வெள்ளி, 12 மே, 2023

முக்கூடற்பள்ளு - காயிதே மில்லத் கல்லூரி பாடம்

 

முக்கூடற்பள்ளு

இப்பகுதி மூத்த பள்ளியும் இளைய பள்ளியும் தாங்கள் வழிபடு தெய்வத்தை  முன்னிறுத்தி ஒருவரை ஒருவர் பழித்து ஏசுவதை விவரிக்கின்றது. மூத்த பள்ளி திருமாலை வழிபடுபவள். இளைய பள்ளி சிவனை வழிபடுபவள்.

பாடல்

சாதிப்பது உனக்குவரும்  மருதூப்பள்ளி- நரிதான்

பரியாய்ச்சா தித்தான்உங்கள் சம்புவல் லோடி

பேதிக்கச்சா திக்கவாராய் முக்கூடற்பள்ளி- கல்லைப்

பெண்ணாகச்சா தித்தானுங்கள் கண்ண னல்லோடி. 161

விளக்கம்
“சாதிக்கின்ற தந்திரம் எல்லாம் உனக்குத் தான் வரும் மருதூர்ப்பள்ளி! நரிகளைப் பரிகளாக மாற்றிச் சாதித்தவன் உங்கள் சிவபெருமான் அல்லவா?” (மாணிக்க வாசகருக்காக நரியைப் பரி ஆக்கியது) என்று மூத்தவள் கூறுகின்றாள். அதற்கு இளையவள், “கல்லையும்  பெண்ணாகச் சாதித்தவன் உங்கள் கண்ணன் அல்லவா?”  (கல்லாய்க் கிடந்த அகலிகையை இராமன் பெண்ணாக மாற்றியது) என்று கேட்கின்றாள்.

பாடல்

மங்கையொரு பங்கிருக்க யோகியென்றுதான்-கையில்

மழுவேந்தி நின்றானுங்கள் மத்த னல்லோடி

கொங்கைதனில் நாச்சியாரைச் சங்கையில்லாமற்-பண்டு

கூடிநெய்யிற் கையிட்டானுங் கொண்ட லல்லோடி. 162

விளக்கம்

“மங்கை ஒருத்தித் தன் ஒரு பாகத்திலே இருக்க, தான் யோகி என்று சொல்லிக் கையில் மழுவை ஏந்தி நிற்பவன் உங்கள் ஊமத்தை மாலை அணிந்த சிவபெருமான் அல்லவா” என்று மூத்தவள் கேட்கின்றாள். அதற்கு இளையவள் “நாச்சியாருடன் உடலும் உயிருமாகக் கலந்து விட்டு, கொஞ்சமும் வெட்கமில்லாமல் முன்னொரு காலத்தில் மனம் துணிந்து நெய்யிலே கையிட்டவன் உங்கள் மேக வண்ணனாகிய திருமால் அல்லவா” என்று கேட்கின்றாள்.
பாடல்

காமனை மருகனென்று எண்ணிப்பாராமற்-காய்ந்து

கண்ணிலேறு பட்டானுங்கள் கர்த்தனல் லோடி

மாமனென்று பாராமல்முன் கஞ்சனைக்கொன்றே-கண்கள்

மாறாதேபூப் பட்டானுங்கள் மாயனல் லோடி.163

விளக்கம்

“மன்மதனைத் தன் மருமகன் என்று கூட எண்ணிப் பார்க்காமல் முதலில் கோபித்துக் கொண்டு, கண்ணிலே நெருப்பைக் காட்டியவன் உங்கள் சிவன் தானே?” என்று மூத்தவள் கூற, “மாமனெ்றும் பாராமல் முன்னாளில் கம்சனைக் கொன்றே கண்களின் என்றும் மாறாத பூ விழப் பெற்றவன் மாயவனாகிய உங்கள் கண்ணன் தானே” என்று இளையவள் சாடுகின்றாள்.
பாடல்

மாதொருத்திக் காசைப்பட்டுப் பொன்னின் மயமாம்-பனி

மலையேறிப் போனானுங்கள் மத்த னல்லோடி

காதலித்துத் தம்பியுடன் சீதை பொருட்டால்-அன்று

கடலேறிப் போனானுங்கள் கண்ண னல்லோடி. 164

விளக்கம்

“பெண் ஒருத்திக்கு ஆசைப்பட்டு பொன்னின் மயமான பனிமலை ஏறிப் போனவன் உங்கள் சிவபெருமான்” என்று மூத்தவள் கூற, “காதல் கொண்டு தம்பியோடு சீதை கொருட்டாக அந்நாளில் கடல் கடந்து போனவன் உங்கள் இராமன்” என்று இளையவள் ஏசுகின்றாள்.

