புதன், 23 டிசம்பர், 2020

நடவுப்பாடல் - நாட்டுப்புறப்பாடல்

 

நடவுப்பாடல்

வேளாண் தொழிற் பாடல்களுள் ஒன்று நடவுப்பாடல். நாற்று நடவின்போது நாட்டுப்புறப் பெண்களால் காலங்காலமாக இப்பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன. நாற்று நடும் பெண்களில், ஒரு பெண்பாட மற்றவர் சேர்ந்து குழுவாகப் பாடுவதாகவும், ஒரு பெண் மட்டுமே தனியாகப் பாடுவதாகவும் அல்லது எல்லாப் பெண்களும் சேர்ந்து பாடுவதாகவும் இப்பாடல்கள் அமைந்துள்ளன.

பாடு பொருள்

நல்ல நேரம் பார்த்து முதலில் நிலத்தின் சனி மூலையில் நாற்று நடவு செய்யப்படும். முதலில் நாற்று நடும் பெண் கடவுளை வணங்கி ஒவ்வொரு அலகாக நடுவாள். நட்ட பயிர் நிமிர்ந்து வளர்ந்து விளைச்சல் பெருக வேண்டும் என்று விநாயகர், முருகர், மாரியம்மன், எல்லையம்மன், ஐயனார் போன்ற இன்னபிற தெய்வங்களை வாழ்த்திப் பாடுவாள்.

நடவு வேலைகளைச் செய்பவர்கள் பெண்களே என்பதால் அவர்கள் பாடும் பாடல்களில் அவர்களின் வாழ்வியல் நிகழ்வுகள் பதிவு செய்யப்படுகின்றன. எனவே நடவு பற்றி மட்டுமல்லாமல், ஏற்றம், ஏர் ஓட்டுதல், நீர் பாய்ச்சுதல், நிலத்தின் தன்மை, இயற்கை அழகு, மழை, வெயில் போன்ற வேளாண்மை சார்ந்த பிற நிகழ்வுகளும், காதல், வீரம், வறுமை, பக்தி, வழிபாடு, இல்லற வாழ்வு, மாமியார் கொடுமை, நாத்தனார் கொடுமை, சரியான கூலி கிடைக்காமை, மக்கள் பெருமை, அத்தை மகனைக் கிண்டல் செய்தல் போன்ற சுவையான நிகழ்ச்சிகளும் பாடுபொருளாகின்றன.

நடவுப்பாடல்

கடிய நடவும் பெண்ணே - உன்

கால் அழகைப் பார்ப்போம்

வீசி நடவும் பெண்ணே - உன்

விரல் அழகைப் பார்ப்போம்

சாஞ்சி நடவும் பெண்ணே - உன்

சாயல் நடை பார்ப்போம்

நான் முன்னே நடந்தாலும்

என் அன்ன நடை போமா

நான் சாஞ்சி நடந்தாலும

சாயல் நடை போமா

அசைஞ்சி நடந்தாலும் - என்

அன்ன நடை போமா

என் விரலழகுக் கேத்த

வீரனல்ல போடா

என் அன்ன நடைக்கேத்த

ஆணல்ல போடா

என் பெண்ணு நடைக்கேத்த

புருஷனல்ல போடா.

