடி அலைகின்றோம். ஆனால் நாம்தான் அந்தக் கல் என்பதை நாம் அறிவதே இல்லை.
  • கடிகார முள்ளைப் போன்று சுற்றிக் கொண்டே இருக்கின்றோம். வாழ்க்கை வெறும் வட்டமடிப்பது இல்லை என்பதை நாம் உணர்வதே இல்லை.
  • நாம் உயிர் எழுத்துக்களால் உருவானவர்கள். ஆனால் வெறும் எண்ணிக்கையாக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
  • நாம் முத்துக்கள் நிறைந்த கடலைப் போன்றவர்கள். ஆனால் சிப்பிகளைத் தேடுவதிலேயே அலைந்து கொண்டிருக்கின்றோம்.
  • நாம் அனைவரும் வயிற்றிலிருந்து தான் வந்தோம். ஆனால், வயிற்றினால் உண்டாகும் பசியினையும், அதை நிறைவேற்றுவதற்காக பணம் சம்பாதிப்பதிலும் மட்டுமே கவனம் செலுத்துகின்றோம்.
  • இதயம் என்ற ஒன்று நமக்கு உண்டு. அதில் அன்பும் கருணையும் கலந்திருக்கின்றது. அதுதான் நம் வாழ்க்கையை ராஜ வாழ்க்கையாக மாற்றும் திறவுகோல் என்பதை உணர வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையின் இனிமையை நாம் அனுபவிக்க முடியும் என்று கவிஞர் மிக அழகாக வாழ்க்கையின் அர்த்தத்தை விளக்குகின்றார்.