ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

மனையறம் படுத்த காதை

 

சிலப்பதிகாரம்

புகார்க் காண்டம்

மனையறம் படுத்த காதை

எழுநிலை மாடத்தின் பள்ளிக் கட்டிலின் மீது

கோவலனும் கண்ணகியும் வீற்றிருத்தல்

உரைசால் சிறப்பின், அரைசு விழை திருவின்,

பரதர் மலிந்த, பயம் கெழு, மா நகர்-

முழங்கு கடல் ஞாலம் முழுவதும் வரினும்

வழங்கத் தவாஅ வளத்தது ஆகி,

அரும் பொருள் தரூஉம் விருந்தின் தேஎம்

ஒருங்கு தொக்கன்ன உடைப் பெரும் பண்டம்

கலத்தினும் காலினும் தருவனர் ஈட்ட:

குலத்தில் குன்றாக் கொழுங் குடிச் செல்வர்,

அத்தகு திருவின் அரும் தவம் முடித்தோர்

உத்தர - குருவின் ஒப்பத் தோன்றிய

கய மலர்க் கண்ணியும் காதல் கொழுநனும்

மயன் விதித்தன்ன மணிக் கால் அமளிமிசை,

நெடு நிலை மாடத்து இடை நிலத்து, இருந்துழி -       

தென்றலைக் கண்டு மகிழ்ந்து நிலா-முற்றம் போதல்

கழுநீர், ஆம்பல், முழுநெறிக் குவளை,

அரும்பு பொதி அவிழ்ந்த சுரும்பு இமிர் தாமரை,

வயல் பூ வாசம் அளைஇ; அயல் பூ

மேதகு தாழை விரியல் வெண் தோட்டு,

கோதை மாதவி, சண்பகப் பொதும்பர்,

தாது தேர்ந்து உண்டு; மாதர் வாள் முகத்துப்

புரி குழல் அளகத்துப் புகல் ஏக்கற்று;

திரிதரு சுரும்பொடு செவ்வி பார்த்து,

மாலைத் தாமத்து மணி நிரைத்து வகுத்த

கோலச் சாளரக் குறுங் கண் நுழைந்து,

வண்டொடு புக்க மண வாய்த் தென்றல்

கண்டு, மகிழ்வு எய்தி, காதலின் சிறந்து,

விரை மலர் வாளியொடு வேனில் வீற்றிருக்கும்

நிரை நிலை மாடத்து அரமியம் ஏறி,     

இருவரும் இன்புற்றிருத்தல்

சுரும்பு உணக் கிடந்த நறும் பூஞ் சேக்கைக்

கரும்பும் வல்லியும் பெரும் தோள் எழுதி,

முதிர் கடல் ஞாலம் முழுவதும் விளக்கும்

கதிர் ஒருங்கு இருந்த காட்சி போல,

வண்டு வாய் திறப்ப, நெடு நிலா விரிந்த

வெண் தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு

கழுநீர்ப் பிணையல் முழுநெறி பிறழ,

தாரும் மாலையும் மயங்கி, கையற்று,

தீராக் காதலின் திரு முகம் நோக்கி,

கோவலன் கூறும் ஓர் குறியாக் கட்டுரை:

கண்ணகியின் நலத்தைக் கோவலன் பாராட்டுதல்

குழவித் திங்கள் இமையவர் ஏத்த

அழகொடு முடித்த அருமைத்து ஆயினும்,

உரிதின் நின்னோடு உடன் பிறப்பு உண்மையின்,

பெரியோன் தருக - திரு நுதல் ஆக என:

அடையார் முனை அகத்து அமர் மேம்படுநர்க்குப்

படை வழங்குவது ஓர் பண்பு உண்டு ஆகலின்,

உருவிலாளன் ஒரு பெரும் கருப்பு வில்

இரு கரும் புருவம் ஆக ஈக்க:

மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின்,

தேவர் கோமான் தெய்வக் காவல் -

படை நினக்கு அளிக்க - அதன் இடை நினக்கு இடை என:

அறுமுக ஒருவன் ஓர் பெறும் முறை இன்றியும்,

இறும் முறை காணும் இயல்பினின் அன்றே -

அம் சுடர் நெடு வேல் ஒன்றும் நின் முகத்துச்

செங் கடை மழைக் கண் இரண்டா ஈத்தது?     

கண்ணகியைப் புகழ்தல்

மா இரும் பீலி, மணி நிற மஞ்ஞை, நின்

சாயற்கு இடைந்து, தண் கான் அடையவும்;

அன்னம், நல் - நுதல்! மெல் நடைக்கு அழிந்து,

நல் நீர்ப் பண்ணை நளி மலர்ச் செறியவும்;

அளிய - தாமே, சிறு பசுங் கிளியே -

குழலும், யாழும், அமிழ்தும் குழைத்த நின்

மழலைக் கிளவிக்கு வருந்தின ஆகியும்,

மட நடை மாது! நின் மலர்க் கையின் நீங்காது

உடன் உறைவு மரீஇ ஒருவா ஆயின:   

                                              நலம் பாராட்டல்

நறு மலர்க் கோதை! நின் நலம் பாராட்டுநர்

மறு இல் மங்கல அணியே அன்றியும்,

பிறிது அணி அணியப் பெற்றதை எவன்கொல்?

பல் இருங் கூந்தல் சில் மலர் அன்றியும்,

எல் அவிழ் மாலையொடு என் உற்றனர்கொல்?

நான நல் அகில் நறும் புகை அன்றியும்,

மான் மதச் சாந்தொடு வந்ததை எவன்கொல்?

திரு முலைத் தடத்திடைத் தொய்யில் அன்றியும்,

ஒரு காழ் முத்தமொடு உற்றதை எவன்கொல்?

திங்கள் முத்து அரும்பவும், சிறுகு இடை வருந்தவும்

இங்கு இவை அணிந்தனர்; என் உற்றனர்கொல்?      

காதல் மொழிகள்

மாசு அறு பொன்னே! வலம்புரி முத்தே!

காசு அறு விரையே! கரும்பே! தேனே!

அரும் பெறல் பாவாய்! ஆர் உயிர் மருந்தே!

பெருங்குடி வாணிகன் பெரு மட மகளே!

மலையிடைப் பிறவா மணியே என்கோ?

அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ?

யாழிடைப் பிறவா? இசையே என்கோ?