பாடல் விளக்கம்

இப்பாடல் ஆணும் பெண்ணும் இணைந்து பாடுகின்ற பாடலாக அமைந்துள்ளது. நடவு செய்யும் பெண்ணைக் கண்டு, “நாற்று நடும் பெண்ணே! நீ வேகமாக நடவு செய்தால் உன் கால் அழகைக் காண்பேன். நீ கைகளை வீசி நடவு செய்யும்போது உன் விரல் அழகைக் காண்பேன். சாய்ந்து சாய்ந்து நீ நடவு செய்யும்போது உன் அழகின் சாயலைக் காண்பேன்” என்று அவள் மீது தான் கொண்ட விருப்பத்தினைப் பாடுகின்றான். அவனுடைய ஆசை வார்த்தைகளுக்குத் தான் பணிந்து போவதில்லை என்பதை, “நான் முன்னே நடந்தாலும், சாய்ந்து நடந்தாலும், அசைந்து நடந்தாலும் அன்ன நடை போன்றே இருக்கும். ஆனால், என் விரல் அழகுக்கு ஏற்ற வீரன் நீயல்ல, என் அன்ன நடைக்கு ஏற்ற ஆண் நீயல்ல, என் பெண்மைக்கு ஏற்ற கணவன் நீயல்ல” என்று தன் விருப்பமின்மையை அப்பெண் பாட்டால் தெரிவிக்கின்றாள்.

ஏர் பூட்டும் மாடுகள்

முன்னேர் மாட்டுக்கு என்தோழிக்காளைகளே

என்னஎன்ன அடையாளம் என்தோழிக்காளைகளே

நெத்தியிலே நெத்திச் சுட்டி என்தோழிக்காளைகளே

நெடுவாலு பூவாலு என்தோழிக்காளைகளே

பின்னேர் மாட்டுக்கு என்தோழிக்காளைகளே

என்ன என்ன அடையாளம் என்தோழிக்காளைகளே

கொம்பிலே கொப்பி கட்டி என்தோழிக்காளைகளே

கொளம்பிலே லாடம் தைச்சி என்தோழிக்காளைகளே

நுகத்தடியை நானெடுத்து என்தோழிக்காளைகளே

பூட்டினேன் பொலிஎருதை என்தோழிக்காளைகளே

பூட்டினேன் பொலிஎருதை என்தோழிக்காளைகளே

ஒட்டினேன் முன்னேரு என்தோழிக்காளைகளே

பாடல் விளக்கம்

ஏர் உழுகின்ற மாடுகளின் அழகினை நடவு செய்து கொண்டே பாடுகின்றனர் பெண்கள். விளை நிலங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட ஏரால் நிலத்தை உழுவது உண்டு. அவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட ஏரால் நிலத்தை உழும்போது முன்னால் செல்லக்கூடிய ஏரை, முன் ஏர் என்றும், அதன் பின்னே செல்லக்கூடிய ஏரை பின் ஏர் என்றும் கூறுவர். “முன்னேர் போன வழியே பின் ஏர் போகும்” என்பது பழமொழி.

இங்கே ஏர் பூட்டிய மாடுகளின் அழகை வர்ணிக்கும் பெண் ஒருத்தி, “முன்னேர் மாட்டிற்கு என்ன என்ன அடையாளம்” என்று கேட்க, “முன்னேர் மாடுகளுக்கு நெற்றியில் நெற்றிச் சுட்டியும், நெடிய வாலும், வாலில் பூச்சரங்களும் தொங்கவிடப்பட்டிருக்கும்” என்று பதிலுரைக்கின்றாள். “பின்னேர் மாட்டுக்கு என்ன என்ன அடையாளம்” என்று கேட்க, “பின்னேர் மாடுகளுக்குக் கொம்புகள் சீவப்பட்டு, கொம்பின் நுனியில் கொப்பி என்ற அலங்காரப்பொருள் பொருத்தப்பட்டிருக்கும்.  அவற்றின் கால் குளம்பிகளில் லாடம் தைக்கப்பட்டிருக்கும்” என்று பாடுகின்றாள். “இரண்டு மாடுகளையும் இணைக்கின்ற நுகத்தடியை எடுத்து, எருதுகளை முன்னேர் மாடுகளாகப் பூட்டி வயற்காட்டில் ஓட்டினேன்” என்று பாடிக்கொண்டே நடவு செய்கின்றனர் பெண்கள். அதனால் முன்னேர் மாடுகள் பசுமாடுகள் என்பதும், பின்னேர் மாடுகள் காளை மாடுகள் என்பதும் தெரியவருகின்றது.

