சனி, 19 ஆகஸ்ட், 2023

அறன் வலியுறுத்தல் - திருக்குறள்

 

திருக்குறள்

அறன் வலியுறுத்தல்

குறள் 1

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு

ஆக்கம் எவனோ உயிர்க்கு.  

விளக்கம்

அறமானது சிறப்பைத் தரும்; செல்வத்தையும் தரும்; அத்தகைய சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறு எதுவும் இல்லை.

குறள் 2

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை

மறத்தலின் ஊங்கில்லை கேடு.  

விளக்கம்

நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை.

குறள் 3

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

செல்லும்வாய் எல்லாஞ் செயல்.  

விளக்கம்

நம்மால் முடிந்த வகைகளில் எல்லாம், முடியக்கூடிய வழிகளில் எல்லாம், அறச் செயல்களை இடைவிடாமல் தொடர்ந்து செய்து வருதல் வேண்டும்.

குறள் 4

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற.  

விளக்கம்

ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருப்பதே அறமாகும். மனத்தூய்மை இல்லாத மற்றவை யாவும் வெறும் ஆரவாரமே தவிர வேறொன்றும் இல்லை.

குறள் 5

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்.   (௩௰௫ - 35)

விளக்கம்

பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் என்னும் நான்கிற்கும் சிறிதும் இடம் தராமல் வாழ்வதே  அறம் ஆகும் . அவை யாவும் அறவழிக்குப் பொருந்தாதவைகள்.

குறள் 6

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை.

விளக்கம்

பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்

குறள் 7

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை

விளக்கம்

அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள் தீய வழிக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதி கொள்ளாமல், துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள்.

குறள் 8

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல்.  

விளக்கம்

பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈடுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்

குறள் 9

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்

புறத்த புகழும் இல.  

விளக்கம்

அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.

குறள் 10

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு

உயற்பால தோரும் பழி.  

விளக்கம்

பழிச் செயல்கள் செய்யாமல் தன்னைப் பாதுகாத்து, தன் வாழ்நாள் முழுவதும் அறம் செய்ய வேண்டியது மனிதனின் கடமையாகும்.

சனி, 12 ஆகஸ்ட், 2023

சுடர்த்தொடீஇ! கேளாய்!

கலித்தொகை 

பாடியவர்  - கபிலர்

திணை  - குறிஞ்சி

துறை - “புகாஅக்காலைப் புக்கு எதிர்ப்பட்டுழி பகாவிருந்தின்  பகுதிக்கண்” தலைவி தோழிக்குக் கூறியது.

துறை விளக்கம்

தலைவன் தலைவியைக் காண வேண்டும் என ஆசையுற்றான். அதனால் தான் புகுதற்குத் தகுதியில்லாத பகற்பொழுதில் தலைவன், உணவு நேரத்தில் தலைவியின் வீட்டுக்குள் புகுதல். அவ்வாறு புகுந்தவனைத் தலைவி காட்டிக்கொடுக்காமல் தாயின்முன் சமாளித்து ஏற்றுக்கொள்ளல்.

புகாஅக்காலை : உணவு உண்ணும் நேரம். பகல் சாப்பிடும் நேரம் பார்த்து ஒரு வீட்டிற்குள் புகுதல்.  

பகாஅ விருந்து - ஆனால் தலைவன் விலக்கப்படாத விருந்தாக தலைவி (காதலி) ஏற்றுக் கொள்கிறாள்.  

பாடல்

சுடர்த்தொடீஇ! கேளாய்! தெருவில் நாம் ஆடும்

மணற் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய

கோதை பரிந்து, வரி பந்து கொண்டு ஓடி,

நோ தக்க செய்யும் சிறு, பட்டி, மேல் ஓர் நாள்,

அன்னையும் யானும் இருந்தேமா, 'இல்லிரே!    5

உண்ணு நீர் வேட்டேன்' என வந்தாற்கு, அன்னை,

'அடர் பொற் சிரகத்தால் வாக்கி, சுடரிழாய்!

உண்ணு நீர் ஊட்டி வா' என்றாள்: என, யானும்

தன்னை அறியாது சென்றேன்; மற்று என்னை

வளை முன்கை பற்றி நலிய, தெருமந்திட்டு,      10

'அன்னாய்! இவனொருவன் செய்தது காண்' என்றேனா,

அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்,

'உண்ணு நீர் விக்கினான்' என்றேனா, அன்னையும்

தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்

கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகைக் கூட்டம்       15

செய்தான், அக் கள்வன் மகன்.   

