முள்முடி – தி.ஜானகிராமன்
“அப்ப எங்களுக்கு உத்தரவு கொடுக்கிறீங்களா?”
என்று கண்ணுசாமி எழுந்ததும் கூடத்தை அடைத்து உட்கார்ந்திருந்த கூட்டமும் எழுந்து கொண்டது.
“நான் வரேன் சார்”
“நான் வரேன் சார்”
“சார். போய்ட்டு வரேன் சார்!”
நடுவில் ஒரு பையன் அவர் காலைத்தொட்டுக்
கண்களில் ஒற்றிக்கொண்டான். சட்டென்று காலை இழுத்துக்கொண்டார் அனுகூலசாமி.
“அட. இதென்னடா தம்பி”
“செய்யட்டும் சார். இந்த மாதிரி யார்
கிடைக்கப் போறாங்க அவங்களுக்கு?. நல்லாயிருக்கணும்னு உங்க வாயாலே சொல்லுங்க நடக்கும்”
என்றார் கண்ணுசாமி.
அந்தப் பையனைப் பார்த்து மற்றப் பெண்கள்
அத்தனை பேரும் அவர் காலைத் தொட்டுத் தொட்டு ஒற்றிக் கொண்டார்கள்.
அனுகூலசாமி குன்றிப்போய் நின்றார்.
“இதெல்லாம்…?” என்று அவர் இழுப்பதற்குள்
கண்ணுசாமி இடைமறித்தார். “அனுகூலசாமி. நீங்க நிஜமான கிறிஸ்தவர்.
“முகத்துக்கு சொல்லலே. முப்பத்தாறு
வருஷம் பிரம்பைத் தொடாம அதிர்ந்து ஒரு வார்த்தை சொல்லாம வாத்தியாராய் இருக்கிறதுன்னா
அந்தத் தெய்வத்தை விழுந்து கும்பிட்டாத்தான் என்ன?”
“அதெல்லாம் சொல்லாதீங்க”
“நான் சொல்லலே. ஊர் முழுக்கச் சொல்லுது.
கடைத் தெருவிலே உக்காந்து நானும் விசாரிக்கிறேனா? வயத்திலே பொறந்த பிள்ளையைக்கூட ஒரு
அடியாவது எப்பவாவது அடிக்காம இருக்க மாட்டாங்க. ஒரு வெசவாவது வெய்வாங்க. அதுகூட இங்கே
பேசப்படாது! இந்த மாதிரி யாரால் இருக்க முடியும்? குழந்தையும் தெய்வமும் கொண்டாடற இடத்திலே.
இந்தக் குழந்தைகளை இன்னும் எத்தனையோ புள்ளைங்களை மனுஷப் பிறவிக்குக் கொடுக்கிற மரியாதை
கொடுத்து மதிச்சீங்க..”
கண்ணுசாமி பேசும்போது பையன்கள் குனிந்து
கும்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அனுகூலசாமிக்கு வாயைத் திறக்கவே முடியவில்லை. வாயைத்
திறந்தால் குரல் உடைந்து நாக்குப் புரளும் போலிருந்தது.
“நான் வரட்டுமா.. அப்ப?”
“செய்யுங்க..” என்று சிரமப்பட்டு வாயைத்
திறந்து உடனே மூடிக்கொண்டார் அவர்.
“எங்களுக்கு உத்தரவு கொடுக்கணும்”
என்று முற்றத்தில் நாயனக்காரர் கும்பிட்டார். அதற்கும் அவரால் தலையசைக்கத்தான் முடிந்தது.
கூடத்துக் கூட்டம் முழுவதும் வாசற்படி
வழியாக வெளியேற இரண்டு நிமிஷமாயிற்று.
இரண்டு மூன்று பையன்கள் கிசுகிசுவென்று
பேசிவிட்டு “சார். விளக்கு ரெண்டும் இங்கியே இருக்கட்டும். காலமே வந்து எடுத்துக்கறோம்”
என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்கள்.