பாடல்

தான்பசுப்போல் நின்றுகன்றைத் தேர்க்காலில் விட்டே-சோழன்

தன்மகனைக் கொன்றானுங்கள் தாணு வல்லோடி

வான்பழிக்கு ளாய்த்தவசி போல மறைந்தே-நின்று

வாலியைக் கொன்றானுங்கள் மாய னல்லோடி. 165

விளக்கம்

“தான் பசு போல நின்று கொண்டு தன் கன்றைத் தேர்க்காலில் விழ விட்டு, அதனால் சோழ மன்னனின் மகனைக் கொன்றவன் உங்கள் சிவனே” என்று மூத்தவள் கூறுகின்றாள். அதற்கு இளையவள், “பரிய பழிக்கு உள்ளாகித் தவவலிமையுடைவன் போல மறைந்து நின்று வாலியைக் கொன்றவன் உங்கள் திருமால்” என்று கூறுகின்றாள்.

பாடல்

வலிய வழக்குப்பேசிச் சுந்தரன் வாயால்-அன்று

வையக்கேட்டு நின்றானுங்கள் ஐய னல்லோடி

புலிபோல் எழுந்துசிசு பாலன்வையவே-ஏழை

போலநின்றான் உங்கள்நெடு நீல னல்லோடி. 166

விளக்கம்

“சுந்தரர் திருமணத்தில் வலிய வந்து வழக்குப் பேசிச் சென்று அன்று அவன் வாயால் திட்டுவதைக் கேட்டு நின்றவன் சிவபெருமான்” என்று மூத்தவள் கூற, ”சிசுபாலன் புலி போல எழுந்து திட்டவே, (உருக்குமணியை மணந்தபோது கண்ணனை சிசுபாலன் திட்டடினான்) சபை நடுவில் ஏழைபோல ஒடுங்கி நின்றவன் திருமால்” என்று இளையவள் கூறுகின்றாள்.

பாடல்

அடியனும் நாயனுமாய்க் கோவிற் புறகே-தொண்டன்

அன்றுதள்ளப் போனானுங்கள் ஆதியல் லோடி

முடியுஞ் சூடாமலேகை கேசிதள்ளவே-காட்டில்

முன்புதள்ளிப் போனானுங்கள் மூர்த்தியல் லோடி. 167

விளக்கம்

“அடியவனாகிய சுந்தரரும், நாயகனாகிய சிவபிரானும் தன் மனக்கோவிலுக்கு அப்பால் இருவரையும் தொண்டனாகிய விறன்மிண்டன் தள்ளிவிட, அதன்படி போக நுர்ந்தவன் சிவபெருமான்“ என்று மூத்தவள் கூற, “முடியும் சூடாமல் கைகேயி தள்ளிவிட, காட்டில் நெடுந்தொலைவு போய் வாடிக் கிடந்தவன் திருமால்” என்று இளையவள் கூறுகின்றாள்.

பாடல்
சுற்றிக்கட்ட நாலுமுழந் துண்டு மில்லாமல்-புலித்

தோலைஉடுத்தா னுங்கள் சோதி யல்லோடி

கற்றைச்சடை கட்டிமர வுரியுஞ் சேலைதான்-பண்டு

கட்டிக்கொண்டான் உங்கள்சங்குக் கைய னல்லோடி.168

விளக்கம்

“இடுப்பிலே சுற்றிக் கட்டுவதற்கு ஒரு நான்கு முழத்துண்டு கூடக் கிடைக்காமல் புலித்தோலை எடுத்து உடுத்தியிருப்பவன் உங்கள் சிவன்” என்று மூத்தவள் கூற, “கற்றையாகச் சடையைக் கட்டி, மரவுரியை இடுப்பிலே கட்டிக் கொண்டவன் சங்கைக் கையில் கொண்ட உங்கள் திருமால்” என்று இளையவள் கூறுகின்றாள். (சிவன் தாருகாவனத்து முனிவர் ஏவிய புலியைக் கொன்று அதன் தோலை உடுத்தமையையும், இராமன் மரவுரி தரித்துக் கானகம் சென்றதையும் குறிப்பிடுகின்றனர்)