பாடல் விளக்கம்

ஒளிமிக்க வளையல் அணிந்த தோழியே! நான் சொல்வதைக் கேள். தெருவில் நாம் மணலால் செய்த சிறுவீட்டைத் தன்காலால் கலைத்தும், நாம் கூந்தலில் சூடிய மலர்மாலையை அறுத்தும், வரியை உடைய நாம் விளையாடிக் கொண்டிருந்த பந்தைப் பறித்துக் கொண்டு ஓடியும் நாம் வருந்தத் தக்க செயல்களைச் செய்யும் சிறியவனாகக் கட்டுக்கடங்காமல் திரிந்தான். முன்பு ஒருநாள் தாயும் (அம்மாவும்) நானும் வீட்டில் இருந்தபோது வந்தான். வீட்டின் வாசலில் நின்று, “வீட்டில் இருப்பவர்களே! உண்ணும் நீரை உண்ண விரும்பினேன்” என்று குரல் கொடுத்தான். அவ்வாறு வந்து கேட்டவனுக்கு என் தாய், என்னிடம், “ஒளி வீசும் அணிகலன்களை அணிந்தவளே. தங்கத்தாலான குவளையில் கொண்டு போய் நீர் கொடுத்து வா” என்றாள். அவ்வாறு தாய் சொன்னதால் வந்தவன் சிறு பட்டியாய் இருக்கும் தன்மை அறியாமல் தண்ணீர் கொண்டு போனேன். நான் சென்றதும் வளையல் அணிந்த முன் கையைப் பிடித்து இழுத்தான். (சிறுபட்டி எனில் பட்டியில் அகப்படாத மாடு போன்றவன் எனப் பொருள்) அதனால் நான் வருந்தி அம்மா என அலறி இவன் செய்த செய்த செயலைப் பார்த்தாயா? என்றேன். அம்மா அலறிக்கொண்டு ஓடி வந்தாள். நான் அவன் செய்த குறும்புச் செயலை மறைத்து, இவன் நீர் குடிக்கும் போது விக்கல் எடுத்து வருந்தினான், அதனால் கத்தினேன்” என்றேன். நான் மறைத்துக் கூறியதை ஏற்று அம்மாவும் அவன் முதுகைப் பலமுறை தடவிக் கொடுத்தாள். அப்போது அக்கள்வன் மகன் (அந்தத் திருடன்) தன் கடைக்கண்ணால் என்னைக் கொல்வது போல் திருட்டுப்பார்வை பார்த்தான். தன் புன்முறுவலால் என்னை மயக்கி என்னுள்ளத்தில் புகுந்தான்” என்று தன் தோழியிடம் தலைவி கூறுகின்றாள்.

 

நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க!

 

ஐங்குறுநூறு

திணை - மருதம்

பாடியவர் - ஓரம்போகியார்

கூற்று - புறத்தொழுக்கத்திலே நெடுநாள் ஒழுகி, “இது தகாது” எனத் தெளிந்த மனத்தனாய் மீண்டு தலைவியோடு கூடி ஒழுகா நின்ற தலைமகள் தோழியோடு சொல்லாடி “யான் அவ்வாறு ஒழுக, நீயிர் நினைத்த திறம் யாது?” என்றாற்கு அவள் சொல்லியது.

கூற்று விளக்கம் - பரத்தையர் உறவில் நெடுநாள் வாழ்ந்த தலைமகன் தன் பிழையுணர்ந்து தன் மனைவியை மீண்டும் கூடினாள். அப்பொழுது தோழியை நோக்கி, “நான் உங்களைப் பிரிந்து வாழும் நாட்களில் நீங்கள் என்ன எண்ணியிருந்தீர்கள்?” என வினவினான். அதற்கு விடையாகத் தோழி சொல்லியது.

கூற்று - தோழி தலைவனிடம் கூறியது.

பாடல்
வாழி ஆதன் வாழி அவினி
நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க!
என வேட்டோளே, யாயே! யாமே,
நனைய காஞ்சிச் சினைய சிறு மீன்
யாணர் ஊரன் வாழ்க!
பாணனும் வாழ்க என வேட்டேமே.

பாடல் விளக்கம்

         “தலைவனே! எம் மன்னனாகிய ஆதன் அவினி நெடிது வாழ்க! எம் நாட்டு வயல்களில் நெல்வளம் சிறக்கட்டும்! நாட்டில் பொன் வளம் பெருகட்டும் என்று விரும்புகின்றாள் எம் தாய் (தலைவி). அரும்புகள் நிரம்பிய புன்னை மரங்களும், முட்டைகளை மிகுதியாகக் கொண்ட சிறுமீன்களும் நிறைந்த ஊரின் தலைவன் வாழட்டும்! அவனுடன் அவன் பாணனும் வாழட்டும் என விரும்புகிறேன் எனத் தலைவி கூறினாள்” என்று தோழி தலைவனிடம் கூறுகின்றாள்.

குறிப்பு

சேர நாட்டைச் சேர்ந்த மன்னர்கள்  ஆதன் என்று அவினி என்றும் பெயர் பெற்றிருந்தனர்.  முதல் வரி மன்னனை வாழ்த்துகின்றது. தோழி, தலைவியைத் தாய் என்று குறிப்பிடுகின்றாள்.

உள்ளுறை

          நறுமணம் கமழும் காஞ்சி மலர்களும், புலால் நாற்றம் வீசும் மீன்களும் ஒரு சேர விளையும் நாட்டைச் சேர்ந்தவன் தலைவன் என்று கூறியது, கற்பில் சிறந்த குல மகளிரையும், பரத்தையரையும் ஒரு நிகராகக் கொண்டு தலைவன் வாழ்கின்றான் என்பதைக் குறிப்பிடுகின்றது.