வாசல்வரை கொண்டு விட்டுத் திரும்பி
வந்தபோது கூடம் வெறிச்சிட்டுக் கிடந்தது. அந்தச் சூன்யமும் நெஞ்சைப் பிடுங்குகிற ஏக்கமும்
முன்னே ஒரு தடவை வந்ததுண்டு. பத்து வருடம் முன்னால் லூயிசாவை மாப்பிள்ளை வீட்டில் கொண்டு
விட்டுவிட்டு வரும்போது வந்த அதே சூன்யம். அதே ஏக்கம்.
புஸ்ஸ் என்று பெட்ரோமாக்ஸ் இரண்டும்
சூன்யத்தை நிரப்பிக் கொண்டிருந்தன.
தனியாக விட்டு விட்டுப் போய்விட்டார்கள்.
நாளைக்குப் புதன்கிழமை. ஆனால் அவருக்கு சனி ஞாயிறு நாளை மறுநாள் அதற்கும் மறுநாள்
– இனிமேல் எப்போதுமே சனி ஞாயிறுதான். பள்ளிக்கூடத்துக்கு இனிமேல் போக முடியாது. அவருக்கு
வயது அறுபதாகி விட்டது. ஓய்வு கிடைத்து விட்டது.பள்ளிக்கூடத்துக்கு இனிமேல் போக முடியாது.
ஊஞ்சல் மீது உட்கார்ந்து கொண்டார்
அவர். பக்கத்தில் ப்ரேம் போட்ட ஏழெட்டு உபசாரப் பத்திரங்கள். ஒரு வெள்ளித் தட்டு. ஒரு
பேனா. கடையில நாலு ரூபாய் விலை. ஆனால் இங்கு இந்தப் பேனாவுக்கு விலை கிடையாது. நாலு
லட்சம். நாலு கோடி பெறும் என்று சொன்னால் வீண் வார்த்தை. ஏதோ இரண்டும் சமம் என்று ஆகிவிடும்.
கொர்னாப் பட்டையும் வெள்ளி நூலுமாக
நாலைந்து ரோஜா மாலைகள் சுருண்டு கிடந்தன.
ஊஞ்சல் சங்கிலி இரண்டையும் பிடித்துக்
கொண்டு நின்றாள் மகிமை. பேசவில்லை. அவரையே பார்த்துக் கொண்டு நின்றாள். இத்தனை மேளதாளங்களும்
தழதழப்பும் தனக்குக் கிடைத்தாற்போல ஒரு பார்வை. ஒரு நிமிஷம். அவரைப் பருகிக் கொண்டு
நின்றவள் சட்டென்று வாசலுக்குப் போய்க் கதவைத் தாழிட்டு வந்து மாலைகளை ஒவ்வொன்றாக அவர்
கழுத்தில் போட்டு தோள்களைப் பற்றி முகத்தைப் பார்த்துக் கொண்டே நின்றாள்.
“என்னைக் கூடத்தான் நீங்க அடிச்சதில்லே.
அதிர்ந்து சொன்னதில்லே” என்று மார்பில் தலையைச் சாத்திக் கொண்டாள்.
“உலகத்திலே வந்து இருக்கிறது கொஞ்ச
காலம். ஈசல் மழைக்கு வந்து மடியறாப்பல. அந்தப் பொழுதை அடிச்சுக் கோச்சுக்கிட்டுப் போக்கணுமா?
அடிச்சு யாரைத் திருத்த முடியும்? ”
”ராட்சசன் மாதிரி கோச்சுக்க வாணாம்.
ஆம்பிளையா இருக்கறத்துக்காவது ஒரு தடவை கோபம் வர வேணாம்?”
“வராமயா இருக்கும்?”
“வெளியிலே காமிக்கணும்”
“அதுக்குத்தான் பால்காரி வேலைக்காரி
எல்லாம் இருக்கறாங்க உனக்கு. நான் வேற கோச்சுக்கணுமா?”
“பள்ளிக்கூடத்திலே அடிக்காம அதட்டாம
இருக்க முடியுமா?”
“இருக்க முடிஞ்சுதே!”
பரவசமாகப் பார்த்துவிட்டு அவர் மீசையை
இழுத்துவிட்டு “காபி சாப்பிடறீங்களா?” என்று நகர்ந்து நின்றாள் மகிமை.