பாடல்

நாட்டுக்குள் இரந்தும்பசிக் காற்றமாட்டாமல்-வாரி

நஞ்சையெல்லாம் உண்டானுங்கள் நாதனல் லோடி

மாட்டுப்பிற கேதிரிந்துஞ் சோற்றுக்கில்லாமல்-வெறும்

மண்ணையுண்டான் உங்கள்முகில் வண்ணனல் லோடி.169

விளக்கம்

“ஊருக்குள்ளே பிச்சை எடுத்துத் திரிந்தும், பசி ஆற்றமாட்டாதவனாகக் கடல் நஞ்சைஎடுத்து உண்டவன் சிவபெருமான்” என்று மூத்தவள் கூற, “மாட்டு மந்தைக்குப் பின் திரிந்துங்கூட சோற்றுக்கு வழியில்லாமல் வெறும் மண்ணைத் தின்றவன் உங்கள் மேகவண்ணன்” என்று ஏசுகின்றாள் இளையவள்.

பாடல்

ஏறவொரு வாகனமும் இல்லாமையினால்-மாட்டில்

ஏறியே திரிந்தானுங்கள் ஈசனல் லோடி

வீறுசொன்ன தென்னமாடு தானுமில்லாமல்-பட்சி

மீதிலேறிக் கொண்டானுங்கள் கீதனல் லோடி.170

விளக்கம்

“ஏறிச் செல்வதற்குத் தகுந்த வாகனம் இல்லாமல் மாட்டின் மேல் ஏறிக்கொண்டு திரிபவன் உங்கள் ஈசனே” என்று மூத்தவள் கூற, “அந்த மாடு கூட இல்லாமல் போனதால்தான் பறவை (கருடன்) மீது ஏறிக் கொண்டானோ உங்கள் மாயவன்” என்று கேலி பேசுகின்றாள் இளையவள்.

பாடல்

பெருமாள் அடியானுக்குப் பெண்டிருந்துமே-எங்கள்

பெருமாளை நீ பழித்துப் பேசலா மோடி

திருமால் அடிமையென்றாய் சாலப்பசித்தால்-ஆருந்

தின்னாததுண் டோசினத்தால் சொல்லாத துண்டோ?171

விளக்கம்

இருவருடைய ஆத்திரமும் இவ்வாறு பேசி பேசி சிறிது அடங்கிக் கொண்டே வந்தது. அவர்கள் பேச்சில் இருவரும் ஒத்துப்போகும் எண்ணமும் பிறந்தது. அதனால், “மிக நன்றாகச் சொன்னாய் மருதூர்ப்பள்ளி! போ! போ! என்னதான் கோபப்ட்டாலும் சீர் அழியச் சொல்லலாமா?” என்று மூத்தவள் கேட்க, “எனக்குக் கோபம் வராதோ முக்கூடற்பள்ளி! முதலில் திட்டியவரை வாழ்த்தியவர் இதுவரை எவராவது இந்த உலகில் உண்டோ?” என்று கூறுகின்றாள் இளையவள்.

 

 

 

 

 

 

 

பாடல்

தீராண்மைநன் றாகச்சொன்னாய்

      மருதூர்ப்பள்ளி-போபோ

சினத்தாலுஞ் சீரழியச்

      சொல்லலா மோடி

வாராதோ எனக்குக்கோபம்

      முக்கூடற்பள்ளி-முந்த

வைதவரை வாழ்த்தினவர்

      வையகத் துண்டோ.172

விளக்கம்

நந்திக் கலம்பகம் - காயிதே மில்லத் கல்லூரி பாடம்

 

நந்திக் கலம்பகம்

1. கண்டோர் கூற்று

உரைவரம் பிகந்த உயர்புகழ்ப் பல்லவன்
அரசர் கோமான் அடுபோர் நந்தி
மாவெள் ளாற்று மேவலர்க் கடந்த
செருவே லுயர்வு பாடினன் கொல்லோ
நெருநல் துணியரைச் சுற்றிப்
பரடு திறப்பத் தன்னால் பல்கடைத்
திரிந்த பாணன் நறுந்தார் பெற்றுக்
காஅர் தளிர்த்த கானக் கொன்றையின்
புதுப்பூப் பொலன்கலன் அணிந்து
விளங்கொளி ஆனனன் இப்போது
இளங்களி யானை எருத்தமிசை யன்னே.