முன்னேர் - பின்னேர் மாடுகள்


 

சனி, 19 டிசம்பர், 2020

விளையாட்டுப் பாடல் - நாட்டுப்புறப்பாடல்

விளையாட்டுப் பாடல்

நாட்டுப்புறப்பாடல்களுள் விளையாட்டுப்பாடல்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.  சிறுவர் சிறுமியர்கள் விளையாடும்போது பாடப்படும் பாடல்கள் விளையாட்டுப் பாடல்கள் எனப்படுகின்றன. இதில் பாடலும் விளையாடலும் ஒன்றிணைந்து இருக்கும். சிறுவர்களின் மனமகிழ்ச்சியை, அவர்களின் உற்சாகத்தை இவ்வகைப் பாடல்கள் மீட்டெடுக்கின்றன. சந்தநடை, எளியசொற்கள், திருப்பிச் சொல்லும் மொழிநடை, ஓசை நயம், இனிமை ஆகியவை இப்பாடல்களின் தனிச்சிறப்பாகும்.

வகைகள்

பொதுவாக நாட்டுப்புற விளையாட்டுகள் ஆண்களுக்கானவை, பெண்களுக்கானவை, குழந்தைகளுக்கானவை, சிறுவர் சிறுமியருக்கானவை என்று பிரிக்கப்பட்டுள்ளன. பாடல்களுடன் கூடிய விளையாட்டுகள் சிறுவர் சிறுமியர் விளையாட்டுகளில்தான் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. இவ்வகைப் பாடல்களை,

1.   உடற்பயிற்சி விளையாட்டுப் பாடல்கள்

2.   வாய்மொழி விளையாட்டுப் பாடல்கள்

3.   போலச் செய்தல் தொடர்பான விளையாட்டுப் பாடல்கள்

என வகைப்படுத்துகின்றனர் அறிஞர்கள்.

உடற்பயிற்சி விளையாட்டு

     சடுகுடு, கண்ணாமூச்சி, வெயிலா நிழலா? பச்சகுதிரை தாண்டுதல், கோலி, கிட்டிப்புள் முதலான விளையாட்டுகள் உடற்பயிற்சி விளையாட்டுகள் என்ற பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன.

கண்ணாமூச்சி விளையாடும்போது, “கண்ணாமூச்சி ரே ரே! கண்டுபிடி ரே ரே!” என்றும், சடுகுடு விளையாடும்போது, “நான் தாண்டா வீரன்! நல்லமுத்துப் பேரன்” என்றும் பாடி மகிழ்வர்.

வாய்மொழி விளையாட்டுகள்

ஓரிடத்தில் அமர்ந்து கொண்டோ அல்லது நின்று கொண்டோ வாய்மொழியாகப் பாடி விளையாடும் விளையாட்டுகள் இப்பிரிவில் அடங்கும். இவ்விளையாட்டுகளில் ஒருவர்கொருவர் கேலி செய்து பாடுவது, வினா விடை அமைப்பில் பாடுவது உள்ளிட்டவை சிறப்பிடம் பெறுகின்றன. 

ஒருவரையொருவர் கேலி செய்யும் போது, “ஓட்டப்பல்லு சங்கரா! ஒரு வீட்டுக்கும் போகாத! அப்பம் வாங்கித் திங்காத ! அடிபட்டுச் சாகாத!” என்று பாடி மகிழ்வர். வினா விடை அமைப்பில், “கொழுக்கட்ட கொழுக்கட்ட ஏன் வேகல! மழ பெஞ்சுது நான் வேகல! மழையே மழையே ஏன் பெஞ்ச ! புல்லு வளரல நான் பேஞ்சேன்!” என்று பாடி வினாக்களுக்கான விடையைத் தேடுவர்.