அவள் உள்ளே விரைந்தபோது தன் பிராணனே
இன்னோர் உடம்பு எடுத்து விரைவது போலிருந்தது. மேலே சுவரைப் பார்த்தார். முள்முடியுடன்
அந்த முகம் கருணை வெள்ளமாகப் பொழிந்து கொண்டிருந்தது. நாலைந்து படம் தள்ளி இன்னொரு
படத்தில் அதே முகம் ஓர் ஆட்டுச் சிசுவை அணைத்துக் கொண்டிருந்தது.
கண்ணுசாமி சொன்னது அப்படியே உண்மைதான்.
முப்பத்தாறு வருஷ உத்தியோகத்தில் ஒரு பையனைக்கூட அடிக்கவில்லை. அதட்டிப் பேசவில்லை
அவர்.
சுபாவமே அப்படி. லூயிசா பிறந்து பள்ளிக்கூடம்
சேர்ந்து ஆறுவயதில் ஏதோ விஷமம் பண்ணியதற்காக வாத்தியாரிடம் அடி வாங்கிவிட்டது. அந்த
வாத்தியார் ஸ்கேலால் அடித்தபோது சட்டைக்குள் இருந்த கோடைக்கட்டியின் மீது பட்டு… அப்பப்பா!
– அன்று துடித்த துடி! அதைப் பார்த்ததும் சுபாவத்தை சங்கல்பமாகச் செய்துகொண்டார் அனுகூலசாமி.
எல்லோரும் செய்த பாவங்களுக்குத் தன் உயிரை விலை கொடுத்தானே. அவன் எல்லாத் தலைமுறைகளுக்கும்
சேர்த்துத்தான் கொடுத்தான்.
அந்த உறுதி முப்பத்தாறு வருஷமும் ஒரு
மூளி விழாமல் பிழைத்து விட்டது.இல்லாவிட்டால் பதவியை விட்டு ஓய்வு எடுக்கிற எந்த வாத்தியாரை
மேளதாளத்துடன் வீடு வரை கொண்டு விட்டுப் போயிருக்கிறார்கள்?
பள்ளிக்கூடத்தில நேற்று நடந்த பாராட்டுக்கள்
போதாதென்று. அவர் வகுப்பு என்று நாற்பது பையன்கள் இருக்கிறார்களே அவர்கள் நினைத்திருக்க
வேண்டும். இன்று நடந்தது அந்தக் கூட்டம்தான். மாலை மாலையாகப் போட்டார்கள். மடல் மடலாக
வாசித்துக் கொடுத்தார்கள். இருந்தாற் போலிருந்து வராந்தாவில் ”உம்” என்ற ஒத்தும் தொடர்ந்து
தவுலும் ஒலித்தன.
“என்ன தம்பி. இதெல்லாம்?”
“வேற யாருக்கு சார் செய்யப் போறோம்?
வாங்க சார்” என்று நாட்டாண்மை மாதிரி நின்ற பெரிய பையன் அவரை அழைத்தான். அந்த ஆறுமுகத்துக்கு
வயது இருபத்து மூன்று. இன்னும் பள்ளிக்கூடப் படிப்பு முடியவில்லை. வெகுகாலமாக வாசிக்கிறான்.
மற்றபடி உலக ஞானம் அதிகம். அனுகூலசாமி பதில் சொல்லாமல் அவன் வேண்டுகோளுக்குக் கட்டுப்பட்டு
விட்டார். இல்லாவிட்டால் மற்ற வாத்தியார்களைப் பற்றி ஆரம்பித்து விடுவான். நாலு வார்த்தை
சொல்லிக் கூட விட்டான்.
“எங்களுக்குத் தெரியாதா சார்? நான்
ரிடையராகப் போறேன் நிதி திரட்டுங்கன்னு நீங்க சொல்லலே. கில்டு நகையை வச்சுக் கடன் வாங்கலே.