தாழ் இருங் கூந்தல் தையால்! நின்னை-என்று

உலவாக் கட்டுரை பல பாராட்டி,

தயங்கு இணர்க் கோதை - தன்னொடு தருக்கி,

வயங்கு இணர்த் தாரோன் மகிழ்ந்து செல்வுழி நாள் -  

கோவலனும் கண்ணகியும் நடத்திய இல்லறம்

வார் ஒலி கூந்தலைப் பேர் இயல் கிழத்தி

மறப்பு - அரும் கேண்மையோடு அறப் பரிசாரமும்,

விருந்து புறந்தரூஉம் பெரும் தண் வாழ்க்கையும்,

வேறுபடு திருவின் வீறு பெறக் காண,

உரிமைச் சுற்றமோடு ஒரு தனிப் புணர்க்க,

யாண்டு சில கழிந்தன, இல் பெருங்கிழமையின் -

காண் தகு சிறப்பின் கண்ணகி - தனக்கு - என். 

வெண்பா

தூமப் பணிகள் ஒன்றித் தோய்ந்தால் என, ஒருவார்

காமர் மனைவி எனக் கைகலந்து, நாமம்

தொலையாத இன்பம் எலாம் துன்னினார் - மண்மேல்

நிலையாமை கண்டவர் போல், நின்று.

 

விளக்கம்

புகார் நகரின் செல்வச் சிறப்பு

 புகழும் செல்வமும் உடைய பரதர்கள் மிகுதியாக வாழும் பூம்புகார் நகரம், எல்லா பயன்களும் கொண்ட  மாநகரமாக விளங்கியது. உலகினர் எல்லோரும் ஒன்று கூடி வந்தாலும், அவர்கள் விரும்பும் விருந்தினைச் சலிப்பின்றி அள்ளி வழங்கும் வளம் உடையது. கடல் வழியாகவும், தரை வழியாகவும் வாணிபம் செய்து, அரும்பொருட்கள் ஆயிரமாயிரம் கொண்டு வந்து குவிக்கின்ற, செல்வச் செழுமையுடைவர்களாக அங்கிருந்த வாணிகர்கள் திகழ்ந்தனர். அத்தகைய செல்வத்தால், துருவ நட்சத்திரம் போன்று விளங்கிய கண்ணகியும், அவளுடைய கணவன் கோவலனும் தருமங்கள் பல செய்து வாழ்ந்தனர். அத்தகைய சிறப்புடைய தம்பதியர், அத்திருநகரில் எழுநிலை மாடமொன்றின்,நான்காம் மாடத்தில், மயனே செய்தது போன்ற அழகிய கால்களுடைய கட்டிலின் மேல் அமர்ந்திருந்தனர்.

தென்றல் வருகை

செங்கழுநீர் மலர், ஆம்பல் மலர், குவளை மலர், தாமரை மலர், வயல்வெளி நீர்நிலை மலர்கள், தாழையின் விரிந்த வெண்ணிறப் பூவிதழ்கள், செண்பகச்சோலையில் அழகு மாலை போன்று இதழ்விரித்து மலர்ந்திருக்கும் குருக்கத்தி மலர்கள் ஆகியவற்றின் தாதினை எல்லாம் தேடிச் சென்று வாரி உண்டு, மகளிரின் சுருண்ட கூந்தலின் நறுமணம் நுகர்ந்திட வண்டுகள் சுழன்று திரிந்தன. அவ்வண்டுகளுடன், தென்றலும், தம்பதியர் வீட்டினுள், முத்து மணிகளால் அணிசெய்த சாலரமொன்றின் (கதவின்) வழியாக நுழைந்தது. தென்றலின் வரவைக்கண்ட கோவலனும் கண்ணகியும் மிகவும் மகிழ்ந்து, காதலின் மிகுதியால் இணைந்திட விரும்பி, மன்மதன் வீற்றிருக்கும், தம் எழுநிலை மாடத்தின் நிலா முற்றத்துக்கு ஏறிச் சென்றனர்.

தம்பதியர் இன்புற்றிருத்தல்

     வாசனைப் பூம்படுக்கையின் மேல் கோவலனும், கண்ணகியும் சென்று அமர்ந்தனர். கோவலன் கண்ணகியின் பெரிய தோள்களில், வரிக்கோலமாய்க் கரும்பையும், வல்லிகொடியையும் எழுதினான். இந்த காட்சி, உலகம் முழுவதையும், தம் கதிர்களால் ஒளியேற்றுகின்ற சூரியனும், சந்திரனும் ஒன்று சேர்ந்து இருந்ததைப் போல இருந்தது. மல்லிகைப் பூக்களால் தொடுத்த மாலையினைக் கண்ணகி அணிந்திருந்தாள். கோவலன், செங்கழுநீர் மாலையினை அணிந்திருந்தான். இருவர் மார்பிலும் இருந்த மாலைகள், தம்முள் கலந்து மயங்கின. அந்நிலையில் தழுவியிருந்த கைகளைச் சற்றே தளர்த்தவனாக, ஆராத காதலுடன், தன் மனைவியின் முகத்தைக் கோவலன் நோக்கினான். அவள் நலனைப் பாராட்டத் தொடங்கினான்.

கண்ணகியின் நலம் பாராட்டல்

  • இளம்பிறையானது, சிவபெருமானின் சடைமேல் இருக்கும் பெருமையினை உடையது. ஆனால் அது, திருமகளான உன்னுடன் பாற்கடலில் பிறந்ததால், அது உனக்கே உரியது என இறைவன், அதனை உன் நெற்றியாகத் தந்தானோ?
  • போர்க்களத்தில் தம்மை எதிர்க்கும் பகைவர்க்கு, படைகலங்கள் வழங்கிப் போர் புரிய சொல்லும் ஒரு முறை உண்டு. அதைப்போலவே மன்மதன் தானும் தம் கரும்புவில்லை, உன் இரு புருவங்களாகத் தந்தானோ?
  • தேவருண்ணும் அமிழ்தத்திற்கு முன்னே பிறந்த இலக்குமி நீ என்பதால், இந்திரன் தன் கையில் கொண்ட வச்சிரப்படையை உன் இடையாகத் தந்தானோ?
  • ஆறுமுகம் கொண்ட  முருகன் என்னுடன் போர் புரிய வேண்டிய அவசியமில்லை. அப்படி இருந்தும், உன்னைக் கண்டு நான் துன்புற வேண்டும் என்பதற்காக, தன் அழகிய வேலை, உன் இரு கண்களாகத் தந்தானோ?

சாயல், நடை, பேச்சு

  • கரிய பெரிய தோகை உடைய, நீல நிறம் கொண்ட மயில், உன் அழகிய சாயலுக்கு அஞ்சி தோற்றுக் காட்டுக்குள் சென்று அடைந்து விட்டது!
  • அன்னம், உன் மென்மையான நடைக்கு அஞ்சி செயலிழந்து, வயல்களிடையே மலர்ந்திருக்கும் மலர்களிலே சென்று ஒளிந்து கொண்டது!
  • உன் மொழிக்கு சிறிய கிளி தோற்றுப் போய்விட்டது. குழலிசையோடு, யாழிசையோடு அமிழ்தமும் குழைத்தாற்போன்ற உன் மழலை பேச்சிற்கு அவை வருந்தி சோர்ந்தன.
  • எனினும் மென்னடையினை உடைய மாதரசியே! உன் பேச்சின் இனிமையைத் தாமும் கற்பதற்காக, உன்னுடனேயே தங்கி, உன்னை வெறுத்துப் பிரிந்து போகாமல் இருகின்றன.