விளக்கம்

பாணன் ஒருவன் வீதி வழியே வந்து கொண்டிருக்கின்றான். முன்பு தன் ஆடையின் துண்டு ஒன்றை இடையிலே சுற்றிக் கொண்டவனாய், உடுத்தியிருக்கும் ஆடை அகலம் இல்லாமல் கால்கள் மறையாது வெளிப்படும்படியாக நடந்து சென்று வீடு வீடாகத் திரிந்திருந்தான். அவனைக் கண்டோர் யாவரும் வியப்படைகின்றனர். அஏனெனில், இப்போது அவன் மாலையும், பொற்கலனும் அணிந்து கொண்டு, யானையின் மேல் ஏறி, அழகான தோற்றத்துடன் வருகின்றான். இச்சிறப்பு அவனுக்கு எவ்வாறு கிடைத்திருக்கும் என்று எண்ணி முடிவில், வெள்ளாற்றங்கரையில் பகைவரை வென்ற பெருமைக்குரிய நந்தி மன்னனைப் பாடிப் இப்பரிசுகளைப் பெற்றிருப்பான் என்று வியந்து கூறுகின்றனர். இதனால் நந்திவர்மனின் கொடைச் சிறப்பு விளக்கம் பெறுகின்றது.

2. தலைவன் தன் நெஞ்சொடு கிளத்தல்

மயில்கண்டால் மயிலுக்கே வருந்தி யாங்கே
மான் கண்டால் மனைக்கே வாடி மாதர்
குயிற்கண்டாற் குயிலுக்கே குழைதி ஆகின்
கொடுஞ்சுரம்போக் கொழிநெஞ்சே! கூடாமன்னர்
எயில் கொண்டான் மல்லையங்கோன் நந்தி வேந்தன்
இகல்கொண்டார் இருங்கடம்பூர் விசும்புக்கேற்றி
அயில் கொண்டான் காவிரிநாட் டன்னப்பேடை
அதிசயிக்கும் நடையாரை அகலன் நூற்றேன்.

விளக்கம்

பொருள் தேடுவதற்காகத் தலைவியை விட்டுப் பிரிந்து செல்ல எண்ணிய தலைவன் தன் நெஞ்சுக்குக் கூறுகின்றான். “நெஞ்சே! பகை மன்னனின் மதிலைக் கைக்கொண்டவனும், அழகிய மல்லைக்குத் தலைவனும், கடம்பூர் மக்களைத் தேவருலகத்திற்குக் குடியேறச் செய்து வெற்றி கொண்டவனும் ஆகிய நந்திவர்மனின் காவிரி நீர் பாயும் நாட்டில் உள்ள பெண் அன்னமும் கண்டு வியக்கும்படியான மென்மையான நடை கொண்டவள் எம் தலைவி. அவளை விட்டுப் பொருள் தேடப் பிரிந்து செல்ல எண்ணுகின்றேன். ஆனால், பொருள்தேடச் செல்லும் வழியில், சுற்றித் திரியும் மயிலைக் கண்டால், அதன் சாயல் எம் தலைவியின் முகச் சாயலையும், ஓடித்திரியும் மானைக் கண்டால் அதன் கண்கள் எம் தலைவியின் கண்களையும், கூவுகின்ற குயிலைக் கண்டால், அதன் குரல் தலைவியின் குரலையும் போன்றதாக எண்ணி என் மனம் வருத்தமடையும். தலைவியை எண்ணி மனம் கலங்கினால் பொருள் தேட முடியாது. எனவே கொடும் பாலையின் வழியாகச் செல்லும் பயணத்தைத் தவிர்த்து விடு” என்று கூறுகின்றான்.