கடுதாசைக் காட்டிக் கடன் வாங்கி ஊர்ப்பாவத்தைக் கொட்டிக்கலே”
“சரி.. கொஞ்சம் தண்ணி கொண்டு வா” என்று
என்னமோ சொல்லி அவனை அனுப்பிப் பேச்சை மாற்ற வேண்டியிருந்தது. அவன் வாயை அடைக்க வேண்டியிருந்ததே
தவிர சொன்னது என்னமோ தப்பில்லை. ஊர்ப்பாவத்தைக் கொட்டிக்கொண்டதில்லை. ஓங்கி ஒருவனை
அறைந்தால் என்ன. கடனை நாமம் சாத்தினால் என்ன? எல்லாம் ஒன்றுதான். அந்த ஹிம்சையும் அவர்
கொடுத்ததில்லை.
நாரணப்பய்யரும் அவர் மாதிரிதான். சம்சாரம்
அதிகம் இல்லை. ஒரு பிள்ளை. ஒரு பெண். ஆனால் மனுஷனுக்கு நவத்துவாரமும் கடன். ஜவுளிக்
கடையிலிருந்து கொத்தமல்லிக்காரி வரை காலணாவுக்கு மதிக்க முடியாத நிலை வந்துவிட்டது.
இந்த நிலையிலும் நாரணப்பய்யர் சும்மா இருக்கவில்லை. பட்டணத்தில் கல்வி டைரக்டர் ஆபீஸிலே
வேலை செய்கிற யாரோ உறவுக்காரன் “உங்களை இந்த வருஷம் பரீட்சை அதிகாரிகளில் ஒருவராகத்
தேர்ந்தெடுக்கிறார்கள். உத்தியோக பூர்வமாக இன்னும் இரண்டு வாரத்தில் கடிதம் வரும்”
என்று ஒரு கடிதம் எழுதியிருந்தான். அந்தக் கடிதத்தைக் காட்டியே ஐம்பது எழுபத்தைந்து
என்று இருபது பேரிடம் கடன் வாங்கிவிட்டார். அந்த வேலைக்குக் கிடைக்கப்போகிற கூலி என்னமோ
இருநூற்றுச் சொச்சம்தான். கடைசியில் கடிதம் பொய்த்துவிட்டது. அவ்வளவுதான். ஷராப் கடை
நாயுடு நாராணப்பய்யரை வளைத்துக் கொண்டு சைக்கிளைப் பிடுங்கிக் கொண்டுவிட்டார். ஏமாந்த
கோபம். பிடுங்கினதா பெரிசு? சைக்கிளை ஓட்டுகிறது யார்? வாத்தியாராயிற்றே! நாராணப்பய்யரே
உம்மால் இந்த இனத்துக்கே அவமானம்!
பாங்க் ஏஜெண்ட் அய்யங்காரை யாராவது
ஏமாற்ற முடியுமோ? கடைந்த மோரில் வெண்ணெய் எடுக்கிறவர்! அவரிடம் இந்த சாமிநாதன் கைவரிசையைக்
காட்டினாரே! வாத்தியார் என்று நம்பி சாமிநாதன் கொடுத்த சங்கிலியை எடைபோட்டு ஒன்பது
பவுனுக்கு முன்னூறு ரூபாய் கடன் கொடுத்தார் அய்யங்கார். சாமிநாதன் பேசாமலிருந்திருக்கலாம்.
பதினைந்தாம் நாள் இன்னொரு சங்கிலியைக் கொண்டு போனால் அதையுமா உரைத்துப் பார்க்காமல்
பணத்தை தூக்கிக் கொடுப்பார்கள்? சங்கிலியை உரைத்துக்கொண்டே புன்சிரிப்புடன் ”என்ன அய்யர்வாள்!
பள்ளிக்கூடத்திலேயே பையன் சந்தேகம் கேட்டால் “சீ. அதிகப் பிரசங்கி. உட்காரு“ன்னு அதட்டி
நம்ம அஞ்ஞானத்தை மறைச்சுக்கலாம். ஆனால் கடைத்தெருவிலே அது செல்லுமோ என்னமோ எனக்குத்தான்
சரியாத்த தெரியலியோ என்னமோ.. சித்த இருங்கோ. பத்தரை அழைச்சிண்டு வரேன்” என்று வெளியே
எழுந்து போனாராம் அய்யங்கார். சாமிநாதய்யருக்கு வயிற்றைப் புரட்டியது. பத்தரைக் கூப்பிட
ஆள் இல்லையா? என்று சமாதானம் சொல்லலாம் என்று அவர் தேடுவதற்குள் பத்தர் வந்துவிட்டார்.