அணிகலன்கள் வேண்டுமோ!

  • நறுமண மலரினை சூடிய கோதையே! உன்னைப் புனைந்து அழகு செய்யும் மகளிர், உன் இயற்கை அழகு இருக்க, உன் மாங்கல்ய அணி மேலும் அழகு சேர்த்திருக்க, இன்னும் பல அணிகலன்களை உனக்கு அணிவித்தது ஏன்?
  • உன் கருங்கூந்தலுக்குச் சில மலர்கள் மட்டும் சூட்டினால் போதும் என்றிருக்க, மாலையையும் சூட்டியிருக்கின்றனரே! அம்மாலையோடு அவர்களுக்கு என்ன உறவோ?
  • உன் கூந்தலை மணமாக்க அகிற்புகையின் நறுமணமொன்றே போதும் என்றிருக்க, வாசனையூட்டுவதற்காகக் கஸ்தூரிக் குழம்பு கொண்டு வந்ததன் உள்நோக்கம் தான் என்ன? 
  • அழகுத்திரு மார்புகளுக்கு அணி செய்திட, தீட்டிய கோலங்களே போதும் என்றிருக்க, முத்து வடம் கொணர்ந்தவர்க்கு, அதனுடன் உள்ள உரிமைதான் என்ன?
  • நிலவு போன்ற உன் முகத்தில் முத்து முத்தாய் வியர்வை அரும்பிடவும், சிறிதான நின் இடை துவண்டு வருந்திடவும், மென்மேலும் உன் மீது அணிகலன்கள் பூட்டுகின்றனரே, இவர்களுக்கு என்னதான் நேர்ந்தது?

போற்றிப் புகழ்தல்

  • குற்றமற்ற பொன்னே! வலம்புரிச் சங்கிலே பிறந்த முத்து போன்றவளே! குற்றமற்ற மணப்பொருள் தரும் தெய்வ மணமே! இனிமையான கரும்பை போன்றவளே! தேனினும் இனிமையுடையவளே! பெறுவதற்கு அருமையான பாவையே! இன்னுயிர் காக்கும் மருந்தே! பெருங்குடி வணிகனின் பெருமை வாய்ந்த மகளே!
  • உன்னை, ‘மலையிடையிலே பிறவாத மணியே!’,என்று சொல்வேனோ? ‘அலையிடையே பிறவாத அமிழ்தமே!’,என்று சொல்வேனோ? ‘யாழிடையே பிறவாத இசையே!’,என்று சொல்வேனோ? நீண்டு தாழ்ந்த கருங்கூந்தல் உடைய பெண்ணே! நின்னை நான் எவ்வாறு பாராட்டுவேனோ?

தனிமனை புகுதல்

    இன்னும் பல முடிவில்லாத பாராட்டுகளை நவின்றான் கோவலன். பூமாலை அணிந்த கண்ணகியும், தாரினை அணிந்த கோவலனும் இன்பத்தில் திளைத்தனர். இவ்வாறு, கண்ணகியுடன் கோவலன் இல்லறம் நடத்தி வந்த அக்காலத்தில் ஒரு நாள், கோவலனின் அன்னை, தம்பதியர், சுற்றத்துடன் இணைந்து வாழ்தல்; துறவியரை பேணுதல்; விருந்தினரை உபசரித்தல் ஆகிய பெருமைகளுடன், இல்வாழ்க்கையும் சிறப்புப் பெற்று, மென்மேலும் பல்வேறு செல்வங்களும் பெற விரும்பி, அவர்களைத் தனிக் குடும்பமாக அமர்த்த எண்ணினாள். அவர்களுக்கு வேண்டிய வசதிகளுடனும், பணியாட்களுடனும், அவர்கள் தனிக் குடும்பம் நடத்த ஏற்பாடு செய்தார். தம்பதியரும், அவ்வாறே தனிமனை புகுந்து, இன்புற்று வாழ்ந்தனர். கண்ணகி பேணிய இல்லறப் பாங்கினை கண்டவர் பாராட்ட, ஆண்டுகள் சில கழிந்தன.

வெண்பா

“உலக வாழ்கையில் நிலையாமை உறுதி” என்ற உண்மையை அறிந்தவர் போல,  தம்முள் பிரிதலின்றி இணைந்து இன்புற்று வாழ்ந்தனர்.  பாம்புகள் ஒன்றோடொன்று பிணைந்து தழுவிப் பிரியாது இருப்பது போலவும்,  காமனும் ரதியும் ஒருவரோடொருவர் பிரியாது தழுவி கிடந்தது போலவும், இன்பங்கள் முழுதும் துய்த்திடும் நோக்கில், மனம் ஒன்றிக் கலந்தவராக வாழ்ந்து வந்தனர்.

சனி, 30 ஜனவரி, 2021

விழா அறை காதை

 