போலச் செய்தல்

சிறுவர் சிறுமியர் தங்கள் வீடுகளில், பள்ளிகளில் காணுகின்ற காட்சிகளைத் தங்களுக்குப் புரிந்த வகையில் நடித்து விளையாடுவர். கள்ளன் போலீஸ் விளையாட்டு, ராஜா மந்திரி விளையாட்டு, அப்பா அம்மா விளையாட்டு என்பன இப்பிரிவில் அடங்கும். அவ்விளையாட்டுகளின்போது திருமணம், இறப்பு, சண்டையிடுதல் முதலான நிலைகளை நடித்துக் காட்டிப் பாடிக்கொண்டே விளையாடுவர்.

பயன்கள்

  • இப்பாடல்கள் சிறுவர்களுக்கு மன மகிழ்ச்சியைத் தருகின்றன.
  • தன்னொத்த வயதினருடன் விளையாடுவதால் சுதந்திர மனப்பாங்கும், தோழமையும் பெறுகின்றனர்.
  • ஆசிரியர், பெற்றோர் ஆகியோரிடமிருந்து கற்றுக் கொள்வதைவிட நண்பர்குழுவின் வாயிலாக நிறையக் கற்றுக் கொள்கின்றனர்.
  • அவர்களுக்குள் நிகழ்கின்ற உரையாடல்கள், கேலி கிண்டல்கள், பாடல்கள், விடுகதைகள் அவர்களின் மொழித்திறனை வளர்க்கின்றன.
  • ஓடுதல், தாவுதல், தாண்டுதல், குதித்தல் முதலானவை அவர்களின் உடல்திறனை உறுதியாக்குகின்றன.

பூப்பறிக்க வருகிறோம் பாடல்

இது சிறுவர் சிறுமியரால் பாடிக் கொண்டே விளையாடும் விளையாட்டுகளுள் ஒன்று. வினா விடை அமைப்பில் விளையாடுவது. சிறுவர்களின் உடல் திறனையும், மொழித்திறனையும் ஒருங்கே வளர்க்கக்கூடியது.

          விளையாட்டில் இடம்பெறும் பாடலின் முதல் வரியினைக் கொண்டு இப்பெயர் அமைந்துள்ளது. இவ்விளையாட்டில் கலந்து கொள்பவர் இரண்டு அணிகளாகச் செயல்படுவர். இரு அணியினரும் எதிர் எதிரே வரிசையாக நின்று கொள்வர். தங்கள் தங்கள் அணியினருடன் கைகோர்த்துக் கொண்டிருப்பர். நடுவே கோடு ஒன்று வரையப்பட்டிருக்கும்.


பூப்பறிக்க வருகிறோம் விளையாட்டு


பூப்பறிக்கும் அணி - பூப் பறிக்க வருகிறோம்! பூப் பறிக்க   வருகிறோம்!

பூக் காக்கும் அணி - எந்த மாதம் வருகிறீர்? எந்த மாதம் வருகிறீர்?

பூப்பறிக்கும் அணி - ஐப்பசி மாதம் வருகிறோம்! ஐப்பசி மாதம் வருகிறோம்!

பூக் காக்கும் அணி - எந்தப் பூவைப் பறிக்கிறீர்? எந்தப் பூவைப் பறிக்கிறீர்?

பூப்பறிக்கும் அணி - தேவிப் பூவைப் பறிக்கிறோம்! தேவிப் பூவைப் பறிக்கிறோம்!

பூக் காக்கும் அணி - யாரை விட்டுப் பறிக்கிறீர்? யாரை விட்டுப் பறிக்கிறீர்?

பூப்பறிக்கும் அணி - எழிலை விட்டுப் பறிக்கிறோம்! எழிலை விட்டுப் பறிக்கிறோம்!

பூக் காக்கும் அணி - என்று வந்து பறிக்கிறீர்?என்று வந்து பறிக்கிறீர் ?

பூப்பறிக்கும் அணி - இன்று வந்து பறிக்கிறோம்! இன்று வந்து பறிக்கிறோம் !

பூக் காக்கும் அணி  - சண்டை வரப்போகுது! சண்டை வரப்போகுது!

