பராபரக்கண்ணி
குணங்குடிமஸ்தான் சாகிபு
குணங்குடி மஸ்தான் (கி.பி. 1792 – 1838) தமிழ்
நாட்டின் ஓர் இஸ்லாமிய இறைஞானி ஆவார். இவர் வடசென்னையில் பழைய
வண்ணாரப்பேட்டைப் பகுதியில் வாழ்ந்துள்ளார். தமிழிலும், அரபியிலும்
ஆழ்ந்த புலமை பெற்றவர். இஸ்லாமிய சமயத்தைக் குறித்தும், இறைவனைக்
குறித்தும் இவர் இயற்றிய தமிழ் இலக்கியங்கள் புகழ் பெற்றவை ஆகும்.
இல்வாழ்க்கையைத் துறந்து துறவியாக வாழ்ந்த இவரைத் தமிழ் சித்த மரபினரில்
ஒருவராகவும் மக்கள் போற்றுகிறார்கள்.
குணங்குடி
மஸ்தான் இராமநாதபுரம் மாவட்டம், வட்டம், தொண்டிக்கு வடமேற்கில் பத்து மைல் தொலைவில் அமைந்துள்ள குணங்குடி
என்னும் சிற்றூரில் 1792 ஆம் ஆண்டு பிறந்தார். பெற்றோர்கள் இவருக்கு வைத்த பெயர் சுல்தான்
அப்துல்காதிர் என்பதாகும். இவர் இளம் வயதிலேயே குர் ஆன் உள்ளிட்ட இஸ்லாமிய சமய
நூல்களைக் கற்றுத்
தேர்ந்தார். இவர் திருமண வயதை அடைந்த போது,
உறவினர்கள், இவருடைய தாய்மாமன் மகளான மைமூன் என்ற பெண்ணை இவருக்குத் திருமணம்
செய்வதற்கு ஆலோசித்தனர். அப்துல்காதிருக்குத் திருமணம் மற்றும் இல்லறத்தில்
நாட்டமில்லை. எனவே பெரியவர்களுக்குத் தன் நிலையை எடுத்துரைத்த பின்பு தன்னுடைய
பதினேழாவது வயதில் தன் தந்தையின் ஆசியுடன் துறவறத்தை மேற்கொண்டார். உலகப்பற்றை
அறவே நீக்கினார். பொது வாழ்க்கை நெறிக்கு உடன்படாமல் இஸ்லாமிய இறைப் பித்தரானார்.
நாடு, நகரம், மொழி இனம் என அத்தனையும் கடந்து இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்தார்.
ஏழு ஆண்டுகள் இவ்வாறிருந்து, பின்னர் வடநாடு சென்று பலருக்கு ஞானோபதேசம் செய்தார். வடசென்னையில்
இராயபுரத்தில் பாவாலெப்பை என்ற இஸ்லாமியருக்குச் சொந்தமான லெப்பைக் காடு என்ற
பகுதியில் தங்கினார். முட்புதர்களும், சப்பாத்திக்
கள்ளியும் அடர்ந்த குப்பைமேட்டில் தவவாழ்க்கை மேற்கொண்டார். இயற்கையைக் கடந்த (supernatural)
சக்திகள் பெற்று சித்தர்களின் வழியில் “சித்துக்கள்” என்னும்
அற்புதங்களையும் புரிந்தார்.
இவர்
புரிந்த அற்புதச் சித்துக்களை எல்லாம் கண்ணுற்ற பொதுமக்கள் இவரை “மஸ்தான்” என்று
அழைத்தனர். பிற்காலத்தில் குணங்குடியைச் சேர்ந்தவர் என்ற பொருளில் “குணங்குடி
மஸ்தான்” என்ற பெயரே நிலைத்துவிட்டது. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள
தொண்டிப் பகுதியைச் சேர்ந்தவர் ஆதலால் இவரைத் “தொண்டியார்” என்றும்
அழைத்தனர். பிற்காலத்தில் இவர் வாழ்ந்த பகுதி “தொண்டியார்பேட்டை” என்று
பெயர்பெற்றது. இப்பகுதியே இன்று வடசென்னையின் புறநகர்ப் பகுதியான தண்டையார்பேட்டை ஆகும்.
இவர் பல இசையுடன் கூடிய உணர்ச்சி மிக்க
பக்திப் பாடல்களை இயற்றியுள்ளார். இந்தப் பாடல்கள் மதங்களைக் கடந்தவை. கி.பி. 1838
ஆம் ஆண்டு தன்னுடைய நாற்பத்து ஏழாம் வயதில் இறந்தார்.