மணிமேகலை

விழா அறை காதை

உலகந் திரியா ஓங்குயர் விழுச்சீர்ப்

பலர்புகழ் மூதூர்ப் பண்புமேம் படீஇய

ஓங்குயர் மலயத் தருந்தவ னுரைப்பத்

தூங்கெயி லெறிந்த தொடித்தோட் செம்பியன்

விண்ணவர் தலைவனை வணங்கிமுன் னின்று

மண்ணகத் தென்றன் வான்பதி தன்னுள்

மேலோர் விழைய விழாக்கோ ளெடுத்த

நாலேழ் நாளினும் நன்கினி துறைகென

அமரர் தலைவன் ஆங்கது நேர்ந்தது

கவராக் கேள்வியோர் கடவா ராகலின்

மெய்திறம் வழக்கு நன்பொருள் வீடெனும்

இத்திறந் தத்தம் இயல்பினிற் காட்டும்

சமயக் கணக்கருந் தந்துறை போகிய

அமயக் கணக்கரும் அகலா ராகிக்

காந்துரு வெய்திய கடவு ளாளரும்

பரந்தொருங் கீண்டிய பாடை மாக்களும்

ஐம்பெருங் குழுவும் எண்பே ராயமும்

வந்தொருங்கு குழீ இ வான்பதி தன்னுள்

கொடித்தேர்த் தானைக் கொற்றவன் துயரம்

விடுத்த பூதம் விழாக்கோள் மறப்பின்

மடித்த செவ்வாய் வல்லெயி றிலங்க

இடிக்குரல் முழக்கத் திடும்பை செய்திடும்

தொடுத்தபா சத்துத் தொல்பதி நரகரைப்

புடைத்துணும் பூதமும் பொருந்தா தாயிடும்

மாயிரு ஞாலத் தரசுதலை யீண்டும்

ஆயிரங் கண்ணோன் விழாக்கால் கொள்கென

வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசம்

கச்சை யானைப் பிடர்த்தலை யேற்றி

ஏற்றுரி போர்த்த இடியுறு முழக்கின்

கூற்றுக்கண் விளிக்குங் குருதி வேட்கை

முரசுகடிப் பிடூஉம் முதுகுடிப் பிறந்தோன்

திருவிழை மூதூர் வாழ்கென் றேத்தி

வான மும்மாரி பொழிக மன்னவன்

கோள்நிலை திரியாக் கோலோ னாகுக

தீவகச் சாந்தி செய்தரு நன்னாள்

ஆயிரங் கண்ணோன் தன்னோ டாங்குள

நால்வேறு தேவரும் நலத்தகு சிறப்பில்

பால்வேறு தேவரும் இப்பகுப் படர்ந்து

மன்னன் கரிகால் வளவன் நீங்கியநாள்

இந்நகர் போல்வதோர் இயல்பின தாகிப்

பொன்னகர் வறிதாப் போதுவ ரென்பது

தொன்னிலை யுணர்ந்தோர் துணிபொரு ளாதலின்

தோரண வீதியுந் தோமறு கோட்டியும்

பூரண கும்பமும் பொலம்பா லிகைகளும்

பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின்

காய்க்குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும்

கொடி வல்லியுங் கரும்பும் நடுமின்

பத்தி வேதிகைப் பசும்பொற் றூணத்து

முத்துத் தாமம் முறையொடு நாற்றுமின்

விழவுமலி மூதூர் வீதியும் மன்றமும்

பழமணல் மாற்றுமின் புதுமணற் பரப்புமின்

கதலிகைக் கொடியுங் காழூன்று விலோதமும்

மதலை மாடமும் வாயிலும் சேர்த்துமின்

நுதல்விழி நாட்டத் திறையோன் முதலாப்

பதிவாழ் சதுக்கத்துத் தெய்வமீ றாக

வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை

ஆறறி மரபின் அறிந்தோர் செய்யுமின்

தண்மணற் பந்தருந் தாழ்தரு பொதியிலும்

புண்ணிய நல்லுரை அறிவீர் பொருந்துமின்

ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள்

பட்டிமண் டபத்துப் பாங்கறிந் தேறுமின்

பற்றா மாக்கள் தம்முட னாயினும்

செற்றமுங் கலாமுஞ் செய்யா தகலுமின்

வெண்மணற் குன்றமும் விரிபூஞ் சோலையும்

தண்மணல் துருத்தியுங் தாழ்பூந் துறைகளும்

தேவரு மக்களும் ஒத்துடன் றிரிதரு

நாலேழ் நாளினும் நன்கறிந் தீரென

ஒளிறுவாள் மறவருந் தேரும் மாவும்

களிறுஞ் சூழ்தரக் கண்முர சியம்பிப்

பசியும் பிணியும் பகையும் நீங்கி

வசியும் வளனுஞ் சுரக்கென வாழ்த்தி

அணிவிழா அறைந்தனன் அகநகர் மருங்கென்.

காதையின் சுருக்கம்

புகார் நகரத்தினை வளமுடைய நகராக மாற்ற விரும்பிய அகத்தியர், சோழ நாட்டு அரசனாகிய தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியனிடம், தேவர் தலைவனாகிய இந்திரனுக்கு இருபத்தெட்டு நாட்கள் விழா எடுக்குமாறு கூறினார். இந்திர விழா எடுக்கத் தவறினால் நகருக்குத் துன்பம் ஏற்படும் என்று சமயவாதிகளும் கூற மன்னன் அதற்கு இசைந்தான். இச்செய்தியை வள்ளுவன் முரசு அறைந்து மக்களுக்குத் தெரிவித்தான். முரசு கொட்டும்முன் “நாட்டில் பசி, பிணி, பகை இல்லாமல் மழையும் வளமும் நிறையட்டும்” என்று வாழ்த்தி, நகரின் பல பகுதிகளில் விழா பற்றிய செய்தியினைக் கூறி முடித்தான்.

இந்திர விழா

நாவலந் தீவிலுள்ள மக்கள் அனைவரும் பசி, பிணி, பகை முதலியவற்றால் துன்பம் அடையாதிருக்க, தெய்வத்தை வணங்கிச் செய்யும் பெருவிழாவே இந்திர விழாவாகும்.

விழா வரலாறு

புகார் நகரம் பழம் பெருமையும் சிறப்பும் வாய்ந்தது. ஒழுக்கங்களில் சிறந்து விளங்கிய மக்கள் பலரும் அந்நகரைப் போற்றுவர். பழஞ்சிறப்பு வாய்ந்த நகரின் புகழ் மேலும் சிறப்புற வேண்டும் என்று அருந்தவ முனிவர் அகத்தியர் நினைத்தார். அப்புகார் நகர் மேலும் வளமுடன் பொலிவடைய வேண்டுமானால் தேவர் தலைவனாகிய இந்திரனுக்கு இருபத்தெட்டு நாட்கள் விழா எடுக்க வேண்டும் என புகார் நகரை ஆட்சி செய்த மன்னன் தொடித்தோட் செம்பியனிடம் கூறினார்.  உடனே அதற்கு இசைவு அளித்து, விழா சிறப்புடன் நடைபெற ஏற்பாடு செய்தான் மன்னன். செம்பியன் வேண்டுகோளை ஏற்று இவ்விழாவில் கலந்து கொள்ள தேவர் தலைவனாகிய இந்திரனும், மற்றுமுள்ள தேவர்களும் விழாத் தொடங்கிய இருபத்தெட்டு நாட்களிலும் புகார் நகரத்திலே வந்து தங்கியிருந்தனர். கேள்வி ஞானம் உடைய சான்றோர்கள், உயர்வு மிக்க இந்த இந்திர விழாவினை ஒரு போதும் தவறவிட மாட்டார்கள்.

விழா நடத்த முடிவு செய்தல்

· இம்மை, மறுமைப் பயன்களை உணர்ந்தவரும், நால்வகை உறுதிப் பொருள்களின் உண்மை அறிந்த வரும் ஆன சமயக் கணக்கர்,

·       காலம் கணிக்கும் சோதிடர்,

· தம் தேவ உருவினை மறைத்து மனித உருவம் கொண்ட கடவுளர்கள் (தேவர்கள்),

·       பன்மொழி பேசும் வேற்று நாட்டினர்,

·  ஐம்பெருங் குழுவினர், எண் பேராயத்தினர் ஆகியோர் ஒன்று கூடி விழா நடத்த முடிவு செய்யஅரசவையில் கூடினர்.