பூப்பறிக்கும் அணி - மண்டை உடையப் போகுது! மண்டை உடையப் போகுது!

என்றவாறு விளையாடுவர். இதோடு பாடல் முடிந்து விடும். பாடலில் குறிப்பிட்ட தேவி என்ற சிறுமியும், எழில் என்ற சிறுவனும் நடுக்கோட்டிற்கு அந்தப்பக்கமும், இந்தப்பக்கமும் நின்று கொள்வர். ஒருவர் கையினை ஒருவர் பிடித்துக் கொண்டு தங்கள் பக்கம் இழுப்பர். தன் அணியினைச் சேர்ந்தவர் அந்தப் பக்கம் போகாதவாறு அணி உறுப்பினர்களும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு இழுப்பர். இரு அணியில் யாரேனும் ஒருவர் இழுத்தவர் பக்கம் சென்று விட்டால் அந்தச் சுற்றில் இழுத்தவர்களே வெற்றி பெற்றோர் ஆவர். மீண்டும் முன்பு போலவே விளையாடத் தொடங்குவர். எந்த அணியில் ஆட்கள் இல்லையோ அவர்கள் தோற்றோர் ஆவர்.

இவ்விளையாட்டால் உருவாகும் பண்புகள்

  • இவ்விளையாட்டில் உள்ள விதிமுறைகளுக்கு அடங்கி நடப்பதால் கட்டுப்பாடுடன் செயல்படும் தன்மை வளர்கின்றது.

  • தங்கள் அணியைச் சேர்ந்தவர்கள் வெற்றியடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும்போது ஒற்றுமையுணர்வு ஏற்படுகின்றது.
  • விளையாட்டில் தலைமைப் பொறுப்பேற்று நடத்தும்போது பொறுப்புணர்ச்சி உண்டாகின்றது.
  • ஒருவர்க்கொருவர் விட்டுக் கொடுக்கும் தன்மை வளர்கின்றது.
  • ஆபத்தில் இருப்பவர்க்கு உதவ வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகின்றது.
  • உடல்திறன் தொடர்பான இவ்விளையாட்டு உரையாடல் வளர்ச்சிக்குக் காரணமாக அமைகின்றது. 
  • நாட்கள், மாதங்கள், கிழமைகள், பூக்களின் பெயர்கள் குறித்த அறிவினை உண்டாக்குகின்றது.

 


நன்றி - INFOBELLS

அம்பா பாடல் - நாட்டுப்புறப்பாடல்

அம்பா பாடல்

அம்பா பாடல் என்பது நாட்டுப்புறத் தொழிற்பாடல்களுள் ஒன்று. இது மீனவ சமுதாயத்தினருக்குரியது. இயற்கையின் பேராற்றல் மிக்க சக்திகளுள் ஒன்றாகிய கடலில், தங்கள் உயிரைப் பணயம் வைத்து, மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்கள், கடலுக்குச் சென்றது முதல் கரைக்குத் திரும்பும் வரை தமது குடும்பத்தினரையும், உறவினரையும் எண்ணி மனம் கலங்குவர். அதனால், இயற்கைச் சீற்றங்களாலும், வலிமை பொருந்திய நீர் விலங்குகளாலும் எவ்வித துன்பங்களும் நேரக்கூடாது என்று கடவுளை வணங்கி, தங்கள் மனச்சோர்வுகளைப் போக்கிக்கொள்வதற்காக, கடலில் தோணிகளைச் செலுத்தும்போது பாடல்கள் பாடிச்செல்வர்.   இப்பாடல்கள், மீனவப்பாடல், அம்பா பாடல், கப்பற்பாடல், தோணிப்பாடல், ஓடப்பாடல், ஏலேலோப் பாடல் என்ற பெயர்களில் வழங்கப்படுகின்றது. இவ்வகையான பாடல்களைப் பாடும்போது ஐலசா, ஏலேலோ என்ற சொற்களை இசைக்காகப் பயன்படுத்துகின்றனர்.