”ஏட்டு”ம் வந்துவிட்டார். அந்த சாட்சிகளோடு கஜானா அறையைத்திறந்து பார்த்தபோது போன தடவை
கொடுத்த சங்கிலியும் ‘ நான் பித்தளை’ என்று பல்லை இளித்துக்கொண்டிருந்தது. அந்தச் சமயத்திலேகூட
அய்யங்கார் வாத்தியார் குலத்துக்கு மதிப்புக்கொடுத்துவிட்டார். மூன்றாம் பேருக்குத்
தெரியாமல் சாமிநாதய்யரின் குழித் தோட்டத்தை எழுதி வாங்கிக் கொண்டு ஆளை விட்டுவிட்டார்.
நல்ல வேளை ”ஏட்டு”ம் உடையில் வராமல் வேட்டி சட்டையோடு போயிருந்தார்.கூட்டமில்லை. ஊர்
சிரிக்காமல் போயிற்று.
இன்னும் நாலைந்து பேரின் நினைவு வந்தது.
“ஏண்டலெ! ரிடையராயாச்சு. இன்னமே கால் வயிறு சாப்பாடுதான். அந்த நாள்ளெ எங்க வாத்யாருக்கு
நிதிதிரட்டிக் கொடுத்தோம் நாங்க” என்று ஒரு பையனைக் குழையடித்து வசூலுக்குக் கிளப்பிவிட்டார்
ராமலிங்கம்.
காப்பியை எடுத்துக்கொண்டு வந்தாள்
மகிமை.
“என்ன யோசனை? சாப்பிடுங்க. சூடு சரியாயிருக்கு”
என்று உபசாரப் பத்திரங்களை ஒவ்வொன்றாக வாசித்துக் கொண்டிருந்தாள். நடுநடுவே பெருமையுடன்
அவரை நிமிர்ந்து பார்த்துக்கொண்டாள்.
“அதெல்லாம் நெசம்னு நெனைச்சுக்காதே.
இனிமே வேலைக்கு வரமுடியாதுன்னா அளப்பொறானேன்னு உளுவாகக் காட்டியிருக்காங்க. சக்கரை
முட்டாயி”
“தெரியும். ஆனா நெசத்தை மட்டும் எல்லாரும்
சொல்லியிருக்காங்க” என்றாள் மகிமை. “உங்கள் கை நீளாம குரல் வெடுவெடுக்காம இருந்தது
நெசம்”
“த்ஸ பெரிய நெசத்தைக் கண்டுபிட்டாங்க”
“திறமைன்னு சொல்றதும் நெசந்தான்” என்றாள்
மகிமை. ”தடியெடுக்காம அதட்டாம அப்படியே கெட்டிக்காரங்கன்னு பேர் எடுக்கறதும் கஷ்டம்தானே?”
அனுகூலசாமி யோசித்துப் பார்த்தார்.
அதுவும் உண்மைதான் என்று பட்டது. அவருக்குக் கர்வப்படக்கூட உரிமை உண்டு என்று தோன்றிற்று.
“ஒரு கஷ்டமும் இல்லே. பால்காரி கூட்டுக்காரி
கிட்டயும் அப்படி இருக்கலாம். மனுஷனாயப் பொறந்தவன் யாரும் புத்தியிருக்கறவன் யாரும்
அடியிலே நம்பிக்கை வைப்பானா?”
“எல்லாருக்கும் முடியாதுங்க!”
“என்னமோ நான் இருந்துட்டேன்” என்றார்
அவர்.
“சார்! என்று வாசற் கதைவைத் தட்டுவது
கேட்டது.
“யாரு?”
“நான்தான்சார்!”
மகிமை போய்த்திறந்தாள்.