(ஐம்பெருங் குழு : அமைச்சர், புரோகிதர், சேனாதிபதியர், தூதுவர், சாரணர் ஆகிய ஐவரைக் கொண்ட குழு.

எண்பேராயம் : கரணத்து இயலவர், கரும விதிகள், கனகச் சுற்றம், கடைக் காப்பாளர், நகர மாந்தர், நளிபடைத் தலைவர், யானை வீரர், இவுளி மறவர் எனப்படும் எண்மரைக் கொண்ட குழு.)

விழாத் தொடக்கம்

இவ்விழாவினை வழக்கம்போல் நடத்தாவிடில் புகார் நகருக்கும், மக்களுக்கும் துன்பம் வந்து சேரும். கொடி பறக்கும் தேரினையும், படைப் பெருக்கத்தினையும் கொண்ட கொற்றவனாகிய முசுகுந்த மன்னனுக்கு முன்னாள் ஏற்பட்ட துயரத்தினைப் போக்கியது இப்புகார் நகரத்து நாளங்காடி (பகல் நேரக் கடைத்தெரு)ப் பூதம். அப்பூதம் தனக்கு விழாவினை வழக்கம்போல் எடுக்காவிட்டால், சிவந்த வாயினை மடித்துத் தன் வலிமையான பற்கள் வெளியேதோன்ற, இடியின் முழக்கம் போன்று குரலெடுத்து முழக்கமிட்டு, மக்களுக்கும், புகார் நகருக்கும் துன்பத்தைச் செய்துவிடும் என்று சான்றோர்கள் கூறினர். மேலும், பாவிகளைப் பாசத்தால் (கயிற்றினால்) பிடித்து உண்ணும் சதுக்கப் பூதமும் இப்புகார் நகரை விட்டு நீங்கி விடும். ஆதலால் இந்திர விழாவுக்கான, கால்கோள் விழாவினைச் (தொடக்க விழா) செய்யுங்கள் என்றனர் சமய வாதிகள்.

வள்ளுவன் முரசு அறைந்து அறிவித்தல்

வாளேந்திய வீரர்கள், தேர்ப் படையினர், குதிரைப் படையினர், யானைப் படையினர் ஆகிய நால்வகைப் படையினரும் சூழ்ந்து வந்து கொண்டிருக்க, முதுகுடிப் பிறந்த வள்ளுவன் (முரசறைவோன்) வச்சிரக் கோட்டத்தில் உள்ள முரசினை யானையின் கழுத்திலே ஏற்றி, குறுந்தடி கொண்டு முரசறைந்து, இந்திர விழா நடைபெற இருப்பதனைப் புகார் நகர மக்களுக்குப் பின்வரும் செய்திகளைக் கூறி அறிவித்தான்.

முதலில் திருமகள் விரும்பி உறைகின்ற மூதூரான இப்புகார் நகரம் வாழ்க என்று வாழ்த்தினான். பின் மாதந்தோறும் மூன்று முறை தவறாது மழை பொழிவதாகுக என்றான். ஞாயிறு, திங்கள் முதலிய கோள்கள் தம்நிலையில் மாறுபடா வண்ணம் மன்னவன் செங்கோலனாக ஆகுக என்று அரசனை வாழ்த்தி முரசறைந்து தெரிவித்தான்.

விழாவின் மாண்புரைத்தல்

தீவகச் சாந்தி விழா கொண்டாடப்படும் நாட்களில், ஆயிரம் கண்களை உடைய இந்திரன் தலைமையாக வீற்றிருப்பான். அங்கே வசுக்கள் எண்மர், ஆதித்தர் பன்னிருவர், உருத்திரர் பதினொருவர், மருத்துவர் இருவர் ஆகிய முப்பத்து மூவர் எனப்படும் நால்வகைத் தேவர்களும், பல பிரிவினரான தேவ கணத்தினர் பதினெண்மரும் உடனிருந்து விழாவினைச் சிறப்புச் செய்வர்.

மன்னன் கரிகால் வளவன், பகைவரை வெல்லக் கருதி, வடதிசை நோக்கிப் போனபோது, இப்புகார் நகரம் வெறுமையாகிப் பொலிவிழந்து காணப்பட்டது. அதுபோலத் தேவர்கள் அனைவரும் இந்திர விழா காண புகார் நகருக்கு வந்தமையால், அவர்களின் பொன்னகரமான அமராபதியும் பொலிவிழந்து காணப்பட்டதாகச் சான்றோர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

மக்களின் ஈடுபாடு

வள்ளுவன் முரசறைந்து வாழ்த்திய பிறகு, மக்களுக்கு, நகரை அழகுபடுத்தும் முறையைக் கூறினான்.

1. கொடிகள் விளங்கும் வீதிகளிலும், குற்றமற்ற கோயில் வாயில்களிலும் பூரணக் கும்பங்களும், பாவை விளக்குகளும் மற்றும் பல வகையான மங்கலப் பொருள்களுடனே பரப்புங்கள்;

2. வாழை, கரும்பு, கமுகு, வஞ்சிக்கொடி, பூங்கொடி ஆகியவற்றைக் கட்ட வேண்டிய இடங்களில் கட்டுங்கள்;

3. விழாக் கோலம் நிறைந்த வீதிகளிலும், மன்றங்களிலும் பழைய மணலை மாற்றிப் புதுமணலைப் பரப்புங்கள்;

4. சிறுசிறு கொம்புகளில் கட்டும் கொடி முதலானவற்றை மாடங்களிலும் வாயில்களிலும் கட்டுங்கள்;

5. நெற்றிக் கண்ணுடைய சிவபெருமான் முதலாக இந்நகருக்குள்ளே (புகார் நகரம்) வாழும் சதுக்கத் தெய்வமான சதுக்கப் பூதம் ஈறாக உள்ள கோயில்களில் எல்லாம் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகளை முறைப்படி செய்யுங்கள் என்று மக்களுக்கு விரிவாகக் கூறி முரசறைந்தான்.

பட்டி மண்டபம்

1. குளிர்ந்த மணல் பரப்பிய பந்தல்களிலும் நிழல் தரும் மரங்களின் கீழ் அமைந்துள்ள ஊர்ப் பொதுவிடங்களிலும் நல்லுரைகள் அறிந்தவர்கள் உரையாற்றுங்கள்;

2. தத்தம் சமயத்தில் பொதிந்த தத்துவங்கள் சிறந்தவை என்றால், பட்டி மண்டபத்து ஏறி வாதிட்டுப் பயன் காணுங்கள்;

3. பகை மக்களோடும் பகையும், கோபமும் கொள்ளாமல் அவரை விட்டு அகன்று செல்லுங்கள்;

4. வெண்மணற் குன்றுகள், பூஞ்சோலைகள், நீர்த்துறை ஆகிய இடங்களில் தேவர்களும் மக்களும் சமமாக உலவிக் கொண்டு இருங்கள்.