அம்பா பாடல் – பெயர்க்காரணம்

·    அம்பா என்ற சொல்லுக்குத் தாய், பார்வதி, பரதவர் பாடல் எனப் பல விளக்கங்கள் கூறப்படுகின்றன.

·  ‘அம்பாஎன்பதில் ‘அம்என்பதற்கு ‘நீர்என்று பொருள். ஆதலால், அம்பாபாடல் என்பதற்கு ‘நீர் மேல் பாடும் பாட்டுஎன்று பொருளுரைக்கின்றனர் சான்றோர்.

·  அம்பா என்பது அழகிய பாடல் (அம் – அழகிய, பா- பாடல்) என்றும் பொருள் உண்டு.

·  அம்பி என்றால் ஓடம், தெப்பம், மரக்கலம், தோணி என்ற பொருள்கள் உண்டு. அம்பி குறித்துப் பாடப்படும் பாடல் ஆகையால் அம்பிப்பாடல் என்ற சொல் உருவாகி, நாளடைவில் அச்சொல் அம்பா பாடல் என்று மாறியிருக்கலாம் என்கின்றார் இலங்கையைச் சேர்ந்த ஆய்வாளர் திரு.புஷ்பராஜன்.

· அம்பாயம் என்ற சொல் உழைப்பினால் உண்டாகும் வலியைக் குறிக்கும். எனவே, உடல் உழைப்பின்போது பாடப்பட்டப் பாடல் அம்பாயப்பாடல் என்று அழைக்கப்பட்டு, பின்னர் அம்பா பாடல் என மாறியிருக்கலாம் என்றும் கூறுவர்.

· கடல் தெய்வத்தைக் கன்னிமா என்று அழைப்பர் மீனவர். கன்னிமா என்றால் அம்பாள் என்று பொருள் உண்டு. கன்னிமாவை வாழ்த்திப் பாடும் அம்பாள் பாடல்கள், பிற்காலத்தில் அம்பா பாடல் என்றும் வழங்கியிருக்கலாம் என்று திரு நா.வானமாமலை குறிப்பிடுகின்றார்.

அம்பா பாடல் – வகைகள்

· வேலையின் தன்மை மற்றும் கால அளவு ஆகியவற்றிற்கு ஏற்ப, அம்பா பாடலை ஒற்றை அம்பா, இரட்டை அம்பா என்று வகைப்படுத்துகின்றனர்.

·       அமெரிக்க நாட்டார் வழக்காற்றியலறிஞர்,

1. குறைந்த இழுப்புப்பாடல் – பாய் மரக் குறுக்குக் கட்டைகளை இழுத்துக் கட்டுதல், பாயை மேலே ஏற்றுதல் போன்ற பணிகளில் பாடப்படுவது.

2. நீண்ட இழுப்புப்பாடல் – நங்கூரத்தை இழுத்து நிறுத்துதல், உச்சி பாய் மரத்தை நிறுத்துதல், தண்ணீர் பம்புகள் அடித்து இயக்குதல் போன்ற கடுமையான பணிகளில் பாடப்படுவது  என்று இருவகைப்படுத்துகின்றார்.