3. ஊசல்

ஓடரிக்கண் மடநல்லீர் ஆடாமோ ஊசல்
 உத்தரியப் பட்டாட ஆடாமோ ஊசல்
ஆடகப்பூண் மின்னாட ஆடாமோ ஊசல் 

அம்மென்மலர்க் குழல்சரிய ஆடாமோ ஊசல்
கூடலர்க்குத் தெள்ளாற்றில் விண்ணருளிச் செய்த
கோமுற்றப் படைநந்தி குவலயமார்த் தாண்டன்
காடவற்கு முன்தோன்றல் கைவேலைப் பாடிக்

காஞ்சிபுர மும்பாடி ஆடாமோ ஊசல்.

விளக்கம்

இப்பாடல் மகளிர் ஊசல் ஆடுவதைக் குறிக்கின்றது. “செவ்வரி பரந்த கண்களை உடைய இளமையான பெண்களே! நாம் ஊசல் ஆடுவோம்! மேலாடையான பட்டு அசையும்படி ஊசல் ஆடுவோம்! ஆடகம் என்னும் பொன்னால் ஆன அணிகலன்கள் ஒளிவீச ஊசல் ஆடுவோம்! அழகிய மென்மையான மலரை அணிந்த கூந்தல் அவிழ்ந்து விட ஊசல் ஆடுவோம்! தெள்ளாறு என்னும் இடத்தில் பகைவனை வென்றவனும்வ, பெரும் படையைக் கொண்டனும்வ, உலகத்தில் தோன்றி சூரியன் போன்னும், காடவர் கோனுக்குத் தமையனுமாகிய நந்தியின் கையில் உள்ள வேலாயுதத்தைப் பாடி ஊசல் ஆடுவோம்! அவன் தலைநகரமான காஞ்சிபுரத்தையும் பாடி ஊசல் ஆடுவோம் என்று மகளிர் பாடுகின்றனர்.

4. பாட்டுடைத் தலைவன் வீரச் சிறப்பு

திருவின் செம்மையும் நிலமகள் உரிமையும்
பொதுவின்றி ஆண்ட பொலம்பூண் பல்லவ!
தோள் துணை ஆக மாவெள் ளாற்று
மேவலர்க் கடந்த அண்ணால் நந்திநின்
திருவரு நெடுங்கண் சிவக்கும் ஆகின் 5
செருநர் சேரும் பதிசிவக் கும்மே
நிறங்கிளர் புருவம் துடிக்கின் நின்கழல்
இறைஞ்சா மன்னர்க் கிடந்துடிக் கும்மே
மையில் வாளுறை கழிக்கு மாகின்
அடங்கார் பெண்டிர்
பூண்முலை முத்தப் பூண்கழிக்கும்மே
கடுவாய் போல்வளை அதிர நின்னொடு
மருவா மன்னர் மனம் துடிக் கும்மே
மாமத யானை பண்ணின்
உதிர மன்னுநின் எதிர்மலைந் தோர்க்கே.

விளக்கம்

திருமகளின் செல்வமும், நிலமகளின் உரிமையும் பொதுவின்றி ஆண்ட பல்லவ மன்னனே! உன் தோளின் வலிமையால் வெள்ளாற்றங்கரையை வென்றாய்! உன் நெடுங்கண் சினத்தால் சிவக்குமெனில் பகைவரின் ஊர் நெருப்பால் அழியும்! உன் புருவம் சினத்தால் துடிக்குமெனில் உன் வீரக்கழலுக்குப் பணியாத மன்னர்களின் இதயம் துடிக்கும்! உன் உறையிலிருந்து வாள் வெளிப்படுமெனில் பகை மன்னர் மனைவிகளின் மங்கலத்தாலிகள் அழியும்.  உன்னோடு போர்புரியும் மன்னர்களின் மனம் துடிக்கும்! உன் மாமத யானைகள் போருக்கென அழகுபடுத்தப்படுமெனில் குருதி ஆறு பெருக்கெடுத்து ஓடும்.

5. மதங்கியார்

பகையின்றி பார்காக்கும் பல்லவர்கோன் செங்கோலின்
நகையும்வாண் மையும்பாடி நன்றாடும் மதங்கிக்குத்
தகையும்நுண் ணிடையதிரத் தனபாரம் அவற்றோடு
மிகையொடுங்கா முன்இக்கூத் தினைவிலக்க வேண்டாவோ.

விளக்கம்

பகைவர் இல்லாமல் பூமியைக் காப்பாற்றுகின்ற பல்லவர் கோமானது செங்கோலின் ஒளியையும், அவனது வாட்போரின் திறத்தையும் பாடி மதங்கியர் எனப்படும் நடன மாதர்கள் நடனம் ஆடுகின்றனர். அதனைக் கண்டவர்கள், “அவர்களது நடனத்தால் அவர்களின் உடல் அதிர்கின்றது. இடை அவர்களின் நடன அசைவுகளைத் தாங்காது முறிந்து விடும். அக்குற்றம் உண்டாகும் முன்பு நாம் இந்தக் கூத்தை விலக்க வேண்டும்” என்று கூறுகின்றனர்.

புதன், 10 மே, 2023

திருஞானசம்பந்தர் திருப்பதிகம் - திருவீழிமிழலை

 

திருஞானசம்பந்தர் திருப்பதிகம் - திருவீழிமிழலை

 பாடல் எண் : 1

அரைஆர் விரிகோ வணஆடை

நரைஆர் விடையூர்தி நயந்தான்

விரையார் பொழில்வீ ழிம்மிழலை

உரையால் உணர்வார் உயர்வாரே.

விளக்கம்

இடையிற் கட்டிய விரிந்த கோவண ஆடையையும்வெண்மை நிறம் பொருந்திய இடப வாகனத்தை விரும்பி ஏற்றுக் கொண்ட சிவபெருமான் உறைகின்றமணம் பொருந்திய பொழில்களால் சூழப்பட்ட திருவீழிமிழலையின் புகழை நூல்களால் உணர்கின்றவர் உயர்வை அடைவார்கள்.

பாடல் எண் : 2

புனைதல் புரிபுன் சடைதன்மேல்

கனைதல் ஒருகங் கைகரந்தான்

வினையில் லவர்வீ ழிம்மிழலை

நினைவில் லவர்நெஞ் சமும்நெஞ்சே.

விளக்கம்

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிவந்த சடைமுடி மீது கங்கை நதியை மறைத்து வைத்துள்ள சிவபெருமான் உறைகின்றதீவினை இல்லாத மக்கள் வாழ்கின்ற திருவீழிமிழலையை நினையாதவர் நெஞ்சம் என்றும் மகிழ்ச்சியடைவதில்லை.

பாடல் எண் : 3

அழவல் லவர்ஆ டியும்பாடி

எழவல் லவர்எந் தைஅடிமேல்

விழவல் லவர்வீ ழிம்மிழலை

தொழவல் லவர்நல் லவர்தொண்டே.

விளக்கம்

அழவல்லவர்ஆடியும் பாடியும் எழவல்லவர் ஆகிய எம் தந்தை சிவபெருமான் திருவடிமேல் விழ வல்லவருமான அடியவர்கள் நிறைந்துள்ள திருவீழிமிழலையைத் தொழவல்லவரே நல்லவர் ஆவர். அவர் செய்யும் தொண்டே நல்ல தொண்டாகும்.

பாடல் எண் : 4

உரவம் புரிபுன் சடைதன்மேல்

அரவம் அரையார்த்த அழகன்

விரவும் பொழில்வீ ழிம்மிழலை

பரவும் அடியார் அடியாரே.

விளக்கம்

சிவந்த சடைமுடியின் இடையில்பாம்பை அணிந்துள்ள சிவபிரான் எழுந்தருளியபொழில்கள் சூழ்ந்துள்ள திருவீழிமிழலையைப் பரவித் துதிக்கும் அடியவரே அடியவராவர்.

பாடல் எண் : 5

கரிதா கியநஞ்சு அணிகண்டன்

வரிதா கியவண்டு அறைகொன்றை

விரிதார் பொழில்வீ ழிம்மிழலை

உரிதா நினைவார் உயர்வாரே.

விளக்கம்

நஞ்சினை உண்டு அதனை அணிகலனாகத் தன் தொண்டையில் நிறுத்திய நீலகண்டன் எழுந்தருளிய வண்டுகள் ஒலி செய்யும் கொன்றை மரங்களில் மலரும் மலர்களால் நிறைந்த சோலைகளால் சூழப்பெற்ற திருவீழிமிழலையைத் தமக்கு உரிய தலமாகக் கருதுவோர் சிறந்த அடியவராவர்.

பாடல் எண் : 6

சடையார் பிறையான் சரிபூதப்

படையான் கொடிமே லதொர்பைங்கண்

விடையான் உறைவீ ழிம்மிழலை

அடைவார் அடியா ரவர்தாமே.

விளக்கம்

சடையின் இடையில் பிறைமதியை சூடியவனும் பூதப்படைகளை உடையவனும், இடப வாகனத்தை உடையவனுமாகிய சிவபெருமான் உறைகின்ற திருவீழிமிழலையை அடைபவர்கள் சிறந்த அடியவர்கள் ஆவர்.

பாடல் எண் : 7

செறிஆர் கழலும் சிலம்புஆர்க்க

நெறிஆர் குழலா ளொடுநின்றான்

வெறிஆர் பொழில்வீ ழிம்மிழலை

அறிவார் அவலம் அறியாரே.

விளக்கம்

கால்களிற் செறிந்த கழல்சிலம்பு ஆகிய அணிகள் ஆர்ப்பரிக்க, சுருண்ட கூந்தலை உடைய உமையம்மையோடு நின்று அருள் புரிகின்ற சிவபெருமான் எழுந்தருளிய, மணம் கமழும் பொழில்களால் சூழப் பெற்ற திருவீழிமிழலையைத் தியானிப்பவர்களுக்குத் துன்பம் ஏற்படுவதில்லை.

பாடல் எண் : 8

உளையா வலிஒல்க அரக்கன்

வளையா விரல்ஊன் றியமைந்தன்

விளைஆர் வயல்வீ ழிம்மிழலை

அளையா வருவார் அடியாரே.

விளக்கம்

கயிலை மலையைப் பெயர்த்த இராவணனின வலிமை கெடுமாறு தன் காலை வளைத்து விரலால் ஊன்றிய வலிமை வாய்ந்த சிவபெருமான் எழுந்தருளியவிளைச்சல் மிகுந்த வயல்களை உடைய திருவீழிமிழலையை சிந்தையால் நிறைத்து வருகை புரிபவர் சிறந்த அடியவராவர்.

பாடல் எண் : 9

மருள்செய்து இருவர் மயலாக

அருள்செய் தவன்ஆர்அழலாகி

வெருள்செய் தவன்வீ ழிம்மிழலை

தெருள்செய் தவர்தீ வினைதேய்வே.

விளக்கம்

திருமால் பிரமன் ஆகிய இருவரும் அஞ்ஞானத்தினால் அடிமுடிகாணாது மயங்க தீ வடிவமாக வெளிப்பட்டு நின்று, அவர்களுக்கு அருள் செய்த சிவபெருமான் எழுந்தருளிய திருவீழிமிழலையைச் சிறந்த தலம் என்று தெளிந்தவர்களுக்குத் தீவினைகள் அகலும்.

பாடல் எண் : 10

துளங்கும் நெறியார் அவர்தொன்மை

வளங்கொள் ளன்மின்,புல் அமண்தேரை

விளங்கும் பொழில்வீ ழிம்மிழலை

உளங்கொள் பவர்தம் வினைஓய்வே.

விளக்கம்

 தடுமாற்றமுறும் கொள்கைகளை மேற்கொண்டுள்ள அமணர் தேரர் ஆகியோரின் சமயத் தொன்மைச் சிறப்பைக் கருதாமல், பொழில்கள் சூழ்ந்த திருவீழிமிழலையை நினைப்பவர்களின் தீவினைகள் நீங்கிவிடும்.

பாடல் எண் : 11

நளிர்கா ழியுள்ஞா னசம்பந்தன்

குளிர்ஆர் சடையான் அடிகூற

மிளிர்ஆர் பொழில்வீ ழிம்மிழலை

கிளர்பா டல்வல்லார்க்கு இலைகேடே.

விளக்கம்

காழி என்னும் ஊரில் தோன்றிய திருஞானசம்பந்தன், சடைமுடியை உடைய சிவபெருமானின் திருவடிப் பெருமைகளைக் கூறத் தொடங்கி, பொழில்கள் சூழ்ந்த திருவீழிமிழலையின் புகழ்கூறும் இப்பதிகப் பாடல்களை ஓதுபவர்களுக்குத் துன்பம் இல்லை.