5. இவை அனைத்தையும் இந்திர விழா நடக்கும் இருபத்தெட்டு நாட்களிலும் எங்கும் எல்லா இடங்களிலும் பின்பற்றுங்கள்.

இவ்வாறு  வள்ளுவன் முரசறைந்து மக்களுக்குத் தெரிவித்தான்.

வாழ்த்துக் கூறுதல்

பசியும், பிணியும், பகையும் நீங்கி மழையும் வளமும் எங்கும் சுரக்கட்டும் என முடிவில் வாழ்த்தினான். இவ்வாறெல்லாம் புகார் நகரில் உள்ள பட்டினப்பாக்கத்துப் பகுதிகள் அனைத்திலும் விழா அணி பற்றிய செய்தியினை வள்ளுவன் முரசறைந்து தெரிவித்தான்.


நன்றி - தமிழ் இணையப் பல்கலைக்கழகம்


வியாழன், 28 ஜனவரி, 2021

புதுக் கவிஞர்கள்

 கவிஞர் அப்துல் ரகுமான்

    கவிஞர் அப்துல் ரகுமான் அவர்கள் 22.11.1937 ஆம் ஆண்டு சையத்  அஹமத், ஜைனத் பேகம் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர். கவிக்கோ என்று சிறப்புப் பெயரால் குறிப்பிடப்படுபவர். 1960க்கு பின் கவிதை உலகுக்கு வந்த இவர் கவியரங்கக் கவிதைகளால்  சிறப்படைந்தவர். வானம்பாடி இயக்கத்தின் கவிஞர்களோடு இணைந்து கவி பாடியவர். பால்வீதி என்ற கவிதைத் தொகுதியின் மூலம் தன்னை ஒரு படைப்பாளியாக இனம் காட்டியவர். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறித்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களைப் படைத்தவர். வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கினார்.

படைப்புகள்

பால்வீதி, நேயர்விருப்பம், பித்தன், ஆலாபனை, சுட்டுவிரல், அவளுக்கு நிலா என்று பெயர், சோதிமிகு நவகவிதை, ரகசியப்பூ (புதுக்கவிதைகள்) ஆகிய கவிதை தொகுப்புகளை இயற்றியுள்ளார். அத்துடன் நெருப்பை அணைக்கும் நெருப்பு, இல்லையிலும் இருக்கிறான், இது சிறகுகளின் நேரம், முட்டை வாசிகள், ஆறாவது விரல், காக்கைச் சோறு, தட்டாதே திறந்திருக்கிறது ஆகிய கட்டுரைகள் சேர்ந்த கட்டுரைத் தொகுப்புகளையும், குணங்குடியார் பாடற்கோவை ஆகிய நூல்களையும் படைத்துள்ளார். ஆலாபனை என்ற கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கவிஞர் இன்குலாப்

    இவர் தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர், பத்தி எழுத்தாளர், பொதுவுடைமைச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையாளர் ஆவார். சமூகச் சிக்கல்கள், ஒடுக்குமுறைகள் போராட்டங்கள் ஆகியவற்றை மையப்படுத்தியே இவருடைய படைப்புகள் அமைந்திருந்தன.  இன்குலாப் என்பதற்குப் புரட்சி என்று பொருள்படும்.

2017ஆண்டில் தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது இவர் எழுதிய காந்தள் நாட்கள் என்னும் நூலுக்கு அவரின் மறைவிற்குப் பின்னர் வழங்கப்பட்டது. ஆனால், அதனை அவர் குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர்.

இன்குலாப்பின் இயற்பெயர் செ. கா. சீ. சாகுல் அமீது. கீழக்கரை என்னும் ஊரில் பிறந்தார். இசுலாமியச் சமூகத்தில் மிகவும் ஏழ்மை குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை சித்த மருத்துவர். மீரா என்னும் கவிஞருடன் நட்பு கொண்டவர். தியாகராசர் கல்லூரியில் இளங்கலை(தமிழ்) வகுப்பில் சேர்ந்துப் பயின்றார். படிப்பை முடித்து சென்னையில் உள்ள புதுக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். ஈரோடு தமிழன்பன், நா. பாண்டுரங்கன் போன்றோருடன் இன்குலாப் புதுக்கல்லூரியில் பணி புரிந்தார்.

படைப்புகள்

இளவேனில் என்பவர் நடத்திய கார்க்கி இதழில் கவிஞர் இன்குலாப்பின் தொடக்கக் கால கவிதைகள் வெளிவந்தன.  தராசு, நக்கீரன், இனி, நாற்காலி, உண்மை, உங்கள் விசிட்டர் எனப் பல இதழ்களில் ஏராளமான கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதியுள்ளார்.  மனுசங்கடா, நாங்க மனுசங்கடா என்னும் இவர் எழுதிய பாட்டு எண்ணற்ற மேடைகளில் தலித்து மக்களால் பாடப்படுகிறது.

Ø  சிறுகதைத்தொகுதி - பாலையில் ஒரு சுனை

Ø  கட்டுரைத்தொகுதி – யுகாக்கினி

Ø  நாடக நூல்கள் – ஒளவை, மணிமேகலை குரல்கள், துடி, மீட்சி,

Ø  இன்குலாப் கவிதைகள், வெள்ளை இருட்டு, சூரியனைச் சுமப்பவர்கள், கிழக்கும் பின்தொடரும், கூக்குரல்.

Ø   பொன்னிக்குருவி (2007 நவம்பர்), புலிநகச்சுவடுகள், காந்தள் நாட்கள் (2016) - 2017 ஆம் ஆண்டிற்கான சாகித்யா அகாதெமி விருது பெற்ற நூல்

Ø  ஒவ்வொரு புல்லையும் பெயர்சொல்லி அழைப்பேன் (2017 திசம்பர் 1 - அனைத்துக்கவிதைகளும் அடங்கியது)

பெற்ற விருதுகள்

    சிற்பி இலக்கிய விருது,  கவிஞர் வைரமுத்து விருது,  2006ஆம் ஆண்டு தனக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விருதினை திருப்பி அளித்தார். ஈழத் தமிழர்களை காக்க அரசு தவறிவிட்டதாக இதற்கு காரணம் தெரிவித்தார்.