அம்பா பாடல்

விடிவெள்ளி நம்விளக்கு ஐலசா

விரிகடலே பள்ளிக்கூடம் ஐலசா

அடிக்கும் அலையே நம்தோழன் ஐலசா

அருமை மேகம் நமது குடை- ஐலசா

பாயும் புயல் நம் ஊஞ்சல் - ஐலசா

பனிமூட்டம் உடல்போர்வை - ஐலசா

காயும் ரவிச்சுடர்கூரை - ஐலசா

கட்டு மரம் வாழும் வீடு - ஐலசா

பின்னல் வலை அரிச்சுவடி - ஐலசா

பிடிக்கும் மீன்கள் நம் பொருட்கள் – ஐலசா

மின்னல் இடி காணும் கூத்து ஐலசா

வெண்மணலே பஞ்சுமெத்தை   - ஐலசா

முழுநிலாதான் கண்ணாடி - ஐலசா

மூச்சடக்கி நீந்தல் யோகம்  - ஐலசா

தொழும் தலைவன் பெருவானம்- ஐலசா

தொண்டு தொழிலாளர் நாங்கள்- ஐலசா

ஒத்துமை கொண்டாடணும்- ஐலசா

உரிமையை உயர்த்திடணும்- ஐலசா

பாடல் விளக்கம்

 மீனவர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருப்பது கடல். அதுவே அவர்களின் வாழ்வாதாரம். கடல்மேல் தாங்கள் கொள்ளும் வழிப்பயணத்தின் சிக்கல்களை இப்பாடல்வழி எடுத்துரைக்கின்றனர் மீனவர்கள்.

1.விடிவெள்ளி என்று அழைக்கப்படும் வெள்ளி நட்சத்திரமே, பகல், இரவு என்று பாராமல் நடுக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு வெளிச்சம் தரும் விளக்காக, திசை காட்டும் வழிகாட்டியாக விளங்குகின்றது.

2.வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளையும், இயற்கையின் பல அதிசயங்களையும் கற்றுத் தருவதால் பரந்து விரிந்திருக்கும் கடல் மீனவர்களின் பள்ளிக்கூடம் ஆகின்றது.

3.கடல் அலைகளின் வேகத்தைப் பொறுத்தே அவர்களின் தொழில் நடைபெறும் என்பதால், அலைகளைத் தங்கள் தோழனாகப் பாவிக்கின்றனர்.

4.மீன்பிடிக்கும்போது எங்கு திரும்பினாலும் கடல்நீர் மட்டுமே தென்படும்  சூழலில், அவர்களைப் பாதுகாக்கும் குடையாக மேகங்கள் திகழ்கின்றன.

5.புயல் காற்று அவர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி, ஊசலாட வைக்கும் ஊஞ்சலாக அமைகின்றது.

6. உப்பு நீரால் காய்ந்து போன அவர்களின் உடம்பிற்குப் பனி மூட்டங்களே போர்வையாகின்றன.

7.வெப்பம் வீசும் சூரியனின் சுடர்களே அவர்களின் கூரையாகின்றன.

8.அவர்களின் வாழ்நாட்கள் வீட்டில் இருப்பதைவிட கட்டுமரத்தில் இருப்பதுதான் அதிகம். ஆதலால் கட்டுமரமே அவர்களின் வீடாக இருக்கின்றன.

9.வலை வீசி மீன் படிப்பது அவ்வளவு எளிதன்று. வலையை எப்படி வீசுவது, எவ்வாறு கையாள்வது, மீன்கள் சிக்கிக் கொண்டால் அவற்றை எவ்வாறு வலையோடு இழுப்பது என்பதைக் கற்றுக் கொண்டு, அவற்றில் நன்கு பயிற்சி எடுத்தவர்களே கடலுக்குச் செல்வர். ஆகையால் பின்னிய வலைகள் மீன்  பிடிக்கும் தொழிலை அறிந்து கொள்ள உதவும் அரிச்சுவடியாக விளங்குகின்றன.

10.வலைகளில் விழுகின்ற மீன்கள் அவர்களின் உடைமை. அவற்றைக் கொண்டே அவர்களின் வாழ்க்கையைப் பெருக்கிக்கொள்ள முடியும்.

11.நடுக்கலில் பயணிக்கும்போது, மின்னுகின்ற மின்னல்களும், பெரும் சத்தத்துடன் இடிக்கின்ற இடியும் அவர்கள் காணுகின்ற கூத்துகளாக அமைகின்றன.