“சார் இருக்காங்களா?”
“இருக்காங்க.. யாரு? ஆறுமுகமா..வா!”
ஆறுமுகம் மட்டும் வரவில்லை. இன்னொரு
பையனும் வந்திருந்தான். அவர் வகுப்பில படிக்கிற பையன்தான். கூட ஒரு அம்மாள். வயது நாற்பது
நாற்பத்திரண்டு இருக்கும். நெற்றி காது மூக்கு கைகளில் ஒன்றுமில்லை. அனுகூலசாமி எழுந்து
நின்றார்.
“என்ன சேதி. சின்னையா?”
“சின்னையன் அம்மா சார் இது” என்றான்
ஆறுமுகம்.
“வாங்க!”
ஆறுமுகம் யாரையாவது அழைத்து வருவதென்றால்
சிபார்சு என்று அர்த்தம். இருபத்து மூன்று வயதில் இன்னும் பள்ளிக்கூடத்தை முடிக்காத
பையன்! நாட்டாண்மைக்காரன் மாதிரி ஒரு அந்தஸ்து உண்டு அவனுக்கு. எதற்கு வந்திருக்கிறானோ?
பரீட்சை பேப்பர் கூட இல்லையே!
“என்ன ஆறுமுகம்?”
“சின்னையன் பாக்கணும்னானா சார்!”
“என்ன சேதி.. சின்னையா?”
சின்னையைன் பதில் பேசவில்லை. தலைகுனிந்து
நின்றான். கேட்டு அரை நிமிஷம் ஆயிற்று. குனிந்த தலை நிமிரவில்லை அழுதான்.
“சொல்லுடா!” என்றாள் அந்த அம்மாள்.
உற்றுப் பார்த்தார் அனுகூலசாமி.
பையனின் முகச் சதை கோணிற்று. உதடு
நடுங்கிற்று.
“சொல்லேண்டா” என்றான் ஆறுமுகம்.
“ஒரு வருஷமாத் துடிச்சுப் போயிட்டுதுங்க
அது” என்றாள் அம்மா.
“ஒரு வருஷமாத் துடிச்சுப் போயிட்டுதா?”
“ஆமாம் சார்” என்றான் ஆறுமுகம். “நீங்க
இனிமே பேசலாம்னு சொல்லிடுங்க சார்!”
“நல்லாச் சொல்லேண்டா. எனக்கு ஒன்றும்
புரியலியே!”
“சாருக்கு மறந்து போச்சு” என்று அந்த
அம்மாளையும் மகிமையையும் பார்த்தான் ஆறுமுகம்.
“எனக்கு என்ன மறந்துபோய் விட்டது”
– அனுகூலசாமி யோசித்து யோசித்துப் பார்த்தார். ஒன்றும் ஞாபகமில்லை.
ஆறுமுகம் சொன்னான். “சார்! போனவருஷம்
இவன் காயாரொகணத்தோட இங்கிலீஷ் புஸ்தகத்தை திருடிட்டுப் போயி வேறே பேர் ஒட்டி கடையிலே
பாதி விலைக்கு வித்துப்பிட்டான். நான்தான் அதைக் கண்டு பிடிச்சு உங்களிட்ட கொண்டாந்து
நிறுத்தினேன்..”
பையன் விசும்பி விசும்பி அழவே ”சும்மா
இருடா” என்று தாயார் அவனைச் சமாதானம் செய்தாள்.
“அப்புறம்?”
“நீங்க அவனைச் சித்த நேரம் பாத்தீங்க.
நம்ப கிளாசிலே ஒரு பய இதுவரைக்கும் இந்த மாதிரி பண்ணினதில்லே. இனிமெ இந்தப் பயலோட ஒருத்தரும்
பேசாதீங்கடா”ன்னு சொன்னீங்க”
பையன் அழுகை நிற்கவில்லை.
“அன்னிலேந்து அவனை நாங்க ஒதுக்கிப்பிட்டோம்
சார். யாரும் பேசறதில்லே.
அப்புறம் இன்னக்கி பார்ட்டி நடத்தினோமில்ல?
அதற்கு ரண்டு ஒண்ணுன்னு பையன்கள் கிட்ட வசூல் பண்ணினோம். இவனும் ஒரு ரூபா கொடுக்க வந்தான்.
வாண்டான்னுட்டோம். பார்டிக்கும் வரக்கூடாதுன்னிட்டோம். ஒன்னும் பேசாது போயிட்டான் நேத்து.
இப்ப இங்கே வந்திட்டு வீட்டுக்குப் போனெனில்ல? அவங்க அம்மாளை அழச்சிட்டு வந்து திண்ணையிலே
நின்னுகிட்டிருந்தான். இவங்க அம்மாவும் சொன்னாங்க அழச்சிட்டு வந்தேன்” என்று பயந்து
மென்று விழுங்கிக் கொண்டே சொன்னான்.
அனுகூல சாமிக்கு அந்தச் சம்பவம் ஞாபகம்
வந்துவிட்டது. ஆனால் இவ்வளவு கடுமையான தண்டனையா விதித்தோம்? ஏதோ சொல்லி வைத்தார். ஆனால்
இவ்வளவு கண்டிப்பாகவா அதை நடத்தவேண்டும்.?
“சின்னையா. அழாதடா ஏய்?” என்றார் அவர்.
“நாங்கள்ளாம் அவனோட பேசலாம்னு சொல்லுங்க
சார் நீங்க!”
“ஒரு வருஷமா அவன் சொரத்தாவே இல்லீங்க.
எப்பவும் சிரிச்சுப் பேசிட்டு இருப்பான். இப்ப சரியாப் பேசறதில்லே. ஒரு வார்த்தை பேசுவான்.
போயிடுவான். என்னமோ அதுங்க மனசிலே இருக்கறது நமக்குத் தெரியுதுங்களா? தங்கச்சிகளோட
சரியாப் பேசறதில்லே. இன்னிக்கிச் சாயங்காலம்தான் எல்லாத்தியும் சொன்னான். ஊட்டுலே அதெல்லாம்
விளையாடப் போயிருந்திச்சு. வாத்தியாரை இன்னிக்குப் பார்த்தாத்தான் உண்டுன்னான். வந்தேன்.
நீங்க பெரிய மனசு பண்ணுங்க”
அனுகூலசாமி கையும் களவுமாகப் பிடிபட்டு
விழித்தார். புழுத்துதுடிப்பாக அவர் உள்ளம் துடித்துக் கொண்டிருந்தது.
“பையனைச் சேத்துக்கு மாட்டேன்னிட்டாங்களாம்.
இதை இங்க கையாலே வாங்கிக்கிங்க. எல்லாரும் செய்யறப்ப அவன் மனசு கேக்குங்களா.. கொடுடா”
என்றாள் அம்மா.
பையனுக்கு அழுகை அதிகமாகிவிட்டது.
கையில் வேர்த்துக்கொண்டிருந்த ரூபாயை அவரிடம் நீட்டினான்.
“வாங்கிக்கிங்க சார்” என்று கெஞ்சினான்
ஆறுமுகம்.
பேசாமல் வாங்கிக்கொண்டார்.
“ரொம்ப நல்ல பையன் சார். அன்னிக்கி
ஏதோ புத்திப் பிசகா பண்ணிட்டான். அப்புறம் ஒரு புகார் கிடையாது சார் அவன்மேலே”
“நீங்க சொல்லுங்க பெரிய மனசு பண்ணி.
கூட இருக்கறதுங்க பேசாம இருந்தா என்ன செய்யும்? சிறுசுதாங்களே!” என்றாள் அம்மாள்.
“இந்தப் பயலுங்க இப்படிப் பண்ணுவாங்கன்னு
தெரியாம போயிடிச்சே எனக்கு” என்றார் அவர்.
“நீங்க சொன்னதைத்தானே செய்தாங்க” என்றாள்
மகிமை.
“அது சரி” என்று லேசாகச் சிரித்தார்
அவர். அழுகைதான் சிரிப்பாக வந்தது. மேலே படத்தில் தோன்றிய முள்முடி அவர் தலையை ஒருமுறை
அழுத்திற்று.
**