 

 கவிஞர் மு. மேத்தா

மு. மேத்தா பெரியகுளத்தில் பிறந்தார்.  இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்த கவிஞர்களுள் இவரும் ஒருவராவார்.   உவமை உருவகங்களில் பழமையையும் புதுமையையும் இணைத்த மு.மேத்தா, வளமான கற்பனை, எளிய நடை, எளிய சொல்லாட்சி, மனித உணர்வுகளின் படப்பிடிப்புகளால் மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தவர்.

மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், சிறுகதை, நாவல், கட்டுரைகள் முதலியவற்றைப் படைப்பதிலும் வல்லவர்.   இவரது முதற் கவிதைத்தொகுப்பு கண்ணீர்ப் பூக்கள்.  "தேச பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி" என்ற கவிதை மு.மேத்தாவுக்கு புகழ் தேடித் தந்த கவிதை ஆகும்.  அவருடைய நூல்களுள் "ஊர்வலம்" தமிழக அரசின் முதற்பரிசினைப் பெற்ற கவிதை நூலாகும். இவரது "சோழ நிலா" என்னும் வரலாற்று நாவல் ஆனந்த விகடன் இதழ் நிகழ்த்திய பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்றது ஆகும், இவர் திரைப்படத் துறையிலும் பாடல்கள் எழுதி வருகிறார்.

கவிதைத் தொகுப்புகள்

கண்ணீர்பூக்கள், ஊர்வலம், மனச்சிறகு, அவர்கள்வருகிறார்கள், முகத்துக்கு முகம், நடந்தநாடகங்கள், காத்திருந்த காற்று, ஒரு வானம் இரு சிறகு, திருவிழாவில் தெருப்பாடகன், நந்தவனநாட்கள், இதயத்தில் நாற்காலி, என்னுடையபோதிமரங்கள், கனவுக்குதிரைகள், கம்பன் கவியரங்கில், என் பிள்ளைத் தமிழ், ஒற்றைத் தீக்குச்சி, மனிதனைத்தேடி, ஆகாயத்துக்குஅடுத்த வீடு, மு.மேத்தா கவிதைகள், கலைஞருக்கும் தமிழ் என்று பேர், கனவுகளின்கையெழுத்து.

சிறுகதை தொகுப்புகள்: 

கிழித்த கோடு, மு.மேத்தா சிறுகதைகள், பக்கம் பார்த்து பேசுகிறேன்

நாவல்:  சோழ நிலா

கட்டுரை நூல்: திறந்த புத்தகம்

திரைப்படப் பாடல்கள்:

கேளடி கண்மணி – கற்பூர பொம்மை ஒன்று….

காசி  - என் மனவானில் சிறகை விரிக்கும் …..

ரெட்டைவால் குருவி – ராஜ ராஜ சுாழன் நான்…..

சூரிய வம்சம் – நட்சத்திர சன்னலில் வானம் எட்டி…..

உதயகீதம் – பாடு நிலாவே

 

 கவிஞர் அ.சங்கரி

    கவிஞர் அ.சங்கரி என்பவர் சித்திரலேகா மௌனகுரு ஆவார். இவர் மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர், ஆய்வாளர். இவரது தந்தை கந்தையா; தாய் மகேஸ்வரி. இவர் தமது இளமைக் கல்வியை மட்டக்களப்பில் பயின்றவர். கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், நெதர்லாந்திலுள்ள ஹேக் சமூகக் கற்கை நிறுவனம் முதலியவற்றில் உயர் பட்டங்களைப் பெற்றார். பெண்களும் அபிவிருத்தியும் தொடர்பான ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து முதுமாணிப் பட்டத்தையும் பெற்றார்.

இவர் எழுத்தாளர், கவிஞர், ஆய்வாளர், பேச்சாளர், கல்வியியலாளர், பெண்கள் பத்திரிகைகளின் ஆசிரியக்குழு உறுப்பினர், நூலாசிரியர், தொகுப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர், பெண்கள் அமைப்புக்களின் நிறுவுநர், சோசலிஷப் பெண்ணிலைவாதி, சமூக சேவகி எனப் பன்முகப் பணிகளில் ஈடுபட்டு அவற்றில் தனது ஆளுமை, அறிவை வெளிப்படுத்தி வருகின்றார்.

எழுத்துத்துறையில் இலக்கியம், விமர்சனம், பெண்ணிலைவாதம், பண்பாட்டு ஆய்வு, நாட்டார் வழகாற்றியல் சார்ந்து ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி வருகின்றார். இவர் சித்ரா, சங்கரி, ரோகினி, பர்வதகுமாரி, மும்தாஜ், காஞ்சனா முதலான புனைபெயர்களில் கவிதைகளையும் பெண்ணிய ஆக்கங்களையும் படைத்து வருகின்றார்.

இலங்கை வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணியாற்றியவர். சிந்தனை, பிரவாதம், பெண்ணின் குரல், பெண் முதலான இதழ்களில் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவர் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம், பெண்ணிலைச் சிந்தனைகள், இலங்கைத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம், பாரதியும் பெண்களும்: காலம் கருத்து இலக்கியம் ஆகிய ஆய்வுத்துறை நூல்களை எழுதியுள்ளார்.

சொல்லாத சேதிகள், சிவரமணி கவிதைகள், உயிர்வெளி ஆகிய கவிதை நூல்களைத் தொகுத்துள்ளார். இலங்கையில் இனத்துவமும் சமூகமாற்றமும் என்னும் நூலை தமிழில் மொழிபெயர்த்தும் வெளியிட்டுள்ளார்.

சித்திரலேகா  1986 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பெண்கள் ஆய்வு வட்டத்தின் சார்பில் தொகுத்து வெளியிட்ட சொல்லாத சேதிகள்  கவிதைத்தொகுப்பு  இன்றும் இலக்கியப்பரப்பில்  பேசுபொருளாகவே  வாழ்கிறது.

 

கவிஞர் ஈரோடு தமிழன்பன்

    இயற்பெயர் செகதீசன்,  பெற்றோர்  - செ.இரா.நடராசன், வள்ளியம்மாள். பிறப்பு  28.9.1940.. இவர் ஆசிரியர், மரபுக் கவிஞர், கவியரங்கக் கவிஞர், புதுக்கவிதைக் கவிஞர், சிறுகதை ஆசிரியர், புதுக்கவிஞர், நாடக ஆசிரியர், சிறார் இலக்கியப் படைப்பாளி, வாழ்க்கை வரலாற்றாசிரியர்,  திறனாய்வாளர், கட்டுரையாளர், ஓவியர், சொற்பொழிவாளர், திரைப்பட இயக்குநர், திரைப்பட பாடலாசிரியர் எனப் பன்முக ஆளுமைகளைக் கொண்டிருப்பவர்.

சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றியவர். தமிழ்நாடு அரசின் இயல் இசைந நாடக மன்றத்தின் நிர்வாகக்  குழு உறுப்பினராகவும் தமிழ்நாடு அரசின் அறிவியல் தமிழ் மன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார்.

வணக்கம் வள்ளுவ என்ற கவிதைத் தொகுப்பிற்காக சாகித்திய அகாதெமி விருதை 2004 ஆம் ஆண்டில் பெற்றார். தமிழக அரசின் கலைமாமணி விருதையும் இவர் பெற்றுள்ளார். நெஞ்சின் நிழல் என்ற புதினத்தையும். தீவுகள் கரையேறுகின்றன, தோணிகள் வருகின்றன, அந்த நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம், காலத்திற்கு ஒரு நாள் முந்தி உள்ளிட்ட பல்வேறு கவிதை தொகுப்புகளையும் என்னைக் கவர்ந்த பெருமானார்(ஸல்) என்ற சொற்பொழிவு நூலையும் பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள் என் கட்டுரைத் தொகுப்பையும், மதிப்பீடுகள் என்ற திறனாய்வு நூலையும் வெளியிட்டுள்ளார். ஹைக்கூ மற்றும் லிமரிக் என்ற இருவகைக் கவிதை வடிவங்களையும் இணைத்து லிமரைக்கூ என்ற வடிவத்தை டெட் பாக்கர் என்னும் கவிஞர் உருவாக்கினார். இவ்வகைக் குறும்பாக்களைத் தமிழில் படைத்து 138 பாக்களைத் தொகுத்து சென்னிமலைக் கிளியோப்பாத்ராக்கள் என்ற பெயரில் ஈரோடு தமிழன்பன் வெளியிட்டிருக்கின்றார். 

 

கவிஞர் வைரமுத்து

        வைரமுத்து புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் மற்றும் கவிஞர் ஆவார்.   தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டியில் 1953ஆம் ஆண்டு சூலை மாதம் 13 ஆம் நாள்   ராமசாமித்தேவர் - அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.

    சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார். 1980இல் "நிழல்கள்" திரைப்படத்தில் "இது ஒரு பொன்மாலைப் பொழுது.." எனத் தொடங்கும் பாடலை முதன் முதலில் இயற்றினார்.

இவருடைய மனைவியின் பெயர் பொன்மணி. இவருக்கு மதன் கார்க்கி, கபிலன் என இரு மகன்கள் உள்ளனர்.

6000 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். முன்பு இளையராஜாவுடனும், பின்னர் ஏ. ஆர். ரகுமானுடனும் இவர் இணைந்து வழங்கியப் பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன.  திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக கவிஞர் வைரமுத்து நியமிக்கப்பட்டார். மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையினால் நியமிக்கப்பட்டுள்ள இந்தப் பதவியின் காலம் மூன்றாண்டுகள் ஆகும். .

கவிதை, கட்டுரைத் தொகுப்புகள்

வைகறை மேகங்கள்,  திருத்தி எழுதிய தீர்ப்புகள்,  இன்னொரு தேசியகீதம்,  எனது பழைய பனையோலைகள்,  கவிராஜன் கதை, இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல, தமிழுக்கு நிறமுண்டு, பெய்யெனப் பெய்யும் ம‌ழை,

ல்லா நதிகளிலும் எங்கள் ஓடங்கள், கொடி மரத்தின் வேர்கள் கல்வெட்டுக்கள், என் ஜன்னலின் வழியே   சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன், வடுகபட்டி முதல் வால்கா வரை,   இதனால் சகலமானவர்களுக்கும், இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்,  கொஞ்சம் தேனீர் நிறைய வானம்.

நாவல்

     வானம் தொட்டுவிடும் தூரம்தான்,  மீண்டும் என் தொட்டிலுக்கு,  வில்லோடு வா நிலவே (வரலாற்று நாவல்),  சிகரங்களை நோக்கி,  ஒரு போர்களமும் இரண்டு பூக்களும், காவி நிறத்தில் ஒரு காதல்,  தண்ணீர் தேசம், கள்ளிக்காட்டு இதிகாசம்,   கருவாச்சி காவியம், மூன்றாம் உலகப்போர்.

தன்வரலாறு -  இதுவரை நான்

விருதுகள்

    கலைமாமணி விருது - 1990, சாகித்ய அகாதமி விருது . (நாவல்: கள்ளிக்காட்டு இதிகாசம்), பத்ம பூசன் விருது, சிறந்த தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருது (ஆறு முறை)

 

கவிஞர் ந.பிச்சமூர்த்தி

    கவிஞர் ந.பிச்சமூர்த்தி  அவர்கள், நடேச தீட்சிதர் – காமாட்சி அம்மாள் தம்பதியினருக்கு நான்காவது குழந்தையாக 8.11.1900 இல் பிறந்தார். இவருடைய இயற்பெயர்  வேங்கட மகாலிங்கம். இவருக்கு முன் பிறந்த குழந்தைகளில் இரண்டு இறந்து விட்டதால், அக்காலத்து வழக்கப்படி அவரை பிச்சை என்று அழைத்தனர்.  அதுவே பின்னர் பிச்சமூர்த்தி ஆனது.

இவர்  கும்பகோணத்தில் தன் பள்ளிப் படிப்பையும், கல்லூரிப் படிப்பையும் நிறைவு செய்தார்.  சென்னைச் சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்று வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும் பணிபுரிந்துள்ளார்.

ந. பிச்சமூர்த்தியின் முதல் தமிழ்க் கதையான “சயன்ஸுக்குப் பலி”  என்ற கதை கலைமகள் இதழில் வெளிவந்தது. இவர் ஆங்கிலத்திலும் சிறுகதைகள் எழுதியிருக்கின்றார்.

நவஇந்தியா இதழில் சில காலம் பணியில் இருந்தார். இவருடைய படைப்புகள் சுதேசமித்திரன், சுதந்திரச் சங்கு, தினமணி, மணிக்கொடி போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.

இவர் தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை எனப் போற்றப்படுகின்றார். தத்துவத்தைப் பின்னணியாகக் கொண்டு கதை சொல்லும் உத்தியைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார். இவருடைய படைப்புகள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

சிறுகதைத் தொகுப்புகள் - பதினெட்டாம்பெருக்கு, மோகினி, மாங்காய்த் தலை, காபூலிக் குழந்தைகள், விஜயதசமி ஆகிய சிறுகதை தொகுப்புகளை எழுதி வெளியிட்டுள்ளார்.

கவிதைத் தொகுப்புகள் - காட்டுவாத்து, வழித்துணை, கோடை வயல் ஆகியன இருடைய கவிதைத் தொகுப்புகள்.