குணங்குடி மஸ்தான் படைப்புகள்
1. அகத்தீசர் சதகம்
2. ஆனந்தக் களிப்பு
3. நந்தீசர் சதகம்
4. நிராமயக்கண்ணி
5. பராபரக்கண்ணி
6. மனோன்மணிக்கண்ணி
குணங்குடி மஸ்தானைப் போற்றி எழுதப்பட்டவை
1. குணங்குடி நாதர்
பதிற்றுப் பத்தந்தாதி – ஐயாசாமி
2. நான்மணி மாலை – சரவணப் பெருமாளையர்
இவர் இயற்றிய பராபரக்கண்ணியில் இருந்து
பத்துக் கண்ணிகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.
பாடல்
1.
அண்ட புவனமென்று
ஆடுதிருக் கூத்தினையான்
கண்டு மகிழ்ந்திடவே
காட்டாய் பராபரமே!
2.
ஆதியா
யாண்டவனா யஃபாதுவாய் நின்றபெருஞ்
சோதியாய் நின்மலமாய்ச்
சூழ்ந்தாய் பராபரமே!
3.
வேத மறைப்
பொருளை வேதாந்தத் துட்கருவை
ஓதி உனையறிந்தார் உண்டோ
பராபரமே!
4.
அண்ட புவனம்
உடன்ஆகாச மென்றுசும்பிக்
கொண்டமெஞ் ஞானக் கூத்தே
பராபரமே!
5.
நாவாற்
புகழ்கெட்டா நாயகனே நாதாந்தம்
பூவாய் மலர்ந்திருக்கப்
பூத்தாய் பராபரமே!
6.
பேராற்
பெரிய பெரும்பொருளே பேதைதனக்
ரா ரிருந்துபல னாமோ
பராபரமே!
7.
மாறாய
நற்கருணை மாவருள்சித் தித்திடவே
பாராயோ வையா பகராய்
பராபரமே!
8.
ஆனாலும்
உன்பாதம் யாசித் திருப்பதற்குத்
தானா யிரங்கியருள்
தாராய் பராபரமே!
9.
நாதாந்த
மூல நடுவீட்டுக் குள்ளிருக்கு
மாதவத்தோர்க் கான மருவே
பராபரமே!
10.
உடலுக்கு
உயிரேஎன் உள்ளமே உன்பத்தைக்
கடலும்மலை யும்திரிந்தும்
காணேன் பராபரமே!
விளக்கம்
1. எங்கும் நிறைந்த பராபரப் பொருளே! அண்டம், புவனங்களில்
ஆடும் நின் திருக்கூத்தினை நான் கண்டு மகிழும்படி நீ காட்ட வேண்டும் பராபரமே!
2. உலகத்து முதல்வனாய், என்னை ஆட்கொண்டு அருளினவனாய்,
அவ்வப் பொருளாய் நின்ற பெருஞ்சோதியே! குறைவில்லாதவனாய் எங்கும் சூழ்ந்திருக்கின்றவனே!
பராபரமே!
3.வேதத்தின் மறைப்பொருளாகவும், வேதாந்தத்தின்
உட்கருத்தாகவும் இருக்கின்ற உன்னை ஓதி அறிந்தவர்கள் யாருமில்லை பராபரமே!
4.அண்டங்களில் உள்ளோரும், உலகத்தில் உள்ளோரும்,
வானுலகில் உள்ளோரும் துதித்துக் கொண்டாடுகின்ற உண்மை ஞானக்கூத்தே! பராபரமே!
5. நாவினால் புகழ்வதற்கு எட்டாத நாயகனாய் இருக்கின்றவனே!நாகந்த பூவாய்
மலர்ந்நதிருக்கின்றவனே! பராபமே!
6.பேரால் புகழ் பெற்ற பெரிய பரம்பொருளே! ஏழையாகிய எனக்கு யார்
இருந்தும் எந்தப் பயனும் இல்லை பராபரமே!
7.ஐயனே! எனக்கு அம்முடைய உயர்ந்த திருவருளானது கைகூடும்படி திருக்கண்
திறந்து அருள வேண்டும். பராபரமே!
8.எந்தச் சூழலில் நான் இருந்தாலும் உம்முடைய திருவடிகளை யாசித்துக்
கொண்டே இருப்பதற்குக் கிருபையோடு அருள் செய்ய வேண்டும். பராபரமே!
9. நாத தத்துவத்திற்கு அந்தமான மூல வீட்டினுள்ளே எழுந்தருளி
இருக்கின்ற தவம் உடையவர்களுக்குத் தோழனாக விளங்குகின்றாய். பராபரமே!
10.என் உடலில் இருக்கின்ற
உயிரே! என் மனமே! உன் திருவடிகளைக் கடலிலும், மலைகளிலும் திரிந்தும் காண
முடியவில்லை. பராபரமே!