12.மீனவர்கள் கடல் மண்ணைத் தெய்வமாக வணங்குவர். தாய் மடியில் படுத்துறங்குவதுபோல் மகிழ்ச்சி கொள்வர். அதனால், கடற்கரையின் வெண் மணல்கள் அவர்களுக்குப் பஞ்சு மெத்தையாகக் காட்சியளிக்கின்றது.

13.மீன் பிடிக்கும் தொழிலுக்கு நிலவொளி மிக்க உறுதுணையாக   இருக்கும். அவர்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுகின்ற     கண்ணாடியாக நிலவு காட்சியளிக்கின்றது.

14.படகு கவிழ்ந்தாலோ, திசை மாறிச் சென்றாலோ மூச்சடக்கி நீந்தினால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும். அதை அவர்கள் ஒரு தவமாகவே எண்ணிப் பயிற்சி எடுத்துக் கொள்வர்.

15.தெளிந்த வானமே அவர்களின் வாழ்க்கைக்கு ஆதாரம். ஆகவே, வானத்தைத் தங்கள் தலைவனாகத் தொழுகின்றனர்.

16.வானம் இருக்கும்வரை அதன் தொழிலாளர்களாகத் தாங்கள் செயல்படுவோம் என்பது மீனவர்களின் நம்பிக்கை.

17.தங்கள் உயிரைத் துச்சமாக மதித்துத் தங்கள் வாழ்வாதாரத்திற்காக அனுதினமும் கடலில் சாகசங்களைச் செய்து வாழும் எங்களை பிற மனிதர்களை மதிப்பது போல்மதிக்க வேண்டும். எங்களோடு ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். எங்களுக்கான உரிமைகளைத் தரவேண்டும் என்று பாடுகின்றனர்.

.................................................................................................................

விடிவெள்ளியும் மீனவர்களும்

சூரியனைத் தவிர்த்து மிக வெளிச்சமாக விளங்கும் கோள் வெள்ளிக்கோள். இது பூமியின் அருகில் இருக்கும்போது அதன் ஒளி 4.9 ஆகவும், சூரியன் பின்னோக்கி வீசும்போது இதன் ஒளி 3 ஆகவும் மங்குகின்றது. காற்றின் துணைகொண்டு மட்டுமே பாய்விரித்து பெரிய மரக்கலன்கள் அரபிக்கடலிலும் இந்துமகா சமுத்திரத்திலும் பயணிக்கும். அப்போது அவர்களின் வழிகாட்டியாகவும், திசைகாட்டியாகவும் காலநிலைகளை உணர்த்தும் கருவியாகவும் வெள்ளி திகழ்ந்திருக்கிறது. உதாரணமாக, கோடைக்காலங்களில் வெள்ளி மிகவும் அதிகமாக மிளிரும். குளிர்காலங்களில் மங்கலாகவும் மழைக்காலங்களில் தொலைவில் இருப்பது போலவும் காணப்படும். கோடைக்காலங்களில் வெள்ளி அதிக அளவு மின்னும் போது கடலில் புயல்கள் வரும் சூழல் உள்ளதைப் புரிந்து கொண்டு அதற்கான பாதுகாப்பு முறையைக் கையாண்டனர். கோடைக்காலங்களில் கடல்மட்டத்தில் ஏற்படும் வெப்பம் காரணமாக சில இடங்களில் வெற்றிடம் தோன்ற அந்த வெப்பச்சலனத்தால் சூறாவளியுடன் கூடிய மழை உண்டாகிறது. இதுபோன்ற காலமாற்றம் ஏற்படும் வேளைகளுக்கு முன்பு வெள்ளி அதிகமாக ஒளிவிட ஆரம்பிக்கிறது. இதிலிருந்து நமது மூதாதையர்கள் சூறாவளியின் அளவைக் கணக்கிட்டு கடலில் பயணம் செய்துள்ளனர்.



இணையக் குறிப்பு

·http://www.periyarpinju.com/new/yearof2014/74-january-2014/1790--7.html

·      https://ta.wikipedia.